Friday, 23 December 2016

ஊழலும், மதவாதமும்

இவ்வளவு அவசரகதியில் அதிமுக-வின் ஊழல்களை தோண்டி எடுக்கும் பா.ஜ.க. , தங்களின் வியாபம் பற்றியோ, அமித்ஷாவின் 500 கோடி, பாபா ராம்தேவிற்கு நிலங்களாகவும், கோடிக்கணக்கில் பணத்தையும் வாரி வழங்கியதைப்  பற்றியோ, சுத்தப் படுத்தவே முடியாத கங்கைக்கு ஒதுக்கிய நிதி பற்றியோ, இன்னும் எவ்வளோவோ இருக்கிறது.. சொல்லிக் கொண்டே  போகலாம்...  அதை பற்றியெல்லாம் ஒரு பேச்சுக்கு கூட மூச்சு விடவில்லையே...!


தன கட்சி ஆளும் மஹாராஷ்டிராவிலோ, ராஜஸ்தானிலோ, அரியானாவிலோ, மத்தியபிரேசத்திலோ உள்ள தலைமை செயலாளர் வீட்டில் இம்மாதிரி துணை ராணுவத்துடன் நுழைந்து ரெய்டு செய்யும் துணிவு உண்டா... கட்சி தலைமைக்கு ...?

நான் ஏதோ ஊழலுக்கு ஆதரவாக, அதிமுகவிற்கு  பேசுவதாக நினைக்க வேண்டாம்... ஊழல் தடுக்கப்பட வேண்டும்... ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று  கருத்து இல்லை.  பெரியரியலை படித்தவர்களுக்கு கட்சி பேதமின்றி, சமூகம் பற்றிய கண்ணோட்டம் மட்டுமே இருக்கும்.

 'ஒட்டு அரசியல் செய்பவர்களுக்கு அடுத்த தேர்தலைப் பற்றிய கவலை, நமக்கோ அடுத்த தலைமுறைப் பற்றிய கவலை .' 

என்று அய்யா அவர்கள் சொன்னது போல் எங்களுக்கு அடுத்த தலைமுறை பற்றிய கவலை தான்.!

 ஊழலை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் தங்களுக்கு ஒரு நிரந்தரமான இடத்தை பெற முயற்சி செய்கிறது பா.ஜ.க.!

மத்தியில் ஆட்சியை பிடித்ததும் இதே முறையில் தான் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. ஊழலா, மதவாதமா, என்றால் மக்களின் கவனம் ஊழலின் மேல் தான் திரும்பும்... அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. தங்கள் கட்சி ஊழலில்லா கட்சி என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ஊழலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. .. தாங்களே உரிய மதவாத அரசியலுடன்...!

மண் சார்ந்த மரங்கள்.

சில தினங்களுக்கு முன் பண்பலை அலைவரிசை ஒன்றில் , பூவுலகின் நண்பர்கள் அமைப்பை  சேர்ந்த தோழர் சுந்தரராசன் அவர்களின் செவ்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.!

அதில் மிக முக்கியமாக அவர் சொன்னதை இங்கு தருகிறேன். ' சில தினங்களுக்கு முன் வந்து சென்னை மக்களை ஒரு புரட்டு புரட்டிப்போட்ட வர்தா புயலினால் விழுந்த மரங்களில் பெரும்பாலானவை நம் மண்சாரா வெளிநாட்டு மரங்கள் தானாம். அழகான மலர்களுக்காகவும், சீக்கிரம் வளர்கிறது என்பதற்காகவும் நடப்பட்ட மரங்கள் தான் அவைகள்.!'.

நம் மண்ணுக்கேத்த மரங்களான அரசமரம், வேப்பமரம், புளியமரம், மாமரம், கொய்யாமரம் போன்றவை அடியோடு சாயவில்லை ... கிளைகள் மட்டும் முறிந்திருக்கின்றன என்பது வியப்புக்குரிய உண்மை.!
இனிமேல் நடப்படும் மரங்களையாவது , நம் மண் சார்ந்த மரங்களாக நடுவோம்... நண்பர்களே.!


மனிதம்

பிறருடைய வலிகளை கேட்கும் போதோ, பார்க்கும் போதோ மனம் கனமாவதை உணர்கிறீர்களா... குரல் எழ மறுக்கிறதா...கண்களில் கண்ணீர் முட்டுகிறதா... அப்படியென்றால், நீங்கள் மனிதனாக பிறந்ததின் பயனை உணர்ந்திருக்கிறீர்கள் என்று பொருள்.!

 மனிதம் உங்கள் உள்ளத்தை ஆக்கிரமித்திருக்கிறது ...மெய்யன்பு உங்களுக்குள் நிரம்மி வழிகிறது... அதை மென்மேலும் செம்மைப் படுத்த முயற்சி செய்யுங்கள்.!

அன்பை விட, மனிதத்தை விட இவ்வுலகில் வேறு எதுவும் பெரிதில்லை.!!!

ஜெயலலிதா என்னும் ஆளுமை

கொள்கைகளில் , அரசின் செயல்பாடுகளில் பல மாறுபாடுகள் இருந்தாலும், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா 
அவர்களின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும். !

ஆணாதிக்க சமூகமான இச்சமூகத்தில், ஒரு தனி பெண்ணாக பல வெற்றிகளை சாதித்து காட்டியுள்ளார். அவரின் துணிச்சல், ஆளுமை, விடாமல் முயலும் போர்க்குணம் முதலியவை அசாத்தியம்.!

அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரில்லாமல் இன்று அவர் சார்ந்த அதிமுக கட்சி வேர் இல்லாத மரமாக தான் இருக்கிறது.!

அவருடைய அரசியல் வாழ்வில் பல இன்னல்களை சந்திருந்தாலும், மிகவும் சாமார்த்தியமாக எல்லாவற்றையும் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார் என்பது உண்மை.!

ஒரு பெண்ணாக அவரின் ஆளுமையை மிகவும் மதிக்கிறேன்.! 

Friday, 2 December 2016

சென்னை மழை 2015

கடந்த ஆண்டு இதே டிசம்பர் . 2 - ந்தேதி சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்ததை  யாராலும் மறக்க முடியாது...இதே நாளில்  தானே வெள்ளம் ஆறாக ஓடியது. மக்கள் பட்ட சிரமங்களை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் ... தண்ணீர் மயம் தான்.!

தொலைக்காட்சியிலும், வானொலியிலும், இணையத்திலும் சென்னை வெள்ளத்தைப் பற்றிய பேச்சு தான்... அந்த நேரத்தில் சென்னை மக்கள்  ஜாதி, மதம், மொழி கடந்து ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொண்டதை பாராட்ட வார்த்தைகளே இல்லை.!


எல்லோருமே ஏதாவது ஒருவகையில் உதவுகிறார்கள் .. நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் என்னை உந்திக் கொண்டே இருந்தது என்பது உண்மை. அது இயலாமல் போனதற்காக மிகவும் வருந்துகிறேன்.
வீட்டில் வயதானவர்கள் ... மேலும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான உறவினர்கள் எங்கள் இல்லத்திற்கு  வந்திருந்தனர். அவர்களையும் சேர்த்து கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.!

மறக்கமுடியாத மழை டிசம்பர் 2015 மழை...  பல உயிரிழப்புகள், உடைமை இழப்புகள்...!  :-( :-(

எத்தனை இழப்பு இருந்தாலும், மனிதநேயத்தை வளர்த்த, அன்பை பகிர்ந்த நல்உள்ளங்களுக்கு நன்றி .. நன்றி... நன்றி .! :-) :-)

Wednesday, 30 November 2016

குழந்தைகள் வளர்ப்புமுறை


இன்றைய குழந்தைகள் வருங்கால தூண்கள். அவர்களை பக்குவப்  படுத்துவது நம் அனைவருடைய  கடமை.. வளரும் பருவத்திலிருக்கும் அவர்களுக்கு நல்ல செய்திகளை கொண்டுப் போய் சேர்ப்பது அத்தியாவசியமான ஓன்று. ஆதலால்,   நம் குழந்தைகளுக்கு காக்கை, குருவி கதைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், வரலாற்று உண்மைகளை கதைகளாக சொல்லி புரிய வைத்தல் மிக முக்கியம்..!

இப்போதுள்ள குழந்தைகள் அதி புத்திசாலிகள்... சரியாகப் புரிந்துக் கொண்டு நம்மையே நிறைய கேள்வி கேட்பார்கள் ... அதற்கு சரியான பதிலை, கருத்தை சொல்லி தெளிவுப் படுத்துவது மிக முக்கியம். இதற்காக நாம் அதிகம் மெனக்கடத் தான் வேண்டும். நிறைய படிக்கவேண்டும். தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்..அதை அவர்களுக்கு  புரியும் விதத்தில் தெளிவாக சொல்ல வேண்டும் என்ற நிறைய விசயங்கள் இதில் இருக்கின்றன.!

நம்முடைய மொழி, இனம் ,பண்பாடு சார்ந்த செய்திகளை  அவர்கள் புரிந்துக் கொள்ளும் படி கதைகளாக பயிற்றுவித்தோமானால், சிறு வயதிலேயே, இனப்பற்று, மொழிப்பற்று, அவரவர் இனத்தை சார்ந்த வரலாறு என அனைத்தும் அவர்கள் மனதில் எளிதில் பதிந்து விடும். மேலும் உலக வரலாறு, சீர்திருத்தங்கள், அறிவியல் முன்னேற்றங்கள், மனிதநேயம்  என ஒவ்வொரு நாளும் ஓன்று வீதம் சொல்லி வளர்ப்பது , பிற்காலத்தில் அக்குழந்தைகள் தன்னலமின்றி , சமூக அக்கறையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும்.!

அன்பு, பரிவு, மனிதம், மனிதநேயம், மக்கள் இவையே முக்கியம் , இவைகளை சார்ந்து தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்ற் வாழ்வியலையும்  கற்றுக்கொடுப்போம்.!  

Thursday, 24 November 2016

பெண்களுக்கெதிரான வன்முறை.

ஒரு பெண்ணை சகதோழியாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை ஆண்பிள்ளைகளுக்கு பெண் தான் கற்றுக்கொடுக்க வேண்டும்... ஒரு ஆண் அதாவது அப்பா சொல்லித்தருவதை விட ஒரு தாயால் இந்த உணர்வை துல்லியமாக  ஊட்ட முடியும். ஏனென்றால்,  தான் உணர்ந்த அனுபவம் அதற்கு மிகவும் கை கொடுக்கும். பாலியல் சமத்துவத்தை புரிய வைக்க வேண்டும்.!

சிறு வயதில் இந்த உணர்வை ஊட்டி விட்டால், எக்காலத்திலும் அந்த ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் மேல் எந்தவொரு இழிவானப் பார்வையும் அண்டாது.. அதை அனுமதிக்கவும் மாட்டார்கள். அவள் என்னுடைய தோழி என்று நினைக்கும்போது எங்கிருந்து வரும் வன்முறை...? பொதுவாக பெண்களை தங்கள் உடைமையாக ஆண்கள் பார்ப்பதினால் தான் பொறாமை, வக்கிரம், அடக்குமுறை என கடைசியில் வன்முறையாக வெளிபடுகிறது.!

மேலும் இன்றைய காலக்கட்டத்தில்  பெண்களுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியமாகிறது. பெற்றோர்கள் இதற்கு துணை நின்று உதவ வேண்டியது அவர்களின் கடமையாகும். பெண்களுக்கெதிரான வன்முறையை முறியடிப்போம்.!

#நவம்பர்25

#பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்புத்தினம்.

இடைத்தேர்தல் சொல்லும் அபாயக்குறி.!

அரவக்குறிச்சி   -  3,162
தஞ்சாவூர்           -   3,806
திருப்பரங்குன்றம்   -  6,930

மொத்தம் 13,898.

இவை, தமிழகத்தில் பா,ஜ.க. மூன்று தொகுதிகளில் பெற்ற  வாக்குகள்.  இக்கட்சி டெபாசிட் இழந்து விட்டது என்று நாம் ஒருபுறம் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.!

கால் பதிக்கவே முடியாத ஒரு மாநிலத்தில் , மூன்று தொகுதியில் மட்டும் அக்கட்சிக்கு வாக்களிக்க கிட்டத்தட்ட பதினான்காயிரம் பேர்கள் இருக்கிறார்கள் என்றால், ஒட்டு மொத்த தமிழகத்தில் எத்தனை பேர்கள் இருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கும் குணமுள்ள காவிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.!

பெரியார் மண் இது ... அவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது  என்று நாம் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என்பதை தான் இந்த வாக்குகள் நமக்கு சொல்கின்றன. இப்போதே கொங்கு மண்டலம் காவி மண்டலமாக மாறிக் கொண்டிருக்கிறது. நம் இனப்பற்று,மொழிப்பற்றை முற்றிலும் இழக்க வைத்துவிடும் தந்திரம் காவிகளுக்கு உண்டு. நாம் எல்லோரும் இந்த விடயத்தில் ஒற்றுமையுடன் செயல் பட்டு , தமிழகத்தில் காவிகள்  கூடாரம்  போட்டுவிட அனுமதித்து விடக்  கூடாது என்பதில்  உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஏற்கனவே ஜாதிகளால் பிளவுண்ட நாம் மதத்தாலும் பிளவு படும் நிலைமையை ஏற்றுக் கொண்டோமானால், மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் மக்களே... எச்சரிக்கையுடன் செயல் படுவோம்.!



Wednesday, 23 November 2016

மனிதர்களின் மனம்.

சில உணர்வுப்பூர்வமான செய்திகளும், அதை சொல்பவர்களும் நம் மனதில் "பச் " என்று ஒட்டிக் கொள்கிறார்கள்.!

நேற்று பேருந்தில் வரும்போது ,  ஒரு பெண்  நுங்கம்பாக்கம் நிறுத்தத்தில் ஏறி என் பக்கத்தில் வந்து அமர்ந்தார் . கூடவே அவரின் நண்பர் நின்றுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கோமதி அக்கா என்பவரின் பேச்சு வந்தது... பொதுவாகவே எனக்கு ஜன்னலோர இருக்கை  மிகவும் பிடிக்கும்.... வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவேன்... நேற்று அவர்களின் பேச்சு என்னை மிகவும் பாதித்தது...மனம் சாலையில் லயிக்கவில்லை... அவர்களின் பேச்சில் ஆழ்ந்தது.. அப்பெண் தன்  நண்பரிடம்  சோகம் தோய்ந்தக் குரலில், ' நாளை கோமதி அக்கா வரமாட்டார்கள்' என்றார். அதற்கு அந்த நபர், 'ஏன்? எங்கேயாவது வெளியில் போறாங்களா?' என்றார். உடனே அப்பெண், ' இல்லை.. நாளை அவங்களோட வீட்டுக்காரரோட நினைவுநாள் .. பாவம். போன வருசம் தான் இறந்தார்.. மழையில் அந்த அக்கா பட்ட கஷ்டம் இருக்கே.. அதை இப்ப நினைச்சாலும் மனசு கஷ்டமா இருக்கு... மழை கொட்டோகொட்டுனு கொட்டியப்ப தான் அவர் ஹாஸ்பிடலில் இருந்தார்...ஒரு வாரம் வரைக்கும் எவ்வளோவோ டிரீட்மெண்ட் கொடுத்து பாத்தாங்க... ரொம்ப அதிகமான குடிப்பழக்கம்... ஒன்னும் பண்ண முடியல...இறந்துட்டாரு.. (இந்த பாழாய்ப் போன குடிப்பழக்கம் தான் எத்தனை குடும்பங்களை சீரழித்திருக்கிறது...!  :-( )  பாடிய எங்கே எடுத்துக்கிட்டு போறதுனே தெரியாம அந்த அக்கா தவிச்சாங்க .. பாருங்க... கொடுமை சதிஷ்..! (அந்த நண்பரின் பெயர் போலும்).' ,  அப்போது தான்  திரும்பி, அவர்கள் இருவரின் முகத்தையும் பார்த்தேன்... உடனே அந்த சகோதரி, இலேசாக சிரித்துவிட்டு, மீண்டும் தொடர்ந்தார்.' வீட்டுக்குள்ளே தண்ணி வந்துடுச்சு.. கட்டில் மேலே, இன்னொரு கட்டில் போட்டு அதில் அவரை படுக்க வைச்சு, அந்த மழையிலே எங்கேயோ  எல்லாம் அலைஞ்சு, திரிஞ்சு,  பணத்தை ரெடி பண்ணி அடக்கம் பண்ணாங்க..பாருங்க...அதை இப்ப நினைச்சாலும் உடமெல்லாம் சிலிர்க்குது' என்றார். உடனே நான் , ' இப்போது அவங்க எப்படி இருக்காங்க.' என்றேன். ' இரண்டு குழந்தைங்க.. export கம்பெனில வேலை செய்றாங்க... எப்படியோ கஷ்டப்பட்டு தான் பிள்ளைகளை படிக்க வைக்கிறாங்க.! ' என்றார். 

பிறகு இருவரும் மந்தைவெளியில் இறங்கி விட்டார்கள்.


அச்செய்தியை கேட்டதிலிருந்து, இந்த நிமிடம் வரை, அந்த கோமதி அக்கா என்பவரின் நினைவு வைத்துக் கொண்டே இருக்கிறது ... அவரை பார்க்கவில்லை என்றாலும், அவரைப்பற்றி சொன்ன , இந்த சகோதரியின் முகம் மனதில் பதிந்து விட்டது.!

பேருந்துகளில், ரயில்களில் என எவ்வளோவோ பேர்களை நாம் சந்திக்கிறோம்.. ஆனால், சிலரின் பேச்சு, அவர்கள் சொல்லும் செய்திகள் மட்டும் நம் மனதை விட்டு அகலுவதே இல்லை.!!! :-(

Friday, 18 November 2016

தற்போது பெண்களின் நிலைமை.!

உண்மையில் பெண்களின் நிலைமை தான் இந்த ஒரு வார காலமாக பெரும் சிக்கல்..... என்ன சமைப்பது.. இருக்கிறதை வைத்து பிள்ளைகளுக்கு என்ன மதிய உணவு கொடுப்பது... மாலை பள்ளியிலிருந்து திரும்பி வரும் குழந்தைகளுக்கு என்ன சிற்றுண்டி செய்வது என்பது தான் அது.!

செலவு செய்ய கையில் காசில்லாமல், அதே சமயம் சத்துள்ள சமையல் செய்வது என்பது அனைத்து பெண்களுக்கும் இப்போதுள்ள தலைவலி.! 

சகோதரி ஒருவரின் புலம்பல், குமுறல்...
' எப்படியோ அட்டையை வைத்து, மளிகை, காய்கறிகள், பழங்கள்,பெட்ரோல் , பிள்ளைகளின் டியூஷன் பீஸ் என்று ஒப்பேத்தியாச்சி... ஆனால் இந்த வாட்டர்கேன் போடற அண்ணனுக்கு தான் ஒரு வாரமா காசு கொடுக்கமுடியல... என்னைக்கு தண்ணீர் கொடுக்காமல் நிறுத்த போகிறாரோ... தெரியல.! '

சிறு வணிகம் சிதைந்து, பெரு வணிகம் பெருக , மக்களின் வாழ்வாதாரம் முடங்க வைத்தப்  பெருமை மோடியையே சாரும்.!!! :-(




Tuesday, 15 November 2016

பணத்தட்டுப்பாடு.!

ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் வங்கியில் பணம் மாற்ற நாங்கள் வரிசையில் நின்றபோது , எங்களுக்கு முன்னால் ஒரு குடும்பம் நின்றிருந்தது... கணவன், மனைவி, 20 வயதில் ஒரு மகன், 15, வயதை ஒத்த ஒரு மகள் மற்றும் 10 வயதில் ஒரு மகன் நின்றிருந்தார்கள்.. அவர்கள் முறை வந்ததும், பணத்தையும், ஆதார் அட்டையின் நகல்  மற்றும் புரத்திச் செய்த விண்ணப்பத்தையும் கொடுத்தார்கள்... அதற்கு அந்த காசாளர் இரண்டு இரண்டாயிரம் தாள் தான் கொடுக்க முடியுமென்றார்..அதற்கு, அக்குடும்பத்தின் தலைவர்  உடனே,' கொடுங்க சார், எப்படி கொடுத்தாலும் பராவல... மாத்திக் கொடுத்தா  போதும் ' என்றார்.(எல்லோரையும்  போல் மிகவும் சிரமப்  பட்டிருப்பார் போலும்) அந்த நிலையிலும் எல்லோரும் சிரித்து விட்டார்கள். பின்பு ஒவ்வொருவரையும் அழைத்து பணம் கொடுக்கப் பட்டது.வாங்கியவுடன் அவரின் மனைவி, ' இவ்வளவு நேரம் நின்றதலெனக்கு கால் வலிக்கிறது.. இனிமேல் போய் சமைக்க முடியாது, எங்கேயாவது வெளியில் சாப்பிடலாம்' என்றார். உடனே அவரின் சிறிய மகன் , ' ஆமாம் அப்பா... எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்' என்றான். அடுத்து, பெரிய மகன், ' எனக்கு மொபைல் ரீசார்ஜ் செய்யணும், நெட்பே ஃக் போடணும்' என்றான். மகள்  ஓன்றும் சொல்லாமல்   அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.  (தந்தையின் சிரமங்களை பார்த்து, தங்களின் தேவைகளைக்குறைத்துக் கொள்வதில் மகள்களுக்கு நிகர் மகள்களேதான்.!)

எல்லோரிடமும் பணத்தை வாங்கி பர்சில் வைத்தபடியே, ' அவங்கங்க கவலை அவங்களுக்கு... என் கவலை எனக்கு.!' என்று சொல்லிவிட்டு , சிரித்துக் கொண்டே , வங்கியை விட்டு செல்ல தயாரானார் அக்குடும்பத்தின் தலைவர்.!

நிச்சயம் ஓட்டலில் தான் சாப்பிட்டு இருப்பார்களென நினைக்கிறேன்.! :-) :-)

கருப்புப்பணப்பிரச்னை.!

 கறுப்புப்பணம் வெளிக்கொணர்தல், ஒழித்தல் என்று கையில் எடுத்திருக்கும் மத்திய பா.ஜ.க. வின் இந்த முயற்சி, அரசியல் நாடகம் மட்டுமல்லாமல் , மக்களை மேலும் மேலும் பிச்சைக்காரர்களாக ஆக்கும் கொடுமையான செயல்  என்று தான் கூற முடியும்.!

சிறு, குறு வணிகம் சிதைந்து போவதற்கும், பெரு வணிகம் தழைத்தோங்கவும் செய்யப்பட்ட தந்திரம்தான் இது... நாம் வங்கிகளில் மாற்றும் 2000 ரூபாய் சில்லறையாக மா ற்றமுடியவில்லை... பக்கத்து அண்ணாச்சி கடையில் ஒரு கிலோ துவரம் பருப்போ, ஒரு லிட்டர் எண்ணெயோ வாங்க முடியவில்லை... ஏனென்றால் மீதி சில்லறை கொடுக்க அவர்களிடம் 100, 50 ரூபாய்கள் இல்லை. நம்மிடமும் இல்லாததால், அட்டை பயன்படுத்தும் பெரு வணிகர்களிடம் அதாவது பெரிய பல்பொருள் அங்காடிகளைத் தேடி போக வேண்டியுள்ளது. நமக்கு பழக்கமான கீரைக்கார அம்மாவிடம் ஒரு கட்டு கீரை வாங்க முடியவில்லை. இந்த சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் வருந்தத்தக்க உண்மை. காய்கறி, பழங்கள், மளிகை சாமான்கள் என அனைத்தும் வாங்குவதற்கு  பல்பொருள் அங்காடிக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது இந்த மோடி அரசு.!

நம் சொந்த பணத்தையே வங்கிகளில் எடுக்க முடியவில்லை... மாற்ற முடியவில்லை... பலமணி நேரம் செலவழித்து, 30 ATM சென்டர்களுக்கு சென்றால் அதில் மூன்று தான் செயல்பாட்டில் இருக்கிறது.. அதிலும் ஏகப்பட்ட மக்கள் கூட்டம்.  கடன் அட்டை வைத்திருப்பவர்கள் பெரிய கடைகளில்  அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை... இதனால்  யாருக்கு லாபம்???  ஏழை மக்களையும், நடுத்தர மக்களையும் தவிக்க விட்டு விட்டு , இந்த கறுப்புப்பணம் ஒழிப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.!

ஆரம்பத்தில், இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய நிதியமைச்சர் இப்போது நிலைமை சீரடைய மூன்று வாரங்கள் ஆகுமென்று கூறுகிறார்... பிரதமர் மோடியோ 50 நாட்கள் ஆகுமென்கிறார்... இவர்கள் சொல்வதை பார்த்தால் அதற்குமேலும் இழுக்கடிப்பார்கள் என்று தோன்றுகிறது.. இப்போதே மக்கள் பணத்திற்கு வழி இல்லாமல் திண்டாடுகிறார்கள். மேலும் இந்த நிலைமை  சரி செய்யப்படவில்லை என்றால் மக்களின் கதி என்னாவது..???  பெட்ரோல் போட முடியாமல், வாடகை கொடுக்க முடியாமல், சாப்பிட முடியாமல் அவதி  படுவோர் தான் அதிகம்.! கிட்டத்தட்ட அனைத்து சிறு கடைகளிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடைக்கிறது....  இது மட்டுமல்லாமல், இணையதள வர்க்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பணமில்லா வணிகத்தை முன்னெடுக்கிறார்கள்...  எந்த வகையில் பார்த்தாலும், நடுத்தர மக்களும், ஏழை மக்களும் தான் மிகவும் பாதிப்புக்குள்ளாகுகிறார்கள்..!

இவர்களின் இந்த முயற்சியினால் பெரு வணிகர்களும், கார்ப்பரேட் கம்பனிகளும் பெருத்த லாபத்தை அடைவார்கள் என்பது தான்  நிதர்சனமான உண்மை. முன்னரே அனைத்து பெரு முதலாளிகளுக்கும் அறிவிக்கப்பட்டு, ஒப்புதல் வாங்கப்பட்டு, அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டப்  பின்னரே இந்த  அறிவிப்பினை மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்... இதனை அறியாத அப்பாவி மக்கள் சிலர்  உண்மையில் கறுப்புப்பணம் ஒழிக்கப் பட்டு விடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.!

போதாக்குறைக்கு இப்போது, கைகளில் மாய் வைக்கிறார்களாம்... வாக்களித்து தேர்வு செய்த மக்களை இதை விட கேவலப் படுத்த முடியாது என்று கருதுகிறேன்.! 

மக்கள் இதனை உணர வேண்டும்... இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களின் போராட்டம் தான் ஒரே வழி.!

Tuesday, 8 November 2016

ஜோசியம்

என்னுடைய சிறு வயதில், எங்கள் வீட்டிற்கு  நாமக்கார ஜோசியர் ஒருவர் , ஆறு மாதமோ, ஒரு வருடமோ இடைவெளி விட்டு வருவார்.. எங்கள்அம்மாவிற்கு இதில் நம்பிக்கை இருந்ததினால், வரும் போதெல்லாம் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தை பார்க்கச் சொல்வார்கள். அவரும் ஏதாவது சொல்லி விட்டு பணம் வாங்கி கொண்டு செல்வார்.!

அப்படி ஒரு சமயம் வந்தபோது, எங்கள் அப்பா, அண்ணன் ஜாதகத்தை கொடுத்து  பார்க்கச் சொன்னார்கள் அம்மா.  அவரும் பல பாசிட்டீவ்களும், சில நெகட்டீவ்களும் சொன்னார்.. நெகட்டிவ் விசயங்களுக்கு சில பரிகாரமும் சொன்னார்.! 

 அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சற்று தொலைவில் நான் கணிதப் பாடம் போட்டு கொண்டிருந்தேன். எங்கள் அம்மாவிற்கு என்ன தோன்றியதோ .. தெரியவில்லை, என் ஜாதகத்தைக் காட்டி பார்க்கச் சொன்னார்கள். அதற்கு அவர்,' இந்த ஜாதகம் அமோகமாக இல்லையென்றாலும், சுமாரான ஜாதகம். எல்லோருக்கும் பிடிக்கும் குணாதிசியங்கள் உள்ள பெண். ஆனால் சரஸ்வதி கடாட்சம் சிறிது கூட இல்லை... அதனால் படிப்பு வராது.. எட்டாம் வகுப்பு தாண்டுவதே கஷ்டம் என்றாரே.. பார்க்கலாம்.!'.  

அந்த வயதில் அவர் சொல்வது உண்மை என்று நம்பி , மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன்... உடனே என் அம்மா , என்னைப்பார்த்து , நான் அழுவதற்கு தயாராகி விட்டேன் என்பதை புரிந்துக் கொண்டு  அவரிடம், ' சரி ஜோசியரே.. விடுங்கள்...  பொம்பளைப்பிள்ளை படிச்சு என்னா பண்ணப்போது..? நல்ல இடம் அமைஞ்சா சரி.! ' என்றார்கள். அவர்களை தவறு சொல்லி என்ன பயன்.. அப்படித் தானே இந்த சமூகம் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறது..!!! :-( :-(

அதன் பிறகு இரண்டு நாட்கள் அதையே நினைத்து, நினைத்து தனியே அழுவேன். பிறகு இயல்பு நிலைக்கு வந்து விட்டேன். எப்போதும் போல் படித்துக் கொண்டிருந்தேன்... இதற்கென்று சிரத்தையோடு எல்லாம் படிக்கவில்லை... ஆனாலும், பரீட்சை எழுதும் போதும், விடைத்தாள்  கொடுக்கும் போதும் அந்த நாமக்கார ஜோசியர் சொன்னது நினைவிற்கு வரும்... :-)   :-)

ஏழாம் வகுப்பு முடித்து எட்டாம் வகுப்பு முதல் தேர்வு , காலாண்டுத் தேர்வு விடைத்தாள் கொடுக்கும் போதும் அவர் சொன்னது நினைவிற்கு வந்தது... இதில் என்னவொரு சிறப்பென்றால், இதுவரை பத்து ரேங்கிற்குள் வந்த நான், அந்த தேர்வில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தேன்... :-) :-) அச்சமயம் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.!  அந்த ஆண்டு முழுவதும் முதல் மூன்று இடத்திற்குள்ளேயே  வந்து கொண்டிருந்தேன். கடைசியில் இறுதித் தேர்வு நடந்து முடிந்தது... அப்போதெல்லாம் openday  என்பதெல்லாம் கிடையாது. போஸ்ட் கார்டில் தான் ரிசல்ட் வரும். promoted என்று வந்த கார்டைப் பார்க்கும் போது, ஏற்பட்ட உணர்வு இருக்கிறதே... அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை... உடனே எங்கள் அம்மாவிடம் போய், ' அம்மா அந்த நாமக்கார ஜோசியர் சொன்னது பொய் ஆயிடிச்சு.. பாத்திங்களா.., நான் ஒன்பதாவது போக  போகிறேன் ' என்றேன். அதற்கு அம்மா, ' அதை இன்னுமா நினைச்சுகிட்டு இருக்கே... நல்ல பொண்ணு நீ.. அவங்க சொல்றது எல்லாமே அப்படியே நடக்காது... சிலது நடக்கும், சிலது நடக்காது' என்றார்கள்.!  :-) 

 பாவம்.. எங்கள்  அம்மா மட்டுமல்ல... பல பெண்கள்,   பிரச்சனைகள் இல்லா  எதிர்காலத்தை தெரிந்துக் கொள்ளும் ஆவலில் கேட்கப்படுவதால், அவர்களின் விருப்பம்  நம்பிக்கையாக மாறுகிறது என்று அப்போது எனக்கு தெரியவில்லை...!

Tuesday, 1 November 2016

நவீன வரதட்சணை.

வரதட்சணையை  நாசூக்காக வலியுறுத்தும் விளம்பரம் ஒன்றை தோழர்கள் தொலைக்காட்சிகளில் ஓரிரு நாட்களாக பார்த்திருக்கலாம்.. பிரபல கடை ஒன்றின் விளம்பரம் அது.!

புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் கோவிலில் பேசிக் கொள்ளும் உரையாடல் அது... " அந்த புது மணமகன் , பெரிய டிவிக்கும், ஏ.சி. க்கும், பிரிட்ஜ் க்கும் ஆசைப் படுகிறான்.. அதை தன் புது மனைவியிடம் சொல்கிறான்... அதற்கு அப்பெண் , அதையெல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார் என்று வெகு அலட்சியமாக பதிலளிக்கிறாள். பின்னால் வரும் அப்பாவோ , சற்று தயங்கத்துடன் சிந்திக்கும் சில நொடிகளில் , அவருக்கு பின்னே வரும் ஒருவர் (அது நண்பரோ, உறவினரோ தெரியவில்லை...) கவலை வேண்டாம்.. இவையெல்லாம் சுலப தவணை முறையில் இப்போது கிடைக்கிறது  .. என்று கடையின் பெயரை சொல்கிறார்.!


இது சிறு விளம்பரம் என்றாலும் கூட , இதன் பாதிப்பு நம் வீட்டு வரவேற்பறை வரை வந்து நம் மீது திணிக்கப் படுகிறது ... அந்த மணமகன் கேட்பது சரியென்றும், அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் , அப்பெண் தன் அப்பா செய்ய வேண்டியது அவருடைய கடமை என்பது போலவும், அது சுலப தவணையிலாவது வாங்கித்  தர வேண்டும் என்பது  ஒரு பெண்ணைப் பெற்ற தந்தையின் கடமை போலவும் வரதட்சணை இக்காலத்திலும் திணிக்கப் படுகிறது என்றால் நம் சமூகம் எப்படி  மேம்படைய முடியும்...?


ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ அவர்களுக்கு நல்ல கல்வியறிவை ஊட்ட வேண்டியது தான் பெற்றோரின் கடமை.. அதை வைத்து , அவர்கள் எப்படி தங்கள் வாழ்வில் நல்ல முறையில் முன்னேறுகிறார்கள் என்பது அவரவர் திறமையில் இருக்கிறது.!

சுயச்சார்ப்பு  பற்றி நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தல் மிக முக்கியம்.  சுயச்சார்ப்புள்ள இருவர், தங்கள் வாழ்க்கையை தொடங்குவது எப்படி என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். வாழ்நாள் முழுவதும், அவர்களின் தேவையை அவர்களே பூர்த்திச் செய்யக்கூடிய அளவிற்கு,  அவர்களின்மனப்பக்குவம் துணை நிற்கும்.!

இன்னமும் இம்மாதிரி, பழைய பஞ்சாங்கத்தையே பேசிக் கொண்டிராமல், அழகான, தெளிவான , பயனுள்ள வாழ்வியலை நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.!

Monday, 31 October 2016

சேமிப்பு..


அக்டோபர் -  31, இன்று உலக சேமிப்பு நாளாம்... சேமிக்கும் பழக்கம் இப்போது நம்மில் பலரிடையே இல்லை என்பது தான் உண்மை... கடனில் பொருட்களை வாங்கி சேமிக்கும் முறையை தான் பலர் சேமிப்பாக கருதுகிறார்கள். மாதம் நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பினால்,  ஐந்து இலக்கத்தில் சம்பாதிப்பவர்களும் சரி, ஆறு இலக்கத்தில் சம்பாதிப்பவர்களும் சரி.. சேமிப்பு என்பது இல்லை என்றே பலரின் பதிலாக இருக்கிறது.!

தேவைக்கு பொருட்களை வாங்கும் பழக்கம் போய் இப்போது, ஆசைக்காகவும், பகட்டு கௌரவத்திற்காகவும் பொருட்களை வாங்கிக்  குவிகிறார்கள் மக்கள். அலைப்பேசியிலிருந்து, கார் வரை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நான் இந்தப் பொருளையும் பயன்படுத்துவதில்லை என்று பெருமை பேசும் மக்கள் தான் நம்மிடையே பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்.  சம்பாதிப்பதை செலவு செய்துக்கொண்டே இருந்தால், அப்புறம் எப்படி சேமிக்க முடியும் ..? 

நம்மைப் பார்த்து வளரும் நம் குழந்தைகளும் அப்படித் தானே இருப்பார்கள்.!

அவசரமாக நமக்கு ஒரு செலவு வந்து விட்டால் கூட மற்றவரை எதிர்பார்க்கும் நிலைமை மிகவும் மோசமான ஓன்று... அப்படி எதிர்பார்த்தும் கிடைக்கவில்லை என்றால் அது அதை விட மோசமான நிலைமையை உருவாக்கி விடும்.!

நம்முடைய வருமானத்தில், ஒரு பங்கு சேமிப்பு என்று எடுத்து வைக்கும் பழக்கம் இன்றியமையாத ஓன்று... நமக்கும் சமயத்தில் பயன்படும். மேலும் ,  நம் நண்பர்கள், உறவினர்கள் என மற்றவர்கள் சிரமப்படும் போது நம்மால் கொடுத்து உதவ முடியும்.!

 நம்மால் முடிந்தமட்டும் சேமிக்கும் பழக்கத்தை மீண்டும் முறைப் படுத்திடுவோம். வளமான வாழ்க்கைக்கு வித்திடுவோம். பணத்தை கையாளும் முறையில் சேமிப்பு முக்கிய பங்காற்றுகிறது. Money management பற்றிய தெளிவை நம் பிள்ளைகளுக்கும் கற்றுத் தருவது மிக முக்கியமான வாழ்வியல் ஆகும்.!


பாலின சமத்துவம்.

பொதுவாகவே, ஆண்களுக்கு பெண் தன்னை தான் சார்ந்திருக்கிறாள் என்ற எண்ணமும், பெண்களுக்கு தங்கள் தான் பாதுகாப்பு  .. இல்லையென்றால் அவளின் வாழ்க்கை ஆபத்தில் முடியும் என்ற எண்ணமும் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. பெண்கள் செய்ய சிரமப் படுகிற சில காரியங்களை, விரைந்து செய்து முடிப்பதில் ஆண்களுக்கு  ஒரு பெருமிதம். அதே போல் ஆண்கள் செய்ய சிரமப்படும் செயல்களை பெண்கள் செய்தால், ஆண்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அங்கே ஏகப்பட்ட சமாளிப்புகள் இருக்கும்... ஏனென்றால் நம் சமூகம் அப்படி பழக்கப் படுத்தி  இருக்கிறது.'சாண் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை ' , 'அவனுக்கென்ன ஆம்பள சிங்கம் ' என்று போதை ஏற்றக் கூடிய சொற்றொடர்கள் வேறு .!

பெண்கள் எந்நிலையிலும் தங்களை தாங்களே பாதுகாக்கும் முன்னேற்றம் வர வேண்டுமானால், பெண் விடுதலை, பாலின சமத்துவம் மிக முக்கியம். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் இந்த பாலின சமத்துவம் என்றால் என்ன  என்பதை தெளிவுப் படுத்தப்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம். இதனை  நம் வீட்டிலிருந்து ஆரம்பிப்பது நல்ல முறை... அப்பா, முக்கியமாக அம்மா  குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். பிறகு பள்ளிக்கூடம், ஊடகங்கள் என அனைத்தும் இதில் பங்கெடுத்தால்,  வரும் தலைமுறையினர்  இந்த சமத்துவத்தை நிலைநிறுத்த முடியும் என்பது உறுதி.!

Friday, 21 October 2016

அடுத்த தலைமுறையினர்.

நம்மிடையே திணி்க்கப்பட்ட ஜாதீய முறை, சமூக நீதி மறுப்பு, மூடநம்பிக்கை, கடவுள் பற்றிய கற்பனை, பெண்ணடிமைத்தனம் போன்ற உண்மைகளை பெரியவர்களிடம் கூறுவதை விட வளர்ந்து வரும் சிறுவர், சிறுமிகளிடம் விளக்கினோமானால், உட னே புரிந்துக் கொண்டு , தங்களின் சந்தேகங்களைக் கேட்கிறார்கள்...மேலும் செயல்முறைப் படுத்துகிறார்கள்.! :
நம்முடைய இலக்கு அடுத்த தலைமுறையினரை பகுத்தறிவுவாதிகளாக மாற்றுவதிற்கான முயற்சியாக இருக்கட்டும்.!!

குழந்தைகளை கையாளுதல்

இன்று காலை கடையில் காய்கறி வாங்க காத்திருந்த போது, பத்து வயது டைய சிறுவன் ஒருவன் அவசரமாக வந்து, உருளைகிழங்கு சிப்சு பாக் கெட் கேட்டான். கடைகாரர் இல்லை என்று சொன்னவுடன் அச்சிறுவனின் முகம் வாடி போனது. 
உடனே நான் , " கடலை உருண்டை வாங்கி சாப்பிடலாமே..." என்றேன்.
அதற்கு அவன் நான் என்னவோ சொல்லகூடாததை சொன்ன மாதிரி என்னை ஏற, இறங்க பார்த்தான். " உனக்கு நல்லா ஓடி,ஆடி விளையாடுறது பிடிக்குமா... இல்லை வீட்டிலேயே கம்யூட்டர் கேம் விளையாடிட்டு,தூங்கறது பிடிக்குமா..." 
என்றேன்.
உடனே அவன் சிறு புன்முறுவலுடன் , " வெளியில் விளையாடப் பிடிக்கும் " என்றான். அப்படினா, " நீ கடலை உருண்டை, எள் உருண்டை சாப்பிடணும்... அப்ப தான் டையர்டு இல்லாம, நல்லா சுறுசுறுப்பா விளையாடலாம்... சிப்சு எல்லாம் சாப்பிட்டா மந்தமா இருக்கும்....தூக்கம் தான் வரும் " என்று நான் சொன்னதும், சில வினாடிகள் சிந்தித்து விட்டு, " அண்ணாச்சி, எனக்கு கடலை மிட்டாய் கொடுங்க..." என்று கேட்டு வாங்கிக் கொண்டு, என்னைப் பார்த்து
சிரித்துக்கொண்டே ," thanks aunty" என்றான்.!
குழந்தைகள் என்றும் இனிமையானவர்கள் .... அறிவானவர்கள்....நாம் தான் அவர்களை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.!

#RSS_INDIAN_ARMY

இந்திய இராணுவத்திற்கே ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அளித்திருக்கிறதாம்..... பாகிஸ்தான் சர்ஜிகல் ஸ்டிரைக் வெற்றி பெற்றதிற்கு RSS யின் திறமையான பயிற்சி தான் காரணமாம்.....சொல்பவர் யார் தெரியுமா...பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்.!!!
பயங்கரவாதத்தின் காரணமாக மூன்று முறை அரசால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கிறதென்று , மத்திய பாதுகாப்பு அமைச்சரே சொல்கிறார் என்றால், என்ன ஒரு பயங்கரவாதம் இது..!
பயங்கரவாதமே அரசாக செயல் படுகிறது.... இந்த பரந்தப்பட்ட இந்திய தேசத்தில்...!!!

Saturday, 17 September 2016

பெரியார்

தந்தை பெரியார் அவர்களின் புத்தகங்கள் முதல் முதலாக  படிக்கும் வாய்ப்பு என் அண்ணன் மூலம் (என்னுடைய 18- வயதில்) கிடைத்தது... முதலில் படித்த நூல் ' பெண் ஏன் அடிமையானாள் ' என்ற நூல். பிறகு தேடித் தேடி பெரியாரின் அனைத்து நூல்களையும் படித்தேன்.  எல்லாமே ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது.. மிகவும் வியப்பாகவும் இருந்தது. இப்படிப் பட்ட ஒருமனிதரை நாம் வேறு மாதிரி நினைத்திருந்தோமே என்ற வியப்பு தான்... ஏனென்றால், எனக்கு தெரிந்த பெரியார் கடவுள் மறுப்பாளர் என்பது மட்டுமே...!

அதன் பிறகு  முடிந்தவரை அவரின் புத்தகங்களை படிப்பேன். திருமணத்திற்கு பிறகு மேலும் அதிகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது... ஏனென்றால் இணையர் வீட்டில்  அனைவரும் பெரியார் பற்றாளர்கள்...எவ்வளவு படித்தாலும் எல்லாமே சரி தான்.. கடவுள்மறுப்பு கொள்கைமட்டும் கொஞ்சம் நெருடலாக இருந்தது..அதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை... அந்த நம்பிக்கை அப்படி...!!! :-)

குடும்பத்தில், உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில், சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும், பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பேன்.... சிறு சிந்தனை, தொடர் சிந்தனையாக மாறி, கொஞ்சம், கொஞ்சமாக உருப்பெற்று கடவுள் என்ற ஓன்று இல்லை என்ற முடிவிற்கு வந்தேன்....நான் சாமி கும்பிட்டு 22 ஆண்டுகள் ஆகின்றன.!
கடவுள் இல்லை என்ற  உண்மை  விளங்கிய பிறகு கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடு,இணை எதுவுமே இல்லை எனலாம்...என்னுடைய சிந்தனைகள் அனைத்திலும் வேறுபாடு தெரிந்தது.... பெரியாரை முழுவதும் உள்வாங்கி கொண்ட பிறகு,  சுயமரியாதை என்ற சொல்லிற்கு உண்மையான பொருள் புரிந்தது.!

" உணவை பங்கிட்டு உண்பது, உழைப்பை பங்கிட்டு செய்வது என்ற நிலை ஏற்பட்டால், கடவுளுக்கு வேலையோ, அவசியமோ இருக்காது."

-- தந்தை பெரியார்
.

நம் அறிவாசான் தந்தைபெரியார் அவர்களின் 138-வது பிறந்தநாள் வாழ்த்துகள்.!  :-)

#பெரியார்138

சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு.!
வாழ்க பெரியார்... வளர்க பகுத்தறிவு.!  :-)

Thursday, 15 September 2016

பெண்களின் ஆடை

இன்று காலை செய்தித் தாளில் ஒரு  வருத்தமான  செய்தி படிக்க நேர்ந்தது .... :-(

சென்னையில்  உணவகத்தில் பணி புரியும்  ஒரு பெண் கிரைண்டரில் மாவு அரைக்கும் போது துப்பாடா இயந்திரத்தில் சிக்கியதால், கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது தான் அது.!

பெண்களுக்கு ஆடை கூட பாதுகாப்பில்லை என்பது எவ்வளவு வேதனை அளிக்கிறது... இதில் கவனக்குறைவு காரணமாக இருக்கும் என்பது ஒரு புறமிருந்தாலும், ஆடை விசயத்தில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கத்  தான் செய்கிறது.!

இது போல்  ஆண்களின் ஆடை அவர்களுக்கு எந்த அசௌகரியத்தையும் தருவதில்லையென்பது முற்றிலும் ஒப்புக் கொள்ள கூடிய உண்மை.! 

 பெண்கள் சேலை அணிவதில் சில சங்கடங்கள் இருக்கிறது என்று தான் சுரிதாருக்கு மாறினார்கள். அதிலும் இந்த துப்பட்டா சரி செய்வது இருக்கிறதே.... நேரத்தை எப்படி எல்லாம் வீணாக்குகிறோமென்பதற்கு இது ஒரு நல்ல சான்று. இப்போது பெண்களின் உயிர்களையும் பறிக்க காரணமாக  இருக்கிறது. பேருந்துகளில், ரயில்களில்,இரு சக்கரவாகனங்களில் என செல்லும்போது பறக்க விட படும் இந்த துப்பட்டா  பல நேரங்களில் உயிரை பறிக்கும் சாதனமாக மாறி விடுகிறது.!

தந்தை பெரியார் அவர்கள்  சொன்னது போல், ஆண் , பெண் பேதமில்லாமல் ஆடை அணிய வேண்டும். தற்காலத்தில் இந்த முறை மாறி இருக்கிறது என்றாலும் முழுமையான  மாற்றத்தை இன்னும் அடையவில்லை... !

 இது தான் கலாச்சாரம், பண்பாடு என தங்களை குறுகிய வட்டத்திற்குள் அடைத்துக் கொள்ளாமல், பெண்கள் தங்களுக்கு வசதியான ஆடையை அணிய முன் வர வேண்டும்.!

Wednesday, 14 September 2016

அரசியலும், காவேரியும்.!


எனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில், கர்நாடகாவில் சிறிது காலம் வாழ்ந்தவர்களும், பலகாலமாக வாழ்த்துக் கொண்டிருப்பவர்களும் கன்னடர்களைப் பற்றி எந்த குறைகளையும் சொல்வதில்லை... அம்மக்கள் நம்மைப் போன்றே நட்புடன் பழகுகிறவர்கள் என்றே அனைவரும் கூறுகின்றனர்... இந்த காவேரி விஷயத்தில் மட்டும், ஏன் இந்த முறைகேடு, வன்முறை என்றால் , பின்னணியில் அரசியல் இருக்கிறது... அதிலும் முக்கியமாக காவிகளின் மத அரசியல் இருக்கிறது..!
இந்த வன்முறையாளர்கள் தான் இரு மாநிலத்திலும் உள்ள மக்களை தூண்டி விட்டு அந்த வன்முறை நெருப்பில் குளிர் காய்கிறார்கள் .!!
இதனை மிகச் சரியாக புரிந்து, அதற்கேற்ற சரியான பாதையில் கவனமாக கொண்டுச் செல்லும் பொறுப்பு இரு மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் இருக்கிறது. மத்திய மதவாத அரசை இவ்விசயத்தில் நம்புதல் காலவிரயம்.. மேலும கேடாக தான் போய் முடியும்.!!!

Saturday, 10 September 2016

போராட்டம்

போராட்டம், வேலை நிறுத்தம் என்றால் என்ன என்பதை கர்நாடக மக்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.!

கார்ப்பரேட் கம்பனிகளை கூட மூடும் அளவிற்கு ஒரு போராட்டம்... வேலைநிறுத்தம்... மாநிலத்தலைநகரையே செயல்படாத அளவிற்கு முடக்கிய ஒரு மாபெரும் போராட்டம்.... எதற்கென்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று...!!!

நம் விவசாயிகள் கூட தண்ணீர் கேட்டு போராடினார்கள்....  ஒரு கடுகு முனை அளவாவது விளைவு ஏற்ப்பட்டதா...? 

அரசியல்வாதிகள், அரசு,பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள்  என அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டாமா...தமிழக விவசாயிகளுக்கு..!

உழவுத் தொழில் இல்லையென்றால்  எங்கு உலகு என்பதை உணர்ந்து விவசாயத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் ஆதரவு கரம் நீட்ட வேண்டிய மாபெரும் கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது .! 

Friday, 9 September 2016

விளம்பரங்கள்.

இது ஒரு சோப்பு விளம்பரம்...

' வீட்டுல எனக்கு பவரே இல்ல  ' என்று வருத்தப்படும் ஒருபெண்...இல்ல நிர்வாகி. , காரணம் துணிகளில் உள்ள அழுக்கு போகவில்லையாம்.!
அதற்கு தீர்வு சொல்லும் மற்றொரு பெண், ' வீட்ல என்னுடைய பவ்ர் தான்..அதனால் இந்த சோப்பை பயன்படுத்து ' என்று சொல்லுவார்... ஆக துணிகளில் அழுக்கு இல்லாமல் இருந்தால் வீட்டின் அதிகாரம் முழுதும் பெண்களின் கைகளில் வந்துவிடுமா..???

மற்றொரு விளம்பரத்தில், தன் சுய சம்பாத்தியத்தில் உயர்ந்த பிறகு திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று ஒரு பெண் சொல்வதற்கான  தன்னம்பிக்கையை  சிவப்பழகு கிரீம் தான்  கொடுக்கிறது  என்று காட்டப் படுகிறது..!!! 

பெண்களை அழகு பதுமையாகவும், வீட்டின்  வேலையை மட்டுமே  செய்துக் கொண்டு  சுய சார்பற்றப் பெண்ணாகவே காட்டுவதில் தான் இந்த விளம்பரக் கம்பனிகளுக்கு எத்தனை மகிழ்ச்சி.???

உயர்வதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கையிலேயே,  உயர விடாமல் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்க வேண்டும் பெண்கள் என்பதில் தான் எவ்வளவு உறுதியாக இருக்கிறது ஆணாதிக்கச் சமூகம்.!



 

Thursday, 8 September 2016

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்

ஒன்றுக்கும் உதவாத கங்கைநதியை சுத்தப் படுத்த்துவதற்கும், யோகா ஆராய்ச்சிக்கென்றும், சமஸ்கிருத மொழி பரப்புவதற்கு என்றும், கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் மத்திய மதவாத அரசு, தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல் படுத்த தயங்குகிறது... இந்த விசயத்தில், மாநிலஅரசும் அக்கறை காட்டுவதில்லை..மாநில நதிநீர் இணைப்பு கிடப்பில் போடப் பட்டிருக்கிறது...எந்த ஆட்சி வந்தாலும், விவசாயிகளின் நிலைமையும், தமிழக மீனவர்களின் நிலைமையும் மாறுவதில்லை... எல்லாவற்றிலும் முறைகேடான அரசியல்தானே இங்கு  நடந்துக் கொண்டிருக்கிறது....  உழவுத் தொழிலுக்கே  முழுக்கு போட்டு  விட்டு , உணவிற்காக அந்நிய நாட்டில் கையேந்தும் நிலை வந்தாலும் வியப்பில்லை... இதில் ஒன்று பட்ட தேசம் என்ற முழக்கம் வேறு . எத்தனை சட்டங்கள் இயற்றி என்ன பயன்... எத்தனை திட்டங்கள் தீட்டித்தான் என்ன பயன்..??? !!!

இந்துத்துவத்தை தூக்கிப் பிடிக்கும் பள்ளிகள் !

இப்போதிருக்கும் கல்வித் திட்டமே மன அழுத்தத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது... அதிலும்  இந்த மதம்  படுத்ததும் பாடு இருக்கிறதே....அதை சொல்லி மாளாது. இந்துத்துவத்தை தூக்கிப்பிடிக்கும் பல பள்ளிகள், இந்த காலாண்டுத் தேர்விற்கு பின்பு விடுமுறை விடாமல், உடனே வகுப்புகள் நடைப்பெற வைக்கின்றன. காரணம் என்னவென்றால், நவராத்திரியில் தான் விடுமுறை கொடுக்கப் பட வேண்டுமாம்....உண்மையில்குழந்தைகள் நிலைமை மிகவும் வருத்தத்துக்குரியது.!

தேர்விற்கு பிறகு விடுமுறை விடும் பழக்கம்,  மாணவர்கள் தங்களை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டு, மீண்டும் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருவதற்கே. ஆனால் அவர்களை ஓய்வெடுக்க கூட விடாமல், உடனே பள்ளிக்கு வர வலியுறுத்தும் இம்முறை குழந்தைகளை, மாணவர்களை மன அழுத்தத்திற்கு   உள்ளாக்குகிறது என்பது முற்றிலும் உண்மை.!

பள்ளி கல்வித்துறை இப்படிப் பட்ட நடைமுறைகளை தடுப்பது மிகமுக்கியம்.
செப்டம்பர் - 8 , உலக எழுத்தறிவு தினம்.!



எழுத்தறிவித்தல் மிகச் சிறந்த சேவை... நம்மால்முடிந்த அளவு மற்றவர்களின் கல்வியறிவிற்கு உதவி செய்வோம்.!

Thursday, 28 July 2016

ஆண்களின் மன அழுத்தம் ...!

24-7-2016 , அன்று  விஜய் தொலைக்காட்சியின் நீயா, நானா நிகழ்ச்சியில் ஒரு சிறந்த கருத்து பதிவு செய்யப் பட்டது. ஆண்கள் மன அழுத்தத்திற்கான காரணம் பெரும்பாலும் பெண்களின் தற்போதைய நடவடிக்கைகள் என்பது போல் ஒரு பகுதியினர் (பெண்கள் தான்..) பேசினர்... மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள் ஆண்கள் என்று சொன்ன பெண்கள் கருத்தில் பல உண்மைகள் பதிவு செய்யப் பட்டது... நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குனர் ராம் அவர்கள் சொன்ன கருத்து மிக அருமை..!

என்னவென்றால் ஆண்களின் மன அழுத்தம் என்பது பெண் விடுதலையை சரியாக புரிந்து கொள்ளாமை தான் என்பதை மிகச் சரியாக  கூறினார்... பணிச் சுமை, வீட்டு பொறுப்புகள், அனைத்தையும் தாண்டி ஆண்களின் மன அழுத்தம் தன மனைவியின் முன்னேற்றம்,  நிர்வாகம்,முடிவெடுக்கும் திறன், அறிவு இவைகளை ஏற்றுக் கொள்ளாததின் விளைவு தான்...தன மனைவி படித்திருக்க வேண்டும் என்பதையும் தாண்டி பணியில் இருக்க வேண்டும்... தன்னுடைய பொருளாதார சிக்கலுக்கு துணை நின்று பங்கெடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண் பிள்ளைகள், பெண்களின் விடுதலையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.... அவர்களின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதற்கு பதில் பொறாமை கொள்கிறார்கள்..தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்க கொண்டு மனா அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். என்பது தான் முற்றிலும் உண்மை.!


பெண் விடுதலை என்பது என்ன... பாலியியல் சமத்துவம் என்றால் என்ன என்பதை புரிந்துக் கொண்டால் மட்டுமே அவர்களால் இதனை எளிதாக கையாள முடியும்... இதற்கு அம்மாக்களின் பங்கு மிக முக்கியமானது...இளம் வயதிலேயே பெண்ணியம் சார்ந்த அறிவை ஊட்டவேண்டும்... நம்சமூகத்தில் பெண்களே பெண்களுக்கு தடையாய் இருக்கிறார்கள் என்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்... :-( ஒரு மருமகளின் வளர்ச்சியில் எந்த மாமியாருக்கும் அக்கறை இருப்பதாய் தெரியவில்லை.இந்நிலை மாற வேண்டும். வளரும் அடுத்த தலைமுறையினர் பெண்கள் வளர்ச்சியை, முன்னேற்றத்தை ஏற்று,  உறுதுணையாய் இருக்க வேண்டிய புரிதலை பெண்கள் தான் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு உணர வைக்கவேண்டும்.!

" ஆண்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால், பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து விடுங்கள்."

 #தந்தைபெரியார்.

என்ன அருமையாக, சிந்தித்து  சொல்லி இருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்...இதனை ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெண்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.!




பெண்கள் முன்னேற்றத்தை மட்டும் பாருங்கள்.. அதில் கலாச்சாரம், பண்பாடு எதையும் பார்க்காதீர்கள் என்று சொன்ன இயக்குனர் ராம் அவர்களுக்கு நன்றி.!

Thursday, 23 June 2016

சர்க்கரை உடலுக்கு கேடு.!

வெள்ளை சர்க்கரையை முடிந்தமட்டும் பயன்படுத்தாதீர்கள் நண்பர்களே...

அதில் அதிக கெடுதல்கள் தான் இருக்கிறது. உயிர்சத்துக்கள் (வைட்டமின்கள்) குறைக்கின்றன. எடை கூடுகிறது.எதிர்ப்பு சக்தி குறைக்கிறது. இதற்கு பதில் வெல்லம், பனை வெல்லம் பயன்படுத்தலாம். வேலை அதிகமிருக்கும் பரபரப்பில், நாம் எளிதாக இருக்கிறதென்று சர்க்கரையை பயன் படுத்தி விடுகிறோம். அதற்கு ஒரு எளிய யோசனை.

நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நீரை கொதிக்க வைத்து, அதில் உடைத்த வெல்லம் அல்லது  பனைவெல்லம் போட்டு கரைய விடுங்கள். பாகு பதம் எல்லாம் வேண்டாம். கரைந்து கொதிநிலையை அடைந்தால் போதும். பிறகு ஆறியவுடன் வடிக்கட்டி , ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நான்கு நாட்கள் வரை பயன் படுத்திக் கொள்ளலாம். கேழ்வரகு கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, பால், காப்பி, டீ முதலியவைகளுக்கு இந்த கரைசலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரிட்ஜ்ல் வைக்காமல் அவ்வப்போது செய்தல் நல்லது தான் என்றாலும் நம்முடைய அவசர வாழ்க்கை முறையில், எது எளிதானதோ  அதை  தான் செய்வோம்... உடனே சர்க்கரையை பயன்படுத்தி விடுவோம்...அதற்கு மாற்றாக தான் இந்த முறையை பழக்கப் படுத்திக்க கொள்ளலாம். எப்படியோ சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.! 

பெண்ணியம்

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம்... திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் தான் ஆகின்றன. கணவர் இறந்துவிட்டார்.(குணப்படுத்த முடியாத ஒரு நோயின் காரணமாக.) ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வயதான தாய், தந்தையர். அவர்களுக்கு இவர் ஒரே மகன். கணவன் இறக்கும் போது தான் மனைவியிடம், ' நான் இறந்ததும் நீ எங்கும் போய் விடாதே... என் அப்பா,அம்மாவை பார்த்துக் கொள்.' என்று கூறினாராம்.!
அதனால் அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துக்கொண்டு, தான் பெண்ணையும் படிக்க வைத்துக் கொண்டு, மாமனார், மாமியாரையும் கவனித்துக் கொள்கிறாள். உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் அவள் மிகவும் சிறந்த பெண்... தனியாக இவ்வளவையும் பார்த்துக் கொள்கிறாள் என்று ஒரே புகழாரம் தான்.!

எல்லாம் பாராட்டுக்குரியது தான்... ஆனால் அந்த பெண்ணிற்கு 35 வயதிற்குள் தானிருக்கும். அவளுக்கான தேவைகள் என்று எதுவும் இருக்காதா...இல்லை.. இருக்க கூடாதா... அவளுடைய உணர்வுகளை யாரும் உணரவில்லை.. அந்த பெண்ணாலும் வெளியே சொல்ல முடியவில்லை... சொல்ல முடியாது... சொல்லவும் விடமாட்டார்கள்...!
இது தான் நம் சமூகம். இப்படி தான் நம் பெண்கள் இருக்க வேண்டும் என்று கட்டாய படுத்தி வைத்திருக்கிறது... அந்த பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அனுதாபம் வருவதில்லை... மாறாக இந்த சமூகத்தின் மீது கோபம் தான் வருகிறது. எவ்வளவு தான் நாம் பெண் விடுதலைப் பற்றிப்பேசினாலும் , ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது.!

Sunday, 12 June 2016

இறைவி.!

"இறைவி"


மிக அருமையான படமென்று ஒரு வரியில் சொல்லமுடியாது.!
பெண்ணியச் சிந்தனையுள்ள படமென்றும் சொல்லி முடிக்க முடியாது.!
தமிழ் திரையுலகில் நிறைய பெண்ணியம் சார்ந்த படங்கள் வந்திருக்கின்றன.  ஆனால் #இறைவி, அவை எல்லாவற்றிற்கும் கிரீடம் வைத்தாற் போல் இருக்கிறது.!

ஆணைச் சார்ந்திருக்கும் பெண்களைப் பற்றிய கதை... ஆணின் கோவம்,வெறி, குடிப்பழக்கம், ஆதிக்கம் ஒவ்வொன்றும் எப்படி அவனை சார்ந்திருக்கும் பெண்களை பாதிக்கிறது என்பதை அற்புதமாக விளக்குமொரு படம்.!

என்ன ஒரு அருமையான சிந்தனை... திரைக்கதை... வசனங்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.!

' கண்ணகி கோவலன் போல் வேறு ஒருவருடன் போய் விட்டு திரும்பி வந்தால் கோவலன் ஏற்றுக் கொள்வானா?'
' அழும் பெண்களைப் பிடிக்காது... பெண்களை அழ வைக்கும் ஆண்களை பிடிக்காது.'

' எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள நாம் என்ன பொம்பளையா..?'

என்ற வசனங்கள் நறுக்கு தெரித்தாற்  போல் இருக்கின்றன.!

பெண்களின் விடுதலையையும்,மழையையும் தொடர்புப்படுத்தி ஆரம்பக் காட்சிகளிலும், முடியும் காட்சியிலும் மிக அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.!

தான் விரும்பும் ஆணுடன் திருமணம் என்ற கட்டுக்குள் வராமல் வாழ விரும்பும்  பெண்ணை இந்த ஆணாதிக்கச் சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்...இயக்குனர்.


மூட நம்பிக்கையையும் விட்டு வைக்கவில்லை. பேய் பிடித்து இருப்பதாக சொல்லப்படும் நோயாளிகளை குணப் படுத்துவாதாக கூறி ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கூட்டதாரின், பிரபலமான கோயிலில் உள்ளே நுழைந்து  ஒருநாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்து திருடப்படும் கற்சிலைக்கு தன்னையே காப்பாற்றிக் கொள்ள சக்தியில்லை என்பதை காட்டும் காட்சி.!

தந்தை பெரியாரின் பெண்ணியக் கருத்துகள்,மூடனம்பிக்கை பற்றிய கருத்துகள் என நிறைய சொல்லப் பட்டிருகின்றன இந்த திரைப் படத்தில்.!


" இத்தனை நாட்கள் எங்கேயப்பா இருந்தாய்..?" என்று கேட்கத் தோன்றுகிறது....இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை பார்த்து...!


நம் ஆணாதிக்கச் சமூகத்திற்கு பல குட்டுகள் மிகவும் துணிச்சலுடன் கொடுக்கப் பட்டிருக்கின்றன.....இப்படத்தில்..!

ஆண்கள் அனைவரும் பார்க்க வேண்டியப் படம்... கண்டிப்பாக பெண்களும் பார்க்க வேண்டியப் படம்... "இறைவி"!

இயக்குனருக்கு பாராட்டுகளும், நன்றிகளும்...!

பெரியார்.!

பெரியாரைப் படித்தவர்கள் ஒவ்வொருவரின் உணர்விலும் தந்தை பெரியார் கலந்திருக்கிறார்.!

மற்றவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்திற்கும், பெரியாரைப் படித்தவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகளிருக்கின்றன .!

சமூக சார்ந்த பார்வை மிக இயல்பாகவே வந்து விடுகிறது.!

சுயமரியாதைக்கும், தன்முனைப்பிற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகிறது.!

உணவே மருந்து... மருந்தே உணவு.

என்னுடைய சிறிய வயதில், எனக்கு தெரிந்து எங்கள் பகுதியில் ஒரு வெதுப்பகம் கூட   கிடையாது... இனிப்பகம் செல்ல வேண்டுமானால் இரண்டு கிலோமீட்டர் செல்ல வேண்டும். உணவகம் செல்ல வேண்டுமானாலும் கூட மூன்று கிலோ மீட்டர் செல்ல வேண்டும். ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரே ஒரு மருந்தகம் மட்டுமே இருக்கும்.!

ஆனால் இப்போது ஒரு கிலோமிட்டர் தூரத்தில் மூன்று வெதுப்பகங்கள் இருக்கின்றன. நான்கு  இனிப்பங்கள் இருக்கின்றன. மூன்று உணவங்கள் இருக்கின்றன.  அதேபோல் ஐந்து மருந்தகங்கள் இருக்கின்றன.!!!

#உணவே மருந்து...# மருந்தே உணவு.!

நான், என்னுடைய தேவைகளுக்கும், என்னுடைய குடும்ப தேவைகளுக்கும் எக்காரணம் கொண்டும் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டால் போதும்.... குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து விடலாம்.!  

#குழந்தை தொழிலாளர் எதிர்ப்புத் தினம்.! 

Thursday, 9 June 2016

வேண்டாமே... நெகிழிப் பொருட்கள்.

ஒரு திருமணம் நடக்கிறதென்றால், அந்த மண்டபத்தில் விழும் வாழை இலைகள் கால்நடைகளுக்கு உணவாகிறது...ஆனால் இலைகளை விட பல மடங்கு பிளாஸ்டிக் தண்ணீர்  பாட்டில்களும், கப்களும்(பாயாசம், குளிர் பானங்கள் வைக்கும்) குப்பைகளாக விழுகின்றன...!
சாப்பாடிற்கு டம்ப்ளர்களில் தண்ணீர் வைக்கும் பழக்கம் இல்லாமல் போய்  விட்டது...அது நாகரீகமில்லாத, அசுத்தமான முறை என்று நமக்கு தவறாக பரப்பப் பட்டிருக்கிறது... ஒவ்வொரு இலைக்கும் ஒரு பாட்டில்... அது மட்டுமல்ல...சாப்பிட்டு விட்டு போகும் போது மறுபடியும் ஒரு பாட்டில் கையிலெடுத்துக்  கொண்டு போகிறார்கள்...!
மண்ணில் மக்காத இந்த நெகிழிப் பொருட்களை எவ்வளகெவ்வளவு பயன் படுத்தாமல் தவிர்க்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் நம்  மண்ணை பாதுக்காக்க உதவி செய்கிறோம் என்று பொருள்.!


சமூக நீதி.

கடந்த ஞாயிறன்று ,  நீயா,நானா நிகழ்ச்சியில் ஒரு அருமையான, அதே சமயம் வருத்தக்குரிய உண்மை சிறப்பான முறையில் பதிவு செய்யப் பட்டது... நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. கோபிநாத் மிகவும் நன்றாகவே நிகழ்ச்சியை வழி நடத்தினார் என்பதில் மிகையில்லை...!

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீட்டு சூழலிலும், பள்ளிச் சூழலிலும் படிக்கும் விதமே ஒரு போராட்டமாக தான் இருக்கிறது... !
போதிய அளவு ஆசிரியர் இல்லாமை, பரிசோதனைக் கூடங்கள் இல்லாமை, இருந்தாலும் இவைகள் சரிவர பராமரிக்கப் படாமை, வீட்டில் வசதிக் குறைவு, வருமானமின்மை, என எல்லாமே அவர்களுக்கு போராட்டம் தான்... அப்படி இருந்தும் படித்து, உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கி உள்ளார்கள் என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது... வாழ்த்துகள்...!
அவர்களின் வாழ்க்கை முறை, படிக்கும் நேரம், வசதி, தேவையான புத்தங்கள், இணையதள வசதிகள், பயிற்சி எல்லாமே அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வேறு படுகின்றன.
அப்படி இருக்கும்போது எப்படி பொது மருத்துவ நுழைவு தேர்வு எல்லோரும் ஒரே மாதிரி வைக்க முடியும்..?
எதுவுமே சமமில்லை என்பதை தான் 'நேற்றைய நீயா,நானா'  (5-6-2016) நிகழ்ச்சி உறுதிப் படுத்தி இருக்கிறது...!
அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு ()நடை முறைக்கு வந்தால் இவர்களால் கட்டாயம் மருத்துவம் என்பதையே நினைத்துக்  கூட பார்க்க முடியாது...!
அடித்தட்டு மக்கள் தப்பி தவறியும் மேழும்பக் கூடாது என்ற இந்த பார்ப்பனீய ஆதிக்கப் போக்கை நாம் அனுமதிக்கக் கூடாது  என்பதில்நாமனைவரும்மிகவும்  உறுதியுடன் இருக்க வேண்டும்.!

அம்மா.

பிள்ளைக்கு காய்ச்சல் வந்தால்,
மார்போடு சேர்த்தணைத்து அரவணைக்கும் கைகள்...
தனக்கு காய்ச்சல் வரும் போதுமட்டும்,
கிட்டவாராதே கண்ணு... காய்ச்சல் வந்துடபோது...
என்றுரைக்கும் அற்புதம் .... தாயுள்ளம்.!




Thursday, 26 May 2016

பார்ப்பனீயம் உள்ளவரை திராவிட சித்தாந்தம் கட்டாய தேவை.

பாஜக மூன்று இடங்களை தவிர மற்ற இடங்களில் டெபொசிட் இழந்து விட்டது என்ற வருத்தத்தை விட தமிழ்நாட்டில் 12 இலட்சம் பேர்கள் தங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறது பார்ப்பனீயம்... மேலும் அதிமுக வென்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அவர்களுக்கு..!


ஆனால் நம்மில் பலர் திராவிடத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பார்ப்பனீயத்திற்கு அடிப் பணிகிறார்கள்...!
திராவிட எதிர்ப்பு என்பது நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு சமம். தந்தை பெரியாரை படிக்க இளைய சமுதாயத்தை ஊக்குவிக்க வேண்டும். திராவிடத்தின் ஆற்றலையும், பார்ப்பனீயத்தின் சூழ்ச்சியையும் புரிய வைக்கவேண்டும்.!

எவ்விதத்திலும் பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்தை மீண்டும் கால் ஊன்ற விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.!

Monday, 23 May 2016

அழிக்கப்பட வேண்டியவைகள்.!

இந்திரன், தனது மிகுந்த  பலத்தால், வேள்வியை வெறுக்கும் தாசர்களையும், தெய்வத்தை நிந்திக்கும் தாசர்களையும் கொன்றான்.
-- (ரிக். 2771)
வேள்வி செய்யாதவர்களாகவும், தானம் கொடுக்காதவர்களாகவும், தன்னை வணங்காதவர்களாகவும், தேவனற்றவர்களாகவும் உள்ள தாசர்களை கொல்லுகின்றவன் எவனோ,  அவன் இந்திரன்.!
-- (ரிக். 2126)
இந்த வரிகள் ரிக் வேதத்தில் சொல்லப் பட்டிருக்கும் வரிகள்... இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தாசர்கள் திராவிடர்கள். இந்திரனாக சொல்லப் படுபவன் ஆரியன்... ஆரியத் தலைவன்.!

வேதங்கள் ஒன்றும் வாழ்வியலையோ, அறிவு பூர்வமாகவோ எதையும் போதிக்க வில்லை... இதை தான் சொல்கின்றன.!
 எல்லோரும் சமம் என்று ஏற்றத் தாழ்வுகள் இல்லா சமூகமாக நம் சமூகம் மாற வேண்டுமானால், முற்றிலும் அழிக்கப்பட வேண்டியவைகள், நான்கு  வேதங்கள், மனு சாஸ்திரம், பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம்.!

Monday, 7 March 2016

பெண்களும், மதங்களும்

இன்று ஒரு  மருத்துவமனையில் எங்கள் நேரம் வரும்வரை காத்திருந்த சமயத்தில், வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்களை கவனித்து போது ஓன்று  மட்டும்  மிக நன்றாக புரிந்தது. ஏதோ ஒரு வகையில் மதத்தை அவர்கள் பிரதிபலித்தார்கள்... ஒரு சில பெண்கள்  பர்தா அணிந்திருந்தார்கள்...  ஒரு சிலர் திருநீறு, குங்குமம், சந்தனம், தலை வகிடில் கூட  குங்குமம் வைத்திருந்தார்கள்... கனமான தாலி  சரடு, மெட்டி என தங்களின் பொருளாதார ஏற்றத்தையும் காட்டும் விதமாக வந்திருந்தார்கள்... இன்னும் ஒரு சிலர் மெலிதான சங்கிலி, ஆனால் அதில் சிலுவை டாலர் அணிந்திருந்தனர்.!

அவர்களுடன் வந்த ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரி தான் இருந்தார்கள்...யாரையும் இவர்கள் இந்த மதத்தை சார்ந்தவர்கள் என சொல்ல முடியாத வகையில் இருந்தனர்.!

அனைத்து மதங்களும் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றன.., தங்களின் மதத்தை அவர்கள் மீது திணித்து, அவர்களுக்கு தெரியாமலேயே, அவர்களை மென்மேலும் அடிமைப் படுத்துகின்றன.!

பெண்கள் மட்டும் மதத்தை துறந்தால்,  மதம் மட்டுமல்ல... பெண்ணடிமைத்தனமும் அறவே ஒழிந்து விடும் என்பது மிக  உறுதி.!

Tuesday, 23 February 2016

மாணவர்களுக்கு எதிரான ஒடுக்கு முறை.


JNU மாணவர்களை எல்லா வகையிலும் ஒடுக்க வேண்டுமென்று திட்டம் தீட்டி செயல் படுகிறது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புக்கள்.!
மாணவ போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடிக்கக் கூடும் என்ற அச்சமே இதற்கு காரணம்.!
சென்னை அய்.அய்.டி - யில் அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட போதும், ரோஹித் வேமுளா தற்கொலை தூண்டலின் போதும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.!
டெல்லி அய்.அய் .டி மாணவர்கள் அனைத்து அய்.அய்.டி. களிலும் அம்பேத்கர்,பெரியார் வாசகர் வட்டம் துவக்கப்படும் என்று அறிவித்து சில இடங்களிலும் தொடங்கினார்கள்.! பார்ப்பனீயத்தின் வேரை அசைக்க முற்படுவதால், RSS இந்த மாணவர்களை குறி வைக்கிறது...
ஏபிவிபி மாணவ அமைப்புக்கு(RSS) எதிராக செயல்படும், அதாவது பார்ப்பனீயத்திற்கு எதிராக செயல்படும் இந்த மாணவர்களை பழி வாங்க துடிக்கிறது இந்துத்துவா.!!!
ஆனால், இந்த அடக்குமுறை தான்,
மாபெரும் புரட்சிக்கு வழி வகுக்கப் போகிறது.!