நம்மிடையே பலருக்கு இந்த குலதெய்வ வழிபாடு என்பது குறித்த சரியான தெளிதல் இல்லை என்பது என் கருத்து. முன்னோர்களை வழிபடுதல் என்பது சரி தானே என்று சில முற்போக்குவாதிகள் கூட கூறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இதை வலியுறுத்தவும் செய்கிறார்கள்..! இந்த வாதம் எப்படி சரியாக இருக்க முடியும்..? நாம் காணாத கடவுளை வணங்குவதை விட நம்முடன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதரை வணங்குதல் சரி என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளுதல் ஒரு வகையில் அறியாமை தான்..!
அது நம் முன்னோர்கள் ஆக இருந்தாலும் சரி ..., ஒரு குழுவின் தலைவனாகவோ அல்லது ஒரு இனத்தின் தலைவனாகவோ இருந்தாலும் சரி.., அவர்களை நினைவு கூறுதல் என்பது சரியான ஓன்று. அது நம் சந்ததியினருக்கும், அவர்களை பின்பற்றுபவர்களுக்கும் அவரைப் பற்றிய செய்திகள் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்த ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சி என்பது வரை இது சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.. இது எப்போது வழிபாடு என்று ஆகிறதோ அப்போதே மூட நம்பிக்கையில் சேர்ந்து விடும்..!
இப்படி தானே புத்தர், ஏசு, மகாவீரர், நபிகள் நாயகம் போன்றவர்களின் நெறிகள் மதமாக்கப் பட்டன்...! இதை தெரிந்து தான் தந்தை பெரியார் அவர்கள், அவரின் ஒவ்வொரு சிலையின் கீழும் கடவுள் மறுப்பு கொள்கையை பதிவு செய்ய சொன்னார்கள்..! சற்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இதை நாம் ஏற்றுக் கொண்டோமானால் நாளை காந்தி மதம், ஐயனார் மதம், வீரனார் மதம் என்று பல மதங்கள் பெருகிக் கொண்டே போகும் மிகப் பெரிய ஆபத்து இருக்கிறதே..! மக்களால் இதை தாங்கி கொள்ள முடியுமா..? அப்படியே முடியுமென்றாலும் நம் பகுத்தறிவிற்கு ஒவ்வாத ஒன்றை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..? ஒருவரிடம் நாம் வைத்திருக்கும் மரியாதை, மதிப்பு பக்தியாக மாறி விட நாம் அனுமதிக்க கூடாது.!