முகனூல் நண்பர் ஒருவர் என்னிடம் , ' உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையே...எப்படி உங்களுக்கு வரும் பிரச்சனைகளைக் கையாளுகிறீர்கள்?' என்று கேட்டார் . அவர் மட்டுமல்ல... என்னிடம் பல பேர் இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்....! இதில் உள்ள ஒரு உண்மை என்னவென்றால் , கடவுள் மறுப்பாளர்கள் தான் தனக்கு வரும் துன்பங்கள், இடையூறுகள், பிரச்சனைகளை மிகத் துல்லியமாக ஆராய்ந்து , அவற்றைக் களைய முயற்சி செய்கிறார்கள்...! கடவுள் நம்பிக்கையாளர்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... !
இறை நம்பிக்கையுள்ள பல பேர் சொல்வதை நாம் கேட்டிருக்கலாம்..., '' கோவிலுக்கு சென்று , சாமியிடம் வேண்டியப் பிறகு என் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது போல் உணர்ந்தேன் " என்ற சொற்றொடரை... இது ஒரு மாயை.. அப்போது மனது இலேசானது போலொரு உணர்வைத் தரும். அவ்வளவு தான்..! சிறிது காலத்திற்கு பிறகு அதுவே வேறு வடிவில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். இதுவே கடவுள் மறுப்பாளர்கள் பிரச்சனை வந்தால் நாம் தான் அதை சரி செய்ய வேண்டும், வேறு யாரும் நம் பிரச்னையை கையில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்திருப்பதால் துணிவாக எதிர் கொள்வார்கள்....!
முதலில் நாம் ஒரு பிரச்சனையில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளேயே உழன்றுக் கொண்டிருக்கக் கூடாது. அதிலிருந்து வெளியில் வந்து, மூன்றாவது மனிதராக சிந்தித்தோமானால் , அதற்கான தெளிவுப் பிறக்கும். பின்பு அதை எதிர் கொள்ளும் துணிவு கிடைக்கும்.. பிறகு அதற்கான விடையும் கிடைத்து விடும். இந்த நேரத்தில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பசுமையான பூங்காவிற்கு செல்லுதல் மூலமோ , நல்ல இசையை கேட்கும் போதோ அல்லது நன்கு உறங்கி விழிக்கும் போதோ நம் மூளை சுறுசுறுப்பாக இருப்பதை உணரலாம். அந்த நேரத்தில் சிந்தித்தால் நமக்கு தேவையான , சிறந்த முடிவை எடுக்க முடியும். சில நேரங்களில் நெருங்கிய நண்பர்களிடமும் ஆலோசனை கேட்கலாம்.
இன்னும் சில பிரச்சனைகளை நாம் சரி செய்ய முடியாது. உதாரணத்திற்கு விபத்து போன்றவை...அது நடந்தது நடந்தது தான்... ஒன்றும் செய்ய முடியாது.. அது போன்றவற்றை ஒரு அனுபவமாக எடுத்துக் கோள்ள வேண்டும். இப்படி தான் செய்ய வேண்டும் என்பது ஒரு அனுபவம் போல் இப்படி செய்ய கூடாது என்பதும் ஒரு அனுபவம் தானே...!