Wednesday, 23 December 2015

பெண்களை உருகுலைக்கும் மனச் சிதைவு நோய்.

எனக்கு மிகவும் பரிச்சியமான ஒரு குடும்பம். கணவன், மனைவி, இரு பெண் குழந்தைகள். பார்ப்பதற்கு மகிழ்சியான குடும்பம் தான். ஆனால் கணவன், மனைவிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன... இது பெரும்பாலும் அனைவருக்கும் உள்ளது தான்.

சிறிது கால இடைவெளியில் அந்த குடும்பத்தைப் பற்றிய செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது..! மூத்த மகள் மருத்துவம்  பயில்கிறாள். இளையவள் பதினோராம் வகுப்பு. அவர்களுடைய  தாய்  அவர்கள் வீட்டில் இல்லை. வீட்டோடு ஒரு ஆளை ( அவருமொரு பெண்மணி தான்) நியமித்து சமாளித்து கொண்டிருக்கிறார்கள்...! காரணம் அவர்களின் அம்மாவிற்கு மனச் சிதைவு நோய். அதிகம் கோபப் படுகிறார்கள்... ஏதாவது பிள்ளைகளை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..காரணமே இல்லாமல் எல்லோரையும் புண்படுத்தி பேசுகிறார்கள். இதனால் பிள்ளைகள் படிக்க முடியவில்லை என்பது தான்.!
அந்த பெண் நாற்பதை கடந்த நடுத்தர வயதுடையவர். கணவனுக்கும், அவருக்கும் அடிக்கடி மனக்கசப்பு ஏற்படுவதுண்டு. எதனால் என்று மிகச் சரியாக கணிக்க முடியவில்லை...  ஆனால் வெளியில் யாருடனும் .பேச மாட்டார். பழக மாட்டார். எப்போதும் ஒரு சோகத்துடனே காணப் படுவார். பலநாட்பட்ட மன அழுத்தம் அவரை இந்த நிலைக்கு தள்ளி இருக்கிறது..! இப்போது அவருடைய தாயார் வீட்டில் விடப்பட்டிருக்கிறார்... அவருக்கான செலவுகளை கணவர் பார்த்துக் கொள்கிறார் என்றாலும், குழந்தைகளைப்  பிரிந்து இருக்கும் அந்த பெண்ணின் மனம் இன்னும் மன உளைச்சலில் தான் இருக்குமென்று நினைக்கிறேன்... இதை கேள்விப் பட்டதும் மிகவும் வேதனையாக இருந்தது.

பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தனக்கென்று எதையும் நினைப்பதில்லை.. நினைத்த மாதிரி திருமண வாழ்க்கை அமைத்து விட்டால் சரி.. இல்லை என்றால் இந்த மன அழுத்தம் பெண்களை  வெகுவாக பாதிக்கிறது.. கணவன்-மனைவி உறவு சரியில்லை என்றால் , இந்த மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிறார்கள்...! 
 
குழந்தைகள் வளர, வளர அவர்கள் படிப்பு, நண்பர்கள் வட்டமென்று சென்று விடும் போதும்,கணவன் வேலை, தொழில் என்று இருக்கும் போதும் தான் தனிமையில் விடப்பட்டு விட்டோம் என்ற உணர்வே இந்த நிலைக்கு காரணம். பணி புரியும் சகோதரிகளுக்கு தன கவலையை மறக்க தோழர்கள், பணி  என்ற ஒரு வடிகால் இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு எந்த வடிகாலுமில்லை... அதற்கும்காரணம் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதில்லை.!
இந்நிலை மற்ற பெண்களுக்கும் வராமல் தடுக்கப் பட வேண்டும் என்ற உணர்வு தான் இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது. பெண்கள் எந்த வயதிலும் தன்  நண்பர்களை தொடர்பில் வைத்துக் கொள்ள வேண்டும். யாரோ ஒருவருடனாவது மனம் விட்டு பேச வேண்டும். நூலகம் சென்று நல்ல புத்தகங்களை வாசிக்க பழக வேண்டும். தனக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டு இருக்க வேண்டும். அது, படித்தல், எழுதுதல், தையல், வரைதல், கைத்தொழில் என ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டிருந்தோமானால் இந்த மனச்சோர்விருந்து விடு படலாம்... !
பெண்களே... எப்போதும் மனச்சோர்வுக்கு உள்ளாகாமல்  புத்துணர்ச்சியுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்..!

Monday, 21 December 2015

நெகிழிப் பொருட்கள் ...!

நான் பார்த்தவரை பெரும்பாலும் சென்னையில் மழை நீர் தேங்கி இருந்த போதும்,  இப்போது குப்பைகளாக குவிந்திருக்கும் போதும், ஆக்ரமித்திருப்பது  பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும் தான்.! 
மண்ணிலும் மக்காமல், நீரிலும் கரையாமல், நீரை மண் உறியாமல் தடுப்பதும் இந்த நெகிழிப்பொருட்கள்  தான்.!
இன்னும் சொல்லப்போனால் சாக்கடைகளை அடைத்திருப்பதும் இவைகள தான்.!
இயற்கையையும் கெடுத்து, நம் உடல்நலத்தையும் பாதிக்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடை கொடுத்து பயன்படுத்தாமல் இருப்போமே..!

Thursday, 17 December 2015

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:
"அரசு நியமனங்களை மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது..
அந்த நியமனங்களில் கோயில்களில் பின்பற்றப்படும் பழக்கமுறையை பின்பற்றவேண்டும் என்கிறது..
அந்தப் பழக்கங்கள் சாதி அல்லது பிறப்பு சார்ந்த பேதமாக இருக்கக்கூடாது என்று சொல்கிறது... ஆனால் ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் சொல்கிறது.!"
இந்த தீர்ப்பை பார்த்தால், பல்வேறு குழப்பங்களை உள்ளடக்கியதாகவே தெரிகிறது... ' இருக்கு ... ஆனா இல்ல ' என்பது போல்.!
பழைய முறைகளை பின்பற்ற வேண்டும் என்ற ஒரு உள்குத்து வேற...!
சமூகநீதியில் அக்கறைக் கொண்ட அரசு இதை நியமனம் செய்தாலும், ஆகம விதிகளுக்கு உட்படவில்லை என்று இடைக்கால வழக்கு போட்டு ஆணையை தடுக்க முடியுமே... ஆகம விதிகள் எல்லாம் அவர்களுக்கு சாதகமா தானே இருக்கிறது...!!!

Tuesday, 15 December 2015

சென்னையின் மழை வெள்ளம்

சென்னைவாசிகள் பலரையும் வீடு இழந்து, உடைமைகள் இழந்து, 
வீதியில் வர வைத்திருக்கிறது இந்த வரலாறு காணாத பெரு மழை...!   ஆனால் சென்னைவாசிகள் முழுதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்... என்ன ஒரு 
மனிதநேயம்.. குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த துடிப்புடனும், 
ஒற்றுமையுடனும், அன்புடனும், பொறுப்புடனும் சேவை 
செய்கிறார்கள்... நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பல 
அமைப்புகள், தனிப் பட்ட மனிதர்கள் என பாதிக்கப் பட்ட மக்களுக்கு 
தங்களால் முடிந்த அளவு உதவி செய்கிறார்கள்.உணவு, உடை, 
அத்தியாவசியப் பொருட்கள், என பல வழிகளில் உதவி 
வருகிறார்கள்.பலர் பணம் கொடுத்து உதவி செய்கிறார்கள்...! 

 இராணுவம், கப்பற்படை, பேரிடர் மீட்பு குழு, தமிழக கமாண்டோ குழுவினர் என அனைவரும் மீட்புப் பணியில் இறங்கினர். அதற்கு முன் முதல் தற்போது வரை 
இளைஞர்களின் தொண்டு அளப்பரியது.. அந்த தோழர்களுக்கு மிக்க நன்றி... தங்கள் பணி தொடர வாழ்த்துகள்...! 
து மட்டுமல்லாமல், இஸ்லாமிய,சீக்கிய, கிருத்துவ, ஜைன  சகோதர, சகோதரிகளின்  அன்பும், பரிவும், உதவும் மனபான்மையும் அளவிட முடியாதது...!ஜாதி, மதம், மொழி இவைகளை தாண்டி மழை நம்மை இணைத்திருக்கிறது... மனிதநேயத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்திருக்கிறது... நானும் ஒரு சென்னைவாசி என்ற முறையில், மழையில் நனைத்தப் படி, வெள்ளத்தில் போய் உதவி செய்த, இன்னமும் உதவி செய்துகொண்டிருக்கும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும், மிக்க நன்றி.. நன்றி..நன்றி...!