எனக்கு மிகவும் பரிச்சியமான ஒரு குடும்பம். கணவன், மனைவி, இரு பெண் குழந்தைகள். பார்ப்பதற்கு மகிழ்சியான குடும்பம்
தான். ஆனால் கணவன், மனைவிக்குள் சில கருத்து வேறுபாடுகள்
இருந்திருக்கின்றன... இது பெரும்பாலும் அனைவருக்கும் உள்ளது தான்.
சிறிது கால இடைவெளியில் அந்த குடும்பத்தைப்
பற்றிய செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது..! மூத்த மகள்
மருத்துவம் பயில்கிறாள். இளையவள் பதினோராம் வகுப்பு. அவர்களுடைய தாய்
அவர்கள் வீட்டில் இல்லை. வீட்டோடு ஒரு ஆளை ( அவருமொரு பெண்மணி தான்) நியமித்து சமாளித்து கொண்டிருக்கிறார்கள்...!
காரணம் அவர்களின் அம்மாவிற்கு மனச் சிதைவு நோய். அதிகம் கோபப்
படுகிறார்கள்... ஏதாவது பிள்ளைகளை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..காரணமே
இல்லாமல் எல்லோரையும் புண்படுத்தி பேசுகிறார்கள். இதனால் பிள்ளைகள் படிக்க
முடியவில்லை என்பது தான்.!பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தனக்கென்று எதையும் நினைப்பதில்லை.. நினைத்த மாதிரி திருமண வாழ்க்கை அமைத்து விட்டால் சரி.. இல்லை என்றால் இந்த மன அழுத்தம் பெண்களை வெகுவாக பாதிக்கிறது.. கணவன்-மனைவி உறவு சரியில்லை என்றால் , இந்த மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிறார்கள்...!
குழந்தைகள் வளர, வளர
அவர்கள் படிப்பு, நண்பர்கள் வட்டமென்று சென்று விடும் போதும்,கணவன் வேலை,
தொழில் என்று இருக்கும் போதும் தான் தனிமையில் விடப்பட்டு விட்டோம் என்ற
உணர்வே இந்த நிலைக்கு காரணம். பணி புரியும் சகோதரிகளுக்கு தன கவலையை மறக்க
தோழர்கள், பணி என்ற ஒரு வடிகால் இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு
எந்த வடிகாலுமில்லை... அதற்கும்காரணம் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய
நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதில்லை.!
இந்நிலை மற்ற
பெண்களுக்கும் வராமல் தடுக்கப் பட வேண்டும் என்ற உணர்வு தான் இந்த
கட்டுரையை எழுதத் தூண்டியது. பெண்கள் எந்த வயதிலும் தன் நண்பர்களை
தொடர்பில் வைத்துக் கொள்ள வேண்டும். யாரோ ஒருவருடனாவது மனம் விட்டு பேச
வேண்டும். நூலகம் சென்று நல்ல புத்தகங்களை வாசிக்க பழக வேண்டும். தனக்குப்
பிடித்த ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டு இருக்க வேண்டும். அது, படித்தல்,
எழுதுதல், தையல், வரைதல், கைத்தொழில் என ஏதாவது ஒன்றை செய்துக்
கொண்டிருந்தோமானால் இந்த மனச்சோர்விருந்து விடு படலாம்... !