Thursday, 23 June 2016

சர்க்கரை உடலுக்கு கேடு.!

வெள்ளை சர்க்கரையை முடிந்தமட்டும் பயன்படுத்தாதீர்கள் நண்பர்களே...

அதில் அதிக கெடுதல்கள் தான் இருக்கிறது. உயிர்சத்துக்கள் (வைட்டமின்கள்) குறைக்கின்றன. எடை கூடுகிறது.எதிர்ப்பு சக்தி குறைக்கிறது. இதற்கு பதில் வெல்லம், பனை வெல்லம் பயன்படுத்தலாம். வேலை அதிகமிருக்கும் பரபரப்பில், நாம் எளிதாக இருக்கிறதென்று சர்க்கரையை பயன் படுத்தி விடுகிறோம். அதற்கு ஒரு எளிய யோசனை.

நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நீரை கொதிக்க வைத்து, அதில் உடைத்த வெல்லம் அல்லது  பனைவெல்லம் போட்டு கரைய விடுங்கள். பாகு பதம் எல்லாம் வேண்டாம். கரைந்து கொதிநிலையை அடைந்தால் போதும். பிறகு ஆறியவுடன் வடிக்கட்டி , ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நான்கு நாட்கள் வரை பயன் படுத்திக் கொள்ளலாம். கேழ்வரகு கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, பால், காப்பி, டீ முதலியவைகளுக்கு இந்த கரைசலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரிட்ஜ்ல் வைக்காமல் அவ்வப்போது செய்தல் நல்லது தான் என்றாலும் நம்முடைய அவசர வாழ்க்கை முறையில், எது எளிதானதோ  அதை  தான் செய்வோம்... உடனே சர்க்கரையை பயன்படுத்தி விடுவோம்...அதற்கு மாற்றாக தான் இந்த முறையை பழக்கப் படுத்திக்க கொள்ளலாம். எப்படியோ சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.! 

பெண்ணியம்

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம்... திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் தான் ஆகின்றன. கணவர் இறந்துவிட்டார்.(குணப்படுத்த முடியாத ஒரு நோயின் காரணமாக.) ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வயதான தாய், தந்தையர். அவர்களுக்கு இவர் ஒரே மகன். கணவன் இறக்கும் போது தான் மனைவியிடம், ' நான் இறந்ததும் நீ எங்கும் போய் விடாதே... என் அப்பா,அம்மாவை பார்த்துக் கொள்.' என்று கூறினாராம்.!
அதனால் அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துக்கொண்டு, தான் பெண்ணையும் படிக்க வைத்துக் கொண்டு, மாமனார், மாமியாரையும் கவனித்துக் கொள்கிறாள். உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் அவள் மிகவும் சிறந்த பெண்... தனியாக இவ்வளவையும் பார்த்துக் கொள்கிறாள் என்று ஒரே புகழாரம் தான்.!

எல்லாம் பாராட்டுக்குரியது தான்... ஆனால் அந்த பெண்ணிற்கு 35 வயதிற்குள் தானிருக்கும். அவளுக்கான தேவைகள் என்று எதுவும் இருக்காதா...இல்லை.. இருக்க கூடாதா... அவளுடைய உணர்வுகளை யாரும் உணரவில்லை.. அந்த பெண்ணாலும் வெளியே சொல்ல முடியவில்லை... சொல்ல முடியாது... சொல்லவும் விடமாட்டார்கள்...!
இது தான் நம் சமூகம். இப்படி தான் நம் பெண்கள் இருக்க வேண்டும் என்று கட்டாய படுத்தி வைத்திருக்கிறது... அந்த பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அனுதாபம் வருவதில்லை... மாறாக இந்த சமூகத்தின் மீது கோபம் தான் வருகிறது. எவ்வளவு தான் நாம் பெண் விடுதலைப் பற்றிப்பேசினாலும் , ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது.!

Sunday, 12 June 2016

இறைவி.!

"இறைவி"


மிக அருமையான படமென்று ஒரு வரியில் சொல்லமுடியாது.!
பெண்ணியச் சிந்தனையுள்ள படமென்றும் சொல்லி முடிக்க முடியாது.!
தமிழ் திரையுலகில் நிறைய பெண்ணியம் சார்ந்த படங்கள் வந்திருக்கின்றன.  ஆனால் #இறைவி, அவை எல்லாவற்றிற்கும் கிரீடம் வைத்தாற் போல் இருக்கிறது.!

ஆணைச் சார்ந்திருக்கும் பெண்களைப் பற்றிய கதை... ஆணின் கோவம்,வெறி, குடிப்பழக்கம், ஆதிக்கம் ஒவ்வொன்றும் எப்படி அவனை சார்ந்திருக்கும் பெண்களை பாதிக்கிறது என்பதை அற்புதமாக விளக்குமொரு படம்.!

என்ன ஒரு அருமையான சிந்தனை... திரைக்கதை... வசனங்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.!

' கண்ணகி கோவலன் போல் வேறு ஒருவருடன் போய் விட்டு திரும்பி வந்தால் கோவலன் ஏற்றுக் கொள்வானா?'
' அழும் பெண்களைப் பிடிக்காது... பெண்களை அழ வைக்கும் ஆண்களை பிடிக்காது.'

' எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள நாம் என்ன பொம்பளையா..?'

என்ற வசனங்கள் நறுக்கு தெரித்தாற்  போல் இருக்கின்றன.!

பெண்களின் விடுதலையையும்,மழையையும் தொடர்புப்படுத்தி ஆரம்பக் காட்சிகளிலும், முடியும் காட்சியிலும் மிக அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.!

தான் விரும்பும் ஆணுடன் திருமணம் என்ற கட்டுக்குள் வராமல் வாழ விரும்பும்  பெண்ணை இந்த ஆணாதிக்கச் சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்...இயக்குனர்.


மூட நம்பிக்கையையும் விட்டு வைக்கவில்லை. பேய் பிடித்து இருப்பதாக சொல்லப்படும் நோயாளிகளை குணப் படுத்துவாதாக கூறி ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கூட்டதாரின், பிரபலமான கோயிலில் உள்ளே நுழைந்து  ஒருநாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்து திருடப்படும் கற்சிலைக்கு தன்னையே காப்பாற்றிக் கொள்ள சக்தியில்லை என்பதை காட்டும் காட்சி.!

தந்தை பெரியாரின் பெண்ணியக் கருத்துகள்,மூடனம்பிக்கை பற்றிய கருத்துகள் என நிறைய சொல்லப் பட்டிருகின்றன இந்த திரைப் படத்தில்.!


" இத்தனை நாட்கள் எங்கேயப்பா இருந்தாய்..?" என்று கேட்கத் தோன்றுகிறது....இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை பார்த்து...!


நம் ஆணாதிக்கச் சமூகத்திற்கு பல குட்டுகள் மிகவும் துணிச்சலுடன் கொடுக்கப் பட்டிருக்கின்றன.....இப்படத்தில்..!

ஆண்கள் அனைவரும் பார்க்க வேண்டியப் படம்... கண்டிப்பாக பெண்களும் பார்க்க வேண்டியப் படம்... "இறைவி"!

இயக்குனருக்கு பாராட்டுகளும், நன்றிகளும்...!

பெரியார்.!

பெரியாரைப் படித்தவர்கள் ஒவ்வொருவரின் உணர்விலும் தந்தை பெரியார் கலந்திருக்கிறார்.!

மற்றவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்திற்கும், பெரியாரைப் படித்தவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகளிருக்கின்றன .!

சமூக சார்ந்த பார்வை மிக இயல்பாகவே வந்து விடுகிறது.!

சுயமரியாதைக்கும், தன்முனைப்பிற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகிறது.!

உணவே மருந்து... மருந்தே உணவு.

என்னுடைய சிறிய வயதில், எனக்கு தெரிந்து எங்கள் பகுதியில் ஒரு வெதுப்பகம் கூட   கிடையாது... இனிப்பகம் செல்ல வேண்டுமானால் இரண்டு கிலோமீட்டர் செல்ல வேண்டும். உணவகம் செல்ல வேண்டுமானாலும் கூட மூன்று கிலோ மீட்டர் செல்ல வேண்டும். ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரே ஒரு மருந்தகம் மட்டுமே இருக்கும்.!

ஆனால் இப்போது ஒரு கிலோமிட்டர் தூரத்தில் மூன்று வெதுப்பகங்கள் இருக்கின்றன. நான்கு  இனிப்பங்கள் இருக்கின்றன. மூன்று உணவங்கள் இருக்கின்றன.  அதேபோல் ஐந்து மருந்தகங்கள் இருக்கின்றன.!!!

#உணவே மருந்து...# மருந்தே உணவு.!

நான், என்னுடைய தேவைகளுக்கும், என்னுடைய குடும்ப தேவைகளுக்கும் எக்காரணம் கொண்டும் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டால் போதும்.... குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து விடலாம்.!  

#குழந்தை தொழிலாளர் எதிர்ப்புத் தினம்.! 

Thursday, 9 June 2016

வேண்டாமே... நெகிழிப் பொருட்கள்.

ஒரு திருமணம் நடக்கிறதென்றால், அந்த மண்டபத்தில் விழும் வாழை இலைகள் கால்நடைகளுக்கு உணவாகிறது...ஆனால் இலைகளை விட பல மடங்கு பிளாஸ்டிக் தண்ணீர்  பாட்டில்களும், கப்களும்(பாயாசம், குளிர் பானங்கள் வைக்கும்) குப்பைகளாக விழுகின்றன...!
சாப்பாடிற்கு டம்ப்ளர்களில் தண்ணீர் வைக்கும் பழக்கம் இல்லாமல் போய்  விட்டது...அது நாகரீகமில்லாத, அசுத்தமான முறை என்று நமக்கு தவறாக பரப்பப் பட்டிருக்கிறது... ஒவ்வொரு இலைக்கும் ஒரு பாட்டில்... அது மட்டுமல்ல...சாப்பிட்டு விட்டு போகும் போது மறுபடியும் ஒரு பாட்டில் கையிலெடுத்துக்  கொண்டு போகிறார்கள்...!
மண்ணில் மக்காத இந்த நெகிழிப் பொருட்களை எவ்வளகெவ்வளவு பயன் படுத்தாமல் தவிர்க்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் நம்  மண்ணை பாதுக்காக்க உதவி செய்கிறோம் என்று பொருள்.!


சமூக நீதி.

கடந்த ஞாயிறன்று ,  நீயா,நானா நிகழ்ச்சியில் ஒரு அருமையான, அதே சமயம் வருத்தக்குரிய உண்மை சிறப்பான முறையில் பதிவு செய்யப் பட்டது... நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. கோபிநாத் மிகவும் நன்றாகவே நிகழ்ச்சியை வழி நடத்தினார் என்பதில் மிகையில்லை...!

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீட்டு சூழலிலும், பள்ளிச் சூழலிலும் படிக்கும் விதமே ஒரு போராட்டமாக தான் இருக்கிறது... !
போதிய அளவு ஆசிரியர் இல்லாமை, பரிசோதனைக் கூடங்கள் இல்லாமை, இருந்தாலும் இவைகள் சரிவர பராமரிக்கப் படாமை, வீட்டில் வசதிக் குறைவு, வருமானமின்மை, என எல்லாமே அவர்களுக்கு போராட்டம் தான்... அப்படி இருந்தும் படித்து, உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கி உள்ளார்கள் என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது... வாழ்த்துகள்...!
அவர்களின் வாழ்க்கை முறை, படிக்கும் நேரம், வசதி, தேவையான புத்தங்கள், இணையதள வசதிகள், பயிற்சி எல்லாமே அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வேறு படுகின்றன.
அப்படி இருக்கும்போது எப்படி பொது மருத்துவ நுழைவு தேர்வு எல்லோரும் ஒரே மாதிரி வைக்க முடியும்..?
எதுவுமே சமமில்லை என்பதை தான் 'நேற்றைய நீயா,நானா'  (5-6-2016) நிகழ்ச்சி உறுதிப் படுத்தி இருக்கிறது...!
அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு ()நடை முறைக்கு வந்தால் இவர்களால் கட்டாயம் மருத்துவம் என்பதையே நினைத்துக்  கூட பார்க்க முடியாது...!
அடித்தட்டு மக்கள் தப்பி தவறியும் மேழும்பக் கூடாது என்ற இந்த பார்ப்பனீய ஆதிக்கப் போக்கை நாம் அனுமதிக்கக் கூடாது  என்பதில்நாமனைவரும்மிகவும்  உறுதியுடன் இருக்க வேண்டும்.!

அம்மா.

பிள்ளைக்கு காய்ச்சல் வந்தால்,
மார்போடு சேர்த்தணைத்து அரவணைக்கும் கைகள்...
தனக்கு காய்ச்சல் வரும் போதுமட்டும்,
கிட்டவாராதே கண்ணு... காய்ச்சல் வந்துடபோது...
என்றுரைக்கும் அற்புதம் .... தாயுள்ளம்.!