எங்கள் தந்தை இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர். ஜம்மு, காஷ்மீர் முதல் அந்தமான் நிக்கோபார் தீவுகள் வரை கிட்டத்தட்ட எல்லா இந்திய மாநிலங்களிலும் பணி புரிந்த அனுபவம் மிக்கவர்கள். பொதுவாகவே எனக்கு விவரம் தெரிந்தது முதல் தனது அனுபவங்களை தானாக வந்து சொல்ல மாட்டார்கள். நாமாக கேட்டால் அனைத்து செய்திகளும் வெளி வந்துவிடும்.
ஆனால் கேட்பதில் ஆர்வம் என்பது எனக்கு எட்டாம் வகுப்பிலிருந்து தான் வந்தது. எப்போதுமே அப்பாவும், அண்ணனும் தான் விவாதிப்பார்கள். நானும்,அம்மாவும் கேட்டுக்கொண்டு இருப்போம். என் தங்கை சிறியவள் என்பதால் இதில் ஆர்வம் இருக்காது. அந்த கேட்கும் பழக்கம் தான் எனக்கு பலத்தரப்பட்ட செய்திகளை கற்றுத்தந்தது. அதன் பிறகு விவாதத்தில் நானும் கலந்துக்கொள்வேன்.
கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம் , அப்பா, அப்போதைக்கு பணிபுரியும் அந்த மாநிலம்,ஊர், அந்த மக்கள் என அனைத்தையும் விவாதித்து இருக்கிறோம். அப்போதெல்லாம் பெரும்பாலும் அங்கிருக்கும் மக்களின் உணவு முறை, வாழ்வியல், இயற்கை பற்றிய செய்திகளாகத் தான் இருக்கும். அதன் பிறகு நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறை,இம்மாதிரி கலந்துரையாடல்களை மறக்கடிக்க வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
வெகு நாட்களுக்குப்பிறகு, இன்று அதற்கான வாய்ப்பு கிடைத்தது எனலாம். இன்று காலை அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏரி ,குளங்களை தூர் வாருவது, அதைப்பற்றி தமிழிசை விமர்சித்தது பற்றியும் டாபிக் வந்தது. அப்போது,
' எதற்கெடுத்தாலும் எதாவது குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ... இந்த திராவிடக்கட்சிகளின் அரசியலைப்பற்றி, பாஜக மட்டுமல்ல... அனைத்து கட்சிகளுமே இந்த விசயத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்...! ' என்றேன்.
இதற்கு அப்பாவின் பதில், சற்று நீண்ட பதிலாக இருந்தது.. ஆனால் அது உண்மையாகவும், ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. அவர்களின் அந்த அனுபவ பதிலை , அப்படியே இங்கு தருகிறேன்.
" இங்கே தமிழ்நாட்டுல இருக்கிற அளவுக்கு, வட மாநிலங்களில் சமூகநீதி விழிப்புணர்வோ, கல்வி அறிவோ கிடையாது. குறிப்பாக நம் கிராமங்களிலும், வடமாநில கிராமங்களிலும் பார்த்தா தான் தெரியும். எந்த அளவுக்கு நம் அரசியல் கட்சிகள் நம் மாநிலத்தை உயர்த்தி இருக்கின்றன என்று... இங்கு இருப்பவர்களை, உ.பி., ம.பி., மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் ஏதாவது குக்கிராமத்தில் ஒரு வாரம் தங்க சொன்னால் தெரிந்து விடும். ஒரு நாள் கூட வசிக்க முடியாத அளவிற்கு அடிப்படை வசதிகளே இல்லாத கிராமங்கள் தான் அங்கு அதிகம். அப்போது தான், ஜாதி கொடுமைகளும், தீண்டாமை கொடுமைகளும், பெண்ணிய அடக்கு முறைகளும்,மத கலவரங்களும் எந்தளவிற்கு இருக்கின்றன என்பதை உணர்வார்கள்.
அது மட்டுமல்ல... திராவிட ஆட்சிக்கு முன்னாள் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றும் நம் மாநிலம் செழுமையாக இருந்துவிடவில்லை. பக்தவத்சலம் ஆட்சியில் கடும் அரிசி பஞ்சம். அரிசியை ரேசன் கடையில் வாங்கும் நிலை இருந்தது. காமராசர் காலத்தில் ஓரளவிற்கு வளர்ச்சித்திட்டங்கள், கல்வி வளர்ச்சி என வந்தாலும், கிராமங்களில் தீண்டாமையும், பெண்ணடித்தனமும், மூடபழக்க வழக்கங்களும்
இருந்துக்கொண்டு தான் இருந்தன. அவரையும் முழுமையாக மத்திய அரசு இயங்கவிடவில்லை. திராவிடக் கட்சிகள் வந்த பிறகு தான், இந்த குறைபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வந்தன. அதிலும் , இதில் பெரும் பங்கு திமுகவிற்கு இருக்கிறது. பெண்ணுரிமையோ, சமூகநீதிக்கான சமத்துவமோ திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இன்னமும் பல கிராமங்களில் ஜாதி கொடுமைகள் இருக்கிறது என்றாலும், இந்த அம்பது ஆண்டுகளில் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை.இரண்டாயிரம் ஆண்டுகள் நம் மூளையில் திணிக்கப்பட்ட ஒரு விட(ச)ம் 50 ஆண்டுகளில் முழுதுமாக துடைக்கப்படுவது அவ்வளவு எளிதல்ல.! "
நானும் படித்து, தெரிந்து கொண்டதை வைத்து , இது தான் உண்மை நிலை என்பதை உணருகிறேன். தந்தை பெரியார் அவர்களின் இந்த திராவிடர் என்ற உணர்வு நம்மை புரட்டிப்போட்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அவர் தோற்றுவித்த , திராவிடர் கழகம் எல்லாவற்றிற்கும் முதன்மை காரணமாக இருந்திருக்கிறது என்பதில் சிறிதும் அய்யமில்லை. இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது , நம் மாநிலம் ஒரு நல்ல வளர்ச்சி, மாற்றம் , சமூகநீதி ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இது போதவே போதாது... இன்னும் நிறைய, நிறைய மாற்றங்கள் தேவை. அதனை அவரவர்களால் இயன்றதை உண்டாக்குவோம். அதை விடுத்து, குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால், என்றைக்கும் முன்னேற்றம் என்பது இல்லாமல் போய்விடும்.
ஒவ்வொரு வீட்டிலும் உண்டாகும் மாற்றமே , சமுகமாற்றம் என்பதை உணர்ந்து செயல் படுவோம்... நண்பர்களே.!