#பெண்விடுதலை
" என் பொண்ணு ரொம்ப நல்லவ... அப்படி எல்லாம் பண்ண மாட்டா.." இந்த சொற்றொடர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேட்கும் போதே எரிச்சலாக இருக்கும். கோபம் வரும். இதெல்லாம் இந்த தலைமுறையோடு ஒழிந்துவிடும், அடுத்த தலைமுறையில் காதல் திருமணங்கள் தான் பெரும்பாலும் நடந்தேறும் என்று நினைப்பதுண்டு. ஆனால், இன்றும் அதே நிலை தான் தொடர்கிறது என்பது கூட உண்மை இல்லை... காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணை, ' ஓடுகாலி' என்று பட்டம் கட்டி, குடும்பத்தை விட்டு தள்ளி வைப்பார்கள்.எந்த நிகழ்விற்கும் சொல்ல மாட்டார்கள்... சேர்க்க மாட்டார்கள். அவ்வளவு தான்.!
ஆனால் இப்போது நிலைமை இன்னும் மோசமாக போய், ஆணவக்கொலைகள் நடக்கின்றன. சமீபத்தில் நாம் எல்லோரும் படித்து அதிர்ந்த ஒரு செய்தி, பெண் காதல் திருமணம் செய்துகொண்டதினால், ஒரு குடும்பமே தற்கொலை செய்திருக்கிறது என்றால், எந்த அளவிற்கு நம் சமூகம் ஜாதியாலும், ஆணாதிக்கத்தாலும், பெண்ணடிமைத்தனத்தினாலும் புரை யோடி போயிருக்கிறது என்பதற்கான சான்று. இதுவே அக்குடும்பத்தின் ஆண்பிள்ளை காதல் திருமணம் செய்திருந்தால், அக்குடும்பம் இந்த முடிவை எடுத்திருக்குமா ... சந்தேகம் தானே. பெண் குழந்தைகளை ஒரு உடைமையாக பார்க்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள் ... மக்களே, ஆண்களை போல் அவரக்ளுக்கும் விருப்பங்கள் உண்டு, இலக்குகள் உண்டு, காதல் உண்டு, வலிகள் உண்டு, உணர்வுகள் உண்டு.
ஆணாதிக்கச் சிந்தனையுள்ள சமூகமே... உனக்கு இருக்கும் அனைத்தும் அவளுக்கும் உண்டு என்றிருக்கும் போது , உனக்கிருக்கும் விடுதலை உணர்வு மட்டும் ஏன் அவளுக்கும் இருக்க கூடாது ... சற்று சிந்தியுங்கள் ... !
அது ஆண் பிள்ளையோ, அல்லது பெண் பிள்ளையோ யாராக இருந்தாலும், நம் பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது, இதில் திறமை இருக்கிறது என்பதை அறிந்து , சுயமரியாதையுடன், அவர்கள் வாழ்க்கையை அவர்களின் சுயத்தில் வாழ , அவர்களை வளர்த்து விட வேண்டும் என்பது எப்படிப்பட்ட கடமையோ, அது போல் தான் அவர்கள் விரும்பிய வாழ்க்கைத்துணையை, இணையர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கானது என்பதையும் உணர்ந்து, அதற்கான புரிதலை அவர்களுக்கு உண்டாக்குவதும் நம் கடமைகளில் ஓன்று என்பதை இனிமேலாவது, பெற்றோர்கள் உணர்ந்து செயல் பட வேண்டும்.!
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ...மக்கா ...
" பெண் சுதந்திரம் உள்ள நாட்டில் தான் பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும், அன்பும், அறிவும் , பண்பும் வளர்கிறது.! "
" பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சி தான் , ஒரு நாட்டின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை, முடிவு செய்கிறது.! "