Sunday, 31 December 2017

புத்தாண்டை வரவேற்போம்.

இன்று போல் தான் நாளையும் என்பது தான் நம் நிலைப்பாடு என்ற போதிலும், ஒவ்வொரு நாளும் முடியும்போது, அந்த நாளை நினைத்து பார்ப்பதும், மறுநாளை பற்றிய முன்னேற்பாடுகள் குறித்து சிந்திப்பதும் போன்றது தான் ,  ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அதனைப்பற்றிய நினைவுகள்.!

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், நமக்கு புது புது  அனுபவங்கள் கிடைக்கும் இல்லையா...  இந்த ஆண்டில் நிறைய புதிய மனிதர்களை சந்தித்து இருப்போம். புதிய நண்பர்கள்  கிடைத்திருப்பார்கள். நம்பி இருந்த சிலமனிதர்களை பற்றிய தெளிவு கிடைத்திருக்கும். சில நினைவுகள் மகிழ்ச்சியையும், சில நினைவுகள் துக்கத்தையும், சில நினைவுகள் வெறுப்பையும், விரக்தியையும் கொடுத்திருக்கும். ஆனால், எல்லாமே அனுபவங்கள் தான். ஒவ்வொரு நொடியும் நாம் கற்றுக்கொண்டு தானே இருக்கிறோம்.!

நல்ல அனுபவம், இதை இப்படி தான் செய்ய வேண்டும் என்பதையும், கெட்ட அனுபவம், இதை இப்படி செய்யகூடாது என்பதையும் தானே  நமக்கு அறிவுறுத்துகிறது. ஆதலால், எல்லா நேரமும்,நாட்களும், மனிதர்களும், நண்பர்களும்,உறவுகளும் நமக்கு அனுபவத்தை கற்றுத்தருபவர்களாக தான் இருக்கிறார்கள் என்ற சிந்தனையுடன் அடுத்த ஆண்டை எதிர்நோக்க தயாராகுவோம்.! 

#Welcome2018 

ரஜினி என்ற அம்பு

ஒன்றுபட்ட இந்து ராஷ்டிரத்தை அமைப்பதே ஆர்.எஸ்.எஸ், பாஜக வின் நோக்கம், இலக்கு எல்லாமே. அதற்கு தன்னால் முடிந்த அனைத்து வழிகளையும் கையாளுகிறது ஹிந்துத்துவா. நேரடியாக தேர்தலை சந்தித்து நேர்மையாக வெற்றி பெற முடியாது என்ற நிலையிலுள்ள மாநிலங்களில், கொல்லைப்புற வாசல் வழியிலாவது உள்ளே நுழைய முயல்கிறது. 
மாநிலக்கட்சிகளை உடைப்பது, தன்னுடைய ஆட்களை வளர்த்து விடுவது போன்ற சித்து வேலைகளை செய்து கொண்டிருக்கிறது ... இப்படிப்பட்ட ஏஜன்ட் தான் ரஜினிகாந்த். அவரின் ஆன்மீக அரசியல் எனும்போதே தெரிகிறதல்லவா ... தன்னுடைய அரசியல் குருவாக சோ ராமசாமியை கொண்ட ரஜினியால் தமிழகத்திற்கு என்ன செய்துவிட முடியும்... இதுவரை நம் மாநிலத்திற்கு என்ன செய்துவிட்டார்... ஈழம், மீத்தேன் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு,கூடங்குளம் பிரச்சனை, காவேரி பிரச்சனை, நீட் எதிர்ப்பு, ஒக்கி புயல் என எதற்கும் தன்னுடைய எதிர்ப்பை காட்டாத அவர்,  எப்படி தமிழக அரசியலில் செயல்பட முடியும்.?

 அவரை வளர்த்து விடுவதின் மூலம், தமிழகத்தில் ஹிந்துத்துவத்தை வளர்க்க முடியும் ... அதன்ஊடே தன்னுடைய பரந்த இந்து தேசத்தை உருவாக்க முன்னெடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
 இந்த சதி தான்  அப்பட்டமாக தெரிகிறதே ... அர்ஜூன் சம்பத், மாலன், நாராயணன், குருமூர்த்தி போன்றோரின் பேச்சு உறுதி செய்கிறதே..!
#பார்ப்பனீயம் அணியும் முகத்திரையை ஒவ்வொரு முறையும் #ஈரோட்டு_கண்ணாடியால் இனம்காணும் போதெல்லாம், புதிது புதிதாக மாற்றிக்கொண்டு உள்நுழைகிறது. அதனை முறியடிக்கவேண்டிய மிக முக்கிய பணி நம் அனைவரிடமும் தான் இருக்கிறது.! :-)

Friday, 29 December 2017

திமுக கவனமாக இருத்தல் நல்லது.

திமுக மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் என்று தோன்றுகிறது. ஆர்.கே நகர் தோல்வியை வைத்து இதனை சொல்லவில்லை. அந்த தொகுதி அதிமுக தொகுதி தான்... திமுக வெற்றி பெறும் என்று நாம் எதிர்பார்த்தது, ஆளும்கட்சியின் மீதுள்ள வெறுப்பு, கோவம், எரிச்சல் முழுதும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை தடுத்துவிடும் என்பதால் தான். 

பணத்தை அள்ளிக்கொட்டி அதிமுகவினர் டெபாசிட் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று தான்.. அதே போல், பணத்தை கொட்டி தான் தினகரனும் வென்றிருக்கிறார். இருப்பினும், பாஜகவின் கோர முகத்தை கிழித்தியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. நோட்டாவை விட பாஜக வாக்குகள் குறைவு என்பதில் மிக்க மகிழ்ச்சி...மாநிலக்கட்சிகளே இருக்காது என்று சொன்ன பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி நான்காமிடத்தில் வந்திருப்பதிலும் மிக்க மகிழ்ச்சி.!

திமுகவின் இந்த தோல்வியை பெரிதுபடுத்தி, பலவீனமடைந்து விட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறது பார்ப்பனீயம் என்பது திண்ணம்.  இந்த தேர்தல் முடிவு உள்ளாட்சித்தேர்தலிலும், அடுத்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றபோதிலும், மக்கள் மனதில் ஒருவித மாயையை திணிக்க முற்படும் இந்த திருகுவேலையை, முறியடிக்கும் விதமாக திமுக தலைமை நன்கு பரிசீலித்து, செயல்படவேண்டிய தருணம் இது.!

Friday, 22 December 2017

தந்தை பெரியாரை சுவாசிப்போம்.


பையன் சமையலறையில் சமைத்து கொண்டிருக்கிறான், பொண்ணு கடைக்கு சென்று இருக்கிறாள் ... ஆணையும், பெண்ணையும் சமமாக வளர்க்கிறோம் என்று தந்தை சொல்வது போலவும்,

எனக்கும், தம்பிக்கும் மட்டும் சொத்தில் பங்கு தருகிறீர்களே, அக்காவுக்கும் தாருங்கள் என்று தந்தையிடம் , மகன் கேட்பது போலவும் ,

 சமீப  காலமாக பண்பலையில்   வடநாட்டின்  தமிழாக்க விளம்பரங்கள் ஒலிபரப்பப்படுகின்றன.!

இறுதியில், பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழ்நதைகளை கற்பிப்போம் என்று முடிப்பார்கள்.!

இதையெல்லாம் 70 , 80 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் #தந்தைபெரியார் சொல்லிவிட்டு சென்றிருக்கிறாரே ... 

" வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்து , ஒரு பெண்பிள்ளை இருந்தால், பெண்பிள்ளையை கட்டாயம் படிக்க வையுங்கள் " என்றும்,

" பெண்களின் கையில் உள்ள கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுங்கள்.." என்றும் ,

" பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை கொடுங்கள், அது அவர்களின் முன்னேற்றத்திற்கும், தன்மானத்துடன் வாழ்வதற்கும், அனைத்திற்கும் ஆண்களையே நம்பிஇருக்கும்அடிமை  நிலையை மாற்றுவதற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும்   வழி வகுக்கும் " என்றும்.

பெண்கல்வியையையும், பெண்விடுதலையும் , பெண்களுக்கான சொத்துரிமை பற்றியும் விளாவரியாக சொல்லியிருக்கிறார்களே ... அந்த பெண்களுக்கான சொத்துரிமையை , கலைஞரின் திமுக அரசும் சட்டமாக்கியதே.!

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் அனைத்தும் நம் சமூகத்தின் வளர்ச்சிக்கான பாதைகள் ...என்றென்றும் நமக்கு தேவையான உயிர்முச்சு  போன்றது.  நம் மக்கள் தான் அதனை சரிவர பயன்படுத்துவதில்லை. முழுமையாகப்படித்து, தெளிவாக உள்வாங்கி, கடைபிடித்தோமானால், நம் சமூகம் சிறப்பான வளர்ச்சியை அடையும் என்பதில்தான் ஐயம் உள்ளதோ ... 

பெரியாரின், பெண்ணடிமை ஒழிப்பு  , மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி, மத ஒழிப்பு, கடவுள் மறுப்பு,  சமத்துவம் முதலியவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை நம் தலையாய கடமையாக கொள்வோம்.!

பெரியாரை வாசிப்போம் ... பெரியாரை சுவாசிப்போம்.!

டிசம்பர் 24, தந்தை பெரியார் அவர்களின்  நினைவுநாள்.

 

நம் சமூகத்தின் வாழ்வியலில் பெண்கள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு பார்த்து, பேசிய தோழியிடம் நல விசாரிப்புகளுக்குப்பிறகான உரையாடல்   ...

' ம்ம்ம் ... அப்புறம் எப்படி போகுது வாழ்க்கை..'' 

' பையன் வேலைக்கு போயிட்டான்... பொண்ணு பைனல் இயர்... அடுத்த வருடம் மாப்பிள்ளை பாக்கணும். ஏதோ போயிட்டு இருக்கு... இப்பெல்லாம் வெறுமை அதிகம் இருக்கு..ப்பா...' சொல்லும்போதே கண்களில் கண்ணீர் முட்டுகிறது.

' என்ன செய்வது .. சரி விடுப்பா ... எல்லோருக்குமே அப்படி தான்.... எனக்கு தெரிந்தவரை...,  மனதிற்குள் போட்டு மூடிக்கொண்டு வாழ்க்கை போகும்பாதையிலேயே போய்க்கொண்டு இருக்கிறார்கள். உனக்கு பிடித்த எதாவது ஒன்றை செய்ய பழகிக்கொள்... கொஞ்சம் தேவலாம் என்ற மனநிலைக்கு அது அழைத்து செல்லும். பிறகு அதில் அதிக கவனம் செலுத்தினால், வெறுமைஉணர்வு  அடிக்கடி தோன்றாது... நான் அபப்டி தான் , வேலை நேரம் போக, அது  நல்லா இருக்கோ, இல்லையோ,,, எதாவது எழுதிக்கொண்டிருப்பேன். அல்லது படித்துக்கொண்டிருப்பேன் ... அது எனக்கு பிடித்திருக்கிறது .. அதுபோல உனக்கு பிடித்ததை  முயற்சி செய்யேன்..ப்பா.!' 

இது தான் இன்றைய நம் மத்தியதர, மத்திய வயதுடைய பெரும்பாலான  பெண்களின் நிலைமையாக இருக்கிறது. மத்திய வயதுடைய அனைத்து பெண்களிற்கும் இப்போது திருமணம் நடந்து 20 ஆண்டுகளை கடத்தியிருப்பார்கள். பிள்ளைகள் கல்லூரிப்படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பார்கள். கணவன்மார்கள் வேலை, குடும்ப பளு, பொருளாதார நிலைமை, பெற்றோர்கள் மருத்துவ செலவு  அதனுடைய அழுத்தம் காரணமாக மனைவிகளிடம் பழைய கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. சரியான் புரிதல் இருப்பதில்லை. பேசவே நேரமும் இருப்பதில்லை. இது தான் நம் சமூகத்தில் உள்ள வாழ்க்கையாக இருக்கிறது.!

இந்த வயதில் உள்ள  பெண்களை எடுத்துக்கொள்ளுங்கள். 99 விழுக்காடு பெற்றோர்  பார்த்து செய்துவைத்த திருமணம். எந்த புரிதலும் இல்லாத கட்டாய காதல், புதிய , பழக்கப்படாத குடும்பம். இதில் அனைவரையும் அனுசரித்து போக வேண்டிய நிலையை வலியுறுத்தும் உறவுகள். கூட்டுக்குடும்பம் என்றால் கேட்கவே வேண்டாம். மாமியார், மாமனார் அவர்களையும்  சேர்த்து அனுசரிக்க வேண்டும். அம்மாவிடம் சொன்னால், அப்படி, இப்படி தான் இருக்கும்... நம்ம தான் அட்ஜஸ்ட்  செய்யணும் என்ற அறிவுரை வரும்.  இப்படியே ஓராண்டு போனால், குழந்தை ... அதன்பிறகு குழந்தைகளுக்காகவே வாழ்க்கை என எழுதப்படாத சட்டம் நம் சமூகப்பெண்களுக்கு விதிக்கப்பட்டுவிடும். இதிலிருந்து வெளிவர பெண்களாலும் முடிவதில்லை.  தாய்மை என்ற அன்பு, பாசம், கடமை அவர்களை  கட்டிப்போட்டு தான் விடுகிறது. அபப்டியே காலங்கள் உருண்டோடி, 40 வயதில் ஒரு சலிப்பு, வெறுமை வருவது உண்மை.!

நம் ஆணாதிக்கசமூகம் இதை தான் காலங்காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலைமை அடுத்த தலைமுறைப்பெண்களுக்கு வரகூடாது  என்ற எண்ணம் அனைத்து பெண்களுக்கும் வர வேண்டும். தன சுயத்தை எக்காலத்திற்கும், எதற்காகவும் இழக்கவிடாமல் இருக்க அறிவுறுத்த  வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கும், பெண், பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணின் உணர்வுகள்,  வாழ்க்கை , வாழ்க்கை இணை , காதல், சக தோழியாக மதித்தல்,  ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்து நண்பர்களாக வாழ்தல், இருவருக்குள்ளும் விட்டு கொடுத்தல் போன்ற இந்த அருமையான வாழ்வியலை கற்று கொடுப்போம்.!

இதையெல்லாம் பின்பற்றி வாழ்ந்தால், வெறுமை அண்டாதா என்று கேட்டீர்களென்றால் , நிச்சயம் வரும். அவ்வப்போது வந்தே தீரும். ஆனால், கண்டிப்பாக தொடந்து வந்து மனஅழுத்தத்தை தராது... நம் வாழ்க்கை முறை அதனை சரி செய்துவிடும். நான் அப்படி தான் நினைக்கிறேன் ... உங்களுக்கும் சரியென பட்டால், கடைபிடிக்கலாமே .!



Tuesday, 12 December 2017

கவுசல்யா எனும் மனதிடம் .!


வரவேற்கவேண்டிய ஒரு தீர்ப்பு... திருப்பூர் நீதிமன்றத்திற்கு, தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கும் நன்றி .. உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில், திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு. சகோதரி கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத்தண்டனை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை என்பது.!
சகோதரி கௌசல்யாவிற்கு கிடைத்த நியாயம் மட்டுமல்ல இது ... ஜாதிவெறிக்கு கிடைத்திருக்கும் சம்மட்டி அடி... இனிமேலும் இது போல ஆணவக்கொலைகள் நடக்காவண்ணம் இருப்பதற்கு இந்த தீர்ப்பு வழிவகுக்கும்.!
ஜாதி ஒழிய வேண்டும் என்றால், காதல் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு சமூகசிந்தனையை அச்சமூட்டுவதாய் அமையும் இந்த ஆணவக்கொலைகளுக்கு , தண்டனை கடுமையாக்கப்பட்டால் தான் இந்த குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.
மரண தண்டனை என்ற ஓன்று நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும் கூட , இதுபோன்ற கொடூர கொலைகளுக்கு , அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட்டால் தான், இம்மாதிரி குற்றங்கள் இனி நடைபெறாது.
மேலும் குற்றவாளிகள் வேறு நீதிமன்றங்களுக்கு சென்று இந்த தீர்ப்பு நீர்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.!

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா


இறந்ததினால் ஒருவர் செய்த தவறு, தவறில்லை என்று ஆகிவிட போவதில்லை. இறந்தாலும் தவறு தவறு தான். இறந்தவர்களைபற்றி மிக தாழ்ந்த நிலையில்  விமர்சிப்பது மனிதத்திற்கு செய்யும் இழுக்கு, நாகரீகமல்ல  என்பது நம் மனதில் காலங்காலமாக பதியவைத்ததின் விளைவு நாம் அவர்களைப்பற்றி பேசுவதற்கு சற்று தயங்குகிறோம்.  ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றியோ , வெளி உலகத்திற்கு வந்த எதையுமே கீழ்த்தரமாக விமர்சிப்பது தான் தவறு... மற்றபடி, பொதுவில்  மற்றும் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு  விசயம் விமர்சிக்கப்படலாம், விவாதிக்கப்படலாம் என்பது என் கருத்து.

அப்படிப்பார்க்கையில், ஜெ . என்ற பெண்மணியின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவருடைய விருப்பம். அவர் விரும்பியபடி தான் வாழ்ந்தாரா என்பது அவருக்கு தான் தெரியும். அதனைப்பற்றி மற்றவரகள் கவலை கொள்ள தேவையில்லை. ஒரு பெண்ணாக, மற்றொரு பெண்ணின் உணர்வுகளை உற்றுநோக்கும்போது , அவரின் வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக தான் இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆனால், ஒரு அரசியல்வாதியாக, முதல்வராக அவர் என்ன செய்தார், அதில் குறைபாடுகள் இருந்தனவா என்பது தான் நம் முன்னே வைக்கப்படும் கேள்வி. 69% இடஒதுக்கீடு வரைவு சட்டத்தை 9 வது அட்டவணையில் சேர்த்தது என்பது அவரின் ஆட்சியின்  ஜொலிக்கும் வைரமாக காலத்திற்கும் நிற்கும் என்பது  வரலாற்று உண்மை.
ஊழல், பல பார்ப்பனீய சிந்தனைகள் , செயல்கள், திமுகவுடன், காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கல், எதிர்மறை எண்ணங்கள், செயல்பாடுகள் என அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாது.

 மற்றபடி ஜெ.யின் மறைவு மர்மமானது மட்டுமல்ல... பரிதாபமானதும் கூட.!

Friday, 8 December 2017

மீனவர்களின் துயரம் ....


ஆட்சி, அதிகாரம், பதவிகளில் இருக்கும் நண்பர்களுக்கு ,

இயற்கையின் சீற்றத்தால், காற்றினால்  திசை மாறி தென்கோடியில் உள்ள ஒரு குடிமகன், வடமேற்கு மத்தியில் அதுவும் கடலின் வழியாக வழிமாறி சென்றிருக்கிறான். உடைமைகளை இழந்து, உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஒரு வாரகாலமாக கடலில் தத்தளித்து , கண்ணில்பட்ட கரையில் நிராதரவாய் நின்றிருக்கும் அக்குடிமகனுக்கு தேவையான உதவிகளை செய்வது தானே நியாயம். !

காணாமல் போன அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பு அரசினுடையது அல்லவா. அவர்கள் சொல்லும் இடம்வரை சென்று, கடலில் தேடும் பணியை முடக்கிவிட இவர்களை எது தடுக்கிறது.?

நாட்டிற்கு நல்ல வருவாய் ஈட்டித்தரும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவனை காப்பற்றவேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

எல்லாவற்றிற்கும்மக்களிடம்  வரி வசூலிக்கும் இந்த நாட்டில், அந்த மக்களுக்கு இன்னல் வரும்போது கைகொடுக்கும் கடமை யாருக்கு இருக்கிறது.?

இன்னும் சொல்லப்போனால், அவர்களை பத்திரமாக, அரசே அவர்களின் வாழ்விடத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதும், உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கும் தயாராக இருக்க வேண்டுமல்லவா.!
 அதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் முன்னுக்கு பின் முரணாக பேசுவதும், அக்கறையில்லாமல் அவர்களை தவிக்கவிடுவதும் எந்த வகையில் நியாயம்.?

இதெல்லாம் போக, தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக குமரி மாவட்டத்தை அறிவிப்பதில் இவர்களுக்கு என்ன தடை ... வழியில்லாமல் பரிதவிக்கும் மீனவர்களை, இந்நாட்டின் குடிமகன்களை காக்க தவறும், இந்த மாநில, மத்திய அரசுகள் இருந்து தான் என்ன பயன்...?

கவனம் தேவை ... இன்று,  சில கிராமங்களை, ஒரு மாவட்டத்தை , கேரளத்துடன் சேர்த்து விடுங்கள் என்று சொல்லும் இந்த மாநில, இந்த நாட்டின் குடிமகன்களை, நாளை, வேறு ஒரு நாட்டுடன் சேர்த்து விடுங்கள் என்று சொல்ல வைத்து விடாதீர்கள் .... ஆட்சியாளர்களே.!