இந்து ஆன்மீக சேவை கண்காட்சி என்ற பெயரில் இந்த ஒரு வார காலமாக இவர்கள் நடத்தும் கூத்து இருக்கிறதே, அதை என்னவென்று சொல்வது? பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள் , சிறுமிகள் ஆகியோரை அழைத்து, எல்லாவற்றிற்கும் வழிபாடு, பூஜை நடத்தி, இளம் பிஞ்சுகளின் மனதில் மதம் என்ற நஞ்சை புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மதத்தினரும் பயிலும் பள்ளியில் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரில் நடக்கும் கண்காட்சிக்கு ( உண்மையில் பிரச்சாரம் ) மாணவர்களை அழைத்துக் கொண்டு போக முடியும்? இதற்கு பள்ளி நிர்வாகமும் உடந்தையாக இருக்கிறது.
பாத பூஜை : ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்ய வைக்கப் படுகிறார்கள்... மதிப்பு, மரியாதை என்பது நடந்துக் கொள்ளும் விதத்தில் அல்லவா இருக்கிறது...!
கன்னியா வந்தனம் : பெற்றோர்கள் பெண் குழந்தைக்களுக்கு செய்யும் பூஜையாம்...பெண் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வியையும், யாரையும் சாராமல் தன் சுய சம்பாத்தியத்தில் வாழும் சுழலை ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமே... இதற்கு எதற்கு ஒரு வழிபாடு.. பூஜை?
கங்கா வந்தனம் : நீர், நிலம் மாசு அடைவதைத் தவிர்க்க இந்த வழிபாடாம்...நீர், நிலம் ஏன் மாசு அடைகிறது என்பதை விளக்கி, அதை தவிர்க்க கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு அதற்கும் ஒரு பூஜை..!
கோ பூஜை: இது மற்ற ஜீவ ராசிகளை மதித்து போற்றுவது என்று சொல்கிறார்கள்.. மற்ற ஜீவ ராசிகளில் பசு மட்டும் தானா இருக்கிறது.. மற்ற விலங்குகளையும் போற்றி வழிபடலாமே..?
இதை விட எல்லாம் மிகவும் கொடுமையானது என்னவென்றால் 1008 மாணவர்கள் 1008 மாணவிகளுக்கு பூஜை செய்து அண்ணன்- தங்கை உறவினை மேம்படுத்திக் கொண்டார்களாம்...அண்ணன்-தங்கை உறவை சொல்லிக் கொடுப்பதற்கு பூஜை நடத்தி தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? நட்பு, சகோரத்துவம், அன்பு, பிறரை மதித்தல், ஆகியவற்றிற்கெல்லாம் வழிபாடு, பூஜை என்பதை இந்த இளம் வயதினருக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்களின் தன்னம்பிக்கை குறையாதா..? ஆளுமை எப்படி வளரும்? இது என்ன அறிவியல் கண்காட்சியா ..., பள்ளி மாணவர்களை பங்கு கொள்ள செய்வதற்கு..? மதம் என்ற போர்வையில் வளரும் தலைமுறையினரை தவறான பாதையில் அழைத்துச் செல்லும் இந்த போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது..மனிதநேயத்தைப் பற்றி போதிக்க வேண்டிய பருவத்தில் மதத்தை போதித்தால் எப்படி வருங்காலம் செழிப்பாக இருக்க முடியும்?