பேருந்தில் எனக்கு முன்னுள்ள காலியான இருக்கையில், ஏறியவுடன் அவசரமாக வந்து உட்கார்ந்தாள் ....சுமாராக ஏழு வயதிருக்கும் ஒரு சிறுமி, மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன். பின்னாலேயே அவளுடைய அம்மாவும், அவள் தங்கையும் வந்தார்கள். தங்கைக்கு ஐந்து வயதிருக்கலாம்.
' பாப்பாவுக்கு இடம் கொடு ' என்று சொல்லிக்கொண்டே அவள் தங்கையை சன்னோலோரத்தில் உட்கார வைத்தார் அம்மா.
' பாப்பாவுக்கு இடம் கொடு ' என்று சொல்லிக்கொண்டே அவள் தங்கையை சன்னோலோரத்தில் உட்கார வைத்தார் அம்மா.
உடனே அச்சிறுமியின் முகத்தில் இருந்த சந்தோசம் குறைந்து, கொஞ்சம் வாட்டமாக மாறியது.
சிறிது நேரத்தில் தங்கை அழ ஆரம்பித்து விட்டாள். உடனே அவர்களுடைய தாய்,
' ஏய்..என்னாச்சு ... ஏன் அழறே..'
' அக்கா என்னை கொட்டிட்டா...' என்று மீண்டும் அதிகமாக அழுகையை தொடர்ந்தாள் .. அவள் ,
' என்ன பண்ண ... குரங்கு ' என்று தன் மூத்த மகளை முறைத்தார்.
' அவ என்னை பாக்கவே உடமாட்டேங்குறா... முன்ன,பின்ன ஆடிக்கிட்டே இருக்கா..'
' அதுக்கு அவளை கொட்டிவியா... நீ அக்கா தானே .. ஆடாதன்னு சொல்லு.. இல்லையெனா என்கிட்டே சொல்ல வேண்டியது தானே.. !'
இதற்குள் அந்த சின்ன வாண்டு அழுகையை நிறுத்திவிட்டு , அம்மா அக்காவை திட்டுவதை பார்த்து, சிறிதாக புன்முறுவல் செய்து கொண்டிருந்தது.
பிறகு அவர்கள் அம்மா, சிறிய மகளை பார்த்து, ' அவ யாரு.. உன் அக்கா தானே.. அவ இடத்தை உனக்கு விட்டு கொடுத்தா ... இல்ல... அவளையும் பாக்க விடணும்ல. ஆடாம ஒரே இடத்தில உட்காரு..அப்புறம் அடிச்சிட்டானு என்கிட்டே வந்து சொல்ல கூடாது'
என்று சொல்லிவிட்டு பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து சிரித்தார். நானும் சிரித்தேன்.
பத்து நிமிடங்கள் கூட இருக்காது... அந்த சிறுமி, ' அம்மு .. அங்கே பாரேன்... பூனைக்குட்டி ' என்று சன்னலின் வெளியே கைகாட்டி, தன் தங்கையின் தோள் மீது கைபோட்டு சிரித்தாள்.
' எங்கே... ஆமா.. அழகா இருக்கு.. இல்ல அக்கா..' என்று சொல்லி தன் அக்காவின் முகத்தைப்பார்த்து சிரித்துக்கொண்டே , இன்னும் பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்தாள்.அக்காவும் இன்னும் இறுக்கமாக தோளைப் பிடித்துக்கொண்டாள்.
அப்புறம் என்ன ... ஏதாவது பேசிக்கொண்டே வேடிக்கை பார்த்தார்கள் இருவரும்.!
வழக்கமாக நான் இறங்கும் நிறுத்தம் வருவதற்கு ஓரிரு நிமிடங்கள் முன்பு தான் எழுந்து நிற்கும் பழக்கம் எனக்கு.. அன்றைக்கு, நான் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு, முதல் நிறுத்தத்திலிருந்து பேருந்து கிளம்பியவுடனே எழுந்திருந்து முன்னே போய் நின்றுக்கொண்டே அந்த சகோதரிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
சில நிமிடங்களிலேயே, அந்த சகோதரிகளின் மனநிலையை எப்படி மாற்றி விட்டார் அந்த தாய் ... என் சிறுவயதில் எங்கள் அம்மாவும் இப்படி எங்களை சமாதானம் செய்து வைத்தது நினைவிற்கு வந்தது. விட்டு கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியையும்,மனநிறைவையும் நமக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பதில் பெரும்பங்கு நம் அம்மாக்களிடம் தான் இருக்கிறது.. :-) :-)
#தாய்