Monday, 31 December 2018

கொண்டாட்டமே வாழ்க்கை!

தற்போதைய நாட்களில், கொண்டாட்டங்கள் என்பது யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கொண்டாட வேண்டும் என்பதே பெரிய விசயமாகி வருகிறது. கொண்டாடுவதற்கு நாள், கிழமை என்று தேவையில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன், ஒவ்வொரு வினாடியும் கூட கொண்டாடலாம். இதற்கு எதற்கு ஒரு வருட காத்திருப்பு? என்பவர்கள் சிலருண்டு.!

கொண்டாட்டம் என்பது குறிப்பிட்ட நாளில் வரும் போது, அது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பரபரப்பான அன்றாடசூழலில், ஒரு மாற்றத்திற்கான ஏக்கம் மனதை ஆக்கிரமிக்கும்போது , திடீரென்று ஒரு சிறப்பான நாள் வருகையில்  மனம் மகிழ்கிறது. அதனால், அவ்வப்போது வரும் சிறப்பான நாட்களை கொண்டாடுவதில் தவறில்லை என்பவர்கள் பலருண்டு.!

இந்த இரு வகையினருமே , அவரவர்கள் இருப்பில், மனதளவில் பக்குமடைந்தவர்கள்  தான்.  கொண்டாட்ட மனநிலை என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரும் ஒன்றாக தான் இருக்கிறது. அறிவிற்கு புறம்பாக, மூடநம்பிக்கைகளை விதைக்காமல் மகிழ்ச்சியை பரிமாறி கொள்வதில் தவறில்லை. அதனால், கடன் வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்று அவசியமில்லை. நம் வசதிக்குட்பட்டு, கொண்டாட்டங்கள் இருக்குமேயானால், அவை நமக்கு நிச்சயம் மகிழ்ச்சியை தான் தரப்போகிறது. வாழ்க்கையே கொண்டாடுவதற்கு தானே!

கொண்டாட்டங்களில்  பலவகைகள்  உண்டு. 

1. தான்  மட்டுமே கொண்டாடி மகிழ்வுடன் இருப்பது. 
2.  தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வைப்பது. 
3. தன் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கொண்டாட்டமாய் இருந்து  மகிழ்வது.
4. தான் சார்ந்திருக்கும் சமூகத்துடன் சேர்ந்து கொண்டாடுவது.
5. ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள்,  இச்சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கிவைக்கப்பட்டவர்கள்      என்பவர்களுடன் சேர்ந்து  கொண்டாடி, மகிழ்ந்து மனநிறைவு  அடைபவர்கள்.

இதில், 5-வதாக குறிப்பிட்டவர்கள் , மிகச்சிறந்த மனநிலையில் இருப்பவர்கள். என்றைக்கும், மனிதத்தை கொண்டாடி  மகிழ்வுடனும், மனநிறைவுடனும் வாழ்ந்து,மற்றவர்களையும் வாழ வைக்கக் கூடியவர்கள்.!


#வாழ்தல்இனிது 
#Welcome2019



Saturday, 29 December 2018

2018 ஆண்டிற்கு விடை கொடுத்து, 2019 -யை வரவேற்போம்.!

இந்த 2018 ஆம் ஆண்டு, என்னை பொறுத்தவரை, வெகு சீக்கிரமே முடிந்துவிட்டது போல தோன்றுகிறது. இப்போது தான் ஆரம்பித்தது போல இருக்கிறது. அதற்குள் அடுத்த ஜனவரி வந்துவிட்டது. வழக்கம் போல், மகிழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும், அழுகைகளும், சோகங்களும், வருத்தங்களும், இழப்புகளும், பிரிவுகளும் கலந்த ஒரு ஆண்டாகவே இருந்திருக்கிறது. 

உடல்நலத்தில், சிறு சிறு சங்கடங்கள் அவ்வப்போது வந்தது. அதனால், வாசிப்பும், எழுதுவதும் குறைந்து விட்டது என்பது தான் மிக வருத்தமான ஓன்று. குடும்பம் என்று பார்க்கும் போது, மாமியாரின் மரணம் ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பு.  நம் தமிழ்ச் சமூகம், நம் அரசியல்,  நம் தமிழ்நாடு என்று நினைக்கையில், கலைஞரின் மரணம் பேரழிப்பு. மிகவும் மனதை பாதித்த ஒரு இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். நம்பவே முடியாத, அதிர்ச்சியைக் கொடுத்த மரணம், திராவிடர் கழக பொருளாளர், அம்மா பிறைநுதல் செல்வி அவர்களின் இழப்பு.!

பிரிவு என சொல்லும்போது , மகனின் மேல்படிப்பு நிமித்தமான வெளிநாடு பயணம் கொஞ்சம் அதிகமாகவே மனதை சிரமப்படுத்தியது. அதிலிருந்து வெளிவருவதற்கு, மிகவும் மெனக்கட வேண்டிதான் இருந்தது. முகநூல் நண்பர்கள் என்பவர்கள் நமக்கு கிடைத்திருக்கும் விலை மதிப்பில்லா  பொக்கிசங்கள் என்று தான் சொல்ல வேண்டும். உடல்நிலை சரியில்லையென்று பதிவு போட்டபோதும் சரி, மகன் கனடா சென்றபோது நான் , அவனுக்கு எழுதிய திறந்த மடலைப் பார்த்து, உடனே என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதலான சொற்கள் மூலம் என்னை மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு உற்சாகப்படுத்தினார்கள். அத்தனை நண்பர்களும் என் அன்பான நன்றி.

இந்த ஆண்டு எழுதியது குறைவு தான். முகநூலுக்கு அவ்வப்போது விடுமுறை விட்டுவிடுவேன். வாசிப்பு நினைத்த அளவு இல்லையென்றாலும், ஓரளவிற்கு முடித்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். 

எழுத்தாளர் ஜெயகாந்தனின், ' ஒரு மனிதன், ஒரு வீடு,ஒரு உலகம்' , அய்யா கி. ரா. வின், ' கோபல்ல கிராமம் ', எழுத்தாளர் மஞ்சை வசந்தனின், ' ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம் ' ,  எழுத்தாளர் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின், ' பண்பாட்டு அசைவுகள் ' ,  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின், ' காதலெனும்  ஏணியிலே '  ,   பேரறிஞர் அண்ணாவின், ' ஆரிய மையை, மற்றும் ' தஞ்சை வீழ்ச்சி ' ,  தற்போது, கனடாவின் ' இயல் விருது ' பெறும் எழுத்தாளர் இமயம் அவர்களின்  ஆணவக்கொலைகளைப்  பற்றிய ' பெத்தவன் '  ஆகிய நூல்களைப்படித்து முடித்த்திருக்கிறேன். இவ்வாண்டு படிக்க வேண்டும் என்று எடுத்துவைத்ததில், இன்னும் ஆறு புத்தகங்கள் மீதி இருக்கின்றன.  இது தவிர குடிஅரசு தொகுதிகள் சிலவற்றையும் முடித்தாகி விட்டது. ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றியும் தனித்தனியே ஒரு பதிவு போடவேண்டும். அவ்வளவு விசயங்கள் ஒவ்வொரு புத்தகத்திலும் தெரிந்துகொள்ள முடிந்தது. 

அதிகம் திரைப்படம் பார்ப்பதில்லை. சில படங்கள் தான். அதில் மனதில் நின்ற படங்கள் இரண்டு தான். இந்த ஆண்டு பார்த்த படங்களில், ' பரியேறும் பெருமாள் ' மனதைப்புரட்டிப்போட்ட திரைப்படம். அதிலிருந்து வெளிவருவதற்கு சில வாரங்கள் ஆகின. என்னால் முடிந்தமட்டும் நிறையபேரிடம் சொல்லி பார்க்கவைத்த ஒரு திரைப்படம். அதனைப் பற்றிய உரையாடல்களும் சிறப்பாகவே மற்றவரிடம் போய் சேர்ந்தது.  ' 96 ' ரசித்து பார்த்தப்படம். பொதுவாகவே, விஜய் சேதுபதி படங்கள் என்றால்  மிகவும் பிடிக்கும். படிக்கும் வயதில், காதல் எல்லாம் ஏற்பட்டதே இல்லை. ஆனால், நமக்கே ஏற்பட்டது போன்ற ஒரு  உணர்வை கொடுத்தது அந்த படம்.  அருமையான படம். 

மொத்தத்தில், இந்த 2018 நன்றாகவே முடிந்திருக்கிறது. வரும் 2019 ஆம் ஆண்டிலாவது இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.  குறைவாக இருந்தாலும், அது பயனுள்ள நல்ல பதிவுகளாக முகநூலில் பதிய வேண்டும். நல்ல  கட்டுரைகள்,  சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான பயிற்சியும், முயற்சியும் எடுக்க வேண்டும்.!

எவ்வளவு தான் பிரச்சனைகள், இடையூறுகள், உடல் உபாதைகள், என்று இருந்தாலும், இவ்வாண்டு சிறப்பாகவே முடிகிறது. 2018 - ற்கு விடைகொடுத்து , வரும் 2019 ஆம் ஆண்டை மகிழ்வுடன் வரவேற்போம்.!

நண்பர்கள் அனைவருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துகள்.!

  





Monday, 24 December 2018

தந்தை பெரியாரின் 45-வது நினைவு நாள்.

உடலால் நம்மைவிட்டு மறைந்திருந்தாலும், கொள்கைகளாய், கருத்தியல்களாய், சித்தாந்தமாய் இன்றும் கூட நம்மை வழி நடத்திக்கொண்டிருப்பவர் #தந்தைபெரியார்.  

இந்தியாவிலேயே, தமிழ்நாடு, கல்வி, உயர் கல்வி,  சமூகநீதி , சமத்துவம், இடஒதுக்கீடு, அரசு பணிகள், பெண் விடுதலை, பெண் கல்வி, என அனைத்திலுமே முதலில் இருப்பதற்கான முழு காரணம், #தந்தைபெரியார் தான். திராவிடர் கழகமும், அதன் தொடர் போராட்டங்களும், அதனால் கிடைத்த பலன்களும், வெற்றிகளும், தான் என்பதை வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். இந்த முன்னிலை தான், இத்தனை மாநிலங்களில், தமிழகம் மட்டுமே பேசும் திராவிடம் தான், பார்ப்பனியத்திற்கு கடும் சவாலாக இருக்கிறது.  பார்ப்பனீயத்தின் கோரமுகத்தை அறிந்தது மட்டுமல்லாமல், அதனை முறியடித்தது, மேலும், அனைத்து மாநிலங்களையும் ஓன்று திரட்டி, அதனை முற்றிலும் விரட்டியடிப்பது   என எல்லாமே சாத்தியப்படுத்தும் வல்லமை திராவிடம் பேசும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உண்டு.  ஆதலால் தான்,  பார்பனீயத்தின் தலைமையிடமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ். யின் சித்தாந்தத்தை பின்பற்றும் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்தது முதல், தமிழகம் குறிவைத்து தாக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், மத்திய பாஜக மோடி அரசின் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இயங்குகிறது என்பது வெட்டவெளிச்சமான உண்மை. அனைத்துமே காவி மயமாக்க சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு, செயல் வடிவம் பெற தொடங்கிவிட்டன. சமூக சீர்திருத்தம் செய்வது என்ற பணியை தாண்டி, நம் உரிமைகளை மீட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது தான்  நிதர்சனமான உண்மை. 

அன்றைக்கு விட, இன்று தான், நம் பெரியார் மிகவும் தேவைப்படுகிறார். எங்கெல்லாம் சமத்துவமின்மை இருக்கிறதோ, எங்கெல்லாம் பகுத்தறிவிற்கு இடமில்லையோ , அங்கெல்லாம் பெரியார் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பார் என்பதில் சிறிதும் அட்டியில்லை.

இன்று டிசம்பர் 24, தந்தை பெரியாரின், 45 - வது நினைவு நாளில், அதிக அளவில் , அனைத்து தளங்களிலும் பெரியாரை கொண்டு போய்  சேர்ப்போம் என உறுதி கொள்வோம்.!



வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

Tuesday, 18 December 2018

இனி, போர்வெல்லுக்கும் வரி கட்டவேண்டி வருமா?

என்னுடைய சிறு வயதில், எங்கள் தெருவில் முக்கால்வாசி வீடுகள் கீற்று மற்றும் ஓட்டு வீடுகள் தான். ஒரு சில வீடுகள் மட்டுமே தான் தளம் போட்ட மாடி வீடுகள். எங்கள் வீடு ஓட்டு வீடு.  எல்லோர் வீட்டிலும் கிணறு இருக்கும். ஆனால் சிலரின் வீட்டு கிணறு மட்டும் தான் குடிப்பதற்கு ஏதுவானதாக  இருக்கும். எங்கள் வீட்டு கிணறும் கொஞ்சம் உப்பு  கரிக்கும். அதனால், அடுத்த தெருவில் உள்ள  ஒரு வீட்டின் கிணற்றில் இருந்து  தான், தினமும்  குடிதண்ணீர் இறைத்து கொண்டு வருவோம். நாங்கள் வளர்ந்து வரும் சமயத்திலேயே, எங்கள் பகுதியில், கார்ப்பரேஷன் பம்ப் போடப்பட்டது. அதற்கு பணம் கட்டி, பைப் லைனை தெருவிற்குள்  இழுத்து, பம்ப் தேவையான பொருட்கள் என அப்பவே (80 களின் கடைசியில்) அதற்கான செலவு 2000 ரூபாய் வரை ஆனது. அவ்வளவு செலவு  செய்தும் தண்ணீர் பகலில் வராது. இரவு நேரத்தில் மட்டுமே வரும். இதற்காக அலாரம் வைத்து, எழுந்திருச்சி , தண்ணீர்  அடித்துவைத்த காலமெல்லாம் உண்டு. 

நாளடைவில், கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. எவ்வளவு உள் உறை இறக்கினாலும், நீர் பற்றாத நிலை ஏற்பட்டது. அனேகமாக, எல்லோர் வீடும் தளம் போட்ட மாடி வீடுகளாகின. எல்லோருக்குமே  இறைப்பது என்பது  கடினமான வேலையாகி போயின. அதனால், கிணறு எல்லாம் போர்வெல் ஆகின. முதலில், 50 அடி  என்பது பிறகு 100 அடிகள் என மாறி, இப்போது 150 அடிகள்  வரை  ஆழமாக துளைத்து போட்டால் மட்டுமே தேவையான நீர் கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும், அது புழங்குவதற்கு மட்டுமே தான். உப்பு கரிப்பதால், குடிக்க முடிவதில்லை. நமக்கு தான் மெட்ரோ வாட்டர் இருக்கிறதே என்பதால் எல்லோருக்கும் பிரச்சனை இல்லை. அந்த நீரை குடிக்க பயன்படுத்தினார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல், அந்த நீரும் சரிவர வருவதில்லை. சில இடங்களில் வருவதே இல்லை. ஆதலால், கேன் வாட்டர் வாங்கும் பழக்கம் ஏற்பட்டது. தண்ணீருக்கான வரியும் கட்டிக்கொண்டு, குடிப்பதற்கு கேன் வாட்டருக்கும் செலவு செய்யும் நிலைமை ஏற்பட்டது. இது சென்னைவாசிகளுக்கு மட்டும் தான் என்றில்லை. ஊர்களிலும் தண்ணீர் வாங்கி தான் குடிக்கிறார்கள். 

இப்ப எதற்கு இந்த பதிவு என்று தானே உங்களுக்கு தோன்றுகிறது. இந்த குடிநீருக்காக நாம் செலவு செய்வது போதாததென்று, மத்தியில் இருக்கும் மோடி அரசாங்கம், நாம் புழங்கும் போர்வெல் (ஆழ்துளைக்கிணறு) நீருக்கும் அடுத்த ஆண்டிலிருந்து வரி போட போகிறதாம். ஏற்கனவே வரி கட்டிக்கொண்டிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வருவதில்லை. இதில், நாம் செலவு செய்து, நம்முடைய இடத்தில் போடப்படும் போர்வெல் க்கு கூட வரி கட்ட வேண்டுமென்றால், இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?

பாசிச பாஜக  ஆட்சியில், இன்னும் என்னென்னவெல்லாம் நாம் சந்திக்க போகிறோமோ!

Friday, 14 December 2018

மைக்ரேன்

“ அப்படியே  கண்ணைப்  பிடுங்கி வெளியில் எறிந்து விடலாமா என்பது போன்ற ஒரு வலி. தலையில் கிரில்லிங் மிசினை வைத்து, குடைந்துக் கொண்டே போவது போன்ற ஒரு குடைச்சல். காதோ... சொல்லவே வேண்டாம், சுத்தியல் வைத்து அடிப்பது போல், அவ்வப்போது ‘ விண்’  ' விண் ' என்ற வலி.  அந்த வலியின் போது தான், தாங்க முடியாமல், கட்டுப்படுத்த முடியாமல்,  கண்ணீர் வழிய ஆரம்பித்து விடும்.  இதெல்லாமே  ஒரு பக்கம் தான். மிகச் சரியாக ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல் வலி இருக்குமே தவிர, மறுபக்கம் கொஞ்சம் கூட வலி இருக்காது. அதனால் தான் அதற்கு #ஒற்றைதலைவலி என்று சரியான பெயர் வைத்திருக்கிறார்கள் போல ... "

வலியை அனுபவித்ததில்லையே தவிர, கேள்விபட்டிருக்கிறேன், வந்தவர்களைப் பார்த்தும் இருக்கிறேன். இருந்தாலும், 
' தலைவலியும், வயித்து வலியும் தனக்கு வந்தால் தெரியும் ' 
என்ற சொல்வடை நமக்கு தெரிந்த ஓன்று தானே.  வந்தபிறகு தான் முழுமையாக தெரிந்தது. சாதாரணமான தலைவலியை விட பல மடங்கு தீவிரமானது. அதனோடு . இதனை ஒப்பிடவே முடியாது. அந்த அளவிற்கு வலி பின்னியெடுத்து விடுகிறது. கடந்த மூன்று மாதங்களாகவே தலைவலி இருந்தது. ஆனால், இது மைக்ரேன் என்று அப்போது தோன்றவில்லை. மகன் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் பயண ஏற்பாடு, மாமியார் உடல்நலமின்மை, அதன்பிறகு அவர்களின் மரணம் என தொடர்ந்து பிசியாக இருந்ததால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தலைவலி தைலம் தேய்த்துக்கொள்ளுதல், சூடா காபி குடித்தல், ராஜா பாடல்கள் கேட்டல், கடைசியாக தூங்கி விழித்தல் என ஒட்டியாகி விட்டாச்சு. ஆனால், மூன்று வாரங்களுக்கு முன்பு, கடுமையான வலி. தூங்ககூட முடியவில்லை. தொடர்ந்து வலியின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போனது. வேறு வழியில்லை. மருத்துவரை அணுகவேண்டியது தான் என்ற கட்டாயம். ஏற்கனவே, இதற்கு ஆங்கில மருத்துவம் முழு பயன் தராது. ஹோமியோபதி மட்டுமே பலன் தரும் என்று கேள்வி பட்டிருந்ததால், உடனே அதற்கான மருத்துவரை தான் பார்த்தோம்.
30 வயது தான் இருக்கும், ஒரு பெண் மருத்துவர். அவ்வளவு அழகாக, தெளிவாக, புரியும்படி  எடுத்து சொன்னார்கள். மருந்துடன், தேவையான தூக்கம், நேரத்திற்கு சாப்பிடுதல், அதிக வருத்தம், கோவம், கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள். மேலும் இந்த PMS பிரீட்டில் இருக்கும் பெண்களுக்கும் தற்போது அதிகமாக வருகிறது என்றும் சொன்னார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு, கை வலி,தலையின் பின்பக்க வலி, தோள்பட்டை வலி வந்ததும், இதற்கான அறிகுறிதானாம். பிறகு, தண்ணீரில்  கலந்து குடிக்கும்  ஒரு திரவமருந்து, சவ்வரிசி போன்ற ஒரு மாத்திரை கொடுத்தார்கள். இதனை வலி இருக்கும் மட்டும் நிறுத்தாமல் இருவேளை சாப்பிடவும் சொன்னார்கள். சாப்பிட ஆரம்பித்ததிலிருந்து, படிப்படியாக வலி குறைந்தது. தொடர்ச்சியாக இருந்த வலி, இடைவெளி விட்டு, வந்தது. வலியின் தீவிரம் கூட குறைய துவங்கியது. அதன்பிறகு, இடைவெளி அதிகமானது. ஒருநாளைக்கு மூன்று முறை, இரு முறை, ஒரு முறை என குறைந்து, பத்து நாட்களில் முழுவதும் குறைந்து விட்டது. திரவ மருந்தை மட்டும் நிறுத்திவிட்டார்கள். அந்த சவ்வரிசி மாத்திரையை மட்டும், மூன்று அல்லது தேவைப்படின், ஆறு  மாதங்கள் வரை  சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.



இந்த பதிவிற்கான நோக்கம் என்னவென்றால், மைக்ரேன் இருப்பவர்கள், ஹோமியோபதி சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள், நிச்சயம் குணமாகிறது என்பதை அனுபவப்பூர்வமாக நான் உணர்ந்ததை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஆவலில் பதிகிறேன்.   

#Maigraine #Homeopathy 

Saturday, 10 November 2018

எது இலவசங்கள்.!

இந்தியாவிலேயே, ஒரு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு. மக்களின்  அடிப்படை தேவைகளான, உணவு, உறைவிடம், கல்வி, பாதுகாப்பு, என எல்லாவகையிலும், மற்ற மாநிலங்களை விட , அதிலும் வடமாநிலங்களை விட 50 ஆண்டுகள் முன்னோக்கி இருக்கிறது என்பது தான்  நிதர்சனமான உண்மை. ஆனால், பார்பனீயமும், திராவிட எதிர்ப்பாளர்களும் ஓன்று சேர்ந்து, எதோ திராவிட ஆட்சிகள், மிக முக்கியமாக திமுக, தமிழ்நாட்டை கெடுத்துவிட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்த செய்யப்படும் சூழ்ச்சி தான், பல்வேறு காலகட்டங்களில், பலவாறு திரித்து விடும் நரித்தனத்தை செய்துகொண்டிருக்கின்றனர். அவ்வப்போது எதாவது ஒன்றை கையில் எடுப்பார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தமிழ்நாடு, இப்போது எப்படி இருக்கிறது, இப்போதிருக்கும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எந்தளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதனை பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.  உண்மையை மறைத்து, மக்களின் சிந்தனையை திசைதிருப்பி விட முயற்சி செய்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது மக்களின் முன்னால்  வந்திருப்பவர்கள், முருகதாஸும், திராவிடச் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரான ஜெயமோகனும் ன்பத்தில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நடிகர் விஜய், இவர்களின் கையில் வசமாக சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பது தான் சர்கார் படத்தின் கதை மூலம் நமக்கு தெரிகிறது.!  

எது இலவசங்கள்....

இலவசங்கள் என்பது சமூகநலத்திட்டங்கள், மக்களை வறுமைக்கோட்டிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கு உதவுபவை.  மனிதனின் மிக முக்கிய தேவையான உணவு, குழந்தைகளுக்கு மதிய உணவாகவும், முட்டையுடன் கூடிய சத்துணவாகவும், குடும்பங்களுக்கு ரேஷனில் வழங்கும் அரிசியாகவும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. உறைவிடங்கள் என்று எடுத்துக்கொண்டால், கூரை  வீடுகளுக்கு சிமெண்ட் ஓடு போட்டதிலிருந்து, சமத்துவபுரம் வரை சாதித்து காட்டியது, ஜாதி ஒழிப்பு- இலவச வீடு, உணவு - கல்வி, என ஒரே  கல்லில் இரண்டு மாங்காய் என அடித்தது எல்லாம் திராவிடக்கட்சியான திமுக  தானே.!

மாணவர்களுக்கு இலவச பஸ்  பாஸ்,  10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவி, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறும் கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவச உதவி பணம், இவையெல்லாம் சமூக நலத்திட்டங்கள் தான். ஒரு தனிமனிதன் கல்வி, அதன் மூலம்  கிடைக்கும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என  உயர்வானேயானால், அச்சமூகமே  உயராதா? இது சமூக வளர்ச்சி ஆகாதா???

தமிழ்மண் சமூகநீதி பேசும் மண். வளர்ச்சித்திட்டங்கள் எந்த அளவிற்கு தமிழகத்தை முன்னேற்றியிருக்கிறது என்பதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள்.  25, 30 ஆண்டுகளுக்கு முன்னே நாம் சென்றுக்கொண்டிருக்கிறோம். நம்மைப்பார்த்து தான்  மற்ற மாநிலங்கள் மக்கள் நல செயல் திட்டங்களை தீட்டுகின்றன. நல்ல செயல் திட்டங்கள் எப்படி, திரிக்கப்படுகின்றன என்பதை பாருங்கள்  ... விஜய்க்கு இது தெரியுமோ, தெரியாதோ ... தெரியவில்லை. ஆனால், அரசியலுக்கு வருவதென்றால், இதையெல்லாம் தெரிந்துகொண்டு வர வேண்டும் என்பது மிக முக்கியம். !

" வயிறு நிறைந்தபிறகு, நாம் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் மற்றவர்களுடையது என்ற வசனத்தை வைத்த, அதே  முருகதாஸ், இப்போது, இலவசங்கள் நாட்டை கெடுகின்றன என்ற ஒரு வசனத்தையும் வைக்கிறார். இல்லாதவர்களுக்கு கொடுப்பது என்பது எப்படி இலவசமாகும்?
 சமூகத்தை ஏற்றத்தாழ்வில்லாமல் மாற்றுவது எப்படி கெடுப்பதாகும்?" 

சொல்லப்படும் கருத்தில், உண்மை, நேர்மை இருக்க வேண்டும். தெளிவு இருக்க வேண்டும். இனியாவது கதையை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருங்கள் என விஜய்யை கேட்டுக்கொள்கிறோம்.!

( பி.கு: விஜய், தமிழ்நாட்டிற்கு சிறிதும்  ஒத்துவராத, சித்தாந்தத்தைக் கொண்டிருக்கும்  ஜெமோ க்களின் ,  துணையை நாடாதீர்கள். உங்களை இல்லாமல் செய்து விடுவார்கள்.)

Thursday, 1 November 2018

உரையாடல்.

உரையாடல் என்பது ஒரு மிகச் சிறந்த கலை. எல்லோராலும் அதை சிறப்பாக செய்யமுடிவதில்லை எனபது தான் மிகவும் வருத்தப்படவைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.  ஒருவர் பேசுவதை, பொறுமையாக உள்வாங்கிவிட்டு, பிறகு அதற்கான பதிலை சொல்லவேண்டும். அல்லது அதனைப்பற்றிய, தங்களின் கருத்தை முன்வைக்கலாம். அப்போது தானே, அனைவரின் கருத்தும் பேசப்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கருத்துப்பரிமாற்றம் தானே, உரையாடலில் கலந்திருக்கும் அனைவரையும் சிந்திக்கவைக்கும். 

பொது அறிவு மற்றும் தத்துவங்கள், சித்தாந்தங்கள் என  கருத்து கலவையாக, ஒரு மிகச்சிறந்த கலந்துரையாடலாக, செவிகளுக்கு விருந்தாக அமையும். ஆனால், ஒருசிலர் இந்த அழகான கலந்துரையாடலை, விவாதமேடையாக்கி, அதில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி, அந்த இனிமையான சூழலை  கெடுத்துவிடுகிறார்கள். இதெல்லாம் வீண்விவாதம் என்று நினைக்கும் நிலைக்கு நம்மை தள்ளிவிடுகிறார்கள்.!

Conversation, Discussion வேறு ...  Argumentation வேறு என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்வது சாலச்சிறந்தது.!

Wednesday, 17 October 2018

அர்த்தமுள்ள இந்துமதத்தில் தான் எவ்வளவு கட்டுப்பாடுகள்.!

கேரளாவில், நிலக்கல்லில், கோவிலுக்கு போகும் பெண்பக்தர் கார் மீது கல் வீச்சு.!

செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் கார் மீதும் கல் வீச்சு.!

ஒரு வயதான பெண்மணியை, போராட்டக்களத்தில் அழைத்துவந்து உட்கார வைக்கின்றனர் காவிகள்.!

அனைத்து  வயது பெண்கள் எல்லாம் சேர்ந்து , பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று போராடுகின்றனர்.!

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், ஏன் இந்த வன்முறைகள்...?

இது தான், எப்போதும் அவர்களுடைய தந்திரமாக இருக்கிறது.! 

நம் கையைக்கொண்டே நம் கண்ணை குத்துவது போல், ஒடுக்கப்படுத்தப்பட்டவர்கள் மூலமாகவே, ஒடுக்கப்படுத்தப்பட்டவர்களை தாக்குவது.!

"  நீ எவ்வளவு தான் முன்னேறினாலும், நீ ஒரு பெண், நீ ஒரு பெண், உன்னுடைய சுதந்திரம் என்பது வரையறைக்கு உட்பட்டது , இதற்கு மேல் உனக்கு அனுமதியில்லை என்பதை பெண்கள் மூலமாகவே,, பெண்களுக்கு அச்சுறுத்துவது ..."

அர்த்தமுள்ள இந்துமதத்தில்(!) தான் எத்தனை, எத்தனை கட்டுப்பாடுகள், வன்முறைகள், மனிதநேயமற்ற கோட்பாடுகள்.!

Tuesday, 16 October 2018

பெரியார் உலகத்திற்கான தலைவர்.

பெரியாரை, கன்னடவெறியர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார் என்று சொல்லும் தமிழ் தேசியவாதிகளும் இருக்கின்றார்கள். பெரியார், சூத்திரர்களுக்கு மட்டும் தான் உழைத்தார். தலித் மக்களை கண்டுக்கவே இல்லை என்று சொல்லும் தலித்தியம் பேசுபவர்களும்  இருக்கிறார்கள்.!

இதற்கெல்லாம் பலபடிகள் பின்னுக்கு  போய் , பாரிசாலன் என்பவர், " கிருஷ்ணதேவாயர் காலத்தில், தமிழர்களை அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்களாம். அவர்களுக்கு பக்கத்தில், பார்ப்பனர்கள் இருந்தார்களாம். பிரிட்டிஷ் ஆட்சி வந்தபிறகு , அந்த பார்ப்பனர்கள் இவர்களை மதிக்காமல், ஆங்கிலேயர்களிடம் போய்விட்டார்களாம். அதனால், தான் பெரியார் பார்ப்பனர்களை எதிர்கிறாராம்." என்று ஏதோதோ உளறிக்கொட்டும் ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது. அதில் பேசப்படும் அனைத்தும், எவ்வளவு பொய்கள், பித்தலாட்டங்கள்... 

பெரியார் என்பவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல.. இந்தியாவிற்கு மட்டுமல்ல .. உலகத்திற்கான தலைவர்.

தந்தை பெரியாரை விமர்சியுங்கள். ஆனால், அதற்கு முன்னாள், அவரை நன்கு படித்துவிட்டு வந்து பேசுங்கள். 

இதோ, கீழே கொடுக்கப்பட்டவை, பெரியாரே சொன்னவை....

 இதற்கும் பிறகும், உங்களால் பெரியாரை புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், அதில், காழ்ப்புணர்ச்சி மட்டுமே இருக்கமுடியுமே தவிர உண்மை சிறிதும் இருக்க வாய்ப்பில்லை.!

" வலிமையான நாடு வலிமைகுறைந்த நாட்டை ஆக்கிரமிக்க நினைக்குமேயானால் நான் “ஒடுக்கப்படும்” நாட்டின் பக்கம் நின்று பெரிய நாட்டை எதிர்ப்பேன்.

அந்த வலிமை குறைந்த நாட்டில் ஒரு பெரிய மதமிருந்து அது மற்ற மதங்களை “ஒடுக்குமானால்” நான் அந்த பெரிய மதத்தை எதிர்த்து போராடுவேன்.

அந்த சிறு மதங்களில் சாதி இருந்து அதில் மேல் சாதிக்காரன் சிலரை கீழ் சாதியென “ஒடுக்கினால்” நான் கீழ்சாதிக்காரன் பக்கம் நின்று மேல்சாதிக்காரனை எதிர்ப்பேன்

அந்த கீழ்சாதிக்காரன் ஒரு தொழிற்சாலை நடத்தி ஒரு முதலாளியாக நின்று தொழிலாளிகளின் “உரிமையை பறிப்பானேயானால்”  நான் தொழிலாளி பக்கம் நின்று முதலாளியை எதிர்ப்பேன்.

நான் உழைப்பவன் என்கிற பெயரில் அந்த தொழிலாளி வீட்டில் பெண்ணை “ஒடுக்குவானேயானால்” நான் அந்த பெண்ணுக்கு பக்கத்தில் இருந்து அந்த தொழிலாளியை எதிர்ப்பேன்."

- பெரியார்.

Thursday, 11 October 2018

சர்வதேச பெண்குழந்தைகள் தினம்.

வளர்ந்த நாடுகள் அனைத்திலும் பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். இங்கே பெண்கள் சுதந்திரமாக சிந்திக்கக்கூட முடியவில்லை. அதுவும், பெண்களுக்கு பாதுகாப்பு  இல்லை என்று சொல்வது போய், தற்போது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லக் கூடியளவிற்கு  பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கும்  காலத்தில் நாம் இருக்கிறோம்.!
மாற்றப்படவேண்டியவை இங்கு நிறைய இருக்கின்றன. எந்தவொரு மாற்றமும், சீர்திருத்தமும் நம் வீடுகளிலிருந்து துவங்குவோம்.!

#அக்டோபர்11
#சர்வதேச_பெண்குழந்தைகள்_தினம் 

Tuesday, 9 October 2018

பரியேறும் பெருமாள் BABL (மேல ஒரு கோடு)

திரையிடப்பட்டு 10 நாட்களுக்குப்பிறகு தான்  பார்க்க முடிந்தது. அதற்குள், எத்தனை, எத்தனை முகநூல் பதிவுகள், வாட்ஸ்ஆப் பதிவுகள் என படித்து, ஓரளவிற்கு கதை தெரிந்துவிட்டது. அப்படியிருந்தும், போய் உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே, மனம் கனக்க தொடங்கிவிட்டது. கண்களில் நீர் வழிவதை தடுக்கமுடியவில்லை. படம் முடிந்தும், மனஅழுத்தம் தொடர்கிறது. அந்த பாதிப்பிலிருந்து வெளிவர சில நாட்கள் பிடிக்கும் என நினைக்கிறேன். இதில் யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது . பார்த்த அனைவருக்கும் இதே உணர்வு தான் இருந்திருக்கும். 
அப்படி என்ன தான் சொல்லப்பட்டிருக்கிறது .. அந்த படத்தில்???
நிஜத்தை அப்படியே சொல்லியிருக்கிறார்கள். நடந்த உண்மைகளை, நடந்துகொண்டிருக்கும் உண்மைகளை அப்படியே சற்றும் பிசகாமல், வாழ்ந்துகாட்டிருக்கிறார்கள். அதனால் தான், அதில் சினிமா தனம் கொஞ்சம் கூட இல்லாமல், பார்பபவர்களையும், புளியங்குளம் என்ற ஊருக்கே அழைத்து  சென்று, அந்த வாழ்வியலோடு சேர்ந்து நம்மையும் வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் தோழர் மாரி செல்வராஜ் அவர்கள்.
எல்லோருமே எழுதிவிட்டார்கள். நாம் என்ன எழுத போகிறோம் என்று முதலில் தோன்றியது. ஆனால், இப்படம் தொடர்ந்து எழுதப்பட வேண்டும். பேசப்பட வேண்டும். விவாதத்திற்கு உட்பட வேண்டும். அப்போது தான் பரியன்கள் நாடு முழுவதும் அறியப்படுவார்கள். ஜாதிவெறியின் வன்மத்தை, இந்தளவிற்கு எந்த தமிழ் சினிமாவும் இதற்கு முன்னால் சொன்னதில்லை. உங்களுக்கு தெரிந்த, அறிந்த, பழகிய அனைவரிடமும் இப்படத்தைப் பார்க்க சொல்லுங்கள். பார்த்தவர்களை, உரையாடச் சொல்லுங்கள். 

ஒவ்வொரு காட்சியும் நம்மை பல கேள்விக்குள்ளாக்குகிறது. பரியன் ஆங்கிலம் தெரியாமல், கேலிசெய்யப்படும்போது, கிராமங்களில், இன்னமும் சரியான ஆங்கில கல்வி , ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.  இடைநிலை ஜாதியினரின், ஜாதிவெறி  கொடுமை, தீண்டாமை  எந்தளவிற்கு ஒடுக்கப்படுத்தப்பட்ட , தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்களின் மீது தாக்கி, அவர்களின் வாழ்வை சின்னாபின்னமாக ஆக்குகிறது என்பதை இதைவிட தெளிவாக, நேர்மையாக, பக்குவமாக சொல்லிவிட முடியாது. தோழியின் இல்ல திருமணத்திற்கு செல்லும் பிரியன் மீது தாக்குதல் நடத்தி, அவனுடைய முகத்தில் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு ஜாதிவெறி இருக்கிறது என்பதை பார்க்கும்போது, இப்படிப்பட்ட சமூகத்திலா  நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கோவமும், குற்றவுணர்ச்சியும் மேலோங்குகிறது. பரியனின் தந்தையுடைய வேட்டியை உருவி, ரோட்டில் கையை கூப்பி, கதறி அழுதபடி, ஓடவிடும் காட்சி இருக்கிறதே,  சகமனிதனை , மனிதனாக மதிக்காத, இந்த ஜாதிய கட்டமைப்பு சமூகத்தின் மீது, உச்சப்பட்ச அருவெறுப்பு  வந்ததை மறுப்பதற்கில்லை. 

ஜாதிவெறிபிடித்த, அந்த வில்லன் கிழவனை காட்டும்போதெல்லாம், ' ஐயோ.. இப்ப என்ன செய்ய போகிறானோ .. ' என்ற அச்சம் படம் முழுவதும் இருந்துகொண்டே இருந்தது. ஆனந்த்கள் அதிகமாக உருவாக வேண்டும். அப்போது தான் பரியன்கள்  ஊக்குவிக்கப்படுவார்கள். கல்லூரி முதல்வர்,  சொல்வது போல், பரியன்கள் மேலே வருவதற்கு, கல்வி மட்டும் தான் அவர்களுக்கான முதல்படி. பெரியார் போராடி வெற்றிபெற்ற இடஒதுக்கீடு இச்சமூகத்தை மேலே ஏறவைக்கும் ஏணியாக இருக்கிறது. அண்ணலும், பெரியாரும்  இந்த ஜாதியொழிப்பிற்கு ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்.   இருந்தும் இன்னமும், இப்படி தான் இருக்கிறது என்பதை சகித்துக்கொள்ளமுடியவில்லை. படிப்பதற்கு இடஒதுக்கீடு என்ற உரிமை கிடைத்தும், இவர்கள் படித்து மேலே வருவதற்குள், எவ்வளவு அவமானங்களை தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பது மிகவும் கொடுமையான விசயமாக இருக்கிறது.

" இந்த விண்வெளியுகத்திலும்,  ஒரு தனிமனிதன் தன்னுடைய கடுமையான முயற்சிகளுக்கு  பிறகே, தன்னுடைய ஜாதியின் எல்லைகளை மீறி, வாழ முடியும். ஜாதியைப் பற்றி, நுட்பமான, ஆழமானப் பார்வை கிடைக்கும்போது,  அதற்கான தீர்வுகளும் நம் கண்ணில் புலப்படும் " 

என்று பேராசிரியர் தொ.பரமசிவன் தன்னுடைய பண்பாட்டு அசைவுகள் நூலில் சொல்லியிருப்பார். அது தான் இப்படம் சொல்லும் கருத்தும். நடந்துக்கொண்டிருக்கும், உண்மைகளை நம் கண்முன்னே காட்டியிருக்கிறார். இதற்கான தீர்வு, இந்த ஜாதிய சமூகத்தில் வாழும் மக்களாகிய நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிளைமேக்ஸ் மிகச்சிறப்பு. அது தான் இப்படத்தை, சினிமாதனத்திலிருந்து, அப்பாற்பட்ட இயல்புநிலைக்கு கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. மக்களை சிந்திக்க வைக்கும், இம்மாதிரி படங்கள் அதிகம் வர வேண்டும். இப்படத்தை 10 நாட்களில், இந்த அளவிற்கு வெற்றிபெற்ற வைத்ததில் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் தோழர் ரஞ்சித் அவர்களுக்கும், இயக்குனர் தோழர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கும், படத்தில் நடித்த மொத்த படக்குழுவினருக்கும் எவ்வளவு பாராட்டுகள் சொன்னாலும் தகும்.  

மேலும், மேலும், பரியன்கள் அதிகளவில் வருவதற்கு வாழ்த்துகள்.!

#பரியேறும்பெருமாள் 

Monday, 1 October 2018

மத்திய, மாநில அரசுகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அரசுகள்.!

மக்களுக்கு விருப்பமில்லாதவற்றை அரசு செய்யாது என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே, மறுபுறம் , தங்களுக்குரிய மக்கள்விரோதப் போக்கையே கடைபிடித்துக்கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இதோ, இன்று, தமிழகத்தில், மூன்று இடங்களில் ஹைடிரோகார்பன் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது. அதில் ஓன்று, ஒஎன்ஜிசிக்கும், மற்ற இரண்டு வேதாந்தா குழுமத்திற்கும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, மக்கள் கருத்து என்ற பெயரில், வேறு இடத்திலிருந்து, ஆட்களை கொணர்ந்து, அவர்களுக்கு சாதகமாக சொல்ல வைத்து விட்டது. இன்னும் பசுமைத்தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கவேண்டும். அவ்வளவு தான். அதன்பிறகு அதுவும் இயங்க தொடங்கிவிடும். போராட்டத்தை, துப்பாக்கிசூடு மூலம் நிறுத்தியாகி விட்டது. உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் கொடுத்தாகிவிட்டது.  ஆலை திறப்பதினால், அவர்களுக்கு என்ன கேடு வந்துவிட போகிறது.நோயினால், இறப்பவர்கள் நம் மக்கள் தானே. ஒடுக்கப்படுத்தப்பட்ட மனிதவளம் ஆரோக்கியமாக இருந்தால், அவர்களுக்கு ஆபத்து என தெரிந்து தானே செய்கின்றன.!

இன்னும் என்ன பாக்கி இருக்கிறது ...  நியூட்ரினோ, எட்டுவழிசாலை. அதுவும் இதேபோல் தகிடுதித்தம் செய்தாவது காரியத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள். கனிமவளங்களை அழித்தல், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, பொருளாதாரம் என அனைத்தையும் முடக்கிவிட்டு, அதன்முலம் தங்களின் மனுநீதியை பறைசாற்றிக்கொள்ள எத்தனித்திருக்கிறது #பார்ப்பனியம். அதன் கைக்கூலிகளாக நம் மாநில அரசு செயல்படுகிறது. இன்று வடக்கிலிருந்து ஒரு குரல்... சுமித்ரா மகாஜன் மூலமாக ... ' இடஒதுக்கீடு நாட்டின் வளர்ச்சியை கொடுக்குமா?' என்ற ஒரு கேள்வி.!

இடஒதுக்கீடு இதுவரை வளர்ச்சியை கொடுக்கவில்லையா... ஒடுக்கப்படுத்தப்பட்ட  சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாகவும், வக்கீல்களாகவும், ஆசிரியர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும், கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேறி இருக்கிறார்களே ...  ஒரு சமூகமே முன்னேறிக்கொண்டிருக்கிறது. அது முன்னேற்றமாக தெரியவில்லை அவர்களுக்கு.! 
ஏனென்றால், அவர்களை பொருத்தவரை, நாமெல்லாம் மனிதர்களே அல்ல என்பது தான்.!

நேற்று, ஒரு காணொளியில், அய்யா. சுபவீ அவர்கள் பேசும் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர்கள் ஒன்றை தெளிவாக சொல்கிறார்கள்....
" நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரியுங்கள். ஆனால், யாரை எதிர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்."
இந்த புரிதல் தான் இப்போது நம் எல்லோருக்கும் தேவை. நாம் எதிர்க்க வேண்டியவர்கள், மக்கள் நலனில் விருப்பமில்லாதவர்கள். இன்னும் சொல்லப்போனால், மக்களுக்கு கெடுதல் செய்வதில் முனைப்பு காட்டுபவர்கள். ஒற்றை தத்துவத்தில் நம்பிக்கைகொண்டு, அதை செயல்படுத்த துடித்துக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசும் ,  மாநில உரிமைகளை, மத்திய அரசிடம் அடகுவைத்துவிட்டு துணைபோய் கொண்டிருக்கும் , அதிமுகவும் தான் என்பதை   உணர வேண்டும் நணபர்களே. இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில், நாம் எல்லோரும், அவரவர்கள் தளத்தில் இருந்துகொண்டே  செயல் படுத்துவோம். இனியும் தாமதிக்காமல், விரைவாக இந்த பணி முடிப்போம். புற்று போல் பேரழிவை தரக்கூடிய இந்த இரு ஆட்சிகளையும் விரட்டியடிப்போம்.!

Friday, 28 September 2018

497 சட்டப்பிரிவு நீக்கம் வரவேற்கப்பட வேண்டிய ஓன்று ... ஏன்?

நேற்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு , மணமான ஆண், மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்தால் குற்றமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற ஒரு தீர்ப்பு , பாலின சமத்துவம் மற்றும் பெண்களை ஒரு காமப்பொருளாக, மனைவி என்பவள் ஆண்களின் உடைமைகளாக  பார்க்கப்படும் 497 சட்டப்பிரிவு நீக்கம்  மிகச்சிறந்த வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு ...  ஏன்???

எல்லாவற்றிலும் பெண்களுக்கு சமத்துவம் கிடைத்துவிட்டதா ... பிறகு எதற்கு இதற்கு மட்டும் சமத்துவம் என்று கேள்வி கேட்பவர்களுக்கு....

எனக்கு 13  வயது இருக்கும் காலக்கட்டத்தில், நாங்கள் வசித்துக்கொண்டிருந்தப் பகுதியில்,  எங்கள் தெருவிற்கு இரண்டு தெரு தள்ளி, ஒரு குடும்பம். அப்போதே படித்த குடும்பம். அப்பா ரயில்வேயில் வேலை செய்கிறார். அம்மா இல்ல நிர்வாகி. மூத்த மகளுக்கு மாநில அரசாங்கத்தில் வேலை. அவரின் இணையர், மத்திய தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்றுகிறார். அடுத்த மகன் எம்.ஏ. படித்தவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். நீண்ட இடைவெளிவிட்டு பிறந்ததால், இளைய  மகன் என்னுடைய  வயது. வெவ்வேறு பள்ளி என்றாலும், ஒரே டியூசனில் படித்துக்கொண்டிருந்ததால், நட்பு ரீதியாக அவரகளின் குடும்பம் பற்றி ஓரளவிற்கு தெரியும். அந்த குடும்பத்தில், அப்போது நடந்த விசயங்களை அம்மா, மற்றும் தெருவில் உள்ள மற்ற  அம்மாக்கள் பேசிக்கொள்வார்கள். அப்போது சிறிய வயது என்பதனால், அவ்வளவாக புரியவில்லை. வளர, வளர புரிந்தது. இரண்டாவது மகன் இருக்கிறாரே, அதாவது, தனியார் கம்பனியில் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் மகன், ஒரு பெண்ணை காதலிக்கிறாராம். அதுவும், அப்பெண், ஒரு ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த  பெண். அப்போதெல்லாம், அவர்களை கேவலமாக பேசுவார்கள். அவர்களின் கலாச்சாரம் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் நம்மவர்களுக்கு இருக்காது. ஆனால், எனக்கு மட்டும் அவர்களை மிகவும் பிடிக்கும். அவர்களுடைய வாழ்வியலை தெரிந்துகொள்வதில் தனி ஆர்வம் உண்டு. அக்குடும்பத்த்து பெண்களின் ஆடை, ஸ்லீவ்லெஸ் கவுன், சிகப்பு உதட்டுச்சாயம், ஹீல்ஸ் வைத்த செருப்பு எல்லாமுமே பிடிக்கும். மிகவும் ரசித்திருக்கிறேன். ஓகே ... நம் பதிவின் நோக்கத்திற்கு வருவோம்.

இந்த செய்தி தெரியவந்ததும், உடனே அவர்களின் மகனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஒத்துக்க மாட்டேன் என்றிருந்த மகனை எப்படியே ஒத்துக்க வைத்து, திருமணமும் நடந்து விட்டது. அந்தக்காவும் அழகாக இருப்பார்கள். ஒரு பரிசோதனைக்கூடத்தில், லேப் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிவதாக கூறினார்கள். ஓராண்டில் ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது. ஆனால், அவரின் கணவர், இன்னமும், அந்த ஆங்கிலோ -இந்தியன் பெண்ணிடம் தொடர்பில் தான் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், இந்த உண்மை அந்த அக்காவிற்கு தெரியவந்து, வீட்டில் மிகப்பெரிய சண்டை. பிறகு தன்னுடைய கைக்குழந்தையுடன், அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். ஒரு ஆறுமாத இடைவெளிக்கு பின், பெரியவர்கள் சமாதானம் செய்து மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.  அதுவும், ஒரு வருடம் என்று தான் நினைக்கிறேன். மீண்டும் அதே பிரச்சனை... இப்போதும் சண்டைபோட்டு சென்று விட்டார். ஆனால், இம்முறை திரும்பி வரவே இல்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அவரை கடைசியாக பார்த்திருக்கிறேன். அதன்பிறகு இன்று வரை அந்த அக்காவை பார்க்கவே  இல்லை. அவர்களின் மகனும், அந்த ஆங்கிலோ -இந்தியன் பெண் வீட்டிற்கே சென்று விட்டார். திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாக கேள்வி. சமீபத்தில், ஆறு மாதத்திற்கு முன்பு, என்னுடன் படித்த அக்குடும்பத்து, இரண்டாவது மகனைப்பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது தெரிய வந்த செய்தி என்னவென்றால், அவனுடைய அண்ணன், மாரடைப்பால் இறந்துவிட்டார். ஆங்கிலோ-இந்தியப்பெண்ணிற்கு பிறந்த மகள் மருத்துவராகி இருக்கிறார். மற்றும் அவனுடைய அண்ணி,  தனியாக வாழ்த்துக்கொண்டிருக்கிறார். பெற்றோர்கள் இறந்து விட்டனர். உடன்பிறந்தவர்களும் கூட இல்லை. திருமணமாகி தனித்தனியே வாழ்கிறார்கள். மகன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டான். திருமணம் கூட ஆகிவிட்டது. 

அந்த அக்காவின் நிலைமையிலிருந்து பாருங்களேன். பெற்றோர் செய்துவைத்த திருமணம். சரியாக அமையவில்லை. 25 வயதில் கணவனைப்பிரிந்தவர்.  கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மகனுக்காக மட்டுமே வாழ்ந்து, மகனும், தன்னைவிட்டு பணி  நிமித்தமாக வெளிநாடு சென்றபிறகு, தற்போது தனியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார். 

இதில், அவருடைய தவறு எதாவது இருக்கிறதா...???
எதற்கு இந்த தண்டனை???
மணவிலக்கு பெற்றுக்கொண்டு, வேறு ஒரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ள அவரின் பெற்றோரும் முயற்சிக்கவில்லை, உடன்பிறந்தவர்களும் உணரவில்லை.!

 இந்த 30 ஆண்டுகளில், அவருக்குப்பிடித்த  ஒரு நல்ல மனிதரையாவது அவர் சந்தித்திருக்க மாட்டாரா???
இவருடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்காதா???
தன்னை உணர்ந்த, தன்னை மதிக்கும் , ஒரு நல்ல நண்பன் வேண்டும் என்ற ஏக்கம் இருந்திருக்காதா... என்ன ??? 
இல்லையென்ற பதில் வந்தால், அது இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் மீதுள்ள அச்சத்தினால் சொல்லும் பொய்யாக தான் இருக்க முடியும்.. அந்த ஏக்கம், எதிர்பார்ப்பு வருவது தானே இயல்பு. 

இந்த அக்காவை போன்று ஆயிரமாயிரம் பெண்கள் நம் சமூகத்தில் இருப்பார்கள். இது தான் நிதர்சனம். இவர்கள் தங்களை, தாங்களே கட்டுப்படுத்திக்கொண்டு வாழ பழக்கப்பட்டிருக்கிறார்கள். நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். இவராவது பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இவரின் கல்வியும், பொருளாதாரமும், தனியாக வாழ துணிச்சலை கொடுத்திருக்கிறது.

 கல்வியறிவு இல்லாத பெண்கள் என்ன செய்வார்கள்?

பிடிக்காத வாழ்வை ஏற்றுக்கொண்டு, தங்களுக்குளேயே, புழுங்கி வாழ்ந்து சாவார்கள். அது முடியவில்லையென்றால், தற்கொலை செய்துகொண்டு சாவார்கள். இது தானே காலகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த அடிமைத்தனத்தை, சுக்குநூறாக உடைத்திருக்கிறது இந்த தீர்ப்பு என்பது தானே மறுக்கமுடியாத உண்மை. 

" கற்பு என்ற ஓன்று இருக்குமானால், அது  இருபாலாருக்கும் வேண்டும். ஆண் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் வாழலாம்,. பெண் மட்டும்  ஒரு கணவருடன் தான் வாழவேண்டும் என்றால், அதில் என்ன நியாயம் இருக்கிறது. அன்பில்லாத, தனக்கு பிடிக்காத  ஒரு வாழ்க்கையை வாழாமல், மணவிலக்குபெற்றுக்கொண்டு, வெளியில் வந்து தனக்கு பிடித்தவருடன் வாழும் துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். " 

என  90 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறாரே .. #தந்தைபெரியார்.
பெரியாரின் கருத்துகள், கொள்கைகள் ஒவ்வொன்றாக வெற்றிபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அது ஒரு default . எது நியாயமோ, எது நேர்மையோ,  எது உண்மையோ அது வென்று தானே வேண்டும்.

இந்த தீர்ப்பு, ஆண்களை தப்பிக்க விடுகிறது. பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பார்வையில் பார்க்கக்  கூடாது. அப்படி பார்த்தோமானால், பெண் விடுதலை என்பது முழுவதும் சாத்தியமாகாது. பெண்கள், கல்வி, பொருளாதாரம், திருமணம்,  ஆகிய உரிமைகளை தாண்டி அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லக்கூடியது. இது அடுத்த படி என்பதை விட, இது தான் பெண்களின் விடுதலைக்கான  நுழைவாயில் என்பது என்னுடைய கருத்து. இது ஒரு தனிமனித சுதந்திரம் என்பது  மட்டுமல்லாமல், பாலியல் சுதந்திரமாக பார்க்கப்பட வேண்டும். இவ்வளவு காலம், திருமணம் என்ற ஒன்று பெண்களை முன்னேறவிடாமல், கட்டிப்போட்டு வைத்திருந்தது.  மேலும், இந்த தீர்ப்பு, சம்பந்தப்பட்டவர்கள் மணவிலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற ஒரு வெளியை ஏற்படுத்திக்  கொடுத்திருக்கிறது. இதனால், குடும்ப கட்டமைப்பு சிதைந்துவிடும் என்று சொல்வது ஒரு வகையில், சரி என்று எடுத்துக்கொண்டாலும், இந்த குடும்ப கட்டமைப்பு தானே இவ்வளவு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அவர்களை முன்னேற விடாமல், அழுத்தி வைத்திருந்தது என்பதையும் பார்க்கக் வேண்டுமல்லவா. அது மட்டுமல்ல ... பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு பதில், பிரிந்துவந்து, பிடித்தவருடன் வாழ்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

கலாச்சாரம் சீரழிந்துவிடும் என்று, கலாச்சாரத்தை, முகமூடியாக அணிந்து கொண்டு வரும் கலாச்சார காவலர்கள், நீங்கள் மதிக்கும், புராண,  இதிகாசங்கள், பெண்களை எந்த அளவிற்கு கீழ்த்தரமாக சித்தரித்திருக்கிறது, சூதாட வைக்கும் ஒரு பொருளாக, உடைமையாக  பார்த்திருக்கிறது , பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என கேவலப்படுத்தியிருக்கிறது என்பதை உணர வேண்டும். 

" கணவன் எப்படிப்பட்டவனாகினும், மனைவி அவனுக்கு பணிவிடை செய்தல் வேண்டும். அப்போது தான் அவள் ஒரு பதிவிரதை."

என்று சொல்லும் மனு(அ)தருமத்தின் பெண்ணடிமைத்தனத்தை, இந்த தீர்ப்பு , அடித்து நொறுக்கி இருக்கிறதல்லவா.!!!

இதையும் மீறி , உங்களின் மனத்தடைக்கு  கலாச்சாரம் தான் காரணம் என்றால், 

கத்துவாவில்,  9 வயது குழந்தையை கோவிலில் கட்டிப்போட்டு, 7 நாட்கள் 5 பேர்கள் தொடந்து பாலியல் வன்புணர்வு செய்து, மிகவும் கொடூரமாக கொன்றார்களே ... இதோ நம் சென்னையில், காது கேளாத, பேசமுடியாத 7 வயது குழந்தையை, 69 வயது வரையுள்ள கிழவன் வரை 6 மாதகாலம்  தொடந்து பாலியல் பலாத்காரம் செய்தனரே , இதையெல்லாம் உங்கள் கலாச்சாரம் அனுமதிக்கிறதா ... அப்படிப்பட்ட கலாச்சாரம் இருந்து தான் என்ன பயன்???

பெண்ணடிமைத்தனத்தை வளர்த்துவிட்டுக்கொண்டிருக்கும், இந்த பாஜக ஆட்சியில், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்ததே வியக்குரியதாக இருக்கிறது. பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்காமல், சமமாக பார்க்கப்படுவதற்கு வழிவகை செய்து, அதற்கு எதிராக இருந்த 497 சட்டப்பிரிவை நீக்கியது என்பது, வரவேற்க வேண்டிய, மிக அருமையான ஒரு தீர்ப்பு.!


Tuesday, 25 September 2018

பெரியார் சிலை உடைப்பிற்கு கடும் கண்டனங்கள்.

வாழ்ந்தது முழுவதுமாக 94 ஆண்டுகள், இறந்தும் 45 ஆண்டுகள்.
ஒரு மனிதர், ஒரு கேடுகட்ட , படு கேவலமான சமூகத்தை இத்தனை ஆண்டுகள் (இன்னமும் இருக்கிறது..) கதிகலங்க வைக்கிறாரென்றால், 

அது தான் நம்முடைய #பெரியார்

இன்றுவரை அவருடைய சிலைகள்  கூட உங்களுக்கு பயத்தை தருகிறது என்றால், அப்படி என்ன செய்துவிட்டார் அந்த மாமனிதர்???

மானுடத்தை நேசித்தார் .. அவ்வளவே.!

சமத்துவமற்ற இந்த(து) சமூகத்தை, ஆண் -பெண் உட்பட அனைவரும்  சமமான மனிதர்களாக ,  மக்களாக மாற்ற முயற்சி செய்தார். அதற்கு இடையூறாக இருந்த எல்லாவற்றையும், மதம், கடவுள், ஜாதி, சாஸ்திரம், புராணம், பெண்ணடிமைத்தனம்  முதலியவற்றை உடைந்தெறிந்தார். மனிதன் மட்டுமே முக்கியம், அவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, சுய மரியாதையோடு வாழ்வதற்கு வழிவகை செய்தார். இது தானே.!

இது ஏன் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது... அச்சத்தை ஏற்படுத்துகிறது???

உங்களின் பிழைப்பு அதை வைத்து தான் இருக்கிறது. உங்களின் அடிவயிற்றில் கைவைத்து விட்டார் என்பதினால் தானே  இந்த கோவமும், எரிச்சலும், வன்முறைகளும்!

ஜனநாயகத்திற்கு எதிராக, சட்டமும், நீதியும், ஆட்சியும், அதிகாரமும், நிர்வாகமும், ஊடகமும் உங்களின் கையில் இருக்கிறதென்று ஆட்டம் போடுகிறீர்கள். ஆனால், இதற்கெல்லாம் தீர்வு வெகு விரைவில் வர தான் போகிறது. உங்களால் மீண்டும் தலைதூக்க முடியாதபடிக்கு இருக்கும் அந்த வீழ்ச்சி. !

நீங்கள் உடைக்கும் ஒவ்வொரு சிலையும், பல சிலைகளாக, அதாவது திராவிடக்கருத்தியல்களாக மக்களை சென்றடைய வேண்டிய காலம் வந்துவிட்டது. பார்ப்பனீயம், தன்னை தானே தற்கொலை செய்துகொள்ளும் முயற்சி தான், தற்போது  நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல்கள் அனைத்தும்.! 

வெகுவிரைவில் பெரியார் கண்ட திராவிடநாடு உருவாக போகிறது.!

( பி.கு.: பெரியார் சிலைகளை உடைக்கும் கருங்காலிகளுக்கு, உடைக்கும் நீங்கள் தான் சிறைப்படுத்தப்படுவீர்கள். உடைக்கச்சொல்லும் அவாள்கள் தப்பித்துக்கொள்வார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.) 



Monday, 17 September 2018

பெரியாரின் பெண்விடுதலை.

பெரியார் தந்தை மட்டுமல்ல ... தாயுமானவருக்கும் கூட ... அதிலும் பெண்களுக்கு அவர் அறிவுறுத்திய, சிந்திக்க வைத்த விதம் இருக்கிறதே ... அதற்கு ஈடு இணையே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் உணர்வாக, உணர்ச்சியாக, வாழ்வாக, கூடவே  பயணிக்கும்  இரத்தமும், சதையுமாக அல்லவா சிந்தித்து, நடைமுறைப்படுத்தி, அதில்  வெற்றியும் கண்டிருக்கிறார். பெண்விடுதலையைப்  பற்றி, இந்த அளவிற்கு வேறு யாருமே பேசியிருக்க முடியாது.  சிந்தித்திருக்கவும்  முடியாது.!

கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், திருமணம், குழந்தை பெறுதல், வளர்த்தல், மணவிலக்கு, மறுமணம், சொத்துரிமை என ஒன்று விடாமல் அவற்றை அலசி, ஆராய்ந்து, அதற்கான தீர்வையும் சொல்லி, அதனை செயல்படுத்தி, இன்றும், நம்மை முன்னேற்றப்பாதையில், கொண்டு செல்கிறார் என்றால், அது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றல்லவா. ஒரு தாய் கூட, தன்  மகளைப்பற்றி இந்தயளவிற்கு சிந்திப்பாரா என்பது வியப்பு தான்.!  

இப்பதிவின் மூலம் நண்பர்களுக்கு நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விசயம் என்னவென்றால், ஆண்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், அதேபோல்,  பெண்கள், தங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும்,
 #பெரியாரின்  " பெண் ஏன் அடிமையானாள் " என்ற புத்தகத்தை வாங்கிக்கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

 அடுத்து வரும் நம் சமுதாயம் பகுத்தறிவு சமுதாயமாக விரைவில் மாறிவிடும். பெண்ணடிமை   ஒழித்த சமூகம், நிச்சயம் ஜாதி ஒழிந்த சமுதாயமாக  விளங்கும் என்பது உறுதி.!

Sunday, 16 September 2018

தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள்.

பெரியார் ஏன் இன்றும் இவ்வளவு கொண்டாடப்படுகிறார்?
பெரியார் ஏன் இன்றும் இவ்வளவு விமர்சிக்கப்படுகிறார்?
பெரியார் ஏன் இன்றும் இவ்வளவு பெரிய ஆசானாக மதிக்கப்படுகிறார்?
பெரியார் ஏன் இன்றும் அவாளுக்கு சிம்மசொப்பனமாக பார்க்கப்படுகிறார்?

பெரியாருடைய தொண்டு, சிந்தனை, கருத்தியல்கள், எல்லாமே மானுடப்பற்றை நோக்கி தான். சமத்துவத்தைப் பற்றி தான். சக மனிதன் மதிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டினால் தான்.!

இங்கிருக்கும் மனித  சமுதாயத்தில், ஒழிக்கப்பட வேண்டிய மூன்று கேடுகள் என்று அவர் சொன்னவை, 

" உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி 
   பணக்காரன்   - ஏழை 
    ஆண் - பெண் சமத்துவமின்மை. "

இதனை உணர்ந்தவர்கள் மதிக்கிறோம், கொண்டாடுகிறோம். போற்றுகிறோம். பின்பற்றுகிறோம். திராவிடச் சித்தாந்தத்தை பரப்புகிறோம்.

ஆனால், இதனை உணராத ஆரியத்திற்கும், ஆரியத்திற்கு துணைபோகும் நம்மில் சிலருக்கும் எதிரியாக தோற்றமளிக்கிறார் பெரியார்.!

ஆரியத்தால், பெரியாரை உணரமுடியாது என்பதைவிட, உணர மறுக்கிறார்கள்... ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள், ஏனென்றால், அவர்களின் மதம் சமத்துவத்திற்கு எதிரானது. ஏற்றத்தாழ்வு கொண்டது. ஆணாதிக்கம் நிறைந்தது . தங்களுக்கு சாதகமாக ஒரு (இந்து) மதத்தை நிறுவிக்கொண்டு,  தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, மற்றவர்களை இழிவுபடுத்தக்கூடியவர்கள். ஆதலால் தான், அவர்களால் பெரியாரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.!

இதோ பெரியாரே சொல்கிறார் ...

" நமக்கு பார்ப்பனீயம் தான் விரோதமேயன்றி, பார்ப்பனர்கள் அல்ல. பார்ப்பனீயத்தை உயர்ஜாதிக்கார்கள் சிலர் கையாண்டாலும், அவர்களும் நமது கொள்கைக்கு விரோதிகள் தான். "

(விடுதலை , 1.8.1947)

மனிதகுல சமத்துவத்திற்காக  தன்னுடைய வாழ்நாள் முழுமையும் உழைத்த மாபெரும் தலைவரை, பெரியாரைப்  போற்றாமல், கொண்டாடாமல்,  வேறு என்ன செய்வோம்.!

இன்று, செப்டம்பர் 17 , தந்தை பெரியாரின் 140வது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.! 

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!






Saturday, 15 September 2018

பேரறிஞர் அண்ணா அவர்கள்.

இன்று , அரசியல் சார்ந்து இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறதென்றால், அதற்கான முக்கிய காரணம் #பேறிஞர்அண்ணா அவர்கள் தான். மாநில உரிமைகள் பறி போய் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பே, மத்தியில், கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கியவர் அறிஞர் அண்ணா அவர்கள்.
#இருமொழிக்கொள்கை அமலுக்கு கொண்டுவந்ததாகட்டும்,  

#சுயமரியாதைதிருமணத்தை சட்டமாக்கியதில் ஆகட்டும்,  

சென்னைமாகாணத்தை, #தமிழ்நாடு என்ற பெயர்மாற்றம் செய்ததாகட்டும்,

தனக்குப்பிறகு #அடுத்த தலைவரை உருவாக்குவதில் ஆகட்டும்   

அண்ணாவிற்கு நிகர் அண்ணா அவர்கள் மட்டுமே. 

பார்ப்பதற்கு மட்டும் அவர் எளிமையானவர் என்பதல்ல... அவருடைய பேச்சும், எழுத்தும் இலக்கியநயத்துடன் கூடிய எளிமையாக இருக்கும் என்பது தான் தனிச்சிறப்பு. அவருடைய சிறுகதைகள்,நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் என அனைத்துமே, எளிமையானவை. 

 இலக்கிய நடையிலும், வசனங்களாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், அதே சமயம் சமூகநோக்கில் சமூகஅக்கறையுடன் கூடியதாகவும், பகுத்தறிவுடன் கூடிய திராவிடக் கருத்தியல்களை வெகுஜன மக்களுக்கிடையே கொண்டு போய் சேர்ப்பதில், இருந்த பொறுப்பு இருக்கிறதே ... அது தான்  மிகச்சிறப்பு.!  

வாசிப்பவர்களின் மனவோட்டத்தை அப்படியே பிடித்து, எங்கும் ஓடிவிடாமல்,  தக்க வைத்து, அவற்றை சிந்திக்க வைக்கக் கூடிய அளவிற்கு சிறப்புவாய்ந்த  ஒன்றாகும். ஆரியமாயை, சிவாஜிகண்ட இந்துராஜ்ஜியம், தஞ்சை வீழ்ச்சி, என்று சொல்லிக்கொண்டே போகலாமே ... தந்தை பெரியாரின் கருத்துகளை அப்படியேஉள்வாங்கி , பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக, செயல்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் அறிஞர் அண்ணா. அவருடைய 110-வது பிறந்தநாளில், அவருடைய கொள்கைகளை, எழுத்துகளை, நினைவில் நிறுத்தி, இனிய வாழ்த்து கூறுவோம்.!

#ANNA110 (Sep.15)

Thursday, 13 September 2018

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என்பது நம் சமூகத்தின் பண்பாட்டுச் சிதைவு .!

தாய்வழி சமூகத்திலிருந்த தாய்த் தெய்வ வழிபாட்டை சிதைத்து, அதிலும் ஆணாதிக்கத்தை திணித்து, நம் பண்பாட்டை திரிக்க,  ஆரியம் முற்பட்டதின் விளைவே ஹிந்து மதம். அதிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆரிய கடவுள்களில் ஓன்று தான் , இந்த பிள்ளையார்.! 

இதன் பின்னால் அரசியல் இருக்கிறது. ஹிந்துத்துவம் இருக்கிறது. பண்பாட்டுச் சிதைவு இருக்கிறது என்பது சாமானிய மக்களுக்கு தெரியவில்லை. ஏன்.. படித்தவர்கள் மத்தியில் கூட இந்த புரிதல் இல்லை. இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள், பெரியாரைப்படித்தவர்கள்,அண்ணலைப்படித்தவர்கள்  மட்டுமே தெளிவடைந்திருக்கிறோம். ஒரு மொழியிலும், அதை பேசும் மக்களின் வாழ்வியலிலும், பண்பாட்டிலும் பக்தி என்ற பெயரில், மற்றுமொரு கலாச்சாரத்தை திணித்து, பிற்காலத்தில் அதுவே அவர்களின் பண்பாடாக மாற்றிக்காட்டப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய அயோக்கியத்தனம் இதன் பின்னால் இருக்கிறது  

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, இந்த பண்டிகை இவ்வளவு பிரபலம் இல்லை. அவரவர்கள் வீட்டில் கும்பிட்டுவிட்டு, மூன்றாம் நாளில், வீட்டின் பின்னால் உள்ள கிணற்றில் போட்டு விடுவார்கள். ஆனால், தற்போது, ஒரு நகர் அல்லது சில தெருக்கள் அடங்கிய ஒரு பகுதி என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே ஒரு பெரிய பிளாஸ்டர் ஆப் பாரிஸ்-ல் செய்த விநாயகர் சிலை வைக்கப்பட்டு, பூஜை செய்யப்படுகிறது. திருவிழா போல் கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது மிகவும் வேதனைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது. மற்ற மதங்களை சிறுமைப்படுத்தி, இந்துத்துவத்தை மையப்படுத்தி, மனிதர்களுள் வேறுபாடுகளை, வெறுப்புணர்ச்சியை வளர்ந்துவிடும் விதமாக பார்ப்பனீயம் இதனை செய்துகொண்டிருக்கிறது. பண்பாட்டு படையெடுப்பு, பண்பாட்டுச் சிதைவு என்பது ஒரு இனத்தின் அழிவிற்கான முதல் படி என்பதை,  இதிலிருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்  என்பது நம் சமூகத்தின் பண்பாட்டுச் சிதைவு.!!!

Tuesday, 28 August 2018

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.




அறிஞர் அண்ணா, கலைஞர் இருவரும் தலைமைப் பொறுப்பேற்ற சமயத்தை விட, தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது தமிழ்நாடு. சுயநலமிக்க நயவஞ்சக நரிகள் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், தளபதி ஸ்டாலின் அவர்கள் திராவிடமுன்னேற்ற கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கிறார். 

இந்த பொறுப்பு மலர் படுக்கை அல்ல. குத்தி கிழிக்கக்கூடிய கூரிய முட்களால் சூழப்பட்டிருக்கும், விலை மதிப்பற்ற ஒரு உயிர். சூழப்பட்டிருக்கும் முட்களை வெட்டி விழ்த்தெறிந்துவிட்டு, பாதுகாப்பான சமூகநீதி பாதையை உருவாக்கி, அதை வெற்றி பாதையாக்கி, வரும் தடைகளை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு,ஆதிக்கசக்தியிடம் அடகு வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.!

என்றைக்கும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் , தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, கலைஞர், ஆசிரியர் வீரமணி என்றால், ஆரியத்த்திற்கு சிம்ம சொப்பனம் தான். ஆதலால் தான், அவர்களை விமர்சிப்பதே  முக்கிய வேலையாக வைத்திருக்கிறது. தளபதி ஸ்டாலினை தங்கள் பக்கம் இழுத்து விட முடியும் என்ற பகற்கனவில் இருந்தது. அது முடியாமல்போகும் பட்சத்தில், அழகிரி மூலம் திமுகவை கைப்பற்ற சூழ்ச்சிவலை பின்னுகிறது. ஆனால், எப்போதும் இந்தப்  போராட்டக்களத்தில், திராவிடம் வெற்றிபெற்றுக்கொண்டே தான் இருக்கும்.  
திராவிடத்திடம் முக்குடைபடுவதே வழக்கமாக கொண்டிருக்கிறது ஆரியம்.!

மிகச் சரியாக வழிகாட்டும் தலைவர்கள் அருகாமையில் இருக்கிறார்கள். அவர்களின் துணை கொண்டும், தனது சிறப்புமிக்க ஆளுமையினாலும், மிகப்பெரிய அளவில்  ஸ்டாலின் அவர்கள் சாதித்து காட்டுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.!

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அன்பு வாழ்த்துகள்.! 

Friday, 10 August 2018

ஆகஸ்ட் - 7


#மறக்கமுடியாதஇரவுஆகஸ்ட் 7

அன்று  இரவு தொலைப்பேசியில் பேசியபோது, குரல் உடைகிறது. உடனே மகன், 
" வீடியோ காலில் பேசுகிறேன் தாத்தா ... " என்று சொல்லிவிட்டு , என் அப்பாவிற்கு  வீடியோவின் மூலம் அழைக்கிறான்.

அலைப்பேசியில், பார்க்கும்போது முகம் அழுதது போல இருந்தது. கண்கள் அதனை உறுதி செய்தன.
" அழுதீங்களா ... தாத்தா ? "
" ம்ம்ம் ... ஆமா, என்னுடைய 15 வயசிலிருந்தே கலைஞரை ரொம்பபிடிக்கும். அதான் ...."

சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, 

"என்ன செய்றது ..வயசாயிடுச்சி... அடுத்ததலைமுறைக்கு வழிவிட்டுட்டு போயிட்டாரு., நிறையவே  செய்ஞ்சிட்டாரு ... அவரை போல இனி யாரும் வரமுடியாது.  அவருக்கே,மெரினாவில் இடமில்லை என்பதயெல்லாம் ஏத்துக்கவே முடியாது...."

உடனே என் மகன், 
" தாத்தா, மூணு தலைமுறைகளை அழ வைச்சிட்டாரு கலைஞர். நீங்க அழுதிருக்கீங்க ...அம்மாவும் அழுதுட்டாங்க... நானும் அழுதுட்டேன் ...
சாப்பிடீங்களா தாத்தா ? " என்றான்.

" இல்லை ... இனிமேல் தான் ..."

அப்போது மணி 9.30. எப்பவும் 8 மணிக்கே சாப்பிடக்கூடியவர்கள். அன்று ஒன்பதரை வரை சாப்பிடவும் இல்லை. இந்த துக்கம், சோகம், அழுத்தம், அழுகை எல்லாமே மூன்று தலைமுறைகளை தாக்கியிருக்கிறது. 

இதுபோல் அனைவரின் வீட்டிலும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். கலைஞர் என்ற மாபெரும் ஆளுமை மறைந்துவிட்டார் என்று இப்போதும்கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இப்போது மட்டுமல்ல, என்றைக்கும் அவர் நம் எல்லோரின்  மனதிலும் நீங்கமற நிறைந்திருப்பார் என்பது தான் உண்மை.!

அரசியல் தளத்தில், சமூகநீதி, சமத்துவம், சமூகநலன், ஆகியவற்றிலும், கலை, இலக்கியம், எழுத்து, பேச்சு என அவருடைய பங்களிப்பு, பணிகள் அளப்பரியது. இதுவரை, நாம் தான் இணையத்தில், திராவிடக்கருத்தியல்களைப்பற்றி, திராவிட இயக்கத்தைப்பற்றி, திமுகவைப்பற்றி ,  கலைஞரின் சாதனைகளைப்பற்றி என  சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், ஒருநாளில் மட்டும், அனைத்து  தொலைக்காட்சிகளும் வரிசையாக எல்லாவற்றையும்  பதிவு செய்திருகின்றனவே.!
 
இனி திமுக என்ன செய்தது என்ற கேள்விக்கு இடம் இருக்கிறதா ...   என்ன???

இவ்வளவு சிறப்புவாய்ந்த மாமனிதருக்கு மெரினாவில் இடமில்லை என வரிந்துக்கட்டிக்கொண்டு இறங்கிய ஆரியக்கூட்டத்தையும் ஒரு பதம் பார்த்துவிட்டு தான் ஓய்வெடுத்திருக்கிறார் #கலைஞர் 

இறந்தபிறகும், இவரின் மீது இவ்வளவு வன்மம் என்றால், பார்ப்பனீயம் எவ்வளவு ஆபத்தானது என்பதை,  உணராதவர்கள்  உணரவேண்டும். இல்லையேல், நாம்  உணர வைக்க வேண்டும்.  சமூகம் சார்ந்த சீர்திருத்தங்கள் , மாற்றங்கள், களையெடுத்தல் , முன்னேற்றம் முதலியனவற்றை  ஆரம்பத்தில், நீதிக்கட்சி , அதன் பிறகு  திராவிடர் கழகம்  தொடர்ந்து செய்துவருகிறது. ஆனால், அரசியலை பொருத்தவரை, இவைகளை ஆட்சியின் மூலம், சட்டங்கள் இயற்றி,  செயல்படுத்த  திமுக மட்டுமேயுள்ளது என்பது பார்ப்பனியத்திற்கு நன்கு தெரியும். அதனால் தான் இறப்பிலும்  கூட இந்தயளவிற்கு வன்மத்தை காட்டுகிறது. 

புரியாதவர்களுக்கு கூட இப்போது புரிந்திருக்க வேண்டும். இடம் தர முடியாது என்ற அறிவிப்பு தலைமை செயலர் பெயரில் அறிவிக்கப்படுகிறது. அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடுபவர் அவரின் கணவர். இதற்கிடையில், ஊடகங்களில், இடம் தரக்கூடாது என்று சொல்பவர் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். இதில் தொடர்புடையவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள்.!

இது ஆரிய-திராவிடப்போரின் உச்சக்கட்டம் என்றே தோன்றுகிறது. இதில் அனைவரும் கைகோர்க்கவில்லையென்றால், தோல்வி நிச்சயம். இனியும் ஒருவரையொருவர் குறைகாணாமல், கருத்துவேறுகளை தள்ளிவைத்துவிட்டு, ஒன்றுபட்டு மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். அதற்காக போராடுவோம். தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவோம். திமுகவிற்கு, தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு  துணை நிற்போம். திமுகவும், அனைவரையும் அரவணைத்து, போராட்டகளத்தில் வெற்றிப்பெற்று, தந்தை  பெரியார் அவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்தி, அவர்கள் வழியை பின்பற்றிய பேரறிஞா அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் சிறப்பானப் பணியை செவ்வனே தொடரட்டும். 

தமிழ்நாட்டை வளமாக்கிட, மேலும் உயர்த்திப்பிடிக்க நாமும் உதவியாக இருப்போம் .! 

பெரியார், அண்ணா, கலைஞர் மூவரும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிசங்கள்.!











 

Tuesday, 7 August 2018

கலைஞர்

கலைஞர் , கலைஞர் , கலைஞர்  மனம் முழுக்க அவர் மட்டுமே .... வேறு எந்த சிந்தனையும் உள்நுழைய முடியவில்லை. 

என்னுடைய பத்து வயதில் கலைஞருடைய பேச்சைமுதன்முதலாக  நேரில் கேட்டிருக்கிறேன். அதுவரை அரசியல், தமிழ், சமூகம் சார்ந்த பார்வையும், பற்றும் சிறிதும் கிடையாது. அவருடைய பேச்சோ,குரலோ, நகைச்சுவையோ எது என்று தெரியவில்லை...  ஏதோ ஓன்று  முழுவதுமாக   ஈர்த்தது. அதன்பிறகு தான்  தமிழ் மீது ஆர்வம் வந்தது. தமிழ்ப் பாடத்தை ரசித்து படித்திருக்கிறேன். அரசியல் , சமூகம் சார்ந்த புரிதலை அனா, ஆவன்னா போட்டு துவங்கி வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். பிறகு பதினெட்டாவது வயதில் பெரியாரைப் படிக்க ஆரம்பித்தவுடன், முழு தெளிவும் கிடைத்தது எனலாம்!.

கலைஞர் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல... இந்திய வரலாற்றிலும் முதன்மையானவர். கல்வெட்டில் பதிய வேண்டிய அளவிற்கு சாதனைகளைப்  படைத்திருப்பவர். இந்தியாவிற்கு சமூகநீதியையும், சமத்துவத்தையும் கற்றுக்கொடுத்தது தமிழ் நாடு என்பது எந்தயளவிற்கு உண்மையோ, அதுபோல், பெரியாரின் சமூகசீர்திருத்த கொள்கைகளை சட்டமாக்கியத்தில் கலைஞருக்கு மிகச்சிறந்த  பங்குண்டு.!

#என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார் கலைஞர்.
#போராளிகளுக்கும் சாதனையாளர்களுக்கும் மறைவு என்ற ஓன்று கிடையாது