Saturday, 16 September 2017

வாழ்க பெரியார் ... வளர்க பகுத்தறிவு !

தொண்டு செய்து பழுத்த பழம் ..
தூய தாடி மார்பில் விழும் ..
மண்டைச்  சுரப்பை உலகு தொழும்...
மனக்குகையில் சிறுத்தை  எழும். 
அவர்தாம் பெரியார்.!
- பாவேந்தர்.

இப்போது தமிழகம் இருக்கும் ஆபத்தான காலகட்டத்தில், #தந்தை பெரியாரை மூலை, முடுக்கெல்லாம், பட்டி தொட்டியெல்லாம், பார்க்கும் மனிதர்களிடம் எல்லாம் கொண்டு போய்  சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவரவர்களால் முடிந்தமட்டும் பரப்புரை செய்வோம் நண்பர்களே ...

இது தான் நம் அறிவாசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியாக மனதில் நிறுத்துவோம்.!

வாழ்க பெரியார் ... வளர்க பகுத்தறிவு.!

Friday, 15 September 2017

அரசியல் கற்றுக்கொடுப்போம் ...நம் பிள்ளைகளுக்கு.!

இதோ மூன்றாண்டுகள் ஆட்சி முடிவடைந்து விட்டது. இன்னும் சொல்லியபடி, பலஆயிரம் பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி கூட  செய்து தரப்படவில்லை. பல கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லை. அதுவும் வடஇந்தியாவில் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். இப்போதும் கூட, வித்யா பாலனையும், அமிதாப் பச்சனையும்  கழிப்பறையை பயன்படுத்துக்கள் என்று சொல்லவைத்து நடிக்க வைக்கின்றனர்.!

இந்நிலையில், மும்பைக்கும், குஜராத்திற்கும் இடையே புல்லட் ரயில் ஒண்ணேகால் லட்சம் கோடி செலவிட்டு ஓட வைக்கபோகிறது ...  பாஜக மோடி அரசு. இது தேவையானது தானா... இதெல்லாம் யார் வீட்டுப்பணம். மக்களின் வரிப்பணம் அல்லவா. அதிலும் அந்த இரு மாநிலங்களுக்குமட்டுமே பயன்படக்கூடிய ஒரு திட்டத்திற்கு  நாடே வரி கட்ட வேண்டுமா... ஜிஎஸ்டி மூலம் மாநில வருவாயை குறைத்து, மத்தியஅரசின் பையிற்குள் போட்டுக்கொள்கிறது. எங்கள் மாநிலத்திற்கு எவ்வித நிதியையும் ஒதுக்க முடியாது. அது வெள்ளமானாலும் சரி, புயலென்றாலும் சரி, மழை பொய்த்து, விவசாயம் இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டாலும் சரி, எதற்கும் நிதி கொடுக்க  முடியாது என்று கைவிரிக்கும் ஒரு அரசாங்கம், வடக்கே தங்களுக்கு கோடிக்கணக்கில் நம்முடையப்பணத்தையும் சேர்த்து ஆடம்பரத்திற்கு செலவிடுகிறதென்றால், என்ன ஒரு ஏமாற்றுத்தனம்..!

மாநில உரிமைகளை பறிப்பதில் , குறியாக இருக்கும் இந்த மோடி அரசு நீடித்தால், எவ்வகையிலும் வடக்கும், தெற்கும் ஒத்துப்போக முடியாது. அப்படியே ஒத்துப்போக வேண்டுமென்றால், கூட்டமைப்பாக இருக்க முடியுமே தவிர, ஒரே நாடாக இருப்பதில், இனி எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இப்போது இல்லையென்றாலும், வருங்காலத்தில் இது தான் நடக்கப்போகிறது. இனியாவது, நம் பிள்ளைகளுக்கு சிறப்பான அரசியல் கற்று தருவோம். அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி தள்ளி வைத்தது போதும். சாக்கடையை சுத்தப்படுத்துவது எப்படி என்று சொல்லி தருவோம்.!

சமூகத்தைப்பற்றி சிந்திப்பது தான் #அரசியல் என்ற உண்மையை  தெளிவாக புரிய வைப்போம் ... மக்கா.!   

Monday, 11 September 2017

தமிழக பள்ளி கல்வித்துறை

பள்ளி கல்வித்துறை என்று ஒரு துறை ... அதற்கு அமைச்சர் என்ற ஒருவர். அவருக்கு கீழே பணிப்புரிய உதவியாளர், செயலர், காரியதரிசி, ஆட்சியர், மற்ற ஊழியர்கள் ... இவர்கள் அனைவருக்கும் ஊதியம், வாகன வசதிகள், மருத்துவ செலவுகள்... இன்னும் இதர வசதிகளுக்கான செலவுகள், இதற்கான கட்டிடம் , அதற்கு ஆகும் செலவுகள் ... etc..., இதற்கெல்லாம் யாருடைய பணம் செலவழிக்கப்படுகிறது.... எல்லாமே மக்களின் வரிப்பணம் தானே ...!
ஆனால் வட இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பாடம் நடத்துவதற்கு எதற்கு இத்தனை செலவுகள் ... எங்கள் பள்ளி கல்வித்துறை தோல்வியடைந்து விட்டது என்று நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டியது தானே ...
ஏற்கனவே, தமிழக அரசு அடிமைப்பட்டு, மத்திய அரசிடம் அடிபணிந்து கிடக்கிறது. இதில், கல்வியை அவர்களிடம் அடகு வைத்து விட்டோமானால், நம்மினம் தலை நிமிரவே முடியாது. இதற்கு நம் ஆசிரியர்கள் எதிர்த்து போராடியே தீர வேண்டும்... இல்லையேல், கல்வி மறுக்கப்பட்ட இனமாக மீண்டும் அடிமைப்பட வேண்டிய சூழ்நிலை உருவாககூடிய பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது.!

கல்வி நம் உரிமை

நண்பர்களே...

நிதி ஆயோக் மூலம் அரசுப்பள்ளிகள் தனியார் மயமாக்கப்படவுள்ளது. நவோதயா பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதன்முலம் இந்தி கட்டாயமாக்கப்படும்.  மாநில பாடத்திட்டம்  நீட் தேர்வின் மூலம் ஒழிக்கப்பட்டுவிட்டு , மத்திய பாடத்திட்டமுள்ள பள்ளிகள் அதிகரிக்கப்போகின்றன. தமிழ்மொழி மறக்கடிக்கப்ட்டு,இந்தியும், சமஸ்கிருதமும் நம் வருங்கால சந்ததியினருக்கு கற்பிக்கப்படவுள்ளன. இந்த பள்ளிகளில் படிக்க முடியாதவர்கள் கல்வி மறுக்கப்பட்டு, அடிமைகளாக்கப்படுவர். முழுக்க முழுக்க காவிமயமாக்கப்பட்டுவிடும். இவையனைத்தும் ஓரிரு ஆண்டுகளுக்குள் செய்து முடித்துவிடும் பாஜக அரசு.

இவைகளை தடுக்க வேண்டுமானால், உணவங்கள், துணிக்கடை, வீதி, பலசரக்கு கடை, பூங்கா, பேருந்து நிலையம், ரயில் நிலையம், முட்டுச்சந்து (முடிந்தால் கோயில் உட்பட) என பல இடங்களில், அனைத்து மக்களிடமும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஒற்றை ஆட்சி திட்டத்தைப் பற்றியும், நீட் பற்றியும்,  மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை பற்றியும் சொல்லிக்கொண்டே இருங்கள்.  புரியும் படி  தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள். சரியான முறையில் போராட்டங்கள் நடக்க வழி வகுப்போம்.  நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன்... நண்பர்களே,  நம்மால் முடிந்தவரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.!

அரச பயங்கரவாதம்


காங்கிரஸ் ஊழல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டே,பாஜக  மிகப்பெரிய ஊழலை செய்து முடித்திருக்கிறது ... இது மேலும் மேலும் தொடரக்கூடிய வாய்ப்பு தான் அதிகமிருக்கிறது. பாஜகவின் அனைத்து திட்டங்களும், முயற்சிகளும் தோல்வி தான்.. மக்கள் மத்தியில் இவர்களின் செல்வாக்கு குறைந்துக்கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. !
ஆதலால் தான், தங்கள் ஆட்சியில்லா மாநிலங்களை குறி வைத்து, தகர்த்து, குறுக்கு வழியில் வருவதற்கு முயல்கிறது. ஒற்றை ஆட்சி என்ற சர்வாதிகாரத்தை கையில் எடுக்க எத்தனிக்கிறது.  இந்த அடாவடி செயலுக்கு, தமிழக மக்கள், மற்றும் அனைத்து எதிர் கட்சிகளும் ஓன்று சேர்ந்து தக்க பதிலடி கொடுக்க முன்வர வேண்டும். அதற்கு அனைவரும் தங்கள் கருத்துவேறுபாடுகளை தவிர்த்து, ஒன்றிணைய வேண்டும்.!!
ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்துமஹாசபை, VHP , இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, ராம் சேனா, சிவசேனா என அனைத்தும் பார்ப்பனீயத்தில் ஊறி  திளைத்த விஷ ஜந்துக்கள் தான். இனியும் மக்கள் விழிப்படையவில்லை என்றால், நம் சந்ததியினரை அடிமை மாக்களாக்க நாம் துணை போகிறோம் என்பது வரலாற்றில் பதிவு செய்த  குற்றத்திற்கு ஆளாவோம்... மக்கா.!!!

போராட்டம் வெல்லட்டும்.

இதை தானே எதிர்பார்த்தோம் ... செல்வங்களா... 
ஜல்லிக்கட்டின்போது கூடிய இளம் சிங்கங்கள் நீட்டிற்கு கூட வில்லையே என்ற வேதனை  நம்மை வருத்திக்கொண்டிருந்தது.!

மாணவர்களும், இளைஞர்களும் திரள் திரளாக கூடி, " நீட்டை ரத்து செய் , அனிதாவிற்கு நீதி வழங்கு ," எனும்  முழக்கங்கள்  வானை பிளக்கின்றன.. தமிழகமெங்கும், மற்றும் டெல்லி, வளைகுடாநாடுகள், அமெரிக்காவில் பல இடங்கள் என போராட்டங்கள் தொடர்கின்றன. என்ன ஒரு கொடுமையென்றால், அந்த குழந்தை அனிதா, தன உயிரை ஈந்து, இப்போராட்டத்தை வலுவாக்கி இருக்கிறாள் என்பது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது ... !

" வாழ்த்துகள் ...மாணவ தங்கங்களே... போராட்டம் வெல்லட்டும்.! "


அனிதா எனும் மருத்துவர்

மாணவி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையே உலுக்கிப் போட்டிருக்கிறது. சிறந்த மருத்துவராக வர வேண்டிய அந்த அறிவார்ந்த குழந்தை அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறது... நீட் எனும் பார்ப்பனீய சூழ்ச்சியால்.!
இன்னும் நம்மால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லையே ... 

ஆங்காங்கே போராட்டங்கள்... எங்கு சென்றாலும் இதே பேச்சு. உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் கொதித்து போயிருக்கிறார்கள். ஆனால் இந்த பார்ப்பனர்கள் தங்களுக்கே உரிய  பல #நல்லகுணாதியங்கள் கொண்டவர்களாயிற்றே... 
நம்மால் தாங்கவே முடியாத (அனிதாவின் மரணத்தை), அக்குழந்தையின் உயிரற்ற உடலை முழுவதும் வெள்ளை துணியால் சுற்றி கட்டப்பட்டிருக்குமாறு   அப்படிப்பட்ட  #மனதைஅறுக்கக்கூடியசித்திரத்தை போட்டிருக்கிறது ... #துக்ளக்.
அதிலும் எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேடுவதாக உரையாடல்கள் வேறு...
யார் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று தமிழகமக்களுக்கு தெரியாதா...
துக்ளக் ஆசிரியராக குருமூர்த்தியின் செயல்பாடுகள் அனைத்தும் நம்மினத்திற்கு எதிராகவே இருக்கிறது . அதன்பிறகு தான் நம் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது  இங்கிருந்துகொண்டு டெல்லிக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் வேலை யாருடையது என்பது தமிழக மக்கள் உணராமல் இருக்கிறார்கள் என்றா நினைத்துகொண்டு இருக்கிறீர்கள்...!

இதோ வந்துவிட்டது மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுக்கும் இந்த  போராட்டங்கள்... இது மென்மேலும் மக்கள் போராட்டமாக வளர்ந்து வெடிக்கும்.   பறிக்கப்பட்ட அனைத்து மாநில உரிமைகளும் பெறும்வரை ஓயாது இந்த போராட்டம்.!

இவை அனைத்திற்கும் #பார்ப்பனீயம் விலை கொடுக்க தான் வேண்டும். இல்லையேல், தமிழக மக்கள் கொடுக்க வைப்பார்கள்.! 

ஆழ்மனம்

நம்முடைய ஆழ் மனத்த்திற்கு தான் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது... எங்கோ, எப்போதே, யாராலோ, கேட்ட,பார்த்த, படித்த செய்திகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, ஏதோ ஒரு சமயத்தில் வெளிப்படுகிறது. நம் மனம் வலிமையாக இருக்கிறதென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.. ஆனால், நம் உள்மனம் நம் அனுமதியில்லாமலே பல செய்திகளையும், காட்சிகளையும் பதிவு செய்துக்கொள்கிறது.சில நேரங்களில், நம் உள்மனம் , நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல், தனிச்சைக்காக செயல் படுகிறது.!

சுற்றிலும் கும்மிருட்டு ... கண்ணெதிரே ஆறேழு உருவங்கள், அனைத்தும் வடிவமில்லா கருப்பு உருவங்கள் ... கண்ணின் கருவிழி மட்டும் சிவப்பு ,  உதட்டின் நிறம் கரும் சிவப்பு, நாக்கோ இரத்தம் சொட்டுவது போல் நீளமாக இரத்தத் சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது . அனைத்து உருவங்களும் பலநிலைகளில் இருக்கின்றன. முதலில் உள்ளது நின்றுகொண்டும், அதன் பக்கத்தில்,  மற்றொன்று மண்டியிட்டுக்கொண்டும், சற்று தள்ளி, மூன்று உருவங்கள் உட்கார்ந்துக்கொண்டும், கொஞ்சம் தள்ளி, சிறிது இடைவெளியில் இரு உருவங்கள் சாய்ந்தவாறு உட்கார்ந்துகொண்டும், தங்கள் கோர முகத்தை காட்டியபடி, என்னையே உற்றுநோக்கி, பயமுறுத்துவதுபோல் கத்திக்கொண்டிருக்கின்றன. 

பயங்கர அதிர்ச்சி ... பயத்தில் நானும் கத்துக்கிறேன். ஆனால் அது அலறல் இல்லை... தவிப்பு , அரை மயக்கத்தில் , ஒன்றும் செய்ய இயலாதபோது, அதாவது எனக்கு ஆபத்து இருக்கிறது,, ஆனால் என்னால் எதிர்க்க முடியவில்லை என்பது போன்ற உணர்வு,இதனால் ஏற்படும் தவிப்புடன் கூடிய ஒரு ஓலம் என்றே நினைவிருக்கிறது. பக்கத்தில் படுத்திருந்த தங்கையும் அலறிக்கொண்டு , என் கைகளை பற்றிக்கொண்டு எழுந்திருக்கிறாள். கூடவே நானும் எழுந்திருக்கிறேன். ஆனால், அந்த உருவங்கள் அப்படியே , அந்நிலையிலிருந்து சற்றும் மாறாமல், அப்படியே முறைத்தபடி, கத்திக்கொண்டிருக்கின்றன. நாங்கள் போட்ட சத்தத்தில், எல்லோரும் விழித்து, எழுந்து உட்கார்ந்து, என்ன நடக்கிறதென்றே தெரியாமல், பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதைப்பார்த்து, பயந்த என் தங்கையின் மகன், அலறி இருக்கிறான். பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த என் சித்தப்பா வந்து , லைட் போட்டதும்,  அவ்வளவு நேரம் எனக்கு முன்னே தெரிந்த அந்த கோர உருவங்கள் மறைந்துவிட்டன. நான் உட்கார்ந்து இருக்கிறேன், என் உறவினர்கள் அனைவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். 

' என்னாச்சு .. என்னாச்சு .. என்று ஒரே கேள்வி,,, இவங்க இரண்டு பெரும் கத்தினாங்க.. ' என்று எல்லோரும் சொல்கிறார்கள். 

' என்ன .. நான் கத்தினேனா ...'

' ஆமாம்க்கா ... நீங்க கத்தினீங்க ..' இது தங்கை.

' அப்படியா, எனக்கு தெரியலையே...' 

சற்றுமுன் வரை பார்த்த முகங்கள் நினைவில் இருக்கின்றன... கத்தினது நினைவில் இல்லை... யாரிடமும் எதுவும் பேசாமல் யோசிக்கிறேன்... யோசிக்கிறேன்.. ' ஆமாம் ... நான் கத்தினேன்.. ஆனால் அது அலறலோ, கத்தலோ இல்லை... மிகுந்த தவிப்புடன் கூடிய ஓலம். ' இப்போது நன்கு நினைவிற்கு வருகிறது ..  அந்த கோரமுகங்களைப்பார்த்து பயத்திருக்கிறேன். எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையில் ஓலமிட்டு இருக்கிறேன்.

ஆனால், இதையெல்லாம் செய்தது நானா.. எனக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லையே... கடவுள் நம்பிக்கை போகும்போது, சேர்ந்தே பேய் நம்பிக்கையும் போய்விட்டதே... நான் எப்படி பயந்தேன். இப்போது எல்லாம் தெரிகிறதே அப்போது மட்டும் ஏன் பயந்தேன்...எப்படிப்பட்ட நிலையிலும் எதிர்த்து போராடும் துணிச்சல் என்னவானது ... ஒன்றும் புரியவில்லை,  ஆனால் அது கனவல்ல... அது மட்டும் உறுதி.. அந்த உருவங்கள் அனைத்தையும் நேரில் பார்த்தமாதிரி தான் உள்ளது. நேரில் தான் பார்த்தேன். அதை கனவென்று சொல்லி சமாதானம் செய்துகொள்ள முடியாது. இதை வெளியில் சொல்லவும்முடியது. ஏனென்றால், நான் ஒரு பெரியாரியவாதி என்பது எல்லோருக்குமே தெரியும். மற்றவர்களை விடுங்கள். எனக்கே நான் பொய்யாக கனவென்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. நேரில் பார்த்தேன் என்று சொலலவும் மனம் வரவில்லை... எனக்கே இப்படி என்றால், நம்பிக்கை உள்ளவர்கள் நம்பி விடுவார்களே... ஏன் இப்படி.. வந்த இடத்தில் பெரியார் கொள்கைகளை பரப்ப ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ஆனால் எதுவும் என்னல தெளிவாக விளக்க  முடியவில்லையே... !

நிச்சயம் இம்மாதிரி மூடநம்பிக்கைகள் எனக்கு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கிடையாது... டாக்டர் கோவூர் அவர்களின் புத்தகம்  படித்திருக்கிறேன்.  என்ன இருந்தாலும், நிச்சயம் என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி, நானே நேரில் பார்த்த உணர்வு..  அது கனவில்லையே.. அதோடு மட்டுமல்லாமல், ஓலமிட்டிருக்கிறேன். சே.. என்னடா இது .. என்று குற்றயுணர்ச்சியுடன்,  திருச்சியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தேன். 

இது கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட என்னுடைய நேரடி அனுபவம்.! :-) :-) 

வந்தவுடன், முதலில் அனைத்தையும் என் மகனிடம் சொல்லி முடித்தேன். சில நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருந்தான். பிறகு ,

 ' உங்களுக்கு , sub-conscious mind கடுமையா வேலை செய்திருக்கிறது. conscious mind சுத்தமா வேலை செய்யல... அதான் இப்படி... சின்ன வயசுல பார்த்த, கேட்ட , பல விசயங்கள் உங்கள் ஆழ்மனதில் பதிந்து, இப்போ , எப்படியோ வெளியே வந்திருக்கு... conscious  mind -க்கு தெரியும்...  நீங்கள் ஒரு நாத்திகர், இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று... ஆனால் , உங்கள் sub- conscious mind ல இதை நீங்க ஆழமா பதியவைக்கல... அதான்  எதோ ஒரு சமயத்தில் இப்படி வெளியாகி இருக்கு..' என்றான்.

நாம் நம் ஆழ்மனதை பயிற்சி செய்தல் மிக முக்கியம். நம்முடைய ஆசைகள், இலக்குகள், கொள்கைகள், எண்ணங்கள் அனைத்தும் ஆழமாக பதிய வைத்தல் நல்லது. அதுவும் நலல்வனவற்றை மட்டுமே பதிய வைக்க வேண்டும். தேவை இல்லாதவற்றை தூக்கி எறிந்துவிட வேண்டும். நம்முடைய ஆழ்மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான், எந்நிலையிலும் நாம் நாமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆழ் மனதில் என் வாழ்க்கையின் நடுவில் நான்,   உணர்ந்து, தெளிந்த பெரியாரியம் இன்னும் ஆழமாக பதியவேண்டும் . மேலும் நம் ஆழ் மனம் லாஜிக் பற்றி சிந்திக்காது... தனக்குள் சேர்த்து வைத்திருக்கும் செய்திகளை மட்டும் வெளி கொணரும். நமக்கு இருக்கும் அறிவை பயன்படுத்த முடியாது என்பது உண்மை செய்தி என்பதை பல காணொளிகளில் பார்த்து தெரிந்துகொண்டேன். அது தான், பலர், நான் நேரில்பேய்யைப்  பார்த்தேன் என்று நம்புகிறார்கள் என்பதை என் அனுபவத்தின் வாயிலாக உணர்தேன். இது ஒரு நல்ல அனுபவமாக தான் இருந்தது... நேரில் பார்த்ததாக சொல்லும் மனிதர்களுக்கு புரிய வைக்க முடியும். இருப்பினும் ,  இன்னும் இதைப்பற்றி மனநல  ஆலோசகரிடம் பேச வேண்டும். அதிலும், இதிலெல்லாம் நம்பிக்கையில்லாத மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்போது இந்த பதிவின் ஆரம்பத்திற்கு செல்லுங்கள்... எல்லாமே புரியும்.!