Thursday, 29 June 2017

சமகாலத்தியதமிழ்சினிமாவும்அரசியலும்

தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றி போனது  கலை ... தெருக்குத்து ஆரம்பித்ததிலிருந்து இன்றைய தமிழ்சினிமா வரை நம் ரசனைக்கு சிறந்த விருந்து கொடுத்திருக்கிருக்கிறார்கள் நம் கலைஞர்கள் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு நாம் கலையுணர்ச்சி உடையவர்கள்.
 ஆரம்பகாலத்தில் தெருக்குத்து எல்லாமே வாய்வழி வந்த கதைகளாக தான் இருந்தன. பிறகு தான் இதிகாசம்,புராணம் என்று கதைக்களம் உருவானது... அதன் பிறகு தேசியப்பற்றை விளக்கும் நாடகங்கள் போடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தான், இருபதாம்நூற்றாண்டில், கலைவாணர் என்எஸ்கே மற்றும் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் நாடகங்கள் பகுத்தறிவு பேசின. பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி அவர்களின் நாடகங்கள் மென்மேலும் திராவிடக்கொள்கைகளை மெருகேற்றின என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.!

#சமகாலத்தியதமிழ்சினிமாவும்அரசியலும் 

இந்த புத்தகத்தை பத்திரிகையாளர் சே.த. இளங்கோவன் எழுதியுள்ளார்.
தற்போதைய தமிழ் சினிமாவில் உள்ள நிறை, குறைகளை நனவு அலசி ஆராய்ந்து ஒரு புத்தகமாக ஆக்கியுள்ளார்கள். தோழர் இப்புத்தகத்தை கொடுத்து இரு மாதங்களுக்கு மேல் இருக்கும். மன்னிக்கவும் , தோழர். இரு வாரங்களுக்குமுன் தான் படித்து முடித்தேன். மிக அருமையான புத்தகம். 

" தணிக்கை கட்டுப்பாடு இல்லாமல்  சினிமா எடுக்க வாய்ப்புக்கிடைத்தால், திராவிட நாட்டை எளிதில் பெற்றுத் தருவேன்."  
என்று அண்ணா சொன்னதையும்,   

" மக்களின் அரசியல் உணர்வை மேம்படுத்தும் கருவியாக சினிமாவை பயன்படுத்தலாம் "
என்று சோவித் புரட்சியாளர் லெனின் கூறியதையும் இங்கே மேற்கோட்டிட்டு காட்டியுள்ளார் இப்புத்தகத்தின் ஆசிரியர்.!

' விசாரணை' யில் தொடக்கி, ' புலி' வரை விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுளள்ன. அனைத்தும் மிகச்சிறந்த விமர்சனங்களாக இருக்கின்றன. விசாரணை, கபாலி, அப்பா, ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, புறம்போக்கு, தங்கல், மாவீரன் கிட்டு, காக்கா முட்டை, இறுதிச்சுற்று, பசங்க 2, ஜோக்கர், பாபநாசம், குற்றமே தண்டனை, ஆகிய திரைப்படங்களுக்கு தக்க உதாரணங்களுடன் பாராட்டி இருக்கிறார். அதே சமயம், அதிலுள்ள சில குறைகளையும் சுட்டிக்காட்டியுளளார். எடுத்துக்காட்டிற்கு, கபாலியில், எல்லாமே சிறப்பு என்றாலும், ஒரு காட்சியில் அண்ணலை காட்டி இருப்பது போல் தந்தை பெரியரையும் காட்டியிருக்கலாம் ... எதற்காக என்றால், 1950 களிலேயே தந்தை பெரியார் மலேசியா சென்று பல இடங்களில் பல கூட்டங்கள் போட்டு பேசியிருக்கிறார்கள். அந்த மக்களின் வரலாற்றை எடுக்கும்போது , தந்தை பெரியார் படமாவது நிச்சயம் இடம் பெற்றிரூக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், 
 ' ரெமோ' வில் காட்டிய ஆணாதிக்க மனப்பான்மையும்,ன் பெண்ணடிமைத்தனமும், 

' புலி ' யில் கதாநாயகிகள் வெறும் காட்சிப்பதுமைகளாக வந்து போனதையும், முதிராத கிராபிக்ஸ் பற்றியும், 

' கொம்பன்' இல் படம் முழுக்க ஜாதிவெறியினை பச்சப்படுத்தி இருப்பதையும் ,

விமர்சிக்க தவறவில்லை.

அனைத்து விமர்சனங்களும் எனக்கு பிடித்தவைகளாக இருப்பினும், ஆசிரியரின் குரலாக , இங்கே நான் குறிப்பிட விரும்பும்  ஒரு கருத்து,

" நாயகிகளை டூயட் பாடுவதோடு மட்டும் முடித்து கொள்ளாமல், வலிமையான் பெண் கதாபாத்திரங்களைப்  படைக்கும்போது தான் தமிழ்சினிமா அடுத்த கட்டத்திற்கு பயணிக்கும்.! " 

அருமையான அலசல், சிறப்பான விமர்சனங்கள் ... இன்னும் பல புத்தகங்கள் எழுத வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.  வாழ்த்துகள் தமிழ்... :-) 

புத்தகம் - சமகால தமிழ் சினிமாவும், அரசியலும்.
ஆசிரியர் - பத்திரிகையாளர் சே.த. இளங்கோவன் 
வெளியீடு - சாமுராய் வெளியீடு 
விலை - ரூ. 90/-

ஜாதி கெடுத்தவள்


#ஜாதிகெடுத்தவள் 

இந்த ஜாதீய கொடுமைகள் தீரும் நாள் எந்நாளோ ... நம் சமூகத்தை பீடித்த புரையோடிய புற்றை போல் வளர்ந்து கொண்டே இருக்கிறதே...!

இக்கால கட்டத்திலேயே இந்த ஆணவக்கொலைகள் இவ்வளவு தீவிரமாக இருக்கிறதென்றால், 50 ஆண்டுகளுக்கு முன்பே எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போதே மிகவும்  அச்சமாக இருக்கிறது. அச்சமயத்தில் தான் ஜாதிமறுப்புத்திருமணம் செய்துகொண்டு பல இன்னல்களை சந்தித்து இருக்கிறார்கள் ... இந்நூலை நமக்கு அளித்த அம்மா #திருமகள்இறையன் அவர்கள்.!

திருமகள் அம்மா அவர்களை நான் பலமுறை பெரியார் திடலில், பார்த்து பேசி இருக்கிறேன். ஆனால், நலம் விசாரித்தல்,  கொள்கை சார்ந்தோ தான் பெரும்பாலான உரையாடல்கள் இருக்கும். அவர்களுடைய அனுபவங்களைப் பற்றி பேசியதில்லை... அப்படி பேசியிருந்தால், அந்த உரையாடல் எந்த அளவிற்கு அறிவார்ந்த பகிர்தலாக இருந்திருக்குமென்று, இப்புத்தகத்தை படித்தபோது உணர்ந்தேன்.!  :-(

ஜாதி வெறியுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தது முதல், படிப்பிற்காக போராடி, கல்வி பெற்று, தான் விரும்பிய வேறொரு ஜாதியை சார்ந்த இளைஞரை மணந்து, தன வீட்டிற்கு பயந்து எங்கெல்லாமோ ஒளிந்து வாழ்ந்து, நண்பர்களின்  ஆதரவுடன் கடைசியில் திருப்பூரில் தங்கி இருவரும் ஆசிரியர் பணி புரிந்து,  பிள்ளைகளை வளர்த்தது வரை ,  நடுநடுவே அய்யா அவர்களின் கொள்கைகளையும் பதிவு செய்து இருக்கிறார்கள் அம்மா திருமகள் அவர்கள்.!

அய்யா இறையன் அவர்கள் தீவிர பெரியார் தொண்டர். அவர் தான் அம்மா அவர்களை பட்டைத் தீட்டிய கொள்கை  வைரமாக உருவாக்கி இருக்கிறார்கள். இருந்தபோதிலும் திருமகள் அம்மா அவர்களின் நெஞ்சுரம் மிகவும் பாராட்டுக்குரியது என்று தான் சொல்ல வேண்டும். பள்ளிக்கு போவதை தடை செய்து விடுவார்கள் என்பதால், தான் வயதுக்கு வந்ததையே தன அப்பாவிடம் சொல்லாமல், தன தமக்கைகளின் உதவியுடன் மறைத்து பள்ளிக்கு சென்றிருக்கிறார் என்றால் , அது சாதாரணமானதா... !

அக்காலத்தில், இளைஞர்கள் அய்யா பெரியார் அவர்கள்  சொன்னதை எந்த அளவிற்கு கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கான சான்று அய்யா இறையனாரின் கொள்கை பற்று. ஜாதி ஒழிய வேண்டுமென்றால், ஜாதி மறுப்பு திருமணம் தான் செய்ய வேண்டும்   என்ற கொள்கையில் உறுதியாக இருந்து, வேறொரு ஜாதியைச் சேர்ந்த அம்மா திருமகள் அவர்களை, அவர்களின் விருப்பத்தின் பேரில், குடும்பத்தை எதிர்த்து, ஜாதியத்தை எதிர்த்து, பதிவு திருமணம் செய்திருக்கிறார்கள் என்றால், மிகச் சிறப்பான ஒன்றல்லவா.!

இணையர்கள் இருவருமே ஆசிரியப்பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருந்திருக்கிறார்கள். எந்நிலையிலும் தங்கள் கடைபிடிக்கும் கொள்கைக்கு சமரசம் செய்து கொள்ளாமல், கொள்கை ஊற்றுகளாகவே இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். தங்கள் மகவுகளையும் அப்படியே வளர்த்திருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் உறுதி செய்கிறது. தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் ஜாதியில் திருமணம் செய்யக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். மேலும் அய்யா அவர்களிடமும், அம்மா மணியம்மை அவர்களிடமும் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். உடலில் பலவித பிரச்னைகள் இருந்தபோதிலும், திராவிடர் கழகத்தின் மகளிரணியில் முக்கியப்பொறுப்பில் இருந்து தன்னுடைய பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள். இப்புத்தகத்தை படிக்கும் போது பெரியார் கொள்கையை புரிந்தவர்கள், உணர்ந்தவர்கள் என்றைக்குமே மனதளவில் சோர்வடைய மாட்டார்கள் , கொள்கையில் உறுதியாக இருப்பார்கள் என்பதை  தெளிவாக உணர முடிகிறது.!

ஜாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டு,  வீட்டிற்கு பயந்து, ஓடி,ஒளிந்து வாழ்ந்த நாட்களுக்கு மாற்றாக, திராவிடர் கழகம் நடத்த்தும்  " மன்றல்" என்ற ஜாதி மறுப்பு இணைதேடல்  பெரு விழாவிற்காக தன்னுடைய மிகச்சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.!

இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து செய்திகளுமே நம் இளைய தலைமுறையினருக்கு, அன்றைய நிலை எப்படி இருந்தது என்பதையும், தற்போதைய நிலை எப்படி இருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறது. திராவிடர் கழகம் என்ன செய்து விட்டது என்று கேட்போர் இம்மாதிரி புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்புத்தகத்தில் அனைத்துமே பிடித்திருந்தாலும், இங்கு மிக முக்கியமாக குறிப்பிடவேண்டுமென்று நான் நினைப்பது என்னவென்றால், 
திருமகள் அம்மாவே சொல்லியிருக்கும் இந்த செய்தி தான்...


" ஜாதி கெட்டவளாக வாழ்க்கையைத் தொடங்கிய நான் , இந்த சுயமரியாதை திருமணங்களை செய்து வைத்ததன் விளைவாக ' ஜாதி கெடுத்தவள்' என்ற பெருமையைப் பெற்றுள்ளேன்.! " 

இப்புத்தகத்தை படித்து முடித்தவுடன், அவர்கள் இருக்கும்போதே படித்திருந்தால், பல செய்திகளை அவரைகளிடமே பகிர்ந்திருக்கலாமே என்ற எண்ணம் என் மனதை மிகவும் வருத்தப்பட  செய்தது... :-(  இருப்பினும் அவர்களுடைய பிள்ளைகளான தோழர்கள் #பண்பொளிபண்பு  #இறைவிஇறைவன்  #   ஆகியோரின் தோழைமைகள் , அவர்களுடன் பகிர்தல் என்பது சற்று மகிழ்ச்சியாக இருக்கிறது.! :-) 

நூல்  - ஜாதி கெடுத்தவள் 
ஆசிரியர் - திருமகள்  இறையன் 
வெளியீடு - திராவிடன் குரல் வெளியீடு 
விலை  - ரூ. 60 / -

 

  
    

Friday, 23 June 2017

குரல் தரும் அறம்


#குறள்தரும்அறம்

வள்ளுவப்பெருந்தகை  நமக்கு தந்திருக்கும் மிகச் சிறந்த கருத்து கருவூலம் திருக்குறள். எக்காலத்திற்கும், எத்தலைமுறையினருக்கும்  வழிகாட்டியாக இருப்பதும், இருக்க போவதும், உலகபொதுமறையான இந்த இரண்டடி பாக்கள் தான் என்பதில் யாருக்கும் அட்டியில்லை என்பது உறுதியான கூற்று.!

அறத்துப்பாலில் உள்ள முப்பத்தெட்டு அதிகாரங்களில் இருக்கும்  380 குறட்பாக்களுக்கு  கவிதை வடிவில் மிக அழகாக விளக்கம் அளித்திருக்கிறார்கள்... இப்புத்தகத்தின் ஆசிரியர் என் சித்தப்பா திரு. பஞ்சாபகேசன் ராமசாமி அவர்கள். நன்றாக எழுதுவார்கள் என்று தெரியுமே தவிர, இவ்வளவு அழகான கவித்துவம் மிக்கவர்கள் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக தான் தெரிந்துக்கொண்டேன்.!

மிகவும் அழகாக,  புரிந்துக்கொள்ளும்விதத்தில் எளிய தமிழில், கவிதைநடையில் , ஒவ்வொரு குரலுக்கும் எட்டு வரிகள் என  அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களுக்கு விளக்கவுரை சொல்லியிருக்கிறார்கள். எல்லா கவிதைகளுமே  மிகவும் அருமையாக இருக்கின்றன. அதில் எனக்குப்  பிடித்த கவிதைகள் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.!  :-)

1. தவம் மறைந்து அழல்வாய் செய்தல் புதல்மறைந்து 
    வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று.

ஞாலமும் போற்றிட நாடகம் நடத்திடும் 
          ஞானியர் வேடமும் நாட்களும் நகர்த்தி 
கோலமாய் மாறிடும் குவலயம் தூற்றிடும் 
            கொள்கையில் பலத்தினை குழைத்திடும் மாந்தரும் 
மூலமே கோணலாய் முழுவதும் கோணலாய் 
            முடிந்திடும் என்பதால் படிந்திடும் இருளினில் 
வேலொடு மறைவினால் வேடனும் பறவையை 
             வீசிய வலைகளை வீழ்ந்திடும் நிலைமையே.


2. நெஞ்சில் துறவார் துறந்தாற்போல் வஞ்சித்து 
     வாழ்வாரின் வன்கணார் இல்.

பற்றுகளை விட்டுவிட்டேன் பரலோகம் போவதற்கே 
             பாசங்களை துறந்துவிட்டேன் பாபத்தைத் துடைப்பதற்கே 
கற்றபல நூல்களையே கசடறவே கற்றுவிட்டேன் 
             காசிநகர் போவதற்கே கவனமும் செலுத்திவிட்டேன் 
மற்றவர்கள் நம்புமாறு நாடகமும் போட்டிடுவார் 
             மானமே பிரதானமென மடல்களை தீட்டிடுவார் 
உற்றவரகள் பொருளையெல்லாம்  விழுங்குவதற்கே எண்ணமிட்டு 
             உத்தமர்கள் உருவமென ஊரெங்கும் கூறிடுவார்.



3. ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் 
    பேரறி வாளன் திரு.

ஊருக்கு மத்தியிலே உறுமணியும் நிறைந்திருந்தால் 
           ஊர் மக்கள் யாவருமே உவப்புடனே பயனுறுவார் 
பாருக்குள் அறிவாளர் பண்புள்ள நல்லோர்கள் 
            பெரும்பொருளும் எட்டியபின் பூரிப்பை வாழ்ந்திருந்தால் 
வேருக்கு நீர்எனவே வேண்டிய தாதுக்கள் 
             விரைவாகத் தருவதனால் வியக்கின்ற பெருமைகளும் 
நேருக்கு நேர்தந்து நெஞ்சங்கள் அமைதியுறும் 
              நேரத்தே உணர்ந்தாலே நிம்மதியும் கூடிடுமே.


இன்னும் ஏராளம் இருக்கின்றன... ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவன் கூட எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் கவிதைகளாக படைத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான படைப்பு. இப்போது பொருட்பால் பாடல்களுக்கு புத்தகம் எழுதிக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அதுவும் மிகச்சிறப்பாக தான் இருக்கும். மிக்க மகிழ்ச்சி... சித்தப்பா.! :-)

நீங்கள் மென்மேலும் அதிக அளவில் எழுத வேண்டுமென்று வாழ்த்துகிறேன். வாழ்த்துவதற்கு நல்ல மனம் மட்டுமே போதும் ... வயது தேவையில்லை என்று நினைக்கிறேன்.! :-) :-)

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.! 



       

குரலற்ற பொம்மைகள்

#குரலற்றபொம்மைகள் 

குரலற்ற பொம்மைகள் மிக அருமையான புத்தகம். ' அம்ருத' என்ற மாத இதழிலும், ' தினச்  செய்தி' என்ற நாளிதழிலும் வந்த கட்டுரை தொகுப்பு தான் இப்புத்தகம். எழுதியவர் தோழர் பா.ஜீவசுந்தரி அம்மா அவர்கள். மிகச்  சிறப்பாக எழுதியுள்ளார்கள் இந்நூலின் ஆசிரியர் அவர்கள்.!

என்னைப்பொறுத்தவரை அவைகள் கட்டுரைகளாக தெரியவில்லை. ஒவ்வொன்றும் வரலாற்றுப் பதிவுகளாகவே  இருக்கின்றன என்று சொன்னால், அது முற்றிலும் உண்மையாவே இருக்க முடியும். அந்த அளவிற்கு நாம் அன்றன்றைக்குச்  சந்தித்த அத்தனை செய்திகளையும், அலசி, ஆராய்ந்து, மிகத் தெளிவாக எழுதியுள்ளார்கள். கட்டுரை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று இப்புத்தகத்தை படித்தவுடன் தான் தெரிந்துக்கொண்டேன்.( படிக்கும் போது நானும் ஏதோ எழுதுகிறேன் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்து எனக்கு நானே சிரித்துக்கொண்டேன்... :-) ) 

விஷ்ணுபிரியாவில் தொடங்கி,  சமூகநீதி, ஜாதியப்பிரச்சனைகள், ஆணவக்கொலைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துகள் ... அது உடையிலிருந்து சிம்புவின் பீப் பாடல் வரை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் சட்டம் நிறைவேற்றிப்பட்டதும், அதற்கு உயர்ஜாதியினர் என்று சொல்லப்படுவோர் தடை வாங்கியதும், பின்பு அதற்கான தீர்ப்பு வந்ததும், சுயமரியாதை திருமணம் , பெண்களுக்கான இடஒதுக்கீடு, சபரிமலை கோவிலில் பெண்களுக்கு மாதவிடாய் சாதனம் கண்டுபிடிக்கும் வரை வரக்கூடாது என்று அந்த தேவஸ்தானம் சொன்னது ,  சென்னை வெள்ளம், எழுத்தாளர்கள்  அம்மா ராஜம் கிருஷ்ணன் மற்றும் அய்யா ஜெயகாந்தன்  அவர்களைப்பற்றியும், விவசாயிகளின் கடன் பிரச்னை, மாட்டிறைச்சி தடை வரை , என அனைத்தையும் எழுதி பதிவு செய்திருக்கிறார்கள் தோழர் பா.ஜீவசுந்தரி அம்மா  அவர்கள்.!

எனக்குப்பிடித்தவை என்று தனித்தனியே சொல்ல இயலாது.. ஏனென்றால், அனைத்து கட்டுரைகளும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன. வரும் சந்ததியினர் படிக்கவேண்டிய வரலாற்று கருவூலமாக இருக்கிறது இந்நூல்.!

ஒரு சிறு புள்ளியாக கூட, இதுவரை தெரிந்து கொள்ளாத இரு விசயங்கள் இந்த புத்தகம் வாசித்ததின் மூலம் தெரிந்துக்கொண்டது என்னவென்றால், இரு முக்கிய பெண்மணிகள் பற்றிய வாழ்க்கை வரலாறு தான். ஒருவர் , இடதுசாரி இயக்க தோழரை திருமணம் செய்து கொண்டு, குடும்பம் மற்றும் இயக்கம் சார்ந்த பணிகளை எவ்வளவு இடையூறுகளிலும் சலிக்காமல் செய்த, நாற்பது ஆண்டுகள் , தன்னை சமூக வாழ்விற்கு அர்ப்பணித்த  வலுமிக்க பெண் , தோழர்  லட்சுமி அவர்களுடைய வரலாறு.!  
மற்றொருவர் மும்பையில் பிறந்த ருக்மாபாய்  என்பவர். சிறுவயதில் செய்துவைத்த, விருப்பமில்லா திருமணத்தை எதிர்த்து மணவிலக்கு வேண்டி,  பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே அதற்காக போராடி வெற்றிப்பெற்றவர். அச்சமயத்தில் இங்கிலாந்திலேயே மணவிலக்கு கோர முடியாதாம் ... பெண்கள்., அப்போதும் கூட முழு விலக்கு பெற முடியாமல் வெறும் செட்டில்மென்ட் என்ற முறையில் கணவரைப்பிரிந்து வந்து, அதற்குப்பிறகு லண்டன் சென்று மருத்துவம் படித்து, முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குரியவர்.!

இது போன்ற பல புத்தகங்கள் எழுதி, நல்ல செய்திகளை எங்களுக்கு தருமாறு  , தோழர் பா.ஜீவசுந்தரி அம்மா அவர்களை கேட்டுக்கொள்கிறேன். அன்பான வாழ்த்துகள் ...  தோழர்.! :-)

இப்புத்தகத்தை தேர்ந்தெடுத்து கொடுத்த இனியனுக்கும் மிக்கநன்றி.!   :-)


புத்தகம் - குரலற்ற பொம்மைகள் 
ஆசிரியர் - பா. ஜீவசுந்தரி 
பதிப்பகம் - போதிவனம் 
விலை - ரூ. 150 






இனி எல்லாம் சுகமே

" இனி எல்லாம் சுகமே."

ஆசிரியர் - எழுத்தாளர்  பாலகுமாரன் அவர்கள்.

நீண்டநாட்களுக்குப்பிறகு நான் படிக்கும் நாவல் இது. 25 வயதிற்கு மேல் நாவல்கள், சிறுகதைகள் மேலுக்குள்ள ஈர்ப்பு குறைந்துவிட்டது ... ஏன் என்று தெரியவில்லை.! 
ஒருவேளை தத்துவவியல், தர்க்கவியல், கொள்கைகள்,கோட்பாடுகள் என தத்துவம் சார்ந்த எழுத்துக்களின் மீது ஏற்பட்ட ஆர்வமாக கூட இருக்கலாம். அந்த சமயத்தில் தான் அதிகம் தந்தை பெரியார் அவர்களின் புத்தகங்களைப் படித்தேன். நடுவில் எந்த நாவலும் படித்ததாக நினைவில்லை. இலக்கணம், இலக்கியம் சார்ந்த , ' தொல்காப்பியப்பூங்கா , காலப்பேழையும், கவிதைச்சாவியும் ' போன்ற கலைஞர் அவர்களின் நூல் படித்திருக்கிறேன். 

நாவல்கள் படித்தகாலத்தில் கூட அதிகம் படித்தது என்றால், சுஜாதா, மற்றும் பெண் எழுத்தளார்கள் லட்சுமி, ராஜம் கிருஷ்ணன், அப்புறம் ஜெயகாந்தன், கொஞ்சம் பிரபஞ்சன் ...அவ்வளவு தான் படித்திருக்கிறேன்.  நாவல் என்றால், கல்கி, சாண்டில்யன் தான் அப்போது நினைவிற்கு வருவார்கள்.. . இந்த புத்தகக்ம் நல்லா  இருக்கும், இதை படி என்று சொல்லக்கூட அப்போது யாரும் வாசிக்கும் நண்பர்கள்  கிடையாது. என்னுடைய அண்ணன், அப்பா , மற்றும் உறவினர்கள் மூலம் நான் அறிந்தவர்கள் , ' ஓஷோ, காண்டேகர், பெரியார், அம்பேத்கார், அண்ணா,  இவர்களைத்தான்.!
 எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணம் வந்தவுடனே, கண்ணில்பட்ட முதல் புத்தகம் , ' இனி எல்லாம் சுகமே ' என்ற நாவல் தான்.  வாங்கி சில மாதங்கள் ஆனபோதிலும் , சில தினங்களுக்கு முன் தான் படித்தேன். மிக அருமையான நாவல். எவ்வளவு கதாபாத்திரங்கள்.அத்தனை பேர்களையும் மிக அழகாக , சித்தரித்து இருக்கிறார் ஆசிரியர். பல பாதைகளில் வரும் அனைத்து கேரக்டர்களையும் மிகவும் கோர்வையாக கொண்டுவந்து ஒரே மையத்தில் இணைத்திருக்கிறார். இந்நூலில் பல விசைஙகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஜாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினரின் அனுபவங்கள், பெண்ணியம் சார்ந்த ஒரு ஆணின் பார்வை, சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் ஒரு ஏழை பெண். வேறு வழியில்லாமல் விபசாரத்தில் தள்ளப்பட்டு, வெளிவரமுடியாமல் தவிக்கும் நடுத்தரவயது பெண், இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறிய ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச்சேர்ந்த ஒரு அரசு அலுவருக்கு  ஏற்படும் ஜாதியக் கொடுமைகள்,  பெரிய வியாபாரத்தில் நடக்கும் சில பல விசயங்கள், என அனைத்தையும் அலசி இருக்கிறார் ஆசிரியர்.  அநேகமாக வாசிக்கும் பழக்கமுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்து இருப்பார்கள். நான் தான் லேட் என்று நினைக்கிறேன்... :-)  எப்படியோ இதுவரை வாசிக்காதவர்கள் படித்துப்பாருங்கள். மிகவும் விறுவிறுப்பாக, அதே சமயம் சோர்வாகவும் உணரமுடியவில்லை. தெளிந்த நீரோடை போல போய்க்கொண்டிருக்கிறது .... இப்புத்தகம்.!

இதில் எனக்குப்பிடித்த சில பகுதிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.


1.  ' சுகத்தை எழுதாதே... வேதனையை எழுது... பிரச்னையை எழுது, உனக்கு பிரச்னை எதுவும் அனுபவமில்லை என்றால், எக்சிபிஷன் ல ஆளெடுக்கறாங்க...அங்கே போய் நில்லு.. ஜனங்களை பாரு அப்ப பிரச்னைன்னா என்னென்னு தெரியும்.. அப்புறமா எழுது' என்று எழுதத்துடிக்கும் மகனுக்கு தந்தை சொல்லும் அறிவுரை.

2. " ஸ்பெஷல் லவ் இருப்பதாக சொல்லலாம்.. ஆனால் அதில் உண்மை இல்லை... நீ இல்லனா நான் செத்து போயிடுவேனா .. என்ன, நீயும் இருக்கிறனா , நூறு வயசு வரை நானும் இருப்பேனா...? இருக்குற வரைக்கும் நீ எனக்கு கம்பனியன்.. துணை, வாழ்க்கைத்துணை வாழும்போது துணை .. அவ்வளவு தான் .. லவ் என்பதற்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ற அர்த்தம், என் ஹார்ட் எப்ப நிக்கும்னு உனக்கு தெரியாது,,, உன்னுடைய ஹார்ட் எப்ப நிக்கும்னு எனக்கும்  தெரியாது... ஸோ ... பொறக்குறப்ப வெவவேறு ஜாதியா இருக்கலாம், ஆனா சாகுறப்ப எல்லோரும் , ' பிணம்' தான்.! " என்று தன காதலியிடம் தன மனப்பக்குவதை வெளியிடும் காதலனின் பேச்சு.!

3. " வறுமை மட்டுமல்ல.. தாழ்த்த குலத்தில் பிறந்திருக்கோம்ன்றது என்னை கஷ்டப்படுத்துது..ஏண்டாபடிச்சோம்னு வேதனைப் பட வைக்குது, நானும் எட்டாம் கிளாஸோட நின்னுட்டு செருப்பு வார தைக்க  உட்கார்ந்திருக்கலாமோனு நினைக்க வைக்குது....இவனுக்கெல்லாம் வேலை கிடைச்சிடுச்சேன்னு கோவ படறாங்க... அலட்சியப்படுத்துறாங்க.. எனக்கு இங்கிலிஷ் தெரியும்.. என்னால் பேச முடியும்,  ஆனா இந்த  மியூசிக் கேட்டியா.. இவன் யாருனு தெரியுமா... அந்த பீட்டில்ஸ் பாட்டு தெரியுமா என்று அலட்டுவதும், ஐயர்  பையனுங்க என்கிட்டே எப்ப வந்தாலும் சுலோகம் சொல்றதும்னு நாசூக்கா இன்சல்ட் பண்ணுறாங்க..." என தன் தோழி பொன்மணியிடம் ஆதங்கப்படும் தாழ்த்தப்பட்ட இடஒதுக்கீட்டின் மூலம் அரசு பணியில் இருக்கும் ஒரு உணவு தரம் பார்க்கும் துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்... கள்ளபெருமாள்.!
. மேலும் ,  ' ஒரு பெண்ணின் குண விசயம், அவள் கன்னித்தன்மையினால் நிர்ணயிக்கப்படவில்லை, ஆழ்ந்த உறவும், அனுபவத்தெளிவும் முக்கியம்.!. - கள்ள பெருமாள் 
' உண்மை.. என்னை தூக்கி தலையில் வைத்துக்கொள்ள வேண்டாம்.. சமதையா நடத்தி கூட்டிட்டு போங்க ... போதும் உள்ளே நிறைய காயம் இருக்கு உங்களுக்கு... எனக்கு புரியுது..வடமொழி மட்டுமா, வாங்க இரண்டு பேரும் ஜெர்மன் படிப்போம்.. அங்கிருந்து வந்த கூட்டம் தானே .. வந்த வேர்முனையையே படிப்போம், 
" தமிழ் நம்ம சுகத்துக்கு, ஆங்கிலம் வணிக நெறிக்கு, வட மொழி ஒரு சவாலுக்கு, ஜெர்மன் எல்லோரையும் விட ஒரு படி மேலேன்னு போறத்துக்கு.." - பொன்மணி 
தோழர்களாக அறிமுமாகி, காதலர்களாக மாறிய இருவரின் உரையாடல் இது.!

4.. ' வாழ்க்கையிலே ஜெயிக்கணும், ஜெயிக்கணும்னு நினைச்சு, பதினாறு வயசுல யாருமில்லா அநாதை ஆகி, ஒண்ணுமே செய்யமுடியாம, கடைசியிலே பசிக்குற வயித்துக்கு சோறு போட இந்த தொழிலுக்கு கொண்டுவந்து விட்டுட்டானுங்க... இந்த ஆம்பளைங்க..'  ஒரு பாலியல் தொழிலாளியின் குமுறல்.!

படித்த, படிக்காத, உயர் ஜாதி என்று சொல்லக்கூடிய, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்லக்கூடிய, வசதிபடைத்த, சோற்றுக்கு வழியில்லாத என அனைத்து மனிதர்களையும் ஒருசேர காண்பித்து இருக்கிறார் ஆசிரியர் அவர்கள். சமூகத்தைப்பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும்... நிச்சயம் ஒருமுறையாவது படிக்க வேண்டிய புத்தகம்.!
 

Tuesday, 6 June 2017

கோடை விடுமுறைக்கு பின்பு மாணவர்கள் ( ஒரு மலரும் நினைவுகள் )

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் முதல்நாள் என்பது, அப்போதெல்லாம் நாங்கள் படிக்கும் காலத்தில் மிகவும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பிற்குரிய ஓன்றாக இருக்கும். இப்போது பெரும்பாலான பிள்ளைகள் , ' ஐயோ .. ஸ்கூல் திறக்க போதே...' என்று கவலைப்படுகிறார்கள். அதற்கான காரணம் கல்வி என்பது பெரும் சுமையாக ஆக்கி விட்டார்கள் என்பது தான் வருத்தப்பட கூடிய உண்மை.!

" அது ஒரு அழகிய நிலா காலம்.! "

புது புத்தகங்கள், புது ஆசிரியர், புது வகுப்பு, நண்பர்களை பார்க்கின் துடிக்கும் பேராவல் ... புது புத்தகத்தில், நோட்டில், பெயர் எழுதி, கீழே ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, என்றும், " ஆ " பிரிவு என்று எழுதுவதில் தான் எவ்வளவு ஆனந்தம். அப்போதெல்லாம் ' B ' Section-இல் அப்படி  ஒரு காதல் எனக்கு. எனக்கு நினைவில் இருக்கும்வரை , நான்காம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ' ஆ ' பிரிவு தான்.!


அரசுப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கென்றே, சில அனுபவங்கள் இருக்கும். எக்காலத்திற்கும் அவைகளை மறக்க முடியாது. துணிப்பை தான், ஜாமென்ட்ரி பாக்ஸ் வைத்திருப்பதே பெருமையாக இருக்கும். பெரும்பாலும் பெரும்பாலும் அம்மா கட்டித் தரும் எலுமிச்சை சாதமும், தயிர் சாதமும், இட்லியும் என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தோழி பானுவிற்கு கொடுத்துவிட்டு, அவள் பள்ளியில் வாங்கி சாப்பிடும் சத்துணவை நான்  சாப்பிட்டு இருக்கிறேன். உடைத்த கோதுமை ரவையில், பருப்பு, காய்கறிகள் சேர்த்து சமைத்த குழைவான பொங்கல் போல் இருக்கும். கல்வி வள்ளல் காமராஜர் கொண்டு வந்த சத்தான  மதிய உணவுத்திட்டம் அது.!   

வாட்டர் பாட்டில்கள் எல்லாம் இல்லை.. நேரிடையாக குழாய்களில் நீரை குடிப்போம். தினமும் விளையாடி விட்டு தான் வீடு செல்வோம். தொலைக்காட்சி கிடையாது. வானொலி மட்டும். விவித்பாரதியில் போடப்படும் அருமையான பாடல்கள். அப்போது நினைவில் பதிந்தவைதான்... எம்.எஸ்.வி., இளையராஜா பாடல்கள்.. !  


இப்போதைய குழந்தைகள் இவைகளை தவற விடுகிறார்கள் என்பது முற்றிலும் வேதனையான உண்மை. எனக்கு கிடைத்த இந்த மகிழ்ச்சி என் மகனுக்கு கொஞ்சம் குறைவாக தான் கிடைத்தது... ஆனால், இப்போதிருக்கும் பிள்ளைகள் இன்னும் கீழே போய், 

 வெளி உலகம் என்றால் என்ன.. 
எப்படி மற்றவர்களிடம் பழகுவது, 
எப்படி ஒற்றுமையுடன் விளையாடுவது, 
எதை விட்டு கொடுக்க வேண்டும், 
எதில் உறுதியாக இருக்க வேண்டும் ...

என்ற சுயசிந்தனை, சுய கட்டுப்பாடு முதலியவற்றில் சரியான தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள் ...  டி .வி.யும், கம்ப்யூட்டரும், ஸ்மார்ட் போன்னும் தான் மகிழ்ச்சி என்ற வேறு ஒரு மாய உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள்.. தற்போதைய பெற்றோர்கள் இதனை உணர்ந்து, சற்று மாற்றங்களை , தங்கள் குழந்தைகளிடம் கொண்டு வருதல் மிகவும் நல்லது என தோன்றுகிறது.

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல ... மனிதர்களை கற்றல் என்ற வாழ்வியலையும் கற்று தாருங்கள்... நண்பர்களே.!  :-)

Saturday, 3 June 2017

வேண்டாமே .... காழ்ப்புணர்ச்சியும், வெறுப்புணர்ச்சியும்.!

நம் மக்களில் சிலருக்கு  காழ்ப்புணர்ச்சியும், வெறுப்புணர்ச்சியும் அதிகமாகிக்கொண்டே போகிறது என்று நினைக்கிறேன். இந்த மனப்பான்மையானது அவை நாகரீகமும், நேர் சிந்தனையையும் மழுங்கடிக்க வைத்து விடுகிறது என்று தான் கூற வேண்டும்.!

நம் தமிழக அரசியல் வரலாற்றில், மூத்த அரசியல் தலைவர் என்றால் அவர் கலைஞர் அவர்கள் தான். அவர் ஆட்சியில் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது தமிழகம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சமூக நீதியாகட்டும்... பெண்ணுரிமை ஆகட்டும் ... தொழில் வளர்ச்சி ஆகட்டும் ... அனைத்திலும் உயர்வை கொண்டுவந்ததில் அவரின் பங்கு அதிகம்.!

அவருடைய பிறந்தநாள் மற்றும் வைரவிழா வாழ்த்துகள் நிறைந்த பதிவுகளை பதிய வேண்டாம்....கடந்து செல்ல கூட மனம் வராமல், எவ்வளவு வசைவுகள் நிறைந்த பின்னுட்டங்கள் நம் நண்பர்களிடமிருந்து. இதனால் அவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடப்போவதில்லை. கலைஞர் பயிற்சிபெற்ற அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாருக்கு பாட படாத வசைவுகளா... என்ன. எல்லாவற்றையும் கடந்து தான் இந்த சாதனைகளை, வெற்றிகளையும் பெற முடிந்தது அவர்களால்.!


இப்போது நம்முடைய கவலையெல்லாம் நம் இளைய தலைமுறையினரைப்பற்றியது தான்.  எதற்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்ச்சியையும் வளர்த்துக் கொள்கிறீர்கள்... நாம் அனைவரும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் தான். அது ஆட்சியாக இருந்தாலும் சரி, தனி மனிதனாக இருந்தாலும் சரி ... நல்லவனவற்றை பாராட்டுவதும், அல்லவனவற்றை சுட்டிக்காட்டுவதும் தான் ஒரு சமூகத்திற்கு வளர்ச்சியைக்கொடுக்கும். இல்லையேல் உங்களுக்குள்ளேயே இந்த எதிர்மறைச்சிந்தனை உங்கள் மூளையை வேறு திசையில்திருப்பி திருப்பிவிடும் ஆபத்து இருக்கிறது. மேலும் இம்மாதிரி இருப்பவர்களை தான் ஆரியம் தன கைக்குள் அடக்கி விடுகிறது... நாளை அரசியல் எதிர்காலம் என்பது இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது. அதனை நல்ல  வகையில் கொண்டு செல்லும் பொறுப்பு உங்களுடையது தான். ஆதலால் நண்பர்களே... எதையும் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல் படுங்கள். நாம் இன்றைக்கு இந்த அளவிற்கு தன்மானத்துடன், கருத்து சுதந்திரத்துடன், கேள்வி கேட்கிறோமென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் தந்தை பெரியார் அவர்கள். அவர்களின் கொள்கைப்படி, அரசியல் ரீதியாக பல தீர்மானங்களைக் கொண்டுவந்து அதனை நடைமுறைப்படுத்திய பெருமை அறிஞர் அணணா மற்றும் கலைஞர் அவர்களையே  சாரும்.!

கடந்த 200 ஆண்டுகால தமிழக வரலாற்றை எடுத்து படித்து பார்த்தால், தெரிந்துக் கொள்வீர்கள் ... நீதிக்கட்சியின் செயல்பாடும், பின்பு சுயமரியாதை இயக்கமாக  தொடர்ந்து, அதன் பிறகு திராவிடர் கழகமாக மாறி,  அவற்றின் சீர்திருத்தங்களையும்.... !

ஆட்சியில், பெரியாரின் துணை கொண்டு, மிக  பெரும் மாற்றங்களை கொண்டுவந்த  பெருமை திமுகவிற்கு உண்டு. அதில் பெரும்பங்கு கலைஞருக்கு இருக்கிறது என்பது வெளிபபடையான உண்மை.!

வாழ்க கலைஞர் ... வாழிய பல்லாண்டு.!
#கலைஞர்94
#வைரவிழா 

தொ(ல்)லைக்காட்சி

எப்போதும் இந்த தொலைக்காட்சி தொடர்களில் ஆர்வம் இருந்ததில்லை... சில தொடர்கள் நம் வாழ்க்கை நிகழ்வுகளை பிரதிபலிப்பதால்,அதன்பால்  ஈர்ப்பு உண்டாகி, ஒரு  நான்கு தொடர்கள் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு பார்ப்பதை நிறுத்திக்கொண்டேன்... பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.

இன்று அலைவரிசை மாற்றிக்கொண்டு வரும் போது , ஒரு தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது... பொதுவாக எனக்கு  உடனுக்குடன் மாற்றும் பழக்கமில்லை. சில நொடிகள், நிமிடங்கள் என பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கும்  போது மாமியார், மருமகள் சண்டை காட்சி வந்தது.

பத்து வருடங்கள் ஆகியும், இந்த தொடர்கள் இன்னும் வளரவே இல்லை, அதே மாமியார்-மருமகள் சண்டைகள், ஆணாதிக்கம், பெண்களுக்கு கட்டுப்பாடு என அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல... :-)

கொடுமைகார மாமியார்- பாவப்பட்ட மருமகள், திமிர் பிடித்த மருமகள்-அன்பான மாமியார், ஆணாதிக்கம் தலைக்கேறிய கணவன்- அடக்க, ஒடுக்கத்துடன் நடக்கக்கூடிய பத்தரைமாத்து தங்கமாக மனைவி. இதையே இவ்வளவு ஆண்டுகள் காண்பித்துக் கொண்டிருப்பார்களென்று தெரியவில்லை. நம் பெண்களும் இவ்வளவு காலம் இதையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றும் தெரியவில்லை.!

கொஞ்சமாவது வெளி உலகைப்  பாருங்கள்  தொலைக்காட்சி இயக்குனர்களே... !

தொடர்களைத் தாண்டியும் உலகம் இருக்கிறது என்பதை  தோழிகள் உணர்வார்களாக.!

கலைஞர் 94



அரசியலிலும் சரி... திரைத்துறையிலும் சரி... தன்னுடைய ஆளுமையைப் மெய்ப்பித்து காட்டியவர்  கலைஞர் அவர்கள். தன பகுத்தறிவு கருத்துகள் மூலம் மூடநம்பிக்கையும், உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் கூட்டத்தினரின் ஆதிக்கமும் நிறைந்திருந்த அந்நாளிலேயே ,
 
" பராசக்தி பேசமாட்டாள் ... அது ஒரு கல் "

என்ற ஒற்றை வசனத்தில் தமிழ்மக்களை கட்டிப்போட்டவர்.  பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு,  திமுக என்ற கட்சி இருக்காது என்று பகற்கனவு கண்டவர்களின் எண்ணங்களை தகர்த்தெறிந்தவர். முதலமைச்சர் ஆனவுடன் , அவர் கொண்டுவந்த பல திட்டங்கள் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை படி,  ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களாகவும், பெண்ணுரிமைக்கான திட்டங்களாகவும், சமூகநீதி சார்ந்த திட்டங்களாகவும் இன்றும் நிலைத்திருக்கின்றன என்பது கல்லில் பொறிக்கப் பட  வேண்டிய சாசனங்கள்.!

இன்றும் அவர் அரசியல் செயல்பாட்டில் இல்லாததினால் தானே பார்ப்பனீயம் இந்த துள்ளல் போடுகிறது.!

உடல்நலம் தேறி, தமிழகத்தை இன்னும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, பல்லாண்டு காலம் வாழ்க என்று , 94 ஆம் ஆண்டு இனிய பிறந்தநாள் காணும் கலைஞரை வாழ்த்துவோம்.!

"இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...! "  :-) 

#கலைஞர்94