Saturday, 17 September 2016

பெரியார்

தந்தை பெரியார் அவர்களின் புத்தகங்கள் முதல் முதலாக  படிக்கும் வாய்ப்பு என் அண்ணன் மூலம் (என்னுடைய 18- வயதில்) கிடைத்தது... முதலில் படித்த நூல் ' பெண் ஏன் அடிமையானாள் ' என்ற நூல். பிறகு தேடித் தேடி பெரியாரின் அனைத்து நூல்களையும் படித்தேன்.  எல்லாமே ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது.. மிகவும் வியப்பாகவும் இருந்தது. இப்படிப் பட்ட ஒருமனிதரை நாம் வேறு மாதிரி நினைத்திருந்தோமே என்ற வியப்பு தான்... ஏனென்றால், எனக்கு தெரிந்த பெரியார் கடவுள் மறுப்பாளர் என்பது மட்டுமே...!

அதன் பிறகு  முடிந்தவரை அவரின் புத்தகங்களை படிப்பேன். திருமணத்திற்கு பிறகு மேலும் அதிகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது... ஏனென்றால் இணையர் வீட்டில்  அனைவரும் பெரியார் பற்றாளர்கள்...எவ்வளவு படித்தாலும் எல்லாமே சரி தான்.. கடவுள்மறுப்பு கொள்கைமட்டும் கொஞ்சம் நெருடலாக இருந்தது..அதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை... அந்த நம்பிக்கை அப்படி...!!! :-)

குடும்பத்தில், உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில், சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும், பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பேன்.... சிறு சிந்தனை, தொடர் சிந்தனையாக மாறி, கொஞ்சம், கொஞ்சமாக உருப்பெற்று கடவுள் என்ற ஓன்று இல்லை என்ற முடிவிற்கு வந்தேன்....நான் சாமி கும்பிட்டு 22 ஆண்டுகள் ஆகின்றன.!
கடவுள் இல்லை என்ற  உண்மை  விளங்கிய பிறகு கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடு,இணை எதுவுமே இல்லை எனலாம்...என்னுடைய சிந்தனைகள் அனைத்திலும் வேறுபாடு தெரிந்தது.... பெரியாரை முழுவதும் உள்வாங்கி கொண்ட பிறகு,  சுயமரியாதை என்ற சொல்லிற்கு உண்மையான பொருள் புரிந்தது.!

" உணவை பங்கிட்டு உண்பது, உழைப்பை பங்கிட்டு செய்வது என்ற நிலை ஏற்பட்டால், கடவுளுக்கு வேலையோ, அவசியமோ இருக்காது."

-- தந்தை பெரியார்
.

நம் அறிவாசான் தந்தைபெரியார் அவர்களின் 138-வது பிறந்தநாள் வாழ்த்துகள்.!  :-)

#பெரியார்138

சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு.!
வாழ்க பெரியார்... வளர்க பகுத்தறிவு.!  :-)

Thursday, 15 September 2016

பெண்களின் ஆடை

இன்று காலை செய்தித் தாளில் ஒரு  வருத்தமான  செய்தி படிக்க நேர்ந்தது .... :-(

சென்னையில்  உணவகத்தில் பணி புரியும்  ஒரு பெண் கிரைண்டரில் மாவு அரைக்கும் போது துப்பாடா இயந்திரத்தில் சிக்கியதால், கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது தான் அது.!

பெண்களுக்கு ஆடை கூட பாதுகாப்பில்லை என்பது எவ்வளவு வேதனை அளிக்கிறது... இதில் கவனக்குறைவு காரணமாக இருக்கும் என்பது ஒரு புறமிருந்தாலும், ஆடை விசயத்தில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கத்  தான் செய்கிறது.!

இது போல்  ஆண்களின் ஆடை அவர்களுக்கு எந்த அசௌகரியத்தையும் தருவதில்லையென்பது முற்றிலும் ஒப்புக் கொள்ள கூடிய உண்மை.! 

 பெண்கள் சேலை அணிவதில் சில சங்கடங்கள் இருக்கிறது என்று தான் சுரிதாருக்கு மாறினார்கள். அதிலும் இந்த துப்பட்டா சரி செய்வது இருக்கிறதே.... நேரத்தை எப்படி எல்லாம் வீணாக்குகிறோமென்பதற்கு இது ஒரு நல்ல சான்று. இப்போது பெண்களின் உயிர்களையும் பறிக்க காரணமாக  இருக்கிறது. பேருந்துகளில், ரயில்களில்,இரு சக்கரவாகனங்களில் என செல்லும்போது பறக்க விட படும் இந்த துப்பட்டா  பல நேரங்களில் உயிரை பறிக்கும் சாதனமாக மாறி விடுகிறது.!

தந்தை பெரியார் அவர்கள்  சொன்னது போல், ஆண் , பெண் பேதமில்லாமல் ஆடை அணிய வேண்டும். தற்காலத்தில் இந்த முறை மாறி இருக்கிறது என்றாலும் முழுமையான  மாற்றத்தை இன்னும் அடையவில்லை... !

 இது தான் கலாச்சாரம், பண்பாடு என தங்களை குறுகிய வட்டத்திற்குள் அடைத்துக் கொள்ளாமல், பெண்கள் தங்களுக்கு வசதியான ஆடையை அணிய முன் வர வேண்டும்.!

Wednesday, 14 September 2016

அரசியலும், காவேரியும்.!


எனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில், கர்நாடகாவில் சிறிது காலம் வாழ்ந்தவர்களும், பலகாலமாக வாழ்த்துக் கொண்டிருப்பவர்களும் கன்னடர்களைப் பற்றி எந்த குறைகளையும் சொல்வதில்லை... அம்மக்கள் நம்மைப் போன்றே நட்புடன் பழகுகிறவர்கள் என்றே அனைவரும் கூறுகின்றனர்... இந்த காவேரி விஷயத்தில் மட்டும், ஏன் இந்த முறைகேடு, வன்முறை என்றால் , பின்னணியில் அரசியல் இருக்கிறது... அதிலும் முக்கியமாக காவிகளின் மத அரசியல் இருக்கிறது..!
இந்த வன்முறையாளர்கள் தான் இரு மாநிலத்திலும் உள்ள மக்களை தூண்டி விட்டு அந்த வன்முறை நெருப்பில் குளிர் காய்கிறார்கள் .!!
இதனை மிகச் சரியாக புரிந்து, அதற்கேற்ற சரியான பாதையில் கவனமாக கொண்டுச் செல்லும் பொறுப்பு இரு மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் இருக்கிறது. மத்திய மதவாத அரசை இவ்விசயத்தில் நம்புதல் காலவிரயம்.. மேலும கேடாக தான் போய் முடியும்.!!!

Saturday, 10 September 2016

போராட்டம்

போராட்டம், வேலை நிறுத்தம் என்றால் என்ன என்பதை கர்நாடக மக்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.!

கார்ப்பரேட் கம்பனிகளை கூட மூடும் அளவிற்கு ஒரு போராட்டம்... வேலைநிறுத்தம்... மாநிலத்தலைநகரையே செயல்படாத அளவிற்கு முடக்கிய ஒரு மாபெரும் போராட்டம்.... எதற்கென்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று...!!!

நம் விவசாயிகள் கூட தண்ணீர் கேட்டு போராடினார்கள்....  ஒரு கடுகு முனை அளவாவது விளைவு ஏற்ப்பட்டதா...? 

அரசியல்வாதிகள், அரசு,பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள்  என அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டாமா...தமிழக விவசாயிகளுக்கு..!

உழவுத் தொழில் இல்லையென்றால்  எங்கு உலகு என்பதை உணர்ந்து விவசாயத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் ஆதரவு கரம் நீட்ட வேண்டிய மாபெரும் கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது .! 

Friday, 9 September 2016

விளம்பரங்கள்.

இது ஒரு சோப்பு விளம்பரம்...

' வீட்டுல எனக்கு பவரே இல்ல  ' என்று வருத்தப்படும் ஒருபெண்...இல்ல நிர்வாகி. , காரணம் துணிகளில் உள்ள அழுக்கு போகவில்லையாம்.!
அதற்கு தீர்வு சொல்லும் மற்றொரு பெண், ' வீட்ல என்னுடைய பவ்ர் தான்..அதனால் இந்த சோப்பை பயன்படுத்து ' என்று சொல்லுவார்... ஆக துணிகளில் அழுக்கு இல்லாமல் இருந்தால் வீட்டின் அதிகாரம் முழுதும் பெண்களின் கைகளில் வந்துவிடுமா..???

மற்றொரு விளம்பரத்தில், தன் சுய சம்பாத்தியத்தில் உயர்ந்த பிறகு திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று ஒரு பெண் சொல்வதற்கான  தன்னம்பிக்கையை  சிவப்பழகு கிரீம் தான்  கொடுக்கிறது  என்று காட்டப் படுகிறது..!!! 

பெண்களை அழகு பதுமையாகவும், வீட்டின்  வேலையை மட்டுமே  செய்துக் கொண்டு  சுய சார்பற்றப் பெண்ணாகவே காட்டுவதில் தான் இந்த விளம்பரக் கம்பனிகளுக்கு எத்தனை மகிழ்ச்சி.???

உயர்வதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கையிலேயே,  உயர விடாமல் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்க வேண்டும் பெண்கள் என்பதில் தான் எவ்வளவு உறுதியாக இருக்கிறது ஆணாதிக்கச் சமூகம்.!



 

Thursday, 8 September 2016

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்

ஒன்றுக்கும் உதவாத கங்கைநதியை சுத்தப் படுத்த்துவதற்கும், யோகா ஆராய்ச்சிக்கென்றும், சமஸ்கிருத மொழி பரப்புவதற்கு என்றும், கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் மத்திய மதவாத அரசு, தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல் படுத்த தயங்குகிறது... இந்த விசயத்தில், மாநிலஅரசும் அக்கறை காட்டுவதில்லை..மாநில நதிநீர் இணைப்பு கிடப்பில் போடப் பட்டிருக்கிறது...எந்த ஆட்சி வந்தாலும், விவசாயிகளின் நிலைமையும், தமிழக மீனவர்களின் நிலைமையும் மாறுவதில்லை... எல்லாவற்றிலும் முறைகேடான அரசியல்தானே இங்கு  நடந்துக் கொண்டிருக்கிறது....  உழவுத் தொழிலுக்கே  முழுக்கு போட்டு  விட்டு , உணவிற்காக அந்நிய நாட்டில் கையேந்தும் நிலை வந்தாலும் வியப்பில்லை... இதில் ஒன்று பட்ட தேசம் என்ற முழக்கம் வேறு . எத்தனை சட்டங்கள் இயற்றி என்ன பயன்... எத்தனை திட்டங்கள் தீட்டித்தான் என்ன பயன்..??? !!!

இந்துத்துவத்தை தூக்கிப் பிடிக்கும் பள்ளிகள் !

இப்போதிருக்கும் கல்வித் திட்டமே மன அழுத்தத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது... அதிலும்  இந்த மதம்  படுத்ததும் பாடு இருக்கிறதே....அதை சொல்லி மாளாது. இந்துத்துவத்தை தூக்கிப்பிடிக்கும் பல பள்ளிகள், இந்த காலாண்டுத் தேர்விற்கு பின்பு விடுமுறை விடாமல், உடனே வகுப்புகள் நடைப்பெற வைக்கின்றன. காரணம் என்னவென்றால், நவராத்திரியில் தான் விடுமுறை கொடுக்கப் பட வேண்டுமாம்....உண்மையில்குழந்தைகள் நிலைமை மிகவும் வருத்தத்துக்குரியது.!

தேர்விற்கு பிறகு விடுமுறை விடும் பழக்கம்,  மாணவர்கள் தங்களை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டு, மீண்டும் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருவதற்கே. ஆனால் அவர்களை ஓய்வெடுக்க கூட விடாமல், உடனே பள்ளிக்கு வர வலியுறுத்தும் இம்முறை குழந்தைகளை, மாணவர்களை மன அழுத்தத்திற்கு   உள்ளாக்குகிறது என்பது முற்றிலும் உண்மை.!

பள்ளி கல்வித்துறை இப்படிப் பட்ட நடைமுறைகளை தடுப்பது மிகமுக்கியம்.
செப்டம்பர் - 8 , உலக எழுத்தறிவு தினம்.!



எழுத்தறிவித்தல் மிகச் சிறந்த சேவை... நம்மால்முடிந்த அளவு மற்றவர்களின் கல்வியறிவிற்கு உதவி செய்வோம்.!