இதைப்பற்றி எவ்வளவோ எழுத்தாகி விட்டது. இது போல் மறுபடியும் எழுத கூடாது என்று தான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறோம். ஆனால், எழுதும்படி சம்பவங்கள் நடக்கின்றன என்பது தான் முழுவது வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது.
இரு தினங்களுக்கு முன் சென்னை ஆதம்பாக்கத்தில், ' தன்னை காதலிக்க மறுத்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறான் ஒரு இளைஞன். நம் இளைய சமூகம் எப்படி கெட்டுப்போய் இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்று. இதில் எங்கு தவறு நடக்கிறது என்பதை ஆராய்ந்து , அதற்கான தீர்வை கொண்டுவர வேண்டாமா... நம் பிள்ளைகள் நினைத்ததை பெற்றே ஆக வேண்டும் என்ற வெறிபிடித்தவர்களாக வளர்ப்பதில் நாமும் தானே ஒரு காரணமாக இருக்கிறோம்.
இதில் ஒரு ஆணாதிக்கம் மறைந்திருக்கிறது என்பது வருத்தத்துடன் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை. காதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சு... எரித்து கொலை, காதலித்தால் ஆணவ கொலை என அனைத்து வகையிலுமே பெண்களுக்கெதிராகவே இந்த வன்முறை தொடர்ந்துகொண்டிருக்கிறது. பெண்களை உடைமைகளாக பார்க்கும் கண்ணோட்டம் முதலில் மாற்றப்பட வேண்டும். தன்னைப் போல் பெண்களும் இரத்தமும், சதையும் உள்ள சக மனுசி என்ற தோழமையை நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தருவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.!
" வாழ்க்கை எவ்வளவு அழகானது , அதனை எப்படிரசனையோடு கையாள வேண்டும், வெற்றி, தோல்விகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்,
நாம் நினைத்ததெல்லாம் நடப்பதற்கு சாத்தியமா, அல்லது அதனை போராடி பெற முடியுமா ,
தன மேல் திணிப்பதை நாம் யாரும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை எனும்போது , நாம் மட்டும் எப்படி மற்றவர் மீது தன கருத்தை திணிக்க முடியும் , அன்பு மட்டுமே மனித வாழ்வின் பிரதானம் ."
என்ற வாழ்வியலை கற்று தருவதில் மிக முக்கிய பங்கு பெற்றோர்களுடையது. அதன் பிறகு ஆசிரியர்கள், உறவினர்கள்,நண்பர்கள் என சமூகம் முழுமைக்கும் இந்த கடமை இருக்கிறதல்லவா... இதனை எப்படி மறந்தோம்.?
பிள்ளைகளின் மீது அன்பு செலுத்துகிறோம் , செல்லம் கொஞ்சுகிறோம் என்று அவர்களை நல்வழி படுத்த தவறி இருக்கிறோம் என்பதை தான் இது போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கவிடாமல் தடுப்பதற்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். எது செய்தலும் வெளியே வந்துவிடலாம் என்ற அலட்சியப்போக்கும் ஒரு காரணமாக இருக்கின்றது.
காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. இதன் மூலம் ஜாதி ஒழிக்கப்படும் . எவ்வித கட்டாயமும் இல்லாமல், தன சுயவிருப்பப்படி, ஆண் , பெண் இருவரும் சேர்ந்து வாழ வழி கிடைக்கிறது. காதல் என்பது இருவரின் விருப்பம். இதிலொருவருக்கு விருப்பம் இல்லை என்றாலும்கூட அதனை கட்டாயப்படுத்தக்கூடாது என்ற தெளிவை நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவோம்.
இனிமேலும் விநோதினிகள், நவீனாக்கள், இந்துஜாக்கள் பலியாகாமல் தடுப்பதற்கான வழிகளை முன்னேடுப்போம்.!