Thursday, 25 September 2014

பிரச்சனைகளை அணுகுவது எப்படி..?

முகனூல் நண்பர் ஒருவர் என்னிடம் , ' உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையே...எப்படி உங்களுக்கு வரும் பிரச்சனைகளைக் கையாளுகிறீர்கள்?' என்று கேட்டார் . அவர் மட்டுமல்ல... என்னிடம் பல பேர் இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்....! இதில் உள்ள ஒரு உண்மை என்னவென்றால் , கடவுள் மறுப்பாளர்கள் தான் தனக்கு வரும் துன்பங்கள், இடையூறுகள், பிரச்சனைகளை மிகத் துல்லியமாக ஆராய்ந்து , அவற்றைக் களைய முயற்சி செய்கிறார்கள்...! கடவுள் நம்பிக்கையாளர்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... ! 

இறை நம்பிக்கையுள்ள பல பேர் சொல்வதை நாம் கேட்டிருக்கலாம்..., '' கோவிலுக்கு சென்று , சாமியிடம் வேண்டியப் பிறகு என் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது போல் உணர்ந்தேன் " என்ற சொற்றொடரை... இது ஒரு மாயை.. அப்போது மனது இலேசானது போலொரு உணர்வைத் தரும். அவ்வளவு தான்..! சிறிது காலத்திற்கு பிறகு அதுவே வேறு வடிவில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். இதுவே கடவுள் மறுப்பாளர்கள் பிரச்சனை வந்தால் நாம் தான் அதை சரி செய்ய வேண்டும், வேறு யாரும் நம் பிரச்னையை கையில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்திருப்பதால் துணிவாக எதிர்  கொள்வார்கள்....!

முதலில் நாம் ஒரு பிரச்சனையில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளேயே உழன்றுக் கொண்டிருக்கக்  கூடாது. அதிலிருந்து வெளியில் வந்து, மூன்றாவது மனிதராக சிந்தித்தோமானால் , அதற்கான  தெளிவுப் பிறக்கும். பின்பு அதை எதிர் கொள்ளும் துணிவு கிடைக்கும்.. பிறகு அதற்கான விடையும் கிடைத்து விடும். இந்த நேரத்தில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பசுமையான பூங்காவிற்கு செல்லுதல் மூலமோ , நல்ல இசையை கேட்கும் போதோ அல்லது நன்கு உறங்கி விழிக்கும் போதோ நம் மூளை சுறுசுறுப்பாக இருப்பதை உணரலாம். அந்த நேரத்தில் சிந்தித்தால் நமக்கு தேவையான , சிறந்த முடிவை எடுக்க முடியும். சில நேரங்களில்  நெருங்கிய நண்பர்களிடமும் ஆலோசனை கேட்கலாம். 

இன்னும் சில பிரச்சனைகளை நாம் சரி செய்ய முடியாது. உதாரணத்திற்கு விபத்து போன்றவை...அது நடந்தது நடந்தது தான்... ஒன்றும் செய்ய முடியாது.. அது போன்றவற்றை ஒரு அனுபவமாக எடுத்துக் கோள்ள வேண்டும். இப்படி தான் செய்ய வேண்டும் என்பது ஒரு அனுபவம் போல் இப்படி செய்ய கூடாது என்பதும் ஒரு அனுபவம் தானே...!

Saturday, 20 September 2014

மூளையில் பூட்டப் பட்ட விலங்கு

சில  தினங்களுக்கு முன் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு.....

ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவரைப் பார்க்க காத்திருந்த போது , ஒரு அறுபது வயது மதிக்கத் தக்க பெண்மணி அலைபேசியில் தன்  கணவருடன் பேசி கொண்டிருந்தார்...  (நிறை மாத கர்ப்பிணியான தன மகளுடன் வந்திருந்தார்....) அதை அப்படியே தருகிறேன்...  "மருத்துவரைப் பார்த்து விட்டேன்.எப்படியும் சுக பிரசவம் ஆகாது. ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். நான் நம் ஜோசியரிடம் பேசினேன். நாளை நல்ல நாளாம்... அருமையான நட்சத்திரமாம். பிறக்கப் போகும் பேத்தி ராணி போல் ஆளக் கூடிய நட்சத்திரமாம்.....! ஆதலால் நாளை ஆபரேஷன் செய்து விடலாம்.  ஒரு நாளைக்கு முன் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டரே சொல்லி விட்டார். அதனால் உடனே மாப்பிள்ளையிடம் சொல்லி விடுங்கள்  " -- இது தான் அந்த அம்மாவின் முடிவு...

இதை பார்த்துக் கொண்டிருந்த நான் அவரிடம் சென்று, " குழந்தை தானாக பிறந்தால் தானே அந்த நட்சத்திரத்தில் பிறந்ததாக பொருள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட  நட்சத்திரத்தில் பிறக்க வைக்கிறீர்கள்..அது எப்படி இந்த நட்சத்திரம் என்று சொல்ல முடியும்? " என்று  கேட்டேன். அதற்கு அவர்,  " அது அப்படி இல்லை. குழந்தை எப்போது இந்த மண்ணில் விழுகிறதோ, அந்த நேரம் தான் முக்கியம் " என்றார்கள்.அதற்கு நான், "இதற்காக ஏன் இவ்வளவு சிரம படுகிறீர்கள்  நமது வசதிக்காக சடங்கு, சம்பிரதாயங்கள், நாள், நட்சத்திரம் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்வதற்குப் பதில் அதை கடைப் பிடிக்காமல் இருக்கலாமே..! என்றேன்.   

அவ்வளவு தான்...அவர் என்னை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தார்...ஒன்றுமே சொல்லாமல் திரும்பி சென்று விட்டார்....!
மக்கள் மனதில் மூடநம்பிக்கைகள் எப்படி வேறுன்றி போயிருக்கிறது பாருங்கள்...தங்கள் வசதிக்காக எப்படி வேண்டுமானாலும்  மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.. ஆனால்  அதை விட்டு விட்டு வெளியே வர யாருமே தயாராக இல்லை.....!!!!

தந்தை பெரியார் அவர்கள்  சொல்லிய கருத்து ,'  இது மூளையில் போடப் பட்ட விலங்கு.. அறுத்தெறிவது அவ்வளவு எளிதல்ல ' என்பது தான் நினைவுக்கு வந்தது.....:-(

Wednesday, 17 September 2014

தந்தை பெரியாரின் 136- வது பிறந்தநாள் ..வாழ்த்துகள்.!

தந்தை பெரியாரின் 136- வது பிறந்தநாள் ..வாழ்த்துகள்.!  :-) :-)

ஜாதி,மத எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூக நீதி என்பனவற்றை கொள்கைகளாகக் கொண்டு, போராடி, தன வாழ்நாளிலேயே வெற்றியும் கண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்..!!

1938 - ல்  இராஜாஜி அவர்கள் , ' சமஸ்கிருதத்தை படிப்படியாக கொண்டுவரவே இந்தியை புகுத்துகிறேன் ' என்று பகிரங்கமாகவே அறிவித்தபோது , முதல் முறையாக தமிழர்கள் அனைவரும் ஜாதி, மத வேறுபாடுகளின்றி ஒரே குடையின் கீழ் ஓன்று திரண்டு , மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கிய , ' இந்தி எதிர்ப்புப் போரை ' தலைமை  தாங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்...!!

அதே போல் இராஜாஜி அவர்கள் 2500 பள்ளிகளை மூடி, குலக்கல்வி திட்டத்தை நடை முறைப் படுத்திய போது, அவரை  ஆட்சியிலிருந்தே விரட்டி, கல்வி வள்ளல் காமராஜரை முதல்வராக ஆக்கி, நம் அனைவரும் கல்விப் பெற காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள்...!!!

எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை சுயமரியாதையுள்ள மனிதர்களாக  வாழ வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்...!!

வாழ்க பெரியார்... வளர்க பகுத்தறிவு...!

Wednesday, 20 August 2014

உயிர் காக்கும் தலைக் கவசம்

தலைக் கவசத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் செய்தித்  தாளிலும், தொலைக் காட்சியிலும், வானொலியிலும் படித்திருப்போம்..., பார்த்திருப்போம்..,  கேட்டிருப்போம்.  ஆனால் அதை முழுதுமாக உணர  வைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ள விரும்புகிறேன்...

கடந்த ஞாயிறு அன்று என் கணவர் அடையாறிலிருந்து கிண்டி செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பொழுது எதிர் திசையில் ஒரு மூன்று  சக்கர மிதிவண்டி (மோட்டார் பொருத்திய) தவறான முறையில் வந்து விட்டது. அதன் மேல் மோதக் கூடாது என்ற எண்ணத்தில் சாலையின் ஓரமாக செல்வதற்கு முயற்சி செய்துள்ளார்கள் ... வண்டி கட்டுப்பாட்டை இழந்து  நடைமேடையில் 
இடித்து  பக்கத்திலுள்ள மின் கம்பத்தில் மோதி கீழே தூக்கி எறியப் பட்டுள்ளார்கள்.. கழுத்தின்  இடதுப் பக்கத்திலுள்ள க்ளவிகல் எழும்பில் ( காலர் எழும்பு) முறிவு ஏற்பட்டிருக்கிறது.   அறுவை சிகிச்சை செய்யப் பட்டு இப்போது நன்றாக உள்ளார்கள்... ஒரு மாதம் ஒய்வு எடுக்குமாறு மருத்துவரின் ஆலோசனை.

எப்போதும் தலைக் கவசம் அணியும் பழக்கம்  உள்ளத்தால் தலையில் எவ்வித அடியும் படவில்லை.. இல்லையென்றால் மிகப்  பெரிய ஆபத்தாக இருந்திருக்கும். தலைக் கவசம் தான் அவர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது..

இரு  சக்கர வாகனம் ஓட்டுவர்கள்  அனைவரும் சாவி எடுக்கும் போதே தவறாமல் தலைக் கவசத்தையும்  சேர்ந்து  எடுங்கள். மறக்காமல் தலைக் கவசத்தை பயன் படுத்துங்கள். இது எங்களின் அன்பான வேண்டுகோள்.....

Thursday, 26 June 2014

ஒரு தாயின் வலி.....

நேற்று தியாகராயர் நகரிலுள்ள ஒரு புத்தகக் கடைக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் பற்றியது தான் இந்த பதிவு...  புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்த பொழுது தூயத் தமிழிலில் பேசும் ஒரு பெண் குரல் கேட்டது. .. திரும்பிப் பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் , ஒரு புத்தகத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். 

நான் அவரருகில் சென்று , ' நீங்கள் ஈழத்திலிருந்து வந்துள்ளீர்களா? ' என்று கேட்டேன். அவருக்கு வியப்பு...! ( ஈழம் என்று கேட்டதனால் என்னவோ... ) உடனே நான் , ' தமிழீழம் விரைவில்  அமைய  வேண்டும் என்று ஆவலுடன் எதிர் பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி '  என்றதும் அந்த சகோதரியின்  முகத்தைப் பர்ர்க்க வேண்டுமே..... அவ்வளவு பூரிப்பு....! 

பின்பு மிகுந்த அன்புடனும், தோழமையுடனும்  பேசஆரம்பித்தார். 2009-ம் ஆண்டு யுத்தம் நடந்த போது அவர்கள் குடும்பம் ஈழத்தில் தான் இருந்தது என்றும் , அந்த போரில் அவருடைய தந்தை குண்டடிப் பட்டு இறந்து விட்டார் என்பதையும் கூறினார். பிறகு நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து, அவருடைய இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறார். கணவர் அங்கு தொழில் செய்கிறார் . அவரால் இங்கு வர முடியவில்லை.. மேலும் அவரின் ஊதியம் மிகவும் தேவை என்பதால்,  மகன்களை மட்டும் அழைத்துக் கொண்டு  கல்வி பயில , கல்வி பயிலும் ஒப்பு சீட்டு (student's visa) மூலம் இங்கு வந்ததாகச் சொன்னார்.

' மூத்த மகன் பொறியியல் படிப்பு முடித்து விட்டார். ஆனால்  வேலை கிடைக்காததால் திரும்பவும் இலங்கைக்கு செல்ல  வேண்டிய சூழ் நிலை... இரண்டாவது மகனும் இந்த ஆண்டு இறுதி ஆண்டு...  அடுத்த வருடம் படிப்பு முடிந்து விடும். அதற்கு பிறகு இங்கு வாழ முடியாது. அங்கு திரும்பி செல்ல மிகவும் அச்சமாக உள்ளது... இன்னமும் அங்கு பிள்ளைகள் காணமல் போய் கொண்டிருக்கிறார்கள்... காணாமல் போனறவர்கள் திரும்பி வருவதே இல்லை. நாங்கள் இலங்கை குடியுரிமை  பெற்றுள்ளதால் இங்கு வசிக்க அனுமதியும் கிடைக்காது. அகதி முகாமில் சென்றோமானால் மிகுந்த கட்டுபாடுகளும் , விதிகளும் உள்ளன. என்ன செய்வதென்றே தெரியவில்லை...எதுவும் செய்ய இயலாது ... '  என்றார். அப்போது ஒரு  தாயின் மனதில் நிரம்பி இருக்கும்  வலியும், தவிப்புகளும், அச்சமும் அந்த சகோதரியின் கண்களில் தெரிந்தன. அந்த நேரத்தில் எனக்கு,  நம்முடைய இயலாமையை நினைக்கும்போது மிகுந்த வெறுப்பும் , விரக்தியும் ஏற்பட்டது ... நம்முடைய  சட்ட திட்டங்கள் மீது...! 

இந்த சட்டத்திட்டங்கள் எல்லாமே மனிதர்களால், மனிதர்களுக்கு உண்டாக்கப் பட்டவை தானே... பின் ஏன் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும், மனிதத்தை காப்பாற்றாமல் தடுக்கிறது..? இப்படிப் பட்ட சட்டங்கள் இருந்தால் என்ன... இல்லாமல் போனால் தான் என்ன .. என்று ஒரு தோன்றுகிறது.....:-(. :-( .... விடைப் பெறும் போது அந்த சகோதரியிடம் ,' வருத்தப் படாதீர்கள்... எல்லாம் நன்மையில் தான் முடியும் ' என்று நான் சொன்ன போது என் கண்கள் மட்டுமல்ல.... அவரின் கண்களும் கலங்கி இருந்தன.....

' இதுவும் கடந்து போகும் '  --  என்று இன்னும் எத்தனை நாட்கள் நாம் சொல்லி கொண்டிருப்பது என்று தான் தெரியவில்லை....?

Monday, 26 May 2014

மதுவின் பிடியில் தமிழ்ச் சமூகம் ...

உலகிலுள்ள வளங்களிலேயே மிகவும் முக்கியமானதாகக்  கருதப்  படுவது நம் மனித வளம் தான்...இந்த மனிதவளம் தான் உலகிற்கு நாகரீகமும், அறிவையும் அறிமுகப் படுத்தின... !  தோன்றிய நாள் முதல் இன்றுவரை அந்த நிலையிலே தான் பறவைகளும், விலங்குகளும் வாழ்கின்றன... ஆனால்  மனிதன் மட்டும் தான் ஆரம்பக் காலங்களில் குகைகளில் வாழ்ந்துக் கொண்டிருந்தவன் இன்று விண்வெளிக்குச்  சென்று திரும்பி வரும் அளவிற்கு தன அறிவை விரிவு செய்திருக்கிறான்.....! அப்படிப்பட்ட மனிதக்குலம்  இன்று மதுவின் பிடியில்  சிக்கிச் சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தத்துக்குரியது...

அண்மையில் உலக சுகாதார அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு சராசரி இந்தியன் , ஒரு ஆண்டிற்கு 33 லிட்டர் மதுவை அருந்துகிறான் என்பதாகும். இதில் என்ன கொடுமை என்றால்  பதினைந்து வயதுக்குட்பட்டவர்கள்  ஆண்களில் 32% - ம் , பெண்களில் 11% - ம் அதிகரித்திருப்பதாக உள்ள தகவல்....! இதிலும் நம் தமிழ்ச் சமூகம் இன்னும் அதிகமான அளவில் அடிமைப் பட்டுக் கொண்டிருக்கிறது...!

  அறிவிலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய நம் தமிழ்ச் சமூகம் இன்று, இந்த மதுவிற்கு அடிமைப் பட்டுக்  கிடக்கிறது....  இந்த போதை இருக்கிறதே, இது நம்முடைய மூளையை  சிறிது சிறிதாக செயழிக்கச் செய்து, தற்காலிக இன்பத்தை தந்து, பின்பு நிரந்தரமாக அதற்கு அடிமைப் படுத்தி விடும் வல்லமைப் படைத்தது  இது நாகரீகமாகவும், ஒரு பொழுதுப் போக்காகவும், நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்சிக்காகவும் என விளையாட்டாக  வாரம் ஒரு முறை, இரு முறை ஆரம்பித்து,  .
கடைசியில் தினமும் என பழகிவிடும் ஆபத்தில் கொண்டு விடுகிறது.

முன்பெல்லாம் இந்த  மது  அருந்தும் பழக்கம் உயர்மட்ட வர்க்கத்திற்கு மட்டும் தான் என்றிருந்தது. அதிலும் இதற்கென்று உரிமம் வாங்கி கொண்டு தான் பயன் படுத்த வேண்டும்  என்ற சட்டம் இருந்தது.
இங்கு  வரலாற்றில் உள்ள ஒரு சிறு  பதிவைப் பதிவு செய்ய விரும்புகிறேன். சுமார் 1950 - களில்  ,  திரு. கண்ணதாசன் அவர்கள் இந்த உரிமம் வாங்கி வைத்திருந்தார்... அப்போது திரு. காமராசர் அவர்கள் , ' இந்த உரிமத்தை ரத்து செய்து விடுய்யா.... உனக்கு மத்திய அரசு பதவி ஒன்றுக்கு பரிந்துரைச் செய்கிறேன்  '  என்று சொன்னாராம்.. கவிஞர் அவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை... என்பது வேறு செய்தி...,  இதை ஏன் இங்கு நினைவுப் படுத்துகிறோமேன்றால் ,  அப்படி இருந்த நம் சமூகம் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நடுத்தரவர்க்கம், ஏழை எளியவர்கள் வரை சென்று , . கள்ளுக்கடை, சாராயக்கடை என்பதோடு மட்டுமல்லாமல் இன்று அரசே எடுத்து நடத்தும் டாஸ்மாக் வரை வந்துள்ளது.

இதில் மிகவும் வேதனையானச்  செய்தி என்னவென்றால் , இந்த பழக்கம் பள்ளிச் சிறுவர்கள் வரை சென்றடைந்திருக்கிறது என்பது  தான்...!   பெட்டிக் கடைகளில்  மிட்டாய் வாங்குவதுப் போல் இன்று பள்ளி மாணவர்கள் இதை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது...! கையில் நூறு  ரூபாய் இருந்தால் போதும் .. வாங்கி விட முடியும் என்ற நிலை இன்று உள்ளது..?  மேலும் இந்த பழக்கம் இளைய சமூகத்தினரிடையே  மிகப் பெரிய கலாச்சாரச் சீர்கேட்டையல்லவா உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது...?  இந்தப்  பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் என பல தீயச் செயல்களில் ஈடுப் படுகின்றனர்...!   இதனால் போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தவறு செய்து விட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தங்கள் வாழ்க்கையைத்  தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் பெரும்பாலான சிறுவர்கள்....!  மேலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் 10 நொடிக்கு ஓர் உயிரிழப்பு ஏற்படுவதாக புள்ளியியல் விவரம் ஓன்று  .தெரிவிக்கிறது...! 200 விதமான நோய்கள் ஏற்படுகின்றன என்பதும் கூடுதல் தகவல்...! 

இந்த மாதிரி பழக்கங்களை செய்ய தூண்டுவோர் பட்டியலில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன... தனக்குப் பிடித்த திரைப்பட நாயகன் செய்வதையெல்லாம் தானும் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் ஒரு ரசிகனாக, ஒவ்வொரு இளைஞனுக்கும் தோன்ற வழி வகுக்குகிறது.. மேலும் சில இடங்களில் ஆசிரியர்களே இதற்கு தூண்டுகோலாய் இருக்கின்றனர் என்பது மிகவும் வேதனைக்குரியது..! இதனை மாற்ற வேண்டுமானால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.  பள்ளி , கல்லூரிகளில் பயிலும் தங்கள் பிள்ளைகளிடம்  சிறு மாறுதல் தென்பட்டால் உடனே அதற்குரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் இதற்கு மிகவும் அதிகமாகஅடிமைப்படுத்திக்  கொண்டிருக்கும் ஓன்று எதுவென்றால், தகவல்  தொழில் நுட்ப நிறுவனங்கள்... இவர்கள் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விழா ( விருந்து) என்ற பெயரில் இந்த மதுப் பழக்கத்தை பரவலாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். .. இதற்கு பெண்களும் மிக எளிதாக அடிமைப் படுத்தப் படுகிறார்கள் என்பது தான் மிகவும் வருத்தப் பட வேண்டிய ஓன்று....!  இந்த நிலை நீடிக்கப் பட்டால் நம் தமிழ்ச் சமூகம் மிகப் பெரிய கலாச்சாரச் சீரழிவை எதிர்க் கொள்ள நேரிடும்...!
 
இன்றைய இளைஞர்கள் தான் நாளை நம்  சமூகத்தை ஆளப்போகும் நம்பிக்கைத் தூண்கள்...!  இனிமேலும் தாமதிக்காமல் இதனைக் கருத்தில்  கொண்டு  இதற்கான நடவடிக்கை எடுக்கத்  தவறினால் நம் தமிழ்ச் சமூகம் இந்த போதை வெள்ளத்தில் மூழ்கி விடும் ஆபத்து உருவாகி விடும். நம் எல்லோருக்கும் இந்த கடமை இருக்கிறது. நம் முடிவை நாமே தேடிக் கொள்ளாமல் ,  இதற்கான வழியை உடனே ஏற்படுத்த  வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். ! அரசு ஒன்றும் தனியார் நிறுவனம் அல்ல.... லாபத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்பட..,  அது மக்களுக்கு, மக்களால் உருவாக்கப் பட்ட து...!   மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, மக்களை காப்பாற்ற வேண்டிய கடமையை  உணர்ந்து  செயல் பட வைப்பது நம் எல்லோரின் கடமையாகும்.

            " மது விலக்கை வலியுறுத்துவோம்..... மதுவை வெல்வோம்..! "

Monday, 5 May 2014

இணையும் இரு மனங்கள்

' அடிமை சாசனம் எழுதி தருகிறேன் 
  என்னை ஏற்றுக் கொள்ளு 
  ஆயுள் முழுவதும் உன்னுடன் இருப்பேன் 
  அன்பைப் பார்த்துக் கொள்ளு  '..          ​ 

--- இது  ஒரு திரையிசைப் பாடலின் வரிகள். இதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் பல கேள்விகள் எழும்.  பெண் என்பவள் ஒரு ஆணின்  கீழ் ஆயுள் முழுதும் அடிமையாய் இருந்தால் தான்  அது அன்பென்று பொருளாகுமா..? உண்மையான அன்பு இருக்குமிடத்தில  அடிமைத்தனமும் ,  ஆதிக்கப்போக்கும் எப்படி இருக்க முடியும்? ஒன்றுக்கொன்று முரண்பாடாக அல்லவா இருக்கிறது...!

பெண்களிடம் உள்ள மிகப் பெரிய பலகீனமே இது தான்...! மிக விரைவில் அன்பிற்கு அடிமையாகி விடுவார்கள். இதற்காக எல்லாவற்றையும் இழக்கவும் தயாராகி விடுவார்கள். இதன் விளைவு உடனே தெரிவதில்லை...!  இதில் காதல் திருமணம் என்றால் ,  திருமணத்திற்குப் பிறகும்,  பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணம் என்றால் திருமணமான சிறிதுக் காலத்திற்குப் பிறகும்  பல பிரச்சனைக்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

முந்தைய தலைமுறைப் பெண்கள் அடிமையாகவே வாழ்ந்து வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள்...!  ஆனால்  இப்போதுள்ள பெண்கள் , ' நான் உனக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராகயிருக்கும் போது , நீ மட்டும் எனக்காக எதுவும் செய்ய மாட்டாயா..? ' என்ற கேள்வியை  எழுப்புகிறார்கள்.   தங்களைப்  போல் தான் ஆண்களும் இருக்கவேண்டும் என்ற இந்த எதிர்பார்ப்பு பல வகைகளில் இன்னலை ஏற்படுத்துகிறது. கருத்துகள் திணிக்கப் படும் போது தான் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன.

கருத்தொற்றுமை உள்ளபோது அன்பு மிகுதியாகி மகிழ்ச்சியை தருவது போல், கருத்து வேற்றுமை  வரும்போது மனகசப்பு ஏற்படுவது இயற்கை.  இதை வாக்கு வாதமாக பேசிப் பேசி பெரிதாக்கப்படும் போது தான் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி பிரிவு வரை கொண்டுச் செல்கிறது.  ஒருவர் மற்றொருவர் உணர்விற்கு மதிப்பளித்து ,  ஆரோக்கியமான முறையில் கருத்துகள் பரிமாறப் பட்டு எது சரியானதோ ,  அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால் அங்கு அடிமைத் தனத்திற்கும் ,  ஆதிக்கப் போக்கிற்கும் இடமில்லையே....!

கணவன் , மனைவி  இருவரும் உற்ற நண்பர்களாக , ஒருவர்  மற்றொருவருக்கு துணையாக நின்று , நல்ல இணையர்கலாக வாழும் பட்சத்தில்  , நம் தமிழ்ச் சமூக குடும்ப அமைப்பு அனைத்து  சமூகத்திற்கும்  ஒரு மிகச் சிறந்த வழிக்காட்டியாய் அமையும்  என்பதில் சிறிதும் அய்யமில்லை ...! 

Wednesday, 23 April 2014

தனிமையில் இனிமை (பகுதி - 2)

 தனிமையில் இனிமை '  என்ற என்  முந்தையப் பதிவிற்கு பலவிதமான கருத்துகள்  வந்ததினால் , இதைப் பற்றி சற்று விரிவாக எழுதாலமென , ஒரு எண்ணத்தின் விளைவு தான் அதன் தொடர்ச்சியான இரண்டாம் பகுதி.

தனிமை என்பது தனியாக இருப்பது தான் என்றில்லை...பலருடன் இருக்கும்போது,  தனிமைப் படுத்தப் படுதலும் தனிமை தான்...! இது தவிர்க்க முடியாத ஓன்று.. இதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் எல்லோரின் மீதும் திணிக்கப் படுகிறது என்பது தான் உண்மை..! இதை ஏற்றுக் கொண்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பயனுள்ள வகையில் கையாளுகிறார்கள்...! ஆனால்  ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தான் மிகப் பெரிய மன போராட்டத்திற்கு உள்ளாகி அவதிப் படுகிறார்கள்.

ஒரே வீட்டில் இரண்டு, மூன்று  தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இருக்கும் போது , வயதில் மூத்தவர்கள் அடிக்கடி சொல்வதை நாம்  அனைவரும் கேட்டிருப்போம்...' நான் சொல்வதை யார் கேட்கிறார்கள்..? ' என்ற சொற்றொடரை...! அதேபோல் வீட்டிலுள்ள அனைவரின் நலனையும் பார்த்துக் கொள்ளும் நடுத்தர வயதுப்  பெண்கள் , ' நான் சொல்வதை இந்த பிள்ளைகளோ, மற்றவர்களோ  காதில் வாங்குவதே இல்லை ' என்று தன ஆதங்கத்தை வெளிப் படுத்துவார்கள்... இதே போல் தான் ஆண்களுக்கும் , தங்கள் பணி, குடும்பப் பொறுப்புகள், பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதரப் பிரச்சனைகள் என மன அழுத்தத்தின் வெளிப்பாடு தனிமையில் தள்ளுகிறது. இந்த தலைமுறை இடைவெளி இருக்கிறதே, அது நாம் என்ன தான் தோழமையுடன் பழகினாலும் , ஒரு இடைவெளியை ஏற்படுத்துகிறது என்பது எல்லோராலும் ஒப்பு கொள்ளக் கூடிய உண்மை...! இந்த இடைவெளி தான் தனிமையையும் ஏற்படுத்துகிறது
இந்த தனிமையை ஏற்றுக் கொண்டவர்கள் அதன் இனிமையை உணர்ந்து மிகவும் அருமையாக கையாளுகிறார்கள்.  இதை ஏற்றுக் கொண்டோமானால் ,  கையாளுவது மிகவும் எளிது.  பிறகு அதன் இனிமையை உணர்ந்து  நாமே பயனுள்ள வகையில் செயல் படுவோம் 

தனிமை  ஒரு தனி மனிதரின் திறமையை வெளிக் கொணர  உதவுகிறது. தற்போது உள்ள கணினி யுகத்தில் நாம் வீ ட்டிலிருந்துக் கொண்டே  பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்..   உதாரணமாக , கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, கைத் தொழில்  செய்வது, சுய உதவி குழுவில் சேர்ந்து பணியாற்றுவது, ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவது என பலவழிகளில் நம் திறமைகளை வெளி கொண்டு வந்து சாதிக்க முடியும்.

 நாம் யாரால் தனிமைப் படுத்தப் பட்டதாக  உணர்ந்தோமோ., அவர்களாலே கவனிக்கப் படுவதையும் உணர முடியும். அது மட்டுமல்ல... நம் திறமைகள் அங்கீகரிக்கப் படுவதையும் காண முடியும். ஆதலால் நம் சிந்தனை, ரசனை, திறமை  எல்லாவற்றையும் நமக்கு உணர்த்தும் இந்த தனிமையின் இனிமையை ரசிக்கப் பழகிக் கொள்வோம்.
 

Thursday, 17 April 2014

தனிமையில் இனிமை

தனிமையில் இனிமை '  -- இதை ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...! மற்றவர்களுக்கு இது ஒரு பெரும் சுமை தான்.   தனிமை தவிர்க்க முடியாத ஓன்று..!   இது  தற்போதைய காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகிறது.  தனிமையை ரசிக்க பழகிக் கொண்டோமானால், அதன் இனிமையை உணர முடியும்.

தனிமையை ஏற்றுக்கொள்ள் தெரியாதவர்கள் ,  அதிலும் முதியவர்கள் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே , அது மிகவும் கொடுமையானது.., மனரீதியாக மிகவும் மன உளைச்சலைத் தந்து உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றனர்.  இதிலிருந்து மீள வேண்டுமானால்,  நம் இளமை காலந்தொட்டே,  தனிமையை ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். தனிமை நமக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தது..!  அதன் மூலம்  நாம்  பெறுகின்ற  அனுபவங்கள் இருக்கின்றதே , அதற்கு ஈடு இணையேயில்லை  என்று தோன்ற வைக்குமளவிற்கு ஆற்றல் உடையது.

' தனிமையில் இனிமை ' என்று நினைக்கும் போதே அந்த இனிமையை உணர முடிகிறதல்லவா...!   தனிமையில் சிந்தித்து, அதன் மூலம் தெளிவு பெறும் உணர்வு,  நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும்  அளிக்கும்.  முதலில் , தனிமை நம்மைப் பற்றி நமக்கே ஒரு புரிதலையும் ,  பிறகு நம்மை சுற்றியுள்ள மனிதர்கள், இயற்கை, சமூகம் பற்றிய ஒரு தொலை நோக்குப் பார்வையையும் ஏற்படுத்துகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்  கருத்து இருக்க முடியாது என்று நினைக்கிறேன்    இந்த தொலை நோக்குப் பார்வை தான் நன்மை, தீமைகளை பிரித்துப் பார்க்கும் தெளிவை நமக்கு கொடுக்கிறது  .. .!  இந்த உணர்தல் என்ற உணர்வே மிகவும் இனிமையானது. .!   ரசனையை தூண்டக் கூடியது...!   மகிழ்ச்சியை அள்ளி வழங்கக் கூடியது....!  இப்படிப் பட்ட சிறந்த சிந்தனையையும், ரசனையையும் தரக் கூடிய இந்த தனிமையை  ஏன்  தவற விட வேண்டும்..?   இதை மிகவும் பயனுள்ளதாக மாற்ற முயற்சி செய்யலாமே...!  

படைப்பாளிகளுக்கு இந்த தனிமை ஒரு கிடைத்ததற்கரிய ஒரு நல் வாய்ப்பல்லவா..!  மிகச் சிறந்த படைப்புகள் எல்லாம் தனிமையில் உருவானவை தானே..!  கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஓவியங்கள் மற்றும் மிக பெரிய காவியங்களாகட்டும் .., அனைத்தும் தனிமையில் படைக்கப் பட்டவையே..!   தத்துவஞானிகளின் தத்துவங்களும், கண்டு பிடிப்பாளர்களின்  புதிய கண்டுபிடிப்புகளும் , அறிவியலாளர்களின் அறிவியல் கோட்பாடுகளும்  தனிமையில் உண்டாக்கப் பட்டவை தான்...! 

படைப்பாளர்களுக்கு மட்டும் தான் என்றில்லை... சாதாரண மக்களுக்கும் தனிமை பலவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம், நல்ல இசையை கேட்கும் பழக்கம், கை வேலைப்பாடுகள்  என அவரவர் விருப்பங்களை செய்ய தூண்டுகிறது...!  இவ்வாறு நம் திறமைகள் அனைத்தையும் ரசித்து உணர வைக்கும் தனிமையின் இனிமையை முழுமையாக ரசிப்பதற்கு பழகிக் கொள்வோம்...! 


 

Wednesday, 9 April 2014

" சிறகொடிக்கப் பட்ட கூண்டு பறவைகள்"

இந்த கூண்டுகளில் அடைக்கப் பட்டிருக்கும் பறவைகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு திருமணமானப்  பெண்கள் தான் நினைவிற்கு வருகிறார்கள்....!  பறவைகள் என்றால் பறப்பது தானே நியதி..?  மனிதன் தன சுய விருப்பத்திற்காக, கூண்டில் அடைத்து வைத்து , பார்த்து மகிழ்வது எந்த விதத்தில் நியாயம்..? கூண்டைப் பார்க்கும் போதெல்லாம், திறந்து விட்டு விட வேண்டுமென்றே எனக்குத்  தோன்றும்....! 

நம் சமூகத்திலுள்ள  திருமணமான பெண்களும் இதே போல் தான் தன விருப்பு, வெறுப்பு பாராமல், தங்களின் அடையாளங்களை இழந்துக் கொண்டிருக்கிறார்கள்...!  கணவன்,  குடும்பத்தினர், குழந்தைகள் என்றே அவர்களின் உலகம் நின்று விடுகிறது. ..! என்ன தான் சமூகம் சார்ந்த அறிவு, ஆர்வம் இருந்தாலும் அவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை...! அன்பு, அதிகாரம், பொறுப்பு என்ற பல கயிறுகளால் அவர்களின் உரிமைகள் கட்டப் பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை....!  தன வாழ்நாள் முழுதும் , தன விருப்பப்படி நடக்கும் உரிமைப் பெற்றிருப்பவர்கள் ஆண்கள்...! ஆனால்  அதைப்  பெண்களால் கடைசி நிமிடம் வரைக்  கூட பெற முடியாமல் போவது மிகவும் கசப்பான உண்மை...!  

வீட்டிலிருக்கும் பெண்களுக்குத் தான் இப்படி என்றால், பணிப்புரியும் பெண்களுக்கு வேறு விதத்தில் சிக்கல்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்கும் நிலையில்லை.., ஓரளவிற்கு மதிப்பும், உரிமையும் கிடைக்கிறது என்றாலும், அவையெல்லாம் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கிறது... அவர்களாலும் தங்கள் உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை..! வீடு, அலுவலகம், குழந்தைகள் என்றே ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே  சுற்றி வருகின்றனர்...! அதைத் தாண்டி அவர்களால் வெளியே வர முடிவதில்லை..? இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், பிறந்து ஓரிரண்டு மாதங்களே ஆன குழந்தையை மற்றவர்களிடம் விட்டு விட்டு  பணிக்குச் செல்லும் தாயின் வலி இருக்கிறதே, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...! குழந்தைகளிடம் நேரத்தை செலவிட அவர்கள் தவிக்கும் தவிப்பு  மிகவும் வேதனையானது...! 

இன்னும் சில பெண்கள் சுய உதவிக் குழுக்களின் மூலம் பொருளீ -ட்டுகிறார்கள் .., அவர்களுக்கு, குடும்பம், பணியிடம் என்று இல்லாமல் சந்திக்கும் அத்தனை நபர்களிடம் சமாளிக்க வேண்டிய சுழல்...! ஓரளவிற்கு படித்தப் பெண்களுக்கே இந்த நிலையென்றால், கிராமங்களில் உள்ள கல்வியறிவு இல்லாத பெண்களைப்  பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

இதற்கான தீர்வு என்னவென்றால் , இந்த பிரச்சனையைப் பெண்கள் தான் கையில் எடுக்க வேண்டும். இதற்கு,  வாய்ப்புள்ளவர்கள் வெளியில் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்... ! அல்லது வீட்டிலேயே , தங்கள் குழந்தைகளை ஆண், பெண் என பாகுபாடின்றி சமமாக வளர்க்க வேண்டும் ... சிறு வயதிலிருந்தே இரு பாலருக்கும்  ' பெண்ணியம் ' சார்ந்த அறிவை ஊட்ட வேண்டும். பெண் என்பவள் சரி சமமாக  மதிக்கப் பட வேண்டியவள் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.  இன்றைய தலைமுறைப் பெண்களாகிய நாம் இதைச் செய்தோமானால்,  நாளை அதற்கான முழுப் பலனும்  அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு சென்றடைய  கூடிய வாய்ப்பு  அதிமாக இருக்கிறது...!

Wednesday, 2 April 2014

பொறுமை கடலினும் பெரிது...!


'  பொறுமை  '     --     இச்சொல்லை உச்சரிக்கும் போதே மனதில் ஒரு வித  அமைதியையும்,   நிறைவையும்  அளிக்கிறது என்றால் மிகையல்ல....!  எந்த ஒரு செயலையும் பொறுமையுடன் கையாண்டால் அது வெற்றியில் முடியும்  என்பது எல்லோராலும் ஒப்பு  கொள்ளக் கூடிய உண்மை..!    அய்யன் முதல் பல  அறிஞர்கள்  வரை பொறுமை பற்றி  நிறைய சொல்லியிருக்கிறார்கள். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்த பொறுமை என்ற உணர்விற்கு மிகுந்த வலிமையையும், ஆற்றலும் உண்டு... அது நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் இருக்கிறதே.., அது எந்த பள்ளியிலும், கல்லூரிகளிலும்  கற்றுக் கொள்ள முடியாதது., . அது ஒரு வாழ்க்கை பாடம்... , அனுபவக் கல்வி...!


இப்படிப் பட்ட இந்த பொறுமையை ,  இப்போதைய பரப்பான நம்முடைய வாழ்க்கைச்  சுழலில் சிறிது சிறிதாக இழந்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் வருத்தத்துக்குரியது..! நம்மில் பலரின் முகத்தைப் பார்த்தாலே தெரியும்.., எப்போதும் ஒரு பரபரப்பு, பதற்றம்.. இவை தான் நம் பொறுமையை இழக்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல் நம் தேடல்கள் அதிகமாகி விட்டன என்று தோன்றுகிறது. தேடல்கள் அதிகமானதால் அதற்கான ஓட்டங்களும் அதிகமாகிறது. சிறிது நேரம் ஓட்டத்தை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தோமானால் , நாம் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று தெரிய வரும்.. அதில் பொறுமைக்கு பெரும் பங்கு இருக்கும். அதிலும் பொறுமையின்மையால்  இழந்தது அதை விட அதிகமாக இருக்கும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல... குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப் படுகிறோம். பெரியவர்களுக்கு கோபமாகவும், குழந்தைகளுக்கு பிடிவாதமாகவும் வெளிப் படுகிறது. இதனால் உடல் ரீதியாகவும். மன ரீதியாகவும் பல பக்க விளைவுகளை சந்திக்க  வேண்டியுள்ளது.


இதில்  பொறுமை .மட்டுமல்ல... அதோடு உடன் பிறந்த குணங்களான சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் பண்பு,  காத்திருத்தல் ஆகியவைகளும் காணமல் போய் விடுகின்றன . இந்த காத்திருத்தல் என்பதையே நாம் மறந்து விட்டோம் என்று தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு மணி நேரம் ஆனாலும் பேருந்துவிற்காகக்  காத்திருந்த நாம் இப்போது கால் மணி நேரம் காத்திருப்பதே அதிகமாகத் தோன்றுகிறது. உடனே ஆட்டோ அல்லது சிற்றுந்து என கிளம்பி விடுகிறோம். காத்திருக்கும் கட்டாயம் ஏற்பட்டால் கூட , ஏதாவது சண்டை, சல சலப்பு, குறைகள் என அமைதியின்மையை .  ஏற்படுத்தி விடுகிறோம். பொறுமையாகக் காத்திருப்பது ஒரு கவனிப்பை உண்டாக்கும். அந்த கவனிப்பு ஒரு அனுபத்தைக்  கற்றுக் கொடுக்கும்...!  விட்டுக் கொடுக்கும் பண்பு, சகிப்புத் தன்மை இருக்கிறதே, அது நமக்கு மற்றவர்களிடமிருந்து  அளவற்ற அன்பை அள்ளிக் கொடுக்கும்  தன்மையுடையது.

சிறு வயதிலிருந்தே பொறுமை இல்லாமல் ஒரு வித பிடிவாதத்துடனே வளரும் குழந்தைகள் பெரியவர்களானதும் , திருமண வாழ்க்கையிலும்  பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாததால், எதற்கெடுத்தாலும் சண்டை., கடைசியில் மண  விலக்கு வரை போய் விடுகிறது. பொறுமையாக பேசித்  தீர்க்கும் பிரச்சனைகளைக் கூட பெரிதாக்கி ,  நீதி மன்றம் வரை போகிறார்கள். மண  விலக்கு என்பது ஒரு கடைசித் தீர்வு. அதை அவர்கள் முதலிலேயே கையில் எடுத்து விடுகிறார்கள். இது ஒரு கலாசாரச் சீர்கேட்டை உருவாகும் ஆபத்தல்லவா..! 


கருத்து வேறுபாடுகள் என்பது எல்லா இடத்திலும் உள்ளது தான். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வெவ்வேறான கருத்துக்கள் இருக்கும். நம்மில் பலர் கருத்து வேறுபாடுகளை அதிகமாக்கிக் கொண்டு வெறுப்புணர்ச்சியையும், பகைமையுணர்ச்சியையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கட்டுரையின் பாதை வேறுப் பாதையில் செல்வதாக எண்ண வேண்டாம். பொறுமையாக சிந்திததோமென்றால் ஒரு தெளிவுப் பிறக்கும். அது நமக்கு ஒரு புரிதலை உண்டாக்கும். இந்த புரிதல் நிறை, குறைகளை ஆராய்ந்து, வேறுபாடுகளை நீக்கி ஒரு கருத்தொற்றுமைக்கு வழி வகுக்கும்... !  பொறுமை  -  சிந்தித்தல்   -  தெளிவு    --   புரிதல்  --   ஆராய்ச்சி  என்பனவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை...,  .எங்குச் சுற்றினாலும் பொறுமை தான் இதில் முக்கியப்  பங்கு வகிக்கிறது...! ஆதலால் இந்த பொறுமை இருக்கிறதே, அது நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த உணர்வு.
. பொறுமையை இழக்கிறோமென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை இழக்கிறோம் என்று பொருள் ஆகும். பொறுமையாக இருத்தல் என்பது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல...! பெரியவர்களாகிய நாம் நம்மை மாற்றிக்கொண்டோமானால் ,  அடுத்து வரும் தலை முறையினர் கட்டாயம் மாற்றிக் கொள்ளவார்கள்....!

Friday, 28 March 2014

பெண்ணியம்

நேற்று (20-10-2013) விஜய் தொலைக்காட்சியில் நீயா, நானா நிகழ்ச்சி பார்த்தேன். தலைப்பு பெண்ணியம் பற்றியது...., பெண்ணியம் தேவை இல்லை என்று பேசும் ஒரு குழு....? இதில் அதிர்ச்சியான ஒரு செய்தி என்னவென்றால் இந்த குழுவில் இருந்தவர்கள் அனைவரும் நன்கு படித்த இளம் தலைமுறை பெண்கள்.. !!!! அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைத்து விடுவதால் அவர்களுக்கு பெண்ணியம் தேவையில்லை என்பது அவர்கள் வாதம்....

குழந்தையில் இருந்து நடுத்தர வயதை தாண்டிய பெண் முதல் இங்கு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது...., இன்னமும் சில கிராமங்களில் நடக்கும் பெண் சிசு கொலையை தடுக்க முடியவில்லை...? கல்வி ,திருமணத்தில் உரிமை, சொத்துரிமை முதலியன மறுக்கப்படும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.

அப்படி இருக்கும் போது சமூகத்தில் மற்ற பெண்களின் நிலைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பேசிய இந்த இளம் பெண்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது....?

ஆனால் களப்பணியாற்றும் நம் அன்பு சகோதரிகள் , குட்டி ரேவதி,ஓவியா, புதிய மாதவி, கவின் மலர், வெண்ணிலா, கவிதா. சல்மா போன்றவர்கள் மிகவும் அருமையாக பெண்ணியம் பற்றி அவர்களுக்கு புரிய வைத்தார்கள்...பாராட்டுக்கள்...!!!!

தந்தை பெரியார்

சமீபக்காலமாக சமூக ஊடங்களில், தந்தை பெரியார் அவர்களை தமிழ் மொழிக்கு எதிரானவர் மாதிரி ஒரு மாயை உருவாக்க முயல்கின்றனர்... அவர்களுக்கு ..:

நாடு முழுவதும் இந்தித் திணிக்கப் பட்டபோது தமிழகத்தில் மட்டும் அதை எதிர்த்து வெற்றி ப் பெற்றது யாரால்...? புரியாத மொழியில் திருமணம் செய்துக் கொண்டிருந்த நாம் தமிழில் உறுதிமொழிக் கூறி இணைய வைத்தது யார்..? எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தது யார்..? ஆலயங்களில் தமிழில் பூசை செய்ய வைத்தது யார்..? ஏன் ..? மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலையை தகர்த்தெறிந்ததில் பெரும்பங்கு யாருக்கு..? இவையெல்லாம் செய்தது தந்தை பெரியார் அவர்கள்....!

பெரியாரை நன்கு ஊன்றி படியுங்கள்; பிறகு நீங்களே உணர்வீர்கள்... பெரியார் ஒரு மிகச் சிறந்த அறிவு கருவூலம் என்பதை...! அவர் இங்கே மட்டுமல்ல, உலகெங்கிலும் தேவைப்படும் ஒரு மாமனிதர் என்பதை...! அவரின் கருத்துக்களைத் தவறாகப் பரப்ப நினைப்பது, நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்ளுவதற்கு சமம்...!
 

இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம் !

ஒரு சிறு முயற்சி தான்.., ஆனால் அது நாம் எதிர்பார்க்கும் அளவை விட அதிக பலனைத் தந்தால் மனதிற்கு மிக நிறைவையும், மகிழ்சியையும் அளிக்கிறது...!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், என் அக்கம்பக்கத்தினர், ,நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பொருட்களை வாங்கும் போது பார்த்து வாங்குங்கள். இலங்கைத் தயாரிப்பு என்றால் வாங்க வேண்டாம் . குறிப்பாக பிஸ்கட் கேக் போன்ற தின்பண்டங்கள், கிரீன் டீ போன்றவைகளை வாங்கும் போது இலங்கைத் தயாரிப்பு என்றால் புறக்கணியுங்கள்.... நாம் கொடுக்கும் ஒவ்வொரு காசும் நம் இனத்தை அளிக்க பயன் படுத்தப் படுகிறது என்ற உண்மையை விளக்கினேன். அவர்களும் புரிந்துக் கொண்டு , சரி என்று கூறினார்க ள் ..!
.
சில தினங்களுக்கு முன் திரும்பவும் அவர்களைப் பார்க்கும் போது ,"நாங்கள் இலங்கைத் தயாரிப்பு ப் பொருட்களை வாங்குவதில்லை.., புறக்கணிக்கிறோம்" என்றுக் கூறினார்கள் . . .! அது மட்டுமல்ல.. எங்கள் நண்பர்கள்; உறவினர் வட்டத்திலும் இதை வலியுறுத்துகிறோம் என்றும் சொன்னார்கள்...! என்னாலும் இந்தளவு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைத்த போது எனக்கேற்ப்பட்ட உணர்வை விளக்க வார்த்தைகளே இல்லை....!!! இதற்காக நான் அதிகமாக மெனக் கெடவில்லை ..பார்த்தவர்களிடம் சொன்னேன் . அவ்வளவு தான்...! இது போல் நம் எல்லோரும் முயற்சிச் செய்தால் எளிதாகவும் அதே சமயம் விரைவாகவும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாமே...!,

தனித்த தீவுகளாய் மனிதர்கள்......!

அண்மைக் காலமாக, நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் தான்..., மக்கள் அனைவரும் ஏதோ இந்திர மனிதர்கள் போலவே வலம் வருகின்றனர்..., அலைப் பேசியில் பேசிக் கொண்டு தனி தனித் தீவுகளாக வாழ்கின்றனர். சாலையில் தனியாக நடந்தாலும் சரி.., மக்கள் கூடியிருக்கும் இடங்களிலும் சரி.., செவியில் ஒலிகடத்தியை (Head set) மாட்டிக் கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டு போகிறார்கள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற ஒரு தெளிவுமில்லாமல் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். கடைகளில் பொருள்கள் வாங்க வரும் போதும்,வாங்கிவிட்டு திரும்பி போகும் போதும் பேசிக் கொண்டே செல்கின்றனர்... பூங்காக்களில் நடைப் பயிற்சி செல்லும் போதும் இதே நிலை தான்...! ஏன்..? நம் வீடுகளிலும் அம்மா தனியாக அலைப், பேசியில் பேசிக் கொண்டிருப்பார். அப்பா தனியாகப் பேசிக் கொண்டிருப்பார். பிள்ளைகள் தனியாக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்...! இந்த தலை முறையினர் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பேசுவது என்பதே அரிதாக இருக்கிறது.,? அப்படி என்ன பேசுகிறார்கள்..? பேசுவதற்கு அவ்வளவு செய்திகள் இருகின்றனவா .. ? என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது..!

முன்பெல்லாம் பேருந்துகளில் பயணிக்கும் போது பல விதமான செய்திகள் நம் செவிகளை வந்தடையும். நாம் கேட்க வேண்டும் என்ற கவனமில்லாமலே தானாகவே நம்மை கேட்க வைக்கும். " நாங்க எல்லாம் அந்த காலத்தில்....." என்ற தாத்தா, பாட்டி கதைகளும், நடுத்தர வயதினரின் குடும்பப் பிரச்சனைகள், அரசியல், மாணவர்களின் படிப்பு சம்பந்தமானச் செய்திகள், திரைப் பட செய்திகள், விளையாட்டுச் செய்திகள் என பல செய்திகள் நம்மை சிந்திக்க வைக்கும். இது அவசியம்...! வாழ்வியல் தொடர்புடையது...! . தேவையானவற்றை எடுத்துக் கொள்வோம். தெரியாததை தெரிந்துக் கொள்வோம். இந்த கேள்வி ஞானம் நல்ல ஒரு அனுபவத்தைத் தரும். ரசனையை கூட்டும்.

இந்த அனுபவம் என்ன என்றே தெரியாமல் இப்போதுள்ள இளம் தலை முறையினர் வளர்கின்றனர் என்பது மிகவும் வருத்ததுக்குரியது..., ஏதோ ஒரு சக்தியில் கட்டுண்டவர்கள் போல் இருக்கும் இவர்கள் உண்மையில் கேள்வி ஞானத்தினால் கிடைக்கும் ரசனை, அனுபவத்தை இழக்கிறார்கள் என்பது இக்காலத்தின் கட்டாயமோ என்று தோன்றுகிறது....!

இதுவும் ஒரு வகையில் வன்முறை தான் .....!

நம் சமூகத்தில் பல வன்முறைகள் நடந்துக் கொண்டிருந்தாலும் இது குழந்தைகள் மீது பெற்றோர் நடத்தும் வன்முறையாகவே எனக்கு தோன்றுகிறது. ...! 

எல்லா பெற்றோர்களுக்கும் தன பிள்ளைகள் படிப்பில் முதலில் வர வேண்டும்.. என்று தான் நினைக்கிறார்கள்.., இன்னும் சில பேர் ஒரு படி மேலே போய் , நடனம், பாட்டு,நீச்சல், அறிவுத்திறன் வளர்த்தல் என பல வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள். இது எல்லாம் கற்றுக் கொண்டால் நல்லது தானே என்று கேட்க தோன்றும். அதற்கு ஒரு குறிப்பிட வயது வர வேண்டாமா...? ஐந்து வயது குழந்தை எவ்வளவு தான் கற்றுக் கொள்ளும். .! மாலை வந்ததும் பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடத்தைப் படிக்க வேண்டும், எழுத வேண்டும்.., பிறகு பிற வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்...! சோர்ந்து வரும் பிள்ளையை உடனே சாப்பிட ஏதாவதுக் கொடுத்து மறுபடியும் அனுப்புகிறார்கள்...!

வார இறுதி நாட்களிலும் ஏதாவது ஒரு வகுப்பு என அவர்களை விடுவதில்லை...? இதில் என்ன கொடுமை என்றால் விடுப்பே எடுக்காமல் பள்ளிக்குப் போனால் அதற்கு ஒரு சான்றிதழ்...! அதற்காக இந்த பெற்றோர்கள் குழந்தைகளை விடுப்பே எடுக்க விடுவதில்லை...! உடல் நலமில்லாமல் இருந்தாலும் மருந துக் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்...!

இந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. நமக்கு சிறு வயதில் கிடைத்த இனிமையான வாய்ப்புகளை, அனுபவங்களை இழந்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது, நண்பர்களின் இல்லங்களுக்கு செல்லும் போது அங்குள்ளவர்களின் உரையாடல், அவர்களின் அன்பு, தெருக்களில் விளையாட்டும் போது நாம் கண்டு, கற்றுக் கொண்ட காட்சிகள் என எவ்வளவோ இருக்கின்றன...!

இந்த குழந்தைகளுக்கு நன்கு பேசிப் பழக நண்பர்களும் இல்லை.., பெற்றோர்களுடன் பேசுவதற்கு நேரமும் இல்லை....! பணம் கட்டிய பந்தயக் குதிரைகள் போல ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.... எதைப் பிடிக்க ஓடுகிறோம் என்பதே தெரியாமல்..? தற்போது எல்லா வீடுகளிலும் ஒரே குழந்தை என்பதால் வீட்டிலும் அவர்களால் விளையாட முடிவதில்லை...! தொலைக் காட்சி, கணினி விளையாட்டு என்பது மட்டும் அவர்கள் இளைப்பாறக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு வடிகால்...!

இ தனால் விளைவது என்னவென்றால் சிறு வயதிலேயே மன அழுத்தம்..! இவ்வழுத்தம் அதிகமாகி, அதிகமாகி, சில குழந்தைகள் படிப்பில் நாட்டமில்லாமல், உடல் நிலையிலும் பிரச்சனை என பல வழிகளில் பாதிக்கப் படுகின்றனர்....!

இதை மாற்ற வேண்டுமானால், பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்...: மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை... என்பதை முதலில் உணருங்கள்...! எல்லா வகையிலும் நம் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டுமென்ற எண்ணத்தை விட்டொழியுங்கள் .... ! அவர்களை அவர்களாக வாழ விடுங்கள்...! பிறகுப் பாருங்கள்...அவர்கள் திறமையை... நீங்களே அசந்துப் போவீர்கள்....!

எனது முதல் கவிதை

மனிதன் தோன்றிய நாள் முதலாய்,

பெண்ணினம் சந்தித்த இன்னல்கள் பல...

ஆனால் எம்மினப்பெண்கள் ஈழத்தில்.., 

இன்றுவரை தினந்தோறும் சந்திக்கும் 

கொடுமைகளை கைக்கட்டி , வாய் மூடி ,

வேடிக்கைப் பார்க்கும் வையகமே.. ! -- உன்னளவில்

மனிதநேயம், மனிதத்தன்மை, மனித உரிமை

என்பனவெல்லாம் வெறும் வார்த்தைகள் தானோ...?

மகளிர் தினச் செய்தி

" பெற்றோர்கள் ஆண்  குழந்தைகளைப படிக்க வைக்காவிட்டாலும்  பெண்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். உள்ளூரில் பள்ளி இல்லையென்றாலும் பள்ளியுள்ள ஊரில் சென்று கூலி வேலை செய்தாவது பெண்களைப் படிக்க வைக்க வேண்டும்"
                                                                                            
                                                                                                               - தந்தை பெரியார்.


.
பெண் விடுதலை, பெண்ணுரிமைப்  பற்றி பேசும் போது தந்தை  பெரியார் அவர்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பெண் கல்வி ஒன்றினால் மட்டுமே பெண்கள் யாரையும் சாராமல், சுதந்திரமாகவும், சுய மரியாதையுடன் வாழ முடியும் என்று மிகவும் தெளிவாகக் கூற பெரியரால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது.

இன்று  பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். எல்லா துறைகளிலும் தனது திறமைகளை சாதித்துக் காட்டியுள்ளர்கள். பன்னெடுங்காலமாக உரிமைகள் மறுக்கப் பட்டு வந்த பெண்ணினம் இன்று, வெளியில் வந்து எல்லா வகையிலும் வளர்ந்து வருகிறது. அவர்களுக்கு சவாலாக இருப்பது பாதுகாப்பின்மை  தான்.....??? கல்வியுடன் சேர்த்து தற்காப்புக் கலையும் கற்றுக் கொள்ளும் கட்டாயம் வந்திருக்கிறது..! எந்த நேரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறனை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு அவசியம்.

அது மட்டுமல்ல...., நம் ஆண்  குழந்தைகளிடம் பெண்ணியம் பற்றிய அறிவை உருவாக்க வேண்டும்..ஆண்களுக்குக் கிடைக்கும் அத்தனை உரிமையும்,பெண்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதையும், அவர்கள் சரி சமமாகவும், சுய மரியாதையுடனும் நடத்தப் பட வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்தே அறிவுறுத்த வேண்டும். அப்படி செய்தோமானால் பெண்களுக்கு எதிராக இருக்கும் கொடுமைகள்,  குற்றங்கள், வன் கொடுமைகள் , ஆதிக்கம் போன்றவற்றை களைய வழி வகுக்கும் என்பதில் சிறுதும் அய்யமில்லை... !

ஏதோ  ஆண்டில் ஒரு நாள் மட்டும் மகளிர் தினம் கொண்டாடி விட்டு, எல்லோரும் கூடி பேசி, பின்பு கலைந்துச் செல்வதால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை... ! இதை தினமும் வலியுறுத்த வேண்டும். இதில் பாகுபாடுப் பார்க்காமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள் என எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. இது நம் எல்லோரின் கடமை. இதனைக் கடைப் பிடித்தோமானால் " பெண்மையைப் போற்றுவோம் " என்பது வெறும் சொற்றொடராக மட்டுமில்லாமல் நடை முறையில் சாத்தியமாக்கலாம் .

            "அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...! "

நம்பிக்கையை முடமாக்கும் ' மூடனம்பிக்கை '



அண்மையில்  எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்...!

கடந்த வாரத்தில் ஒரு நாள்,  நான் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தப்  போது  முப்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார். சில நொடிகளிலேயே இலேசான விசும்பல் ஓசைக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண்  அழுதுக் கொண்டிருந்தார்....!  அது தொடர்ந்துக் கொண்டிருந்தது. ..  ஐந்து மணித் துளிகளுக்கு மேல் என்னால் முடியவில்லை....!  ' ஏதாவது பிரச்சனையா?' என்றுக் கேட்டு விட்டேன். அவ்வளவு தான்... அவர் நன்கு அழ  தொடங்கி விட்டார். அது இயல்பு தானே..! நாம் மிகவும் வருத்தத்தில் இருக்கும் போது யாராவது ஆறுதலாகக் கேட்டால் , நம்மை மீறி அழுகை வரும்... சிறிது நேரம் அவரின் கரங்களின் மேல் என் கைகளை வைத்துக் கொண்டிருந்தேன். பின்பு, அவரே பேச ஆரம்பித்தார். அதை அப்படியே இங்கு தருகிறேன்.

' எனக்கு திருமணம் நடந்து ஏழு வருடங்கள் ஆகின்றன். குழந்தை இல்லை. கடந்த இரு வருடங்களாக சிகிச்சை மேற்கொள்கிறேன் . எனக்கு தான் குறை உள்ளது.  மருத்துவர்,   தாமதமாகலாம்.. ஆனால் நிச்சயம் குழந்தைப் பிறக்கும் என்று கூறினார்கள் . நன்றாக தான் போய் கொண்டிருந்தது. இரு மாதங்களுக்கு முன் என் மாமியார்  ஜாதகம் பார்த்துள்ளார். அதில் எனக்கு குழந்தையே பிறக்காது என்று சோதிடர் சொல்லியுள்ளார். அதிலிருந்து வீட்டில் ஒரே சண்டை தான். எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறார்கள். என் கணவரும் அதற்கு உடந்தையாக  இருக்கிறார் ...!   இன்று பெரிய சண்டை வந்து விட்டது. அதனால் வேறு திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு கிளம்பி விட்டேன். அம்மா வீட்டிற்கு தான் போகிறேன். '   என்று முடித்தார்.

' சோதிடம்  பற்றிய எனது அனுபவத்தைக்  கூறினேன் . இதை அறிவியல் என்று கூறி நம்மை ஏமாற்றிக் கொண்டிருகிறார்கள். அதில் சிறிதும் உண்மையில்லை. அதிகம் படித்திருக்கும்  மருத்துவருக்கு இதைப் பற்றி தெரியுமா... அல்லது சோதிடருக்கு அதிகம் தெரியுமா?  நீங்கள் கோபத்திலும், வருத்தத்திலும் முடிவு எடுக்காதீர்கள். சரியாக இருக்காது.., இரு நாட்களுக்குப் பிறகு உங்கள் கணவரை அழைத்துப்  பேசி புரிய வையுங்கள் .. இருவருமாகச்  சேர்ந்து மருத்துவரிடம் சென்று கலந்தாலோசியுங்கள். ' என்று சொன்னேன். அதன் பிறகு அந்த சகோதரியின் முகத்தில் ஒரு தெளிவுப் பிறந்தது. அவர் இறங்குமிடம் வந்ததும், ' உங்களிடம் பேசியப் பிறகு சிறிது நம்பிக்கை வந்துள்ளது அக்கா '  என்றுக் கூறி  விடைப் பெற்றார்.

அவர் சென்று வெகு நேரமாகியும் அவரின் முகமும், அவர் பேசியவைகளும்  என் மனதை விட்டு அகலவே இல்லை. நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டிருந்த இணையர்களின் வாழ்வில் சோதிடம் எப்படி விளையாடியிருக்கிறது பாருங்கள்....! இதை ஒழிக்கத்  தானே தந்தை பெரியார்அவர்கள்  தன வாழ்நாள் முழுதும் பாடுப் பட்டார். நன்கு படித்தவர்களின் மத்தியிலும்  இந்த மூடனம்பிக்கை எப்படி வேரூன்றி இருக்கிறது.? அதிலும் இந்த மாதிரி மூடனம்பிக்கைகளால் ஆண்களை விட பெண்கள் தான்  அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள்...!  இது ஒருபுறம் இருக்கட்டும்...! இந்த பிரச்சனையை சிறிது மாற்றிப் பாருங்கள். இந்த குறை அந்த ஆணிடம்  இருந்தால் பெண்கள்  என்ன செய்வார்கள்?  பரவாயில்லை... விடுங்கள்... நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துக் கொள்ளலாம்.. இல்லையென்றால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று தானே பெண்கள் சொல்வார்கள்...! ஏன்  ஆண்களால் இந்த மாதிரி சொல்ல முடிவதில்லை. ? (இந்த விடயத்தில் ஒரு பெண் காரணமாக இருந்திருக்கிறார் என்பது வருத்தத்துக்குரியது)

தொழிற்புரட்சி, விஞ்ஞானப் புரட்சி என்று எவ்வளோவோ நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், மூடநம்பிக்கையிலும், பெண் விடுதலையிலும் இன்னமும் பின் தங்கியிருக்கிறோம்  என்றே தோன்றுகிறது...!  நாம் சென்றடைய வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகவே  போய் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என நினைக்கிறேன் .