சில தினங்களுக்கு முன் பேருந்தில் வந்துக் கொண்டிருந்த போது, நான் அமர்ந்திருந்த இருக்கையின் பக்கத்தில், திருநங்கை ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அவ்வளவு கூட்டத்திலும் , இடது, வலது, பின்புறம் என் அவரைச் சுற்றி சிறிது இடைவெளி விட்டே மக்கள் நின்றிருந்தார்கள். ஏன் இப்படி.. இன்னமும் இவர்களைப் பற்றிய அச்சம் மக்களுக்கு இருக்கிறது என மிகவும் வருத்தமாக இருந்தது. இதனை நாம் கவனிக்கிறோம் என்று அந்த சகோதரி தெரிந்துக் கொண்டால், அவர் வருத்தப்படுவாரே என்று நான் அதிகம் அவரைப் பார்க்கவில்லை.!
ஒரு பேருந்து நிறுத்தத்தில் என் பக்கத்தில் இருந்தவர் இறங்கினார். அச்சமயத்தில், ஓரிரண்டு பேர் முந்திக்கொண்டு அமர வந்தார்கள். உடனே நான் என்னுடைய பையை , அந்த இடத்தில் வைத்து விட்டு, அந்த திருநங்கை சகோதரியை, ' நீங்கள் உட்காருங்கள் ' என்றேன் , சிறு புன்னகை தவழ... அதற்கு அவர், 'இல்லை .. வேண்டாம் 'என்றார்.' இறங்க போறீங்களா..என்ன ' என்றேன். அதற்கும் அவர், ' இல்லை சிஸ்டர் , கடைசிவரை பெசன்ட்நகர் வரை போறேன் ' என்றார். 'அப்புறம் என்ன .. உட்காருங்கள் 'என்றேன். அதற்குள் அவருக்கு பக்கத்தில் இருப்பவர்கள் ,' உட்காருமா.. இல்லை வழிய விடு' என்று சத்தம் போடா ஆரம்பித்து விட்டார்கள்.பின்பு தயங்கியபடியே அமர்ந்தார்.!
அதன்பிறகு 20 நிமிடங்கள் அவருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. முப்பது வயதிற்குள் தான் இருக்கும். நான் ஒரு கேள்வி கேட்டவுடன், சட சடவென பேச ஆரம்பித்தது விட்டார். அதை அப்படியே இங்கு தருகிறேன்.. ' எனக்கு சேலம் மாவட்டத்தில் உளள ஒரு சிறு கிராமம். ஒரு அக்கா, ஒரு தம்பி, அப்பா, அம்மா, நான் என அழகான குடும்பத்தை சேர்ந்தவள். பத்தாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் தான் இம்மாதிரி சில ஹார்மோன் மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தது.. என்னுடைய நடவடிக்கையைப்பார்த்து, வீட்டி ல் எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள்... அடித்தார்கள். பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். இன்னும் யாரையும் பார்க்கவில்லை.பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.. என்ன செய்வது..? எங்கெங்கோ அலைந்து பிறகு எங்கள் சங்கம் மூலம் ஒரு வேலையை தேடிக்கொண்டு 4 ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறேன் ' என்றார்.!
மேலும், ' உங்களை மாதிரி, எங்களை புரிந்துக்கொண்டோர் வெகு சிலரே... 'என்று சொல்லும்போது கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. உடனே நான், ' கவலை படாதீர்கள் , முன்பை விட இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது... இன்னும் சிறிது காலத்தில் எல்லாம் சரியாயிடும். நீங்கள் வேலை செய்யுமிடத்தில் எந்த தொந்தரவும் இல்லையே ' என்றேன், அதற்கு, ' சில நேரங்களில் இருக்கும்.. பெரும்பாலும் இருப்பதில்லை.' என்றார். நான் இறங்குமிடம் வந்ததும், ' எந்த நிலையிலும், சோர்வடையாமல், தன்னம்பிக்கையுடன் இருங்கள் ' என்று கைகுலுக்கி விடைபெற்றேன். அப்போது அந்த சகோதரியின் கண்களில் தெரிந்த அன்பு இருக்கிறதே, அதற்கு இவ்வுலகில் எதுவும் இணையில்லை என்றுணர்ந்த மகிழ்ச்சியில் வீடு வந்து சேர்ந்தேன்.!
அவர்களுக்கு நாம் காசு, பணம் கொடுத்து உதவ வேண்டிய அவசியமில்லை... சக மனிதர்களாக ,அன்புடன் சில வார்த்தைகள் பேசினாலே போதும். அச்சமயத்தில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியில், நம்முடைய மகிழ்ச்சியும் அடங்கி இருக்கிறது என்பதை அன்று உணர்ந்தேன்.!