Monday, 29 January 2018

ஊடகங்களுக்கு பங்கு இல்லையா .... சமூகசீர்திருத்தத்தில்.!

" என்ன .. இந்த காலத்துல போய் ஜாதி பேரெல்லாம் சொல்லிக்கிட்டு.."
" அதனாலென்ன ... அண்டை மாநிலத்திலுள்ள பெண்கள் எல்லாம், ஷில்பாஷெட்டி, சமீராரெட்டி என்று வைத்து கொள்ளவில்லையா,நாம மதர் ஸ்டேட்ல இருந்துகிட்டு வைச்சிக்கலைனா எப்படி.."

இப்படி ஒரு வசனத்தைகடந்த இரு நாட்களாக பண்பலையில், ஒரு திரைப்படத்திற்கான விளம்பரத்தில் கேட்கிறேன். " மன்னர் வகையறா" என்ற படம் தான் அது. !

இந்த வசனம் மேற்கொண்டு பேசப்படுகிறதா என்று தெரியவில்லை. பேசப்படவில்லையென்றால், படத்தின் இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை வசனம் என அனைவரின் மீதும் நமக்கு வருத்தம்,கோவம் வருகிறது. இல்லை,விளம்பரத்தில் தான் வெட்டப்பட்டு ஒலிப்பரப்பப்படுகிறது என்றால், இவர்களின் மீது நாம் கடும்கோபம் கொள்ள தான் வேண்டும்.!

கிட்டத்தட்ட இரு தலைமுறைகளாக , தந்தை பெரியாரின் கடும் உழைப்பினால், அறிவுபெற்று, இந்த ஜாதி பட்டத்தை தவிர்த்து வந்திருக்கிறோம். இந்த நிலையில், மறுபடியும், இந்த ஜாதிவெறியை தூண்டும் விதமாக ஜாதிப்பெயரை போட்டுக்கொள்ளும் முறை மீண்டும் வருகிறதென்றால், சகித்துக்கொள்ள முடியவில்லை. இதுபோன்ற எண்ணங்களை மக்கள் மனதில்புகுத்திவிடவேண்டும் என்று சில ஜாதி வெறியர்கள் செயல்படுகிறார்கள். ஒரு நகைச்சுவை, விளையாட்டிற்கு கூட,இம்மாதிரி சொல்லாடலை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்றால், இந்த ஊடகங்கள் இருந்து தான் என்ன பயன்...???

திரைப்படங்கள் மக்களை எளிதில்சென்றடையும் ஒரு ஆற்றல் வாய்ந்த ஊடகம். இதில், நல்லதை சொல்லிக்கொடுக்கவில்லை என்றால்கூட பரவாயில்லை... இந்த சமூகத்திற்கு, இதுபோல கெடுதல் செய்யாமலாவது இருக்க கூடாதா...!!!

என் தாத்தா ஜாதியை தன பெயருடன் ஜாதி பெயரையும் சேர்த்து போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், என் அப்பா, என் அண்ணன் போட்டுக்கொள்ளவில்லை. மூன்றாவது தலைமுறை வந்துவிட்டது . அவர்களுக்கு ஜாதிபற்றிய தெளிவை உண்டாக்கிக்கொண்டிருக்கிறோம். முடிந்தவரை,உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும், இதைப்பற்றி உரையாடுகிறோம். ஆனால், இதுபோன்ற திரைப்படங்கள் நம் சமூகத்தை சீரழிக்கப்படுவதற்காகவே வருகின்றன. சென்சார் போர்ட்டு என்ற ஓன்று இருக்கிறதே, இவைகளை வெட்டாமல், தேவையில்லாத ஆணிகளை மட்டும் பிடுங்கும்.!

இனி, யாரையும் நம்பிக்கொண்டிராமல், நம் வீட்டிலிருந்தே சமூக மாற்றத்தை, சீர்திருத்தத்தை ஆரம்பிப்போம் ...நண்பர்களே.!

Friday, 26 January 2018

மதமும்,மனிதநேயமும்.!

#இறை நம்பிக்கை என்று தான் சொல்லப்படுகிறதே , தவிர கடவுள் இருக்கிறது, நான் பார்த்தேன், பேசினேன், உங்களுக்கும் காட்டுகிறேன் என்று யாரும் மெய்ப்பித்ததற்கான  சான்று இதுவரை  இல்லை.  புராணங்கள், இதிகாசங்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எப்போதே ,யாரோ எழுதியதை கண்முடித்தனமாக நம்ப முடியாதல்லவா. ஆனால், #அறிவியல் ஒவ்வொன்றையும் மெய்ப்பிக்கிறது அதனால் நாம் நம்புகிறோம். புராணங்கள் உலகம் தட்டை என்று சொன்னதை, இல்லையில்லை ... உலகம் உருண்டை என்று சொல்லி, அதனை மெய்ப்பித்து இருக்கிறதல்லவா. இது அறிவியல் அடிப்படையில் சொல்கிறோம்.

அடுத்து, உளவியல் ரீதியாக பார்ப்போம் ... எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன என்று சொன்னாலும், மற்ற மதங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அது மட்டுமல்லாமல், தங்களுக்குள் முரண்பாடு, போர்,உயிரிழப்பு என பல சேதங்களை உருவாக்கிக் கொள்கின்றன. மதம் உண்மையில் அன்பை போதிக்கவில்லை. வேற்றுமைகளையும், விரோதத்தையும், குரோதத்தையும் தான் விளைவிக்கின்றன. அந்ததந்த மதங்களை சேர்ந்த கடவுள்களும், வணங்கும் மனிதர்களை எந்த விதத்திலும் காப்பாற்றுவதில்லை. உலகம் தோன்றிய நாள் முதல், மனிதர்கள் ஒருவரை ஒருவர் பல மாறுபாடுகளால்,மூடநம்பிக்கைகளால், அடித்துக்கொண்டு இறந்திருக்கிறார்கள் என்று தான் சொல்கிறது வரலாறு.!

 இப்படி இருக்கையில்,  மனிதத்தை வளர்க்காத மதம் எதற்கு?
அப்படியே இருந்தாலும் மனிதனுக்கு ஒரு வகையிலும் உதவாத கடவுள் நமக்கு எதற்கு?

 என்று சிந்திக்க வேண்டாமா ... நண்பர்களே. சிந்தித்தால் தெளிவு கிடைக்கும். அதனைப்பற்றிய புரிதல் வரும். அறிவு வளரும். மனிதநேயம் தழைத்தோங்கும். நம் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். சிந்திப்பவர்கள் சிந்திக்காதவர்களை  சிந்திக்க வைக்கும் வண்ணம் செயல்படுவோமா .!



குடிகளுக்கான அரசு தானே குடியரசு.!

கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமையற்ற  , தனி மனித உரிமை மீறல்கள் என அனைத்து சர்வாதிகாரமும்  நடந்துகொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நாட்டின் 69-வது குடியரசு தினம். கொண்டாட்டம் எல்லாம் சிறப்பாக தான் நடந்துகொண்டிருக்கிறது.! 

நடந்த வரலாற்றை, ஒரு திரைப்படமாக (பத்மாவத் ) எடுத்தால், அதனை வெளியிட விடமாட்டோம் என்று பள்ளிச்சிறுவர்கள் செல்லும் வேனை கூட விடாமல், அடித்து நொறுக்குமளவிற்கு இங்கே படைப்புரிமை மறுக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் வெளியிட உத்தரவிட்டும், பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் நடக்கும் வன்முறைகள் ஜனநாயகத்திற்கு சரியானவை தானா...?

ஆண்டாளைப்பற்றிய முன்னரே ஒரு ஆய்வு செயது வெளியிடப்பட்ட  கருத்தை, இவர்  குறிப்பிட்டமைக்கு  கவியரசு வைரமுத்து அவர்களின் மீது தனிப்பட்டநபர் மீது  எத்தனை எத்தனை அருவெறுப்பான சொல் தாக்குதல்கள், கொலை மிரட்டல்கள் ... இதனை வெளியிட்ட தினமணி பத்திரிக்கையின் ஆசிரியர் , அந்த மத தலைவர்கள் முன்னணியில், அந்த கோயிலுக்கே சென்று சாஷ்டங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்கிறார் என்றால், இங்கே எழுத்துரிமை, பேச்சுரிமை இருக்கிறதா .. . ஜனநாயக அரசிலமைப்புச் சட்டம் இதற்கு இடம்கொடுக்கிறதா...?

உச்ச்நீதிமன்றத்தில் பணியில் இருக்கும் நீதிபதிகளே, தலைமை  நீதிபதியின் மீது குற்றச்சாட்டுக்களை கூறி, ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று தங்கள் கருத்துகளை பொது மக்களின் முன் பதிவு செய்யும் சூழலில் தான் இன்றைய இந்திய குடியரசு இருக்கிறது என்றால், இந்த குடியரசு தினம் உண்மையான மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுத்து விடுமா... எல்லாமே காவிமயமாக்கப்படும் நிலையில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த நாட்டின் நிலைமையை  மக்களுக்கு புரியவைத்து, அதனை எதிர்த்து  செயல்பட வைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை பதிவு செய்ய கடமை பட்டிருக்கிறோம்..நண்பர்களே.! 

Tuesday, 23 January 2018

மக்களை வட்டி வதைக்கும் அடிமை அதிமுக அரசு.

இரு தினங்களுக்கு முன்பு , புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தேன். அடையாரிலிருந்து பச்சையப்பன் கல்லூரிக்கு டீலக்ஸ் பேருந்தில் செல்வதற்கு பேருந்து கட்டணம் 31 ரூபாய். நேற்று வரை 17 ரூபாயாக இருந்திருக்கிறது. என்ன ஒரு அநியாயம்... பகற்கொள்ளையாக அல்லவா இருக்கிறது. கேட்பாரற்ற மாநிலமா ... தமிழ்நாடு.!

பேருந்தில் பயணித்த அனைவரும் இந்த அரசாங்கத்தை முடிந்தமட்டும் திட்டி தீர்த்தனர். மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசு, இந்த அடிமை அதிமுக அரசு என்பதை மக்கள் நன்றாகவே உணர தொடங்கியுள்ளார்கள். எவ்வகையிலும், இந்த கட்டண உயர்வு என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பேருந்துகளில் பயணிப்பவர்கள் என்ன அம்பானி, அதானிகளா ... ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தானே ... அவர்களை வாழ விடாமல் செய்வது தான் இந்த அரசின் நோக்கமா... இதில் , இந்த தெர்மோகோல் அமைச்சர் என்னவென்றால், மக்களுக்கு இதனால் , பாதிப்பே இல்லையென்று நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார் ... !

இவர்களுக்கு மட்டும் ஊதியம் லட்சக்கணக்கில் உயரவேண்டும், அடித்தட்டு மக்கள் எல்லாம் வாழ முடியாமல் தவிக்க வேண்டும் என்றால், எதற்கு இந்த அரசு, ஆட்சி, நிர்வாகம்..???

மக்கள் புரட்சி ஏற்பட்டு இந்த ஆட்சி தூக்கியெறியப் படுவது உறுதி என்பதை இன்று பேருந்தில் வந்த மக்களின் கோபம் உணர வைத்தது.!

Wednesday, 10 January 2018

நாகரீகமற்ற எச்.ராஜாவின் மேடைப் பேச்சு.!

என்ன ஒரு வன்மம், வெறி எச்.ராஜாவின் பேச்சில் ... தற்போது தான் அந்த காணொளி தோழர் ஒருவரின் மூலம் காண நேர்ந்தது.!
ஆண்டாள் பாடல்கள் அனைத்தும் அடல்ட்ஸ் ஒன்லி என்ற விதத்தில் இருக்கும் என்பது திருப்பாவை படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த அளவிற்கு , அதிலும் ஒரு பெண் எழுதியிருக்கும்போது ஆணாதிக்கம் நிரம்பி வழிந்த அக்காலத்தில் அப்பெண்ணை எப்படி பார்த்திருப்பார்கள்...அவர் தாசியாக்கப்பட்டிருப்பார் என்ற ஒரு ஆய்வு கண்ணோட்டத்தில் சொன்னால், அதற்கு திரு. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை இவ்வளவு இழிவாக பேசுகிறார் என்றால் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ... இதை தானே பார்ப்பனத்திமிர் என்று சொல்கிறோம். !
உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சொன்னதற்கே இப்படி ஆத்திரம் வருகிறதே ... ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்னாலேயே , எங்கள் இன பெண்களை சொல்லவில்லையா ...தாசிகள் என்று ., சூத்திரன் என்பவன் ' தாசியின் மகன்' என்று எழுதி வைக்கவில்லையா ... உங்கள் வேதங்கள்.!
உங்கள் பூணுல் சாஸ்திரப்படி, இந்து மதத்தை கடைப்பிடிக்கும் சூத்திரர்கள் அனைவரும் தாசியின் மகன்கள் தானே... திரு. வைரமுத்து அவர்களை தாசி மகன் என்று ஒவ்வொரு தடவையும் சொல்லும் ராஜா, அனைவரையும் சேர்த்து, இது தான் சமயம் என்று தாசிமகன்கள் என்று வேறு கொக்கரிக்கிறார்.!
மற்ற மாநிலங்கள் போன்றா தமிழ்நாடு. உங்கள் வண்டவாளங்களை, தண்டவாளங்களில் ஏற்றிய எங்கள் தந்தை பெரியார் அறிவுறுத்திய, உணர்த்திய திராவிட உணர்வும், பார்ப்பனீய தந்திரமும் நாங்கள் முழுதும் அறிந்ததே...இந்த அளவிற்கு பார்ப்பனீயம் என்ற பாம்பு , தன்னுடைய நஞ்சை கக்கிக்கொண்டிருக்கிறது ...!

வீதியில் இறங்கி போராட அழைக்கும் இந்து இளைஞர்களில் சூத்திரர்களும் அடக்கம் தானே ... நம்கையை வைத்தே, நம் கண்ணை குத்தும் வேலையில் அவர்கள் கைதேர்ந்தவர்கள் ... இளைஞர்களே ... நன்கு சிந்தியுங்கள்..நாமே தாசி மக்களாக தான் பார்க்கப்படுகிறோம் .. இந்த இந்துமதத்தில் என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.!

இதையும் கூட, இவர்களின் பக்தி என்ற பெயரில் நடத்திய, நடத்திக்கொண்டிருக்கும் அசிங்கங்களையும், ஆபாசங்களையும், வேதங்களின் உண்மை முகத்திரையையும் கிழித்தெறிய மற்றுமொரு வாய்ப்பாக தான் பெரியாரியவாதிகள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை ராஜாவிற்கு சொல்லிக்கொள்கிறோம்.!

Friday, 5 January 2018

ரசனை எனும் அனுபவம்.

" உங்ககிட்ட  இருந்து தான் நான் கத்துக்கிட்டேன் ... ரசிக்க பணமோ, வேறு எதாவது பெரிய விசயமோ தேவையில்லை என்று ... !" - மகன்.

சிறு புன்முறுவலுடன் , " அப்படியா  ...   எப்படி எழில்  சொல்றே ... "

" இல்ல... உங்களால் சின்ன சின்ன விசயங்களை கூட ரசிக்க முடியுது. இதனால்,  ஒரு குழந்தை போல எப்பவுமே உங்களால் சந்தோசமா இருக்கமுடியுது... இதுக்காக பெருசா மெனக்கெட்டு, எதையும் தேடி போகுறதுமில்ல...! "

" ம்ம்ம் .. ஆமா, ரசனை மிக முக்கியம் இல்லையா ... "

" அதான் சொல்றேன் ... உங்களால எப்படி சின்ன சின்ன விசயத்தை கூட ரசிக்க முடியுது ... "

" தெரியல ... " சிரித்துக்கொண்டே சொன்னேன்.

அவனும் சிரித்து கொண்டே சென்று விட்டான். 

இது எனக்கும்,  மகனுக்கும் நடந்த  நேற்றைய உரையாடல்.

இதைப்பற்றி நான் இதுவரை சிந்தித்ததில்லை. பிறகு தான் இதைப்பற்றி சிந்தித்தேன். 
ஆம்... என்னால் சிறிய விசயங்களை கூட ரசிக்கமுடியும். எனக்கு ரசனை அதிகம் தான். இந்த ரசனை என்ற ஒரு சுகமான அனுபவம் எனக்குள் எப்படி வந்தது  என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து  விட்டேன் ... யாராவது சொல்லித்தந்தார்களா ... இல்ல, நானாகவே கற்றுகொண்டேனா ... நினைவில் இல்லை. ஆனால் , என்னிடம் இயற்கையில் இந்த குணம் இருந்திருக்கிறது .. இருக்கிறது என்பது உண்மை.!

சிறு வயதிலிருந்து நாம் வாழ்ந்து வந்த வாழ்க்கை நமக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இயற்கை, இசை, குழந்தைகள், சக மனிதர்கள், நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பத்திலிருப்போர், பறவைகள், விலங்குகள், சினிமா, கலைகள்  என எல்லாமே நமக்கு ரசனையை ஊட்டி வளர்த்திருக்கின்றன என்றால் அது மிகையில்லை.
 இந்த ரசனையால் நாம் அதிகம் கற்று இருக்கிறோம், உணர்ந்து இருக்கிறோம்,மகிழ்ந்திருக்கிறோம்  என்பது உண்மை . எப்படியென்றால், ஒரு உதாரணத்திற்கு வைத்துக்கொள்ளுங்களேன்  ...

என்னுடைய பத்து வயதிலேயே , அம்மாவிற்கு சப்பாத்தி தேய்த்து கொடுத்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டு , 
' என்ன இப்படி கோணல்மானலாக தேய்ச்சு வைச்சிருக்க ..'  
என்று கேட்பார்கள். ஆனால், எனக்கு அது, ஒரு ஆஸ்திரேலியாவாகவோ, ஆஃப்ரிக்காவாகவோ, அமெரிக்காவாகவோ தான் தெரியும். ஒன்றும்  சொல்லாமல், சிரித்துக்கொண்டே, அதனைப்பற்றிய சிந்தனை நீளும்.
அதே போல , பீட்ருட் நறுக்கும்போது, அதனுடைய நிறம் நம்மை சுண்டி இழுக்கும். அதனுடைய காம்பினேஷன் நிறங்களைப்பற்றி நினைப்பதுண்டு. அதனுடைய சாறை உதட்டில் தடவிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்று பார்த்து சிரிப்பது  ...
மாடிப்படி ஏறும்போதும்கூட, கை பிடி சுவரை பிடிக்கும்போது,   பெருவிரலை ஒருபுறமும், மற்ற நான்கு  விரல்களை  மறுபுறமும் பிடித்து, நடுவில் உள்ளங்கை வைத்து  ஒவ்வொரு படிகள் ஏறும்போதும்,  கீழிருந்து மேலாக இத்தனை உயரம் எவ்வளவு சரியாக செய்து இருக்கிறார்களே ...என்று நினைத்து வியந்து மனதிற்குள்ளேயே அவர்களை பாராட்டுவது  என , இன்னும் எத்தனையோ  சொல்லலாம். உங்களுக்கு தான் படிப்பதற்கு போரடிக்கும்... :-) 

இந்த ரசனை தான் என்னைபோன்றவர்களுக்கு எனர்ஜி கொடுக்கும் ஒரு சிறந்த ஊட்டச்சத்து போன்றது.  வாழ்க்கையை மிக அழகாக அமைத்துக்கொடுக்கும். எந்த சூழ்நிலையிலும், மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். இப்போதிருக்கும் குழந்தைகள் இந்த அனுபவத்தை தவற விடுகிறார்கள் எனபது வருந்தத்தக்க உண்மை. ப்டிப்பைத்தாண்டி, சுற்றுப்புறசூழல் என்பதே அவர்களுக்கு தொலைக்காட்சியும், கணினியும், அலைபேசியும் தான் என்று ஆகிவிட்டது. ஆதலால் தான் , விரைவில் சலிப்பிற்கு ஆளாகிறார்கள். போர் அடிக்குது என்று ஆறு வயது குழந்தை கூட சொல்லுமளவிற்கு தற்போதைய வாழ்க்கைமுறை  மாறி இருக்கிறது. இந்த நிலைமையை நம்மால் முடிந்தயளவு மாற்றி அமைத்திட முடியும்.  முயற்சி செய்வோம்.

குழந்தைகளுக்கு ரசனைப்பற்றிய அனுபவத்தை பெறுவதற்கு துணையாக .இருப்போம். இயற்கையோடு இணைந்த வாழ்வியலை கற்றுத்தருவோம்.!

எப்படியோ ரசனைப்பற்றிய இந்த சிந்தனையை கிளப்பி, இந்த பதிவை எழுத வைத்த  என் மகனிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்...! :-) 

Thursday, 4 January 2018

ரஜினியிடம் சில கேள்விகள்.

ரஜினி மீது எனக்கு எப்போதும் மிகப்பெரிய ரசனை எல்லாம் இருந்ததில்லை... சில குறிப்பிட்ட படங்களை மட்டுமே  ரசித்து பார்த்திருக்கிறேன். என்றைக்கும்,  அவர் படத்தில் வரும் பெண்ணடிமைத்தனமான வசனங்கள் எரிச்சலை  தான்  ஊட்டி  இருக்கின்றன. 
மற்றபடி, வெறுப்போ, விருப்பமோ இருந்ததில்லை. ஒரு நடிகராக பார்க்கலாம், ரசிக்கலாம் ... அவ்வளவு தான்.!

அவர் கன்னடர் என்பதால் அரசியலுக்கு வரக்கூடாது என்பதல்ல... நம் நிலைப்பாடு .
சமூக பார்வையுள்ள, சமூக அக்கறையுள்ள,  சமூக செயற்பாட்டாளராக உள்ள  யார் வேண்டுமானாலும் வரலாம் தான். 
ஆனால்,  தமிழகத்திற்கு, தமிழக மக்களிற்காக நன்மை எதுவுமே செய்யாத, சொல்லாத, நினைத்துக்கூட பார்க்காத ஒரு நடிகரை எப்படி அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ள முடியும்.?

மேலும் ஆன்மீக அரசியல் என்ற ஒன்றை கையில் தூக்கிக்கொண்டு வருவதென்றால், அதுவும் சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில் அது செல்லுபடி ஆகுமா...?
 
முதலில் இது  ஒரு மதசார்பற்ற நாடு. அடுத்து சமத்துவம் இல்லாத ஆன்மீகம் எப்படி அரசியலில் சாத்தியப்படும்...?

ஆன்மீகமும், அரசியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ..?

இந்த கேள்விகளுக்கு பதில் இருக்குமா... திருவாளர் ரஜினியிடம்.!!!