என்னுடைய சிறு வயதில், எங்கள் வீட்டிற்கு நாமக்கார ஜோசியர் ஒருவர் , ஆறு மாதமோ, ஒரு வருடமோ இடைவெளி விட்டு வருவார்.. எங்கள்அம்மாவிற்கு இதில் நம்பிக்கை இருந்ததினால், வரும் போதெல்லாம் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தை பார்க்கச் சொல்வார்கள். அவரும் ஏதாவது சொல்லி விட்டு பணம் வாங்கி கொண்டு செல்வார்.!
அப்படி ஒரு சமயம் வந்தபோது, எங்கள் அப்பா, அண்ணன் ஜாதகத்தை கொடுத்து பார்க்கச் சொன்னார்கள் அம்மா. அவரும் பல பாசிட்டீவ்களும், சில நெகட்டீவ்களும் சொன்னார்.. நெகட்டிவ் விசயங்களுக்கு சில பரிகாரமும் சொன்னார்.!
அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சற்று தொலைவில் நான் கணிதப் பாடம் போட்டு கொண்டிருந்தேன். எங்கள் அம்மாவிற்கு என்ன தோன்றியதோ .. தெரியவில்லை, என் ஜாதகத்தைக் காட்டி பார்க்கச் சொன்னார்கள். அதற்கு அவர்,' இந்த ஜாதகம் அமோகமாக இல்லையென்றாலும், சுமாரான ஜாதகம். எல்லோருக்கும் பிடிக்கும் குணாதிசியங்கள் உள்ள பெண். ஆனால் சரஸ்வதி கடாட்சம் சிறிது கூட இல்லை... அதனால் படிப்பு வராது.. எட்டாம் வகுப்பு தாண்டுவதே கஷ்டம் என்றாரே.. பார்க்கலாம்.!'.
அந்த வயதில் அவர் சொல்வது உண்மை என்று நம்பி , மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன்... உடனே என் அம்மா , என்னைப்பார்த்து , நான் அழுவதற்கு தயாராகி விட்டேன் என்பதை புரிந்துக் கொண்டு அவரிடம், ' சரி ஜோசியரே.. விடுங்கள்... பொம்பளைப்பிள்ளை படிச்சு என்னா பண்ணப்போது..? நல்ல இடம் அமைஞ்சா சரி.! ' என்றார்கள். அவர்களை தவறு சொல்லி என்ன பயன்.. அப்படித் தானே இந்த சமூகம் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறது..!!! :-( :-(
அதன் பிறகு இரண்டு நாட்கள் அதையே நினைத்து, நினைத்து தனியே அழுவேன். பிறகு இயல்பு நிலைக்கு வந்து விட்டேன். எப்போதும் போல் படித்துக் கொண்டிருந்தேன்... இதற்கென்று சிரத்தையோடு எல்லாம் படிக்கவில்லை... ஆனாலும், பரீட்சை எழுதும் போதும், விடைத்தாள் கொடுக்கும் போதும் அந்த நாமக்கார ஜோசியர் சொன்னது நினைவிற்கு வரும்... :-) :-)
ஏழாம் வகுப்பு முடித்து எட்டாம் வகுப்பு முதல் தேர்வு , காலாண்டுத் தேர்வு விடைத்தாள் கொடுக்கும் போதும் அவர் சொன்னது நினைவிற்கு வந்தது... இதில் என்னவொரு சிறப்பென்றால், இதுவரை பத்து ரேங்கிற்குள் வந்த நான், அந்த தேர்வில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தேன்... :-) :-) அச்சமயம் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.! அந்த ஆண்டு முழுவதும் முதல் மூன்று இடத்திற்குள்ளேயே வந்து கொண்டிருந்தேன். கடைசியில் இறுதித் தேர்வு நடந்து முடிந்தது... அப்போதெல்லாம் openday என்பதெல்லாம் கிடையாது. போஸ்ட் கார்டில் தான் ரிசல்ட் வரும். promoted என்று வந்த கார்டைப் பார்க்கும் போது, ஏற்பட்ட உணர்வு இருக்கிறதே... அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை... உடனே எங்கள் அம்மாவிடம் போய், ' அம்மா அந்த நாமக்கார ஜோசியர் சொன்னது பொய் ஆயிடிச்சு.. பாத்திங்களா.., நான் ஒன்பதாவது போக போகிறேன் ' என்றேன். அதற்கு அம்மா, ' அதை இன்னுமா நினைச்சுகிட்டு இருக்கே... நல்ல பொண்ணு நீ.. அவங்க சொல்றது எல்லாமே அப்படியே நடக்காது... சிலது நடக்கும், சிலது நடக்காது' என்றார்கள்.! :-)
பாவம்.. எங்கள் அம்மா மட்டுமல்ல... பல பெண்கள், பிரச்சனைகள் இல்லா எதிர்காலத்தை தெரிந்துக் கொள்ளும் ஆவலில் கேட்கப்படுவதால், அவர்களின் விருப்பம் நம்பிக்கையாக மாறுகிறது என்று அப்போது எனக்கு தெரியவில்லை...!