நீண்ட நாட்களுக்குப்பிறகு தோழி ஒருவருடன் அலைப்பேசியில் ஒரு உரையாடல். ' மகளிடம் திருமண ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறோம், உனக்கு யார் மீதும் விருப்பம் இருக்கிறதா என்று கேட்டோம், அதற்கு அவள் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, நீங்களே பாருங்கள் என்று சொல்லிவிட்டாள்' என்று கூறினார்.
பிறகு ஒரு மேட்ரிமோனியல் போயிருந்தபோது , தான் தெரிந்துக்கொண்டு ஒரு செய்தியை மிகவும் அதிர்ச்சியாக என்னிடம் கூறினாள்.
' நாங்க (அவரது இணையரும்) போயிருந்தபோது பக்கத்தில் 65 வயதிருக்கும் ஒருவர் வந்திருந்தார்..பா. அவருடைய மகனுக்கோ,மகளுக்கோ வரன் பார்க்க வந்திருப்பார் என்று நினைத்து, பேச்சு கொடுத்தேன்.. என்ன ஆச்சரியம் என்றால், அவர் அவருக்கே துணை தேடவந்திருக்கிறாரென்றாரே.... பார்க்கலாம். மனைவி இறந்து 10ஆண்டுகள் ஆகிறதாம்... இரண்டு மகன்கள், இருவரும் அமெரிக்காவில் இருக்கிறார்களாம்...இவரால் தனிமையில் இருக்க முடியல என்பதால் இந்த திருமணம், மணவிலக்கு பெற்றவரோ, கணவனை இழந்தவரோ .. யாராக இருந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்திருக்கிறேன், என்றார்... என்னால் நம்பவே முடியல..பா' என்றார்.
' இதில் என்ன ஆச்சிரியம் இருக்கிறது ' இது நான்.
' என்ன ... நீயுமா...! '
' சிறு வயதை இருப்பதை விட , வயோதிகத்திற்கு தான் துணை அவசியம். இந்த வயதில், அவர்கள் ஒன்றும் லௌகீக வாழ்க்கை வாழ போவதில்லை... ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு மட்டுமே பரிமாறிக்கொள்வார்கள்... இந்த அன்பு , நட்பை பிரதானபடுத்துகிறது... இந்த வயதில் தான், உடல் உபாதைகள், தனிமை, தன்னை யாரும் மதிக்கவில்லை, ஒதுக்கிவிட்டார்கள் என்ற எண்ணம், வெளியில் எலலவற்றையும் சொல்லமுடியாமை , இதனால் ஏற்படும் மன அழுத்தம் என அவர்கள் ஒரு மன இறுக்கத்திலேயே இருப்பார்கள். இச்சமயத்தில், மனம் விட்டு பேச ஒரு துணை அவசியம் தானே... பெண்கள் கூட மற்றவரிடம் சொல்லி விடுவார்கள், தனக்கான தேவையை தாங்களே பூர்த்தி செய்துகொள்வார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை... சாப்பாடு முதல் வீட்டை பராமரித்தல், மனம் சார்ந்த பிரச்சனைகள் வரை மற்றவரை அதிலும் தன மனதிற்கு நம்பகமானவரை சார்ந்து தான் இருக்கிறார்கள். அதற்காக பெண்கள் அப்படி திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்று சொல்லவில்லை... ஆண், பெண் யாராக இருந்தாலும், அவர்கள் விரும்பும் பட்சத்தில் மறுமணம் செய்துக்கொள்ளலாம், இதில் என்ன தவறு இருக்கிறது ' என்று முடித்தேன்.
' சே .. நான் இந்த கோணத்தில் யோசிக்கவில்லையே ... நானும் ஒரு forward thinking person என்று நினைச்சிட்டு இருந்தேன். இந்த விசயத்தில் தப்பா நினைச்சிட்டினே... உன்கிட்ட பேசின பிறகு ஒரு தெளிவு கிடைச்சிருக்கு ..ப்பா ' என்றார்.
நம் சமூகம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி கொள்வதில் தானே மனம் நிறைவடையும். இந்த அன்பை, நட்பை விட உலகில் வேறேதும் முக்கியமாக இருக்கிறதா ... என்ன...!
#அன்புசூழ்உலகு