தனிமையில் இனிமை ' என்ற என் முந்தையப் பதிவிற்கு பலவிதமான கருத்துகள் வந்ததினால் , இதைப் பற்றி சற்று விரிவாக எழுதாலமென , ஒரு எண்ணத்தின் விளைவு தான் அதன் தொடர்ச்சியான இரண்டாம் பகுதி.
தனிமை என்பது தனியாக இருப்பது தான் என்றில்லை...பலருடன் இருக்கும்போது, தனிமைப் படுத்தப் படுதலும் தனிமை தான்...! இது தவிர்க்க முடியாத ஓன்று.. இதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் எல்லோரின் மீதும் திணிக்கப் படுகிறது என்பது தான் உண்மை..! இதை ஏற்றுக் கொண்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பயனுள்ள வகையில் கையாளுகிறார்கள்...! ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தான் மிகப் பெரிய மன போராட்டத்திற்கு உள்ளாகி அவதிப் படுகிறார்கள்.
ஒரே வீட்டில் இரண்டு, மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இருக்கும் போது , வயதில் மூத்தவர்கள் அடிக்கடி சொல்வதை நாம் அனைவரும் கேட்டிருப்போம்...' நான் சொல்வதை யார் கேட்கிறார்கள்..? ' என்ற சொற்றொடரை...! அதேபோல் வீட்டிலுள்ள அனைவரின் நலனையும் பார்த்துக் கொள்ளும் நடுத்தர வயதுப் பெண்கள் , ' நான் சொல்வதை இந்த பிள்ளைகளோ, மற்றவர்களோ காதில் வாங்குவதே இல்லை ' என்று தன ஆதங்கத்தை வெளிப் படுத்துவார்கள்... இதே போல் தான் ஆண்களுக்கும் , தங்கள் பணி, குடும்பப் பொறுப்புகள், பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதரப் பிரச்சனைகள் என மன அழுத்தத்தின் வெளிப்பாடு தனிமையில் தள்ளுகிறது. இந்த தலைமுறை இடைவெளி இருக்கிறதே, அது நாம் என்ன தான் தோழமையுடன் பழகினாலும் , ஒரு இடைவெளியை ஏற்படுத்துகிறது என்பது எல்லோராலும் ஒப்பு கொள்ளக் கூடிய உண்மை...! இந்த இடைவெளி தான் தனிமையையும் ஏற்படுத்துகிறது
இந்த தனிமையை ஏற்றுக் கொண்டவர்கள் அதன் இனிமையை உணர்ந்து மிகவும் அருமையாக கையாளுகிறார்கள். இதை ஏற்றுக் கொண்டோமானால் , கையாளுவது மிகவும் எளிது. பிறகு அதன் இனிமையை உணர்ந்து நாமே பயனுள்ள வகையில் செயல் படுவோம்
தனிமை ஒரு தனி மனிதரின் திறமையை வெளிக் கொணர உதவுகிறது. தற்போது உள்ள கணினி யுகத்தில் நாம் வீ ட்டிலிருந்துக் கொண்டே பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.. உதாரணமாக , கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, கைத் தொழில் செய்வது, சுய உதவி குழுவில் சேர்ந்து பணியாற்றுவது, ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவது என பலவழிகளில் நம் திறமைகளை வெளி கொண்டு வந்து சாதிக்க முடியும்.
நாம் யாரால் தனிமைப் படுத்தப் பட்டதாக உணர்ந்தோமோ., அவர்களாலே கவனிக்கப் படுவதையும் உணர முடியும். அது மட்டுமல்ல... நம் திறமைகள் அங்கீகரிக்கப் படுவதையும் காண முடியும். ஆதலால் நம் சிந்தனை, ரசனை, திறமை எல்லாவற்றையும் நமக்கு உணர்த்தும் இந்த தனிமையின் இனிமையை ரசிக்கப் பழகிக் கொள்வோம்.