பெரியாரியம் பேசிக் கொண்டு எப்படி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு கொடுப்பது என்று பல தோழர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்... நான் இப்போது சொல்ல வரும் கருத்து என் அறிவிற்கு , நான் ஏற்றுக்கொண்ட என் கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஜல்லிக்கட்டு என்பது தேவையில்லாத ஓன்று ... மனிதனுக்கும், மிருகத்திற்கும் என்ன வீர விளையாட்டு வேண்டியிருக்கிறது... இதனால் ஆண்டுதோறும் பல மனித உயிர்கள் பலியாகின்றன... மேலும் இதில் ஜாதி ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது... ஆணாதிக்கம் கோலோச்சுகிறது.. மூடநம்பிக்கைகள் மலிந்திருக்கின்றன .. பாரம்பரியம், பண்பாடு என்று சொல்லிக் கொண்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது , பாரம்பரியம் என்ற ஒரு காரணத்தினால் நம் அறிவுக்கு ஒவ்வாத எதையும் ஏற்றுக் கொள்ள கூடாது என்பது தான் கடந்த ஆண்டுகளிலும், ஏன்.., சென்ற வாரம் வரை கூட என்னுடைய நிலைப்பாடு இது தான்..!
ஆனால் தற்போதைய நிலைமையை உற்றுப் பார்த்தோமானால், இது வெறும் மிருகவதை என்ற காரணத்தினால் மட்டும் தடை செய்யப் பட்ட ஒன்றாக இல்லை என்பது தெளிவாகிறது... இதன் பின்னே ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்து முன்னணி என அனைத்து இந்துத்வா அமைப்புகளும் செயல் படுகின்றன என்பதை உணர முடியும். பார்ப்பனீயம் வெகு சாமார்த்தியமாக காயை நகர்த்திக் கொண்டிருக்கிறது...!
எப்படியென்றால், நம் விவசாயத்திற்கும், நம் நாகரீகத்துக்கும் தொடர்புடையது காளை... நம் நாகரீகத்தின் அடையாளச் சின்னமாக இருப்பதும் காளை தான். காளையை இதன் மூலம் ஒழித்து கட்டி
விட முடியும்... காளைக்கும், ஆரியத்திற்கும் வெகுகாலமாக பகை.! செயற்கை ஊசி மூலம் வெறும் பசுக்களையே கருத்தரிக்க வைக்கும் ஒரு முறையை ஏற்படுத்தியப்பிறகு, காளை நம் தமிழர் வாழ்வியலிலிருந்து அகற்றப்பட்டு விடும். நம் வீட்டு விலங்கு காளை அல்ல .. அது ஒரு வனவிலங்கு என்றாகி போகும். ஏற்கனவே காளை, குதிரையாக மாற்றி அமைக்கப்பட்டு, பின்பு நம்முடைய எதிர்ப்பினால் திருத்தியமைக்கப்பட்ட வரலாறு மீண்டும் மறைந்து போகும்.. மறைக்கப்பட்டு விடும் பார்ப்பனீயத்தினால்.!
சிந்துசமவெளி நாகரீகம் திராவிடர் நாகரீகம் என்பது அழிக்கப்பட்டு, ஆரிய நாகரீமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விடும். ஆரியர்கள் வந்தேறிகளல்ல .. பூர்வகுடிகள் என்று மாற்றி அமைக்கப்படுவார்கள்.!காளையை அழிக்கும் ஒரு செயலுக்கு பின், பார்ப்பனீயத்தின் இத்தனைப் பெரிய அயோக்கியத்தனம் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.!
சரி .. தந்தை பெரியார் இருந்தால் என்ன செய்திருப்பார்..???
ஆதரிப்பாரா .. இல்லை ஆதரிக்க மாட்டாரா..!!!
இதனை ஆதரித்து இருப்பார் என்பது தான் என் கருத்து.. எப்படியென்றால் அவரின் அப்போதைய செயல்பாடுகள் தான் இதனை எனக்கு உறுதி செய்கிறது.
1. ''எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் என் சகோதரர்கள் நம்புகிறார்கள்..அவர்களுக்காக அவர்களின் உரிமையை பெற்றுத் தர வேண்டும் 'என்று போராடினார். அந்த உரிமையைப் பெற்றபிறகு , அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முதலில் கோவிலுக்குள்ளே போக வேண்டும் என்பது.. அதன்பிறகு கருவறைக்குள் போக வேண்டும் என்பது .. இவ்விரண்டுமே ஜாதி ஒழிப்பிற்கான போராட்டம் தான் (கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர் ) என்பதை தோழர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.!
2. அடுத்து, திருமணம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது .. ஆணாதிக்கத்திற்கும், பெண் விடுதலைக்கும் மிகப்பெரிய இடையூறாக இருப்பதே இந்த திருமண முறை தான் என்பது அறிவாசான் அவர்களின் கொள்கை. 'எங்களுக்கு புரோகிதர் இல்லை என்பதை கூட ஏற்றுக் கொள்ள முடியும்...ஆனால் தாலி கட்டி தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லும் நண்பர்களிடம் அதற்கு ஒப்புக் கொண்டு தாலி கட்டி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அதற்கு அவர்களுடைய பதிலும், ' மூடநம்பிக்கையற்ற, பார்ப்பான் இல்லாத சுயமரியாதை திருமணம் செய்ய ஒத்துக்க கொண்டார்களே .,.அதுவே பாராட்டத் தக்கது .. அவர்களே பிறகு தாலியற்ற திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் 'என்று கூறினார்கள் அல்லவா ... அது போல் தான் இதுவும்... நம்முடைய பாரம்பரியம், பண்பாடு என்பது எல்லாம் நம் மாநிலஉரிமை... அதில் தலையிட ஆர்.எஸ்.எஸ் .க்கு என்ன உரிமை இருக்கிறது...!
3. இதில் பாலின சமத்துவம் தேவை, ஜாதி,மத வேறுபாடுகள் களையப்பட வேண்டும், இல்லை இந்த விளையாட்டை அரசே ஏற்று ,ஒரு மாநில விளையாட்டாக நடத்த வேண்டும் .. மனித உயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ..., இன்னும் சொல்லப்போனால், இந்த விளையாட்டு வேண்டுமா... வேண்டாமா என்பதை மாநிலஅரசும், நம்மக்களும் தான் முடிவு செய்வ வேண்டுமே தவிர மத்திய அரசிற்கோ, இந்துத்துவ அமைப்புகளிற்கோ , வெளிநாட்டு மிருகவதை அமைப்புகளுக்கோ உரிமையில்லை என்பது தான் சரியாக இருக்க முடியும்.!
4. 'ஆனா, ஆவன்னா ' வே தெரியாத மக்களிடம் போய் ஒரு நீண்ட கட்டுரையை கொடுத்து படியுங்கள் என்று சொன்னால் , எப்படி படிப்பார்கள்.. அலட்சியப்படுத்த தானே தோன்றும்... அது போல் இதுவும்.!
நம் உரிமையை முதலில் தக்கவைத்துக் கொள்வோம் ... நம் பண்பாட்டுச் சின்னம், பாரம்பரியம், நம்முடைய வரலாறு சொல்லும் வரலாற்று சான்றுகள் இவைகளை பாதுகாப்போம். அதன்பிறகு தேவையில்லாத, நம் ஒற்றுமைக்கு ஒத்துவராத , நம் இனத்திற்கு அச்சத்தை ஊட்டக்கூடியவைகளை களையெடுப்போம்... நண்பர்களே..!
தற்போது தன்னெழுச்சியாக உருவாக்கி இருக்கும் இளைஞர் கூட்டத்தை ஆதரித்து, அவர்களை மென்மேலும் பண்படுத்தி, நம் உரிமைகளின் மீது தாக்கப்படும் மத்திய அரசின் அனைத்து தாக்குதல்களையும் புரிய வைத்து போராட்டத்தை பெரும் புரட்சியாக உருவாக்குவோம் ... இப்போது அவரக்ளுக்கு ஆதரவாக இருப்போம் நண்பர்களே..!
மாநில சுயாட்சியை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது... மாநில உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதில் மிகவும் கவனத்துடன் இருப்போம். ஆரியம் ஒரு விடயத்தில் தீவிரமாக இருக்கிறது என்றால், அதன் பின்னால், ஏதோ மிகப்பெரிய அழிவு காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை நம் அறிவாசான் அய்யா அவர்களே மிக தெளிவாக நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள் என்பதை உணருங்கள்... நன்கு சிந்தியுங்கள் ... மேலோட்டமாக பார்த்து விட்டு, இந்த பதிவு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான பதிவு என்ற கண்ணோடத்தில் மட்டுமே என்று எண்ணி விடாதீர்கள் நண்பர்களே.!