Tuesday, 31 March 2015

துணிவு

நேற்று மாலை பூங்காவில் கண்ட ஒரு காட்சி... சிறுவர்கள் விளையாடிக்  கொண்டிருந்தனர். ..! அப்போது ஒரு சிறுமி அழுதுக் கொண்டே வந்து தன தாயிடம் ,  ' அவன் என்னை அடித்து விட்டான் ' என்று முறையிட்டாள். அதற்கு அந்த தாய் யார் என்று கேட்க, அச்சிறுமி கைக்காட்டி அவன்தான் என்று சொன்னாள்... அதற்கு அங்கிருந்த மற்ற பெண்கள் ,  அந்த பையன் எப்போதும் அப்படி தான்.. எல்லோரையும் அடிப்பான் என்று கூறினார்கள் .  உடனே அந்த தாய் தன மகளிடம், '  இனிமேல் அவனிடம் விளையாடாதே.., அவனிடம் பேசாதே ' என்று கூறுகிறார்.

இதுவே அச்சிறுவன் மற்றொரு சிறுவனை அடித்திருந்தால் அந்த சிறுவன் இப்படி தான் தன தாயிடம் வந்து முறையிடுவானா..? அல்லது அவனுடைய தாய் தான் இப்படி கூறுவார்களா..? இன்னும் சொல்லபோனால் நீயும் அடிக்க வேண்டியது தானே ... என்பது தான் பதிலாக இருக்க முடியும்..!  சிறுவர்களாக  இருந்தாலும், ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் வெவ்வேறு விதத்தில் வளர்க்கப் படுகிறார்கள் நம் சமூகத்தில்...!  ஆண் குழந்தைகளுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், பெண் குழந்தைகளுக்கு அதை எதிர் கொள்ளாமல் ஒதுங்கி செல்வதற்கும், அல்லது அதை அனுசரித்துப்  போவதற்கும் பழகப் பட்டு வளர்க்கப் படுகிறார்கள்..! முதலில் இதை தாய்மார்கள் உணர வேண்டும். நாம் வளர்ந்தது போலவே தன குழந்தைகளை வளர்க்காமல் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் நடக்கவும், எது சரியானது என்பதையும் சொல்லிக் கொடுப்பது மிக முக்கியம்... அப்போது தானே அந்த குழந்தை வளர்ந்தவுடன் எதையும் எதிர்கொள்ளும் திறனைப் பெற முடியும்..! 

Monday, 23 March 2015

நேற்று விஜய் தொலைக்காட்சியில் ( 22-03- 2015 ) நீயா, நானா நிகழ்ச்சியில் பெண்களின் பொழுது போக்கு குறித்து விவாதிக்கப் பட்டது. அதில் இறுதியில் முன்று கேள்விகள் கேட்கப்பட்டன. பத்திரிக்கைப் படித்தல், ஏதாவது பேசிக் கொண்டிருத்தல் மற்றும் தொலைக் காட்சி பார்த்தல் என்பவை தான் அவைகள். அதில் முதலிடம் தொலைக்காட்சி பார்த்தலுக்கு தான். இரண்டாவது ஏதாவது பேசிகொண்டிப்பது, முன்றாவது இடம் தான் பத்திரிகை படித்தலுக்கு.. அதுவும் ஓரிரண்டு பேர் தான்...!  ' இது தவறான ஓன்று.., இதை மாற்ற வேண்டும்.. நீங்கள் நிறைய படியுங்கள்.. எழுதுங்கள், உங்கள் உணர்வுகளை பதிவு செய்யுங்கள்' என்று வரவேற்கத்தக்க, அருமையான கருத்து திரு. கோபிநாத் -ஆல் முன் வைக்கப்பட்டது..மிக்க நன்றி.. மகிழ்ச்சி...!

இந்த ஒரு கருத்து கூட ஆண் ஒருவரால் தான் பெண்களுக்கு இந்த கணினி யுகத்திலும் சொல்லப்பட வேண்டிருக்கிறது என்பது வருத்ததுக்குரிய ஒன்றாக  தான் இருக்கிறது..! தொலைக்காட்சி தான் பொழுதுபோக்கு என்று கூறிய பெண்கள் அனைவரும் எதுவும் தெரியாதவர்கள் அல்ல.. அவர்களுக்கும் பெண்ணிய சிந்தனை அதிகமுள்ளது... பிடிக்காத, தவிர்க்க வேண்டிய விடயங்கள் என்ன என்று கேட்கப் பட்ட போது மிகவும் சிறப்பாக சிலவற்றை சொன்னார்கள்..! வாசனை திரவிய விளம்பரத்திற்கு ஒரு ஆணின் பின்னால்  பல பெண்கள் வருவது போன்று காட்டப் படுவதும், பெண்களை இழிவுப் படுத்துவது போன்ற காட்சிகள் தொடர்களில் வருவதையும்,  திரைப்பட பாடல்களில் பெண்களை ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க எழுதப்படும்  வரிகளையும், தொலைக்காட்சியில் வரும் மகளிர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அழகு குறிப்புகளும், சமையல் குறிப்புகளும் தான் சொல்லப் படுகின்றன என்பதையும் மிக சிறப்பாக எடுத்துரைத்தார்கள்..!!! 

இந்தளவு பெண்ணிய சிந்தனைகள் இருந்தும் இவர்களின் பொழுது போக்கு தொலைக்காட்சி தான் எனபது தவிர்க்கப் பட வேண்டிய ஓன்று .., இதில் யாருக்கும்  மாற்றுக்கருத்து இருக்க முடியாது ...! இந்த சகோதரிகள்  அனைவரும்  இதை  விட்டு வெளியே வந்தால் நிச்சயம்  உணர்வார்கள்..., ரசிக்கப்பட வேண்டியவை,  அறிய பட வேண்டியவை, சாதிக்க பட வேண்டியவைகள்  நிறைய  நம்மைச் சுற்றி இருக்கின்றன என்பதை...! தொலைக்காட்சி  நம் நேரத்தை மட்டுமல்ல...நம் சிந்தனையை, அறிவை, திறமையை , ஆளுமையை எவ்வளவு சுரண்டி இருக்கிறது என்பதை தெளிவாக உணர  முடியும்...!!!

Wednesday, 18 March 2015

நிறம்

நிறம்..,  நிறம் பொதுவானது..!  மனிதர்களில் நிறத்தை அடிப்படையாக வைத்து பேச வேண்டுமென்றால்,  இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம்  பார்க்க வேண்டிய அவசியமில்லையே...! நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் வீட்டின் வரவேற்பறை வரை வந்து நம் மீது திணிக்கப் படும் விசயங்களில் ஒன்று விளம்பரங்கள்...! இதில் மிக முக்கியமாக சிவப்பாக்கும் பசை( என்ன தான் தடவினாலும் சிவப்பாக முடியாது என்பது வேறு செய்தி ) ஒன்றிற்கு வரும் விளம்பரம் இருக்கிறதே, அதை என்னெவென்று சொல்வது?  ஒரு பெண்ணிற்கு கருப்பாக இருக்கும் போது வராத தன்னம்பிக்கை சிவப்பாக் ஆனவுடன் வருவதாக காட்டியிருப்பார்கள்...!!!   ஆக ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை கல்வியிலோ, திறமையிலோ, தன ஆளுமையினாலோ வராமல், தோலின் நிறம் சிவப்பாக இருந்தால் வந்து விடும் என்பது எத்தகைய கீழ்த்தரமான எண்ணம்... இதை விட  கேவலமாக பெண்களை சித்தரிக்க முடியாது என்பது திண்ணம்...!

மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்கும் பாராளுமன்றத்தில் கூட ஒருபெரிய கட்சியின் தலைவர் பெண்களின் அழகைப் பற்றியும், நிறம், வடிவம் பற்றியும் விமர்சிக்கிறார் என்றால் பெண்கள் இன்னமும் காட்சிப் பொருளாக பார்க்கப் படுகிறார்கள்   என்பது  தானே உண்மை..! இது கண்டிக்கப் படக் கூடிய ஒன்றாக தான் இருக்க முடியும்..!  வெள்ளை நிறமுடையவர்கள் கருப்பு நிறமுடையவர்களை விட முக்கியத்துவம் தரப் படுகிறார்கள் என்றால் இதில் ஏன் பெண்களை  மட்டும் குறிப்பாக சொல்ல வேண்டும்? பொதுவாக மனிதர்கள் என்று குறிப்பிட்டு இருக்கலாமே...! அப்படியும் இல்லையென்றால் ஆண்டாண்டு காலமாக நடை முறையில் இருக்கும் வட இந்தியர் , தென்னிந்தியர் பாகுபாடை கூட குறிப்பிட்டு இருக்கலாம்....!!!

பெண்கள் தற்போது அனைத்துத் துறைகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... !   இக்காலக் கட்டத்தில் கூட பெணகளின் திறமை, கல்வி தகுதி, சாதனை இவற்றை பொறுத்து  மதிப்பிடாமல் அழகு, நிறம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதென்றால் பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசி என்ன பலன்...? பெண்களின் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம்..? நிறம் தான் முக்கியமாக கவனிக்கப் படுகிறதென்றால் அதில் ஆண், பெண் என்ற பேதமில்லை..அது அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஓன்று தானே..!

Sunday, 15 March 2015

குழந்தைகள் நம் வருங்காலத் தூண்கள்

உலகில் ஊட்டசசத்து குறைவாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை விகிதாசாரத்தில் 46 சதவிகிதம் இந்தியாவில் மட்டுமே இருக்கிறார்களாம்...!  இந்தியாவின் வருங்கால தூண்கள் என்று நம்பப்படும் குழந்தைகளின் நிலைமை இப்படி உள்ளது..? ஆனால்..., 

 * பால் குடம் குடமாக அபிஷேகம் என்ற பெயரின் கற்சிலைகளின் மீது ஊற்றப் படுகிறது. நாலு கால    பூஜை, ஆறு கால பூஜை என உணவை கற்சிலைகளின் முன்பு படைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

* அரசோ கங்கையை சுத்தப் படுத்துகிறோம் என்றப் பெயரில் ( முதலில் கழிவை, குப்பையை போடாமல் இருக்க சட்டம் இயற்றாமல் எப்படி சுத்தம் செய்வார்கள்  என்று புரியவில்லை.) கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி இருக்கிறது.

* புராணத்தில் உள்ளதை காரணம் காட்டி இல்லாத சரஸ்வதி நதியை கண்டுப்பிடிக்க கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

* மத மாற்றம், பசு வதை சட்டம் என்றெல்லாம் பேசி கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் சிந்திக்க எங்கே நேரம் இருக்கிறது.

* இதை விட உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாமியாரிணி சொன்னது தான்...!!!! 

மதம் நம்மை எங்கு கொண்டு போகிறது என்பதை  தெளிவாக உணரா விட்டால் மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்க வேண்டி இருக்கும்...! உடல் வலிமையுடனும்,  அறிவுடனும் , மனித நேயத்துடனும் கூடிய மனித வளம் மட்டுமே நம்மை உலக அளவில் முன்னிறுத்த வழி வகுக்கும்..!

Wednesday, 11 March 2015

நான் நல்லவன்



சில தினங்களுக்கு முன் மகிழுந்தில் (car)  சென்று கொண்டிருந்தபோது எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த சரக்குந்தில் (lorry)  "  நான் நல்லவன்  "  என்று எழுதி இருந்தது. நான் படித்த மாத்திரத்தில் , என் மனதில் '  ஓ. .. அப்ப  நாங்கள் எல்லாம் கெட்டவங்களா..! ' என்று தோன்றியது. அதற்கு அடுத்த வினாடியே நாம் தவறாக எடுத்துக் கொண்டோம் என்பதை  புரிந்துக் கொண்டேன். படிப்பவர்கள் அனைவரும் நான் நல்லவன் என்று சொல்லும்  போது ஒரு நேர் மறை சிந்தனையை தான் உருவாக்குகிறது  என்பதை....!

இரண்டு எண்ணங்களும் அடுத்தடுத்து தோன்றுகிறது ஒரே மனதில்.. முதலில் எதிர் மறையாகவும், பின்பு  நேர்மறை சிந்தனையாகவும் ..! ஒரே வாசகம். படிப்பவரும் ஒருவரே..ஆனால் நம் மனம் இரு வேறு விதமாக சிந்திக்கிறது என்பதை எளிதாக புரிந்துக் கொள்ள முடிந்தது.. எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்திலும்  , அணுகும் முறையிலும் தான் புரிதல் உண்டாகிறது.   நேர்மறை சிந்தனையை நாம் பழகிக் கொண்டால் , அதிலுள்ள எதிர்மறை காணாமல் போய் விடுகிறது என்பது உண்மை. நாம் எல்லோருக்கும் தெரியும்.., தாமஸ் ஆல்வா எடிசன் தனது கண்டுபிடிப்பில் 9999 முறை தோல்வியை தழுவியப் பிறகு வெற்றி கண்டார்.  ஆனால் அவரோ அதை தோல்வியாக கருத வில்லை, எப்படி செய்ய கூடாது என்ற அனுபவத்தை பெற்றேன் என்றல்லவா கூறினார்...! நாம் எல்லோரும் அவருடைய விடா முயற்சி தான் இதற்கு காரணம் என்று நினைத்திருப்போம்.. ஆனால் அந்த விடா முயற்சிக்கு கூட அணுகும்  முறை தான் காரணம். ஒரு செயலை அணுகும் விதத்தில் தான் நமக்கு தன்னம்பிக்கையும், அதன் மூலம் விடா முயற்சியும் கிடைக்கிறது...! அணுகும் முறையில் தான் ஆளுமையும் செயல் படுகிறது என்பதை உணர முடிந்தது...!

Sunday, 8 March 2015

பெண்களே.., தங்களை அழகு படுத்திக் கொண்டு  அலங்காரப் பதுமைகளாக காட்டிக் கொள்ளாமல்,  அறிவையும், ஆளுமையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.. அது உங்களுக்கு சுய மரியாதையையும், சுய மதிப்பையும் கொடுக்கும்... தன்னம்பிக்கையை மென்மேலும் ஊட்டும்...!

திருமணம்...

இது கற்பனை அல்ல... நம் வீடுகளில் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பார்க்கும் போது , நம் எல்லோரின் எதிர்பார்ப்புகள் எப்படி வார்த்தைகளாக வருகிறது என்பதை சுட்டிக்காட்டும் ஒரு சிறு உரையாடல் :

மகன்  : பெண் அழகாக இருக்க வேண்டும். நன்கு படித்திருக்க வேண்டும். ஒரு நல்ல வேலையில் இருக்க வேண்டும் ..!

அம்மா : வேலை செய்து அலுத்து விட்டது. மருமகள் வந்ததும் அவளிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு நன்கு ஒய்வு எடுக்க வேண்டும்!.

அப்பா : வர வர உன் சமையல் நன்றாக இல்லை. வாய்க்கு ருசியாக சமைத்து போடும் பெண்ணாக இருக்க வேண்டும்.!

பாட்டி  : என்னை கோயிலுக்கு அழைத்து போவதற்கும், பேச்சு துணைக்கும் ஏற்றவளாக இருந்தால் நல்லாயிருக்கும்.!

தங்கை : யாருமே என்னை புரிந்துக் கொள்ள வில்லை.. என்னுடைய ரசனைக்கு ஏற்றவாறும், உதவி செய்பவராகவும் ஒரு அண்ணி வேண்டும்.!

இது பெற்றோர்  பார்த்து செய்து முடிக்கும் திருமணம்...., இதுவே  காதல் திருமணமாக இருந்தால் எப்படி இருக்கும்...?

மகன் வீட்டில் உள்ள அனைவரிடமும், "  பெண் ரொம்ப நல்லவள். நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கிறாள்....,  நம் குடும்பத்திற்கு மிகவும் ஏற்றவள்...,  நல்லா  சமைப்பாள்...,  பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதாகட்டும்.., மற்றவர்களை மதிப்பதாகட்டும்... ஒரு குறையும் சொல்ல முடியாது... எல்லோரிடமும் அன்பாக இருப்பாள்...  அவர்கள் குடும்பமும் நல்ல குடும்பம் தான்...! "

இந்த இரு திருமணங்களிலும் பெண்ணின் ஆசையோ, எண்ணமோ, குறிக்கோளோ, உணர்வுகளோ சிந்திக்கப் படவேயில்லை..! ( சிந்தித்தால் தானே மதிக்கப் படுவதற்கு ...)  புது வீடு, புதிய மனிதர்கள், புதிய உறவுகள்.., இவைகளை எதிர்நோக்கும் அந்த பெண்ணின் மனநிலை பற்றி யாருக்கும் கவலை இல்லை. .., முதலில் அவர்கள் அந்த ஆண்மகனின் வாழ்க்கை முழுதும் சமபங்கு ஏற்று , சம உரிமையுடைய ஒரு வாழ்விணையராக  அந்த பெண்  பார்க்க பட வில்லை...!
அவர்களை பொறுத்த மட்டில் வீட்டிற்கு வாங்கப்படும் துணி துவைக்கும் இயந்திரமாகவோ, குளிர்பதனப்  பெட்டியாகவோ,  மாவரைக்கும் இயந்திரமாகவோ தான் பார்க்கப் படுகிறார்கள்..!

Tuesday, 3 March 2015

பெண்கள் இன்னும் ஆண்களின் உடைமைகளா..?

கொடூரமான குற்றத்தை செய்து விட்டு , அதற்கான தண்டனையும் பெற்று, அது நிறைவேற காத்திருக்கும் ஒரு குற்றவாளியால் எப்படி இப்படி பேச முடிகிறது..??? பெண் என்பவள் எப்போதும் உடைமையாகவே பார்க்க படுவதன் விளைவு தான் இது என்று தோன்றுகிறது...! ஆண்கள் இத்தனை மணிக்கு மேல் வெளியில் செல்ல கூடாது .., இந்த மாதிரி தான் ஆடை உடுத்த வேண்டும்... என்று யாரும் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை எனும் போது , பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை நிபந்தனைகள்.. கட்டுபாடுகள்..?  மேலை நாடுகளில் பெண்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.. அங்கு இது போன்ற குற்றங்கள் நடை பெறுவதில்லையே ..!

" பெண்கள் நாட்டின் கண்கள் "  என்னும் வாசகத்தை நான் என்னுடைய  எட்டு வயதிலிருந்தே பார்த்து வருகிறேன்...! ஆனால் குற்றங்கள் இன்னும் அதிகரித்து இருக்கின்றனவே தவிர குறையவில்லை...! எங்கு தவறு நடக்கிறது என்று சிந்தித்தால் , பெண்ணியம் சார்ந்த  அடிப்படை எண்ணமே தவறாகவே உள்ளது நம் நாட்டில்., துகிலுரிக்கப் பட்ட திரௌபதியையும் , தீக்குளிக்க கட்டாயப் படுத்தப் பட்ட சீதையையும் இன்னும் நம் பாடத் திட்டத்தில் வைத்து படித்துக்  கொண்டிருக்கிறோம்...! இதில் என்ன கொடுமை என்றால், இதை இரண்டையும் வலியுறுத்திய ஆண்கள் இருவரும் மிகவும் நல்லவர்களாகவே சித்திரிக்கப் பட்டுள்ளார்கள்...!!! இதை  படிக்கும் ஆண்களுக்கு  சிறு வயதிலிருந்தே பெண் என்பவள் தன்னுடைய உடைமை என்று தானே தோன்றும்..?

ஆண்களுக்கு தோன்றும் அத்தனை உணர்வுகளும் பெண்களுக்கும் உண்டு.., அவர்களுக்கு உள்ள அதே கல்வி, குறிக்கோள், முன்னேற்றம் போன்றவற்றில் உள்ள அனைத்து  உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு  ., அவர்கள் ஒரு காட்சி பொருள் அல்ல ..என்ற எண்ணத்தை இனிமேலாவது வலியுறுத்தும் படி நம் பாட திட்டம் முதல் அன்றாடம் நடக்கும் நம் வாழ்வியலையும் சேர்த்து போதிக்க வேண்டும்..  அது மட்டுமல்ல.., இந்த மாதிரி குற்றங்களுக்கு விரைவு நீதி மன்றம் மூலம் விரைவில் வழக்கை முடித்து, தீர்ப்பு வழங்க வேண்டும். தண்டனைகளும் சற்று கடுமையாக்கப் பட வேண்டும்..