நம்முடைய ஆழ் மனத்த்திற்கு தான் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது... எங்கோ, எப்போதே, யாராலோ, கேட்ட,பார்த்த, படித்த செய்திகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, ஏதோ ஒரு சமயத்தில் வெளிப்படுகிறது. நம் மனம் வலிமையாக இருக்கிறதென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.. ஆனால், நம் உள்மனம் நம் அனுமதியில்லாமலே பல செய்திகளையும், காட்சிகளையும் பதிவு செய்துக்கொள்கிறது.சில நேரங்களில், நம் உள்மனம் , நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல், தனிச்சைக்காக செயல் படுகிறது.!
சுற்றிலும் கும்மிருட்டு ... கண்ணெதிரே ஆறேழு உருவங்கள், அனைத்தும் வடிவமில்லா கருப்பு உருவங்கள் ... கண்ணின் கருவிழி மட்டும் சிவப்பு , உதட்டின் நிறம் கரும் சிவப்பு, நாக்கோ இரத்தம் சொட்டுவது போல் நீளமாக இரத்தத் சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது . அனைத்து உருவங்களும் பலநிலைகளில் இருக்கின்றன. முதலில் உள்ளது நின்றுகொண்டும், அதன் பக்கத்தில், மற்றொன்று மண்டியிட்டுக்கொண்டும், சற்று தள்ளி, மூன்று உருவங்கள் உட்கார்ந்துக்கொண்டும், கொஞ்சம் தள்ளி, சிறிது இடைவெளியில் இரு உருவங்கள் சாய்ந்தவாறு உட்கார்ந்துகொண்டும், தங்கள் கோர முகத்தை காட்டியபடி, என்னையே உற்றுநோக்கி, பயமுறுத்துவதுபோல் கத்திக்கொண்டிருக்கின்றன.
பயங்கர அதிர்ச்சி ... பயத்தில் நானும் கத்துக்கிறேன். ஆனால் அது அலறல் இல்லை... தவிப்பு , அரை மயக்கத்தில் , ஒன்றும் செய்ய இயலாதபோது, அதாவது எனக்கு ஆபத்து இருக்கிறது,, ஆனால் என்னால் எதிர்க்க முடியவில்லை என்பது போன்ற உணர்வு,இதனால் ஏற்படும் தவிப்புடன் கூடிய ஒரு ஓலம் என்றே நினைவிருக்கிறது. பக்கத்தில் படுத்திருந்த தங்கையும் அலறிக்கொண்டு , என் கைகளை பற்றிக்கொண்டு எழுந்திருக்கிறாள். கூடவே நானும் எழுந்திருக்கிறேன். ஆனால், அந்த உருவங்கள் அப்படியே , அந்நிலையிலிருந்து சற்றும் மாறாமல், அப்படியே முறைத்தபடி, கத்திக்கொண்டிருக்கின்றன. நாங்கள் போட்ட சத்தத்தில், எல்லோரும் விழித்து, எழுந்து உட்கார்ந்து, என்ன நடக்கிறதென்றே தெரியாமல், பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதைப்பார்த்து, பயந்த என் தங்கையின் மகன், அலறி இருக்கிறான். பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த என் சித்தப்பா வந்து , லைட் போட்டதும், அவ்வளவு நேரம் எனக்கு முன்னே தெரிந்த அந்த கோர உருவங்கள் மறைந்துவிட்டன. நான் உட்கார்ந்து இருக்கிறேன், என் உறவினர்கள் அனைவரும் உட்கார்ந்திருக்கிறார்கள்.
' என்னாச்சு .. என்னாச்சு .. என்று ஒரே கேள்வி,,, இவங்க இரண்டு பெரும் கத்தினாங்க.. ' என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
' என்ன .. நான் கத்தினேனா ...'
' ஆமாம்க்கா ... நீங்க கத்தினீங்க ..' இது தங்கை.
' அப்படியா, எனக்கு தெரியலையே...'
சற்றுமுன் வரை பார்த்த முகங்கள் நினைவில் இருக்கின்றன... கத்தினது நினைவில் இல்லை... யாரிடமும் எதுவும் பேசாமல் யோசிக்கிறேன்... யோசிக்கிறேன்.. ' ஆமாம் ... நான் கத்தினேன்.. ஆனால் அது அலறலோ, கத்தலோ இல்லை... மிகுந்த தவிப்புடன் கூடிய ஓலம். ' இப்போது நன்கு நினைவிற்கு வருகிறது .. அந்த கோரமுகங்களைப்பார்த்து பயத்திருக்கிறேன். எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையில் ஓலமிட்டு இருக்கிறேன்.
ஆனால், இதையெல்லாம் செய்தது நானா.. எனக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லையே... கடவுள் நம்பிக்கை போகும்போது, சேர்ந்தே பேய் நம்பிக்கையும் போய்விட்டதே... நான் எப்படி பயந்தேன். இப்போது எல்லாம் தெரிகிறதே அப்போது மட்டும் ஏன் பயந்தேன்...எப்படிப்பட்ட நிலையிலும் எதிர்த்து போராடும் துணிச்சல் என்னவானது ... ஒன்றும் புரியவில்லை, ஆனால் அது கனவல்ல... அது மட்டும் உறுதி.. அந்த உருவங்கள் அனைத்தையும் நேரில் பார்த்தமாதிரி தான் உள்ளது. நேரில் தான் பார்த்தேன். அதை கனவென்று சொல்லி சமாதானம் செய்துகொள்ள முடியாது. இதை வெளியில் சொல்லவும்முடியது. ஏனென்றால், நான் ஒரு பெரியாரியவாதி என்பது எல்லோருக்குமே தெரியும். மற்றவர்களை விடுங்கள். எனக்கே நான் பொய்யாக கனவென்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. நேரில் பார்த்தேன் என்று சொலலவும் மனம் வரவில்லை... எனக்கே இப்படி என்றால், நம்பிக்கை உள்ளவர்கள் நம்பி விடுவார்களே... ஏன் இப்படி.. வந்த இடத்தில் பெரியார் கொள்கைகளை பரப்ப ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ஆனால் எதுவும் என்னல தெளிவாக விளக்க முடியவில்லையே... !
நிச்சயம் இம்மாதிரி மூடநம்பிக்கைகள் எனக்கு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கிடையாது... டாக்டர் கோவூர் அவர்களின் புத்தகம் படித்திருக்கிறேன். என்ன இருந்தாலும், நிச்சயம் என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி, நானே நேரில் பார்த்த உணர்வு.. அது கனவில்லையே.. அதோடு மட்டுமல்லாமல், ஓலமிட்டிருக்கிறேன். சே.. என்னடா இது .. என்று குற்றயுணர்ச்சியுடன், திருச்சியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தேன்.
இது கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட என்னுடைய நேரடி அனுபவம்.! :-) :-)
வந்தவுடன், முதலில் அனைத்தையும் என் மகனிடம் சொல்லி முடித்தேன். சில நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருந்தான். பிறகு ,
' உங்களுக்கு , sub-conscious mind கடுமையா வேலை செய்திருக்கிறது. conscious mind சுத்தமா வேலை செய்யல... அதான் இப்படி... சின்ன வயசுல பார்த்த, கேட்ட , பல விசயங்கள் உங்கள் ஆழ்மனதில் பதிந்து, இப்போ , எப்படியோ வெளியே வந்திருக்கு... conscious mind -க்கு தெரியும்... நீங்கள் ஒரு நாத்திகர், இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று... ஆனால் , உங்கள் sub- conscious mind ல இதை நீங்க ஆழமா பதியவைக்கல... அதான் எதோ ஒரு சமயத்தில் இப்படி வெளியாகி இருக்கு..' என்றான்.
நாம் நம் ஆழ்மனதை பயிற்சி செய்தல் மிக முக்கியம். நம்முடைய ஆசைகள், இலக்குகள், கொள்கைகள், எண்ணங்கள் அனைத்தும் ஆழமாக பதிய வைத்தல் நல்லது. அதுவும் நலல்வனவற்றை மட்டுமே பதிய வைக்க வேண்டும். தேவை இல்லாதவற்றை தூக்கி எறிந்துவிட வேண்டும். நம்முடைய ஆழ்மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான், எந்நிலையிலும் நாம் நாமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆழ் மனதில் என் வாழ்க்கையின் நடுவில் நான், உணர்ந்து, தெளிந்த பெரியாரியம் இன்னும் ஆழமாக பதியவேண்டும் . மேலும் நம் ஆழ் மனம் லாஜிக் பற்றி சிந்திக்காது... தனக்குள் சேர்த்து வைத்திருக்கும் செய்திகளை மட்டும் வெளி கொணரும். நமக்கு இருக்கும் அறிவை பயன்படுத்த முடியாது என்பது உண்மை செய்தி என்பதை பல காணொளிகளில் பார்த்து தெரிந்துகொண்டேன். அது தான், பலர், நான் நேரில்பேய்யைப் பார்த்தேன் என்று நம்புகிறார்கள் என்பதை என் அனுபவத்தின் வாயிலாக உணர்தேன். இது ஒரு நல்ல அனுபவமாக தான் இருந்தது... நேரில் பார்த்ததாக சொல்லும் மனிதர்களுக்கு புரிய வைக்க முடியும். இருப்பினும் , இன்னும் இதைப்பற்றி மனநல ஆலோசகரிடம் பேச வேண்டும். அதிலும், இதிலெல்லாம் நம்பிக்கையில்லாத மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இப்போது இந்த பதிவின் ஆரம்பத்திற்கு செல்லுங்கள்... எல்லாமே புரியும்.!