பலசரக்கு கடையில் மளிகைப்பொருட்கள எடுத்துக்கொண்டிருக்கும் போது, பக்கத்தில் ஒரு பெண்ணும் ஒவ்வொரு பாக்கெட்களிலும் விலையை பார்த்தவாறே எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். நடுத்தர வயது இருக்கும். நானும், அவரும் ஒரே சமயத்தில், ஒரே பொருளை எடுக்க முற்பட்டோம். உடனே இருவரும் சிரித்துக்கொண்டே,
' நீங்களே எடுங்கள் ... ' என்றேன்.
' பரவால்ல... நீங்க எடுத்துக்கோங்க... பக்கத்துல இருக்கு, அதை நான் எடுத்துகிறேன் ... ' என்றார்.
அதன் பிறகு ஒரு தோழமை ஏற்பட்டு விட்டது . பேசிக்கொண்டே எடுத்துக்கொண்டிருந்தோம்.
சானிட்டரி நாப்கின் உள்ள அடுக்கின் அருகில் வந்தோம். அப்பெண், ஒரே ப்ராண்டில் சைஸ் வாரியா எடுத்து வைத்தார்.
' எதற்கு பல சைஸ் எடுக்கிறீர்கள் ... சும்மா தெரிந்து கொள்ள தான்.. தப்பா எடுத்துக்காதீங்க... ' இது நான்.
' இதுல சொல்றதுக்கு என்னங்க இருக்கு... வீட்டில் இரண்டு குழந்தைங்க இருக்காங்க.. என் பொண்ணுங்க தான்... பெரியவ 16 வயசு.. சின்னவளுக்கு 13 வயசு.. நானோ PMS - ல இருக்கேன். எனக்கு நிறைய தேவைப்படுது... அதுங்களுக்கு வேனும்... முதல் மூன்று நாட்களுக்கு ஒரு சைஸ், அப்புறம் குறைய,குறைய இன்னொரு சைஸ் னு யூஸ் பண்றோம்... என்ன செய்றது... எனக்கோ எப்பனே தெரியறதில்ல... அப்பப்ப, தகுந்த மாறி யூஸ் பண்ணுவோம். இந்த GST வந்ததுல ரொம்ப காசு ஆகுது... ஒண்ணொன்க்கும் 12% வரி அப்டினு ஈஸியா போட்டாங்க... நமக்கு இல்ல இந்த கஷ்டம் தெரியும்... '
' ஆமாமா... இதுல வரி போடறது ஏத்துக்கவே முடியாது... ரொம்ப அநியாயமா இருக்கு...'
' ஆமாங்க ... நாம என்ன லட்சக்கணக்குலயா சம்பாதிக்கிறோம்.. பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும், வாழ்க்கையை ஓட்டறதுக்குமே சரியாய் இருக்கு... இதுல இந்த விலைவாசி ஏற்றம், வரி எல்லாம் நம்மள படாய் படுத்துது... இதுல போற எக்ஸ்ட்ரா காசுல பத்து நாள் காய்கறி செலவு பண்ணிடலாம்...' என்றார்.
இந்நிலை தான் பெரும்பாலான மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வரவுக்கும், செலவுக்கும் சரியாக போய்க்கொண்டிருக்கும் குடும்பத்திற்கே இந்நிலை தான் என்றால், பற்றாக்குறையாய் இருக்கும் குடும்பங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்... இந்த அரசு எவ்வளவு மக்களை கொடுமைப்படுத்துகிறது என்பதற்கான சான்று தான் இவைகள் எல்லாம்.!
சானிட்டரி நாப்கின்களை வரி விதித்திருக்கிறதே ... இந்த அரசு... இது என்ன பெண்கள் விரும்பி ஏற்றுக்கொண்டவையா... இயற்கையில் உடல் ரீதியாக உள்ள ஒரு சுழற்சி முறை. இதற்கு பயன்படுத்தும் நாப்கின்களுக்கு யாரவது வரி விதிப்பார்களா... என்ன ஒரு அராஜக ஆட்சி முறை இது..!
12 வயது குழந்தை முதல், மத்தியவயதுடைய அனைத்துப்பெண்களும் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு வரி விதித்து தான் இந்த அரசாங்கம் நடக்க வேண்டுமா.. இங்கே முகநூலில் சில பதிவுகல் பார்த்தேன். உங்கள் கொள்ளுப் பாட்டிகள் எல்லாம் இதை தான் பயன்படுத்தினார்களா... துணியை பயன்படுத்துங்கள் என்ற மாதிரியான சில அதிமேதாவிகள் பதிவு போட்டிருந்தார்கள். !
அவர்களுக்கு ஒரு கேள்வி ....
' உங்கள் வீட்டில் உள்ள 12, 13, வயதுள்ள உங்கள் மகளிடமும், நாற்பதின் மத்தியிலும், இறுதியிலும் உள்ள உங்கள் மனைவியிடமும் இதை சொல்லி பாருங்கள்... காரித் துப்புவார்கள்.!
ஏன்... நீங்களெல்லாம் உங்கள் கொள்ளுத்தாத்தா மாதிரி, வெறும் காலுடன் கட்டைவண்டியிலேயா போகிறீர்கள்...!
மாற்றம் என்பது நம் வசதிக்காக தான்... எனக்கு எந்த முன்னேற்றமும் வேண்டாம் பழைய பஞ்சாங்கமாகவே தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பீர்களென்றால், நீங்கள் வேண்டுமானால் அப்படி இருந்துகொள்ளுங்கள்... மற்றவர்களிடம் இதனை திணிக்காதீர்கள்.!