Wednesday, 21 February 2018

உலக தாய்மொழி தினம்.


" என் தாய் மொழி தமிழ் என்பதில் பெருமையடைகிறேன்."

இன்று கலைஞர் தொலைக்காட்சியில், உண்மையிலுமே "தேனும்,பாலும்" தான்...  :-)

ஆரம்பமே, 

" தமிழுக்கும் அமுதென்று பேர் ...
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..."

என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் இனிமையான பாடல்.

அடுத்து, 

"சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு... "

அதுவும் பாவேந்தர் பாடல்.

மூன்றாவதாக, 
" அகர முதல் எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி,
ஆதிபகவன் முதல் என்றே உணர வைத்தாய் தேவி,
இயல், இசை, நாடக தீபம் ஏற்றி வைத்தாய் ...
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் நீயே... "

அருமையான பாடல், உயிர் எழுத்துகளை வைத்து எழுதப்பட்ட அழகான பாடல் வரிகள்,  நடிகர் திலகத்தின்  சிறப்பான நடிப்பு, டிஎம்ஸ் அவர்களின் கணீரென்ற குரல் ... அருமையிலும் அருமை. (என்ன ஒரே ஒரு குறை என்றால், இல்லாத கல்விக்கடவுள் என்று சொல்லப்படும்,  சரஸ்வதி முன்பு பாடப்பட்டது தான்.... :-p )

அடுத்து,

அழகே, தமிழே, நீ வாழ்க ...
அமுதே, உந்தன் புகழ் வாழ்க ...

என்ற ஒரு பாடல்.  இதுவரை பார்த்ததில்லை,கேட்டதுமில்லை. பாடகர். சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ஆரம்பத்தில் பாடுகிறார். அப்புறம் மலையாளம், கன்னடம் , தெலுங்கு என்று திராவிட மொழிகளில் வரிகள் உள்ள ஒரு பாடல். இதற்கு முன்பு, #பாரதவிலாஸ் படத்தில் பார்த்திருக்கிறேன், ஒருமைபாடு பாடலை...
இப்படி ஒரு பாடல் இருப்பது இன்று தான் தெரிய வந்தது.
  தம்பிகள் கேட்டால், வந்தேறி பாடல் என்று சொன்னாலும் சொல்வார்கள்.!  :-)

உண்மையில், பரபரப்பான காலைநேரத்தில், அரைமணிநேரம் எல்லாப்  பாடல்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து, கேட்டது மனதிற்கு இதமாக இருந்தது.!

இன்று உலக தாய்மொழி தினமாம். காலையின் தொடக்கமே அருமையாக இருக்கிறது என்று தோன்றியது. ஹலோ எப்.எம். பண்பலையில், காலை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில்,  தாய்மொழி தினத்திற்காக, தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப் பட்டது. பண்பலை ஆகட்டும், தொலைக்காட்சிகள் ஆகட்டும்... இம்மாதிரி, தினங்களை மக்களிடம் பொய் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஊடகங்களுக்கு நம்முடைய வாழ்த்துகள் உரித்தாகுக..(கேட்டது, பார்த்தது இவைகள் இரண்டு தான் ... மற்ற அலைவரிசைகள் பற்றி தெரியவில்லை... ஒலி(ளி )ப் பரப்பி இருந்தால், அவர்களுக்கும் நம்முடைய அன்பும், வாழ்த்தும், நன்றியும்.!

இந்த நாளில், குறைந்தபட்சம், வீட்டில், குழந்தைகளிடம், நம் தாய் மொழியான ,  தமிழ் மொழியில் பேசுவோம். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம், நம் மொழியைப பற்றி அவர்களுக்கு விளக்கி நல்ல புரிதலை உண்டாக்குவோம், மிக முக்கியமாக, தமிழைப் படிக்க வைப்போம். பிற மொழிகள் கற்றாலும், தாய்மொழியின் மகத்துவத்தை சொல்லி, மொழிப்பற்றை உருவாக்குவோம். கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பற்றிய உண்மைகளை எடுத்து சொல்வோம். மொழிப்பற்றின் மூலம் தான் இனப்பற்றை உருவாக்கிட முடியும். செய்வோமா ... நண்பர்களே.! 

#உலக தாய்மொழி தினம்.

#வாழ்க தமிழ் 

Tuesday, 20 February 2018

சர்வதேச சமூகநீதி நாள்.

இந்த சமூகம் என்பது தானாக உருவாகவில்லை ... நாமெல்லாம் இணைந்தது தான் சமூகம் என்று எல்லோருக்கும் தெரிந்த ஓன்று தான். நாமெல்லாம் சேர்ந்து உருவாக்கின இந்த சமூகதத்தில், எப்போதுமே  அநீதி இழைக்கும் ஒரு சாரார், எல்லா காலகட்டத்திலும் இருந்துகொண்டு தான் இருந்திருக்கிறார்கள். அதனை எதிர்த்து, போராடும் வல்லமை பெற்ற தலைவர்கள் வழிகாட்டியாய் இருந்து, பல விசயங்களில் அநீதியை வென்று நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். அநீதி தலையெடுக்கும் சமயத்தில், ஒவ்வொரு முறையும், இந்த தேக்கத்திற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது,   பெரும்பான்மையினராக  பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மனிதர்கள் ஒற்றுமையின்மையால், அதிகஇன்னலுக்கு ஆளாவது  வாடிக்கையாக தான் இருக்கிறது.  எத்தனை, எத்தனை வரலாறு நமக்கு போதித்தாலும், அனுபவங்கள் உணர்த்தினாலும், இந்த ஒற்றுமையின்மை தான் சமூகத்திற்கான நீதியை நிலையாக நிறுத்திவைக்க இயலாமல் போவதற்கு துணை போகிறது.!

எந்தவொரு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும்,நம்  சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறதென்றால், எல்லாவற்றையும் களைந்து, அனைவரும் ஓன்று சேர்ந்து, சமூகத்திற்கான நீதியை வென்றெடுக்க  வேண்டும் என்ற எண்ணம் உருவாவுமேயானால், அநீதியை நிரந்தரமாக புதைத்து விடலாம். சமூகநீதி என்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும்.!



#சர்வதேச_சமூகநீதிநாள்.

Monday, 19 February 2018

ஹாசினி உணர்த்திய பாடம்.


தஷ்வந்த்திற்கு தூக்குத்தண்டனை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டதும், ஹாசினியின் தந்தை கதறி அழுத அழுகை, இந்த கொடூர குற்றத்தின் பின்னணியிலுள்ள , தாங்கமுடியா வலியின்  கொடுமையை  நம் அனைவருக்கும் உணர்த்தியது. இம்மாதிரி குற்றங்களுக்கு, அதிகபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை விதிக்கப் பட தான் வேண்டும். இது போன்ற  குற்றங்களை தடுக்கப்படும் வழிகளில் இது முதன்மையானது. ஆனால், இது மட்டுமே போதுமானது அல்ல. பாலியல் கல்வி மிகவும் அவசியம் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்து. இதனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். மிக முக்கியமாக நம் அரசு, இதனை பரிசீலிக்க ஆயுத்தபப்ட்ட வேண்டும்.
 எதை வேண்டுமானாலும் பார்க்கலாம், தெரிந்துகொள்ளலாம் என்ற வசதியை கொடுக்கும் இணையம், நம் பிள்ளைகளின் கைகளில் இருக்கும் அலைபேசி மூலம் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. இதன் காரணமாக பாலியல் சம்பந்தப்பட்ட விசயங்கள் அனைத்தும், அவர்களால்  சரியாக புரிந்துகொள்ளப்படுகிறதா என்றால் சந்தேகமே. இதனை கல்வி மூலம் தெளிவாக  விளக்கி  ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், இதற்கான பொறுப்பை உணர்ந்து, அவர்களின் வயதிற்கேற்றவாறு, அவர்களின் புரிதலுக்கேற்றவாறு விளக்கி தெளிவுபப்டுத்த வேண்டியது அத்தியாவசியமாகிறது. 

பிள்ளைங்களிடம் , வெறும் படிப்பை மட்டுமே திணித்து,  செல்லமாகவும், அவர்களின் பிடிவாதங்களுக்கு  எதிரான சரியான புரிதலை உருவாக்காமல்,  சமூகப் பார்வையில்லாமல் வளர்க்கப்படும் முறையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். சமூகத்தின் மீது மிகுந்த பற்று வருமானால்,  இது போன்ற குற்ற எண்ணங்கள் மனதில் தோன்றாமல் தடுக்கமுடியும், மேலும் நாம் சமூகத்திற்கு, தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்ற  ஒரு கடமையுணர்ச்சியை வளர்க்க ஏதுவாகும். சிந்தித்து செயல் படுவோமா  ... நண்பர்களே.!

Monday, 12 February 2018

ஜாதியை உடைக்க வல்லவை ... காதல் திருமணங்கள்.



' லவ் மேரேஜ் பிடிக்குமா ...? '
' பிடிக்குங்கா ... ஆனா, வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க ... ஒரே ஜாதிய இருந்தா, எப்படியாவது சம்மதிக்க வைச்சுடலாம்... இல்லையனா, ரொம்ப கஷ்டம் ... இது எதுக்கு தேவையில்லாத பிரஞ்சனைனு நான் அதைப் பத்தி யோசிக்கிறத இல்ல...! '
' 25 வருசத்துக்கு முன்ன, நானும் இப்படி தான் யோசிச்சேன்..ப்பா. இப்பவும் அதே நிலைமை தான் இருக்குனெனும் போது ரொம்ப வருத்தமா இருக்கு...'
' என்ன செய்றது ... அக்கா..' என்று சிரித்தார்.
' காதல் திருமணங்கள் மூலமா தான் இந்த ஜாதி ஒழியும் என்று பெரியார் சொல்லியிருக்கிறார் ... அதை நம்பளால செய்ய முடியலனாலும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கனும் .... இல்லையா, நிறைய பெரியாரை படிப்பா... அதிகமா தெரிஞ்சுக்கலாம். நீ படற கஷ்டம் அடுத்த தலைமுறை பட கூடாது. சுதந்திரமா வாழறதுக்கு உதவியா இருக்கும்.! '
இது எனக்கும், உடல்நலமில்லாத என் மாமியாரை கவனித்துக் கொள்ள வரும் செவிலியருக்குமான உரையாடல். அந்த சகோதரியிடம் , தினமும் கொஞ்சமாவது பெரியாரைப் பற்றி சொல்லி விடுவேன் ... ஆர்வமாக கேட்டுக்கொள்வார். சந்தேகங்களை அப்பப்ப நிவர்த்தி செய்து கொள்வார். இப்ப என்னவென்றால், எனக்கு முன்னமே அவர், விடுதலையைப் படித்து விடுகிறார். இதுவரை, இவர் மூன்றாமவர்... எங்கள் வீட்டிற்கு வந்து , பெரியாரைப் படிக்க ஆர்வமுள்ளவராக மாறியவர்கள்.! 
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண் விடுதலையைப் பற்றி, பெரியார் சொன்னதை, சொன்னாலே போதும்... பெண்கள் பெரியாரைப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். யாருக்கு தான் சுதந்திரமாக இருக்க பிடிக்காது.! :-) :-)

காதலை பற்றி பெரியார்.

" மணம்  என்பதை, நாம் மணமக்கள் சௌகரியத்திற்காக  என்று செய்துகொள்ளப்படும் ஒரு ஒப்பந்த ஏற்பாடு என்று தான் கருதுகிறோம்.அதில்,இருவர்களுடைய சுயேட்சையும் சேர்ந்தோ அல்லது தனித்தனியோ கட்டுப்படுத்தும் எவ்வித கொள்கைகளும் இருக்கக் கூடாது.
அன்பு, காதல் ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும்,அது சுதந்திரமுடையதாகவும், உண்மையுடையதாகவும் இருக்க வேண்டும்.! "

#தந்தைபெரியார் 
' குடியரசு ' 12.10. 1930.

88 ஆண்டுகளுக்கு முன்பே  குடியரசில், பெரியார்  எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி தான் இது. அப்போதே, 100, 200 ஆண்டுகளுக்கு முன்னால் சென்று, சிந்தித்து சொல்கிறார். 
ஆனால், இப்போதிருக்கும் இந்து  அமைப்புகள், 200, 300 ஆண்டுகளுக்கு பின்னே சென்று, காதலர்களை கண்டிக்கிறது. பொதுவெளியில் இருக்கும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று மிரட்டுகிறது. சமூகத்தில், மனிதகுலத்தின் நாகரீகம், வளர்ச்சி,முன்னேற்றம் என்பது முன்னோக்கி செல்வதா, இல்லை பின்னோக்கி செல்ல வழிவகுப்பதா...?

இந்த இந்து  சங் பரிவாரங்கள் நம் சமூகத்தை பின்னோக்கி செல்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.!

காதல் போற்றப்பட வேண்டிய ஓன்று.!



எல்லாமே செய்யற எங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க முடியாதா ... #பழமைவாதிகளுக்கு காதல் எதிரி.!
எங்கே மதம், ஜாதி அழிக்கப்பட்டு விடுமோ என்ற கவலை ...#ஜாதிமதவெறியர்களுக்கு காதல் எதிரி.!
பெண்களை அப்படியெல்லாம் சுதந்திரமா விட்டுவிட முடியாது ...#ஆணாதிக்கவாதிகளுக்கு காதல் எதிரி.!
ஆனால், காதல் போற்றப்பட வேண்டிய ஒன்று .... ஏன்...?
அன்பு மட்டுமே பிரதானமாக, இருக்கும் அழகிய உணர்வு தானே ...#காதல்
பதின்பருவத்தில், ஒருவித ஈர்ப்பும், இருபதுகளில், ஆசையும், மோகமும், அன்பும் கலந்து, முப்பதிற்கு மேல், மிகுதியான பாசப் பிணைப்பையும், மரணத்தின் விளிம்பில், நேசத்தின் நெகழ்ச்சியாகவும், தள்ளாடும் முதுமையின் நம்பிக்கையாகவும் #காதல் வாழ வைக்கிறதென்றால், காதல் போற்றப்பட வேண்டியது தானே.!
' ங்க' என்று அழைக்கும் மனைவியை ' டி ' போட வைக்கும் உங்கள் நி்ர்பந்த காதலை திணிக்கும் ஆதிக்கத்தை, கிழித்து, ஒருவரையொருவர் பெயரிட்டு அழைக்கும்#பாலின_சமத்துவத்தை வலியுறுத்துகிறது என்றால், #காதல் போற்றப்பட வேண்டிய ஒன்று தானே.!
இரு மனங்கள் இணைந்து, உணர்வுகளை பரிமாறிக் கொள்கிறது, மனிதத்தை மதிக்கிறது என்றால், #காதல் போற்றப்பட வேண்டிய ஒன்று தானே.!
காதல் ஒரு அழகிய உணர்வு ... காதல், அன்பு, பாசம், நேசம் இல்லாத மனித வாழ்வு, இவ்வுலகில் சாத்தியப்பட கூடிய ஒன்றா...!

Friday, 9 February 2018

கார்ப்பரேட் பக்தி.

 "பிப்ரவரி 13, மஹா சிவராத்திரி ... ஜக்கியின் அருளுரை, சக்தி வாய்ந்த தியானம், தலை சிறந்த இசை கலைஞர்களின்  இசை நிகழ்ச்சி. கலந்து கொள்ள வாருங்கள்."

இப்படி ஒரு விளம்பரம், இரு தினங்களாக  தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் ஒலி பரப்பப்படுகிறது. இது வரை பக்தி வியாபாரமாக தான் மாற்றப்பட்டிருந்தது. இதனை கார்பெரேட் வியாபாரமாக மாற்றிய பெருமை மோடியின் பாஜக ஆட்சியையே சாரும். எல்லா சாமியார்களையும் வளர்த்து விடுவதையே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறது. சென்ற ஆண்டின் போதே, ஒலி  மாசு கட்டுப்பாடு வாரியம், அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு அதிக ஒலியை, இந்த ஈஷா மையம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியது. இதனால்,பறவைகள் அதிக இன்னலுக்கு ஆளாகி, மிரண்டு இறந்திருக்கின்றன என்ற ஒரு விசயத்தை தெரிவித்து, தன்னுடைய கண்டனத்தையும் வெளியிட்டு இருந்தது. ஆனால், இதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டதா என்று இன்று வரை தெரியவில்லை. இது இபப்டி இருக்க,  இந்த ஆண்டும் பக்தி, கொண்டாட்டம் என்ற பெயரில் கூத்தடிக்கப் போகிறார்கள். வடநாட்டில், தசரா என்ற பெயரில், நடக்கும் கலாச்சார சீரழிவை, இங்கும்  இந்த மஹாசிவராத்திரி என்ற பெயரில் கொண்டுவந்து, நம் மக்களையும், இந்த சாக்கடைக்குள் மூழ்கடிக்கப்  பார்க்கிறது ... ஜக்கியின் ஈஷா மையம்.! 

பேரன்பின் ஆற்றல் அம்மா.

ஒரு பிரச்சனை நம்மை வாட்டி வதைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். புதிதாக, மற்றொன்று வரும்போது,  பழைய பிரச்சனை சிறியதாக தோன்ற ஆரம்பித்துவிடும். இந்த வழக்கம் இருப்பதால் தன என்னவோ, நாமும் பல மன சங்கடங்களை, பல்வேறு காலக்கட்டத்தில், பலவாறு கடந்து  வந்து கொண்டு தான் இருக்கிறோம். மற்றவர்களுடன் மனம் விட்டு பகிர்தல் என்பது நம்மனதை மிகவும் இலேசாக்கி விடுகிறது என்பது உண்மை. உறவினர்களிடமும்,  மற்றும் மிகமுக்கியமாக  மனதில் உள்ளதை அப்படியே பகிர நல்ல தோழமைகள் இருக்கிறார்கள் என்ற போதிலும், நம்மை முழுதும் புரிந்தவர் என்ற இடத்தில் அம்மா முதலிடத்தில் இருக்க தானே செய்கிறார்கள். பகிர கூட வேண்டாம்... மனம்   சங்கடப்படும்போது அம்மாவின் குரல் மட்டுமே போதும். நம்மை மீண்டும் புத்துணர்ச்சி பெற வைத்துவிடும் தானே. நம்முடன் இருக்கும் வரை , அவர்களுடைய அன்பின் ஆற்றல் பெரிதாக தெரிவதில்லை. நம்மை விட்டு சென்றபிறகு தான், அம்மா என்ற பேரன்பின் ஆற்றலை  முழுதுமாக உணர முடிகிறது. எப்படியோ, 21 ஆண்டுகள் கடந்து விட்டன. நினைக்கும்மாத்திரத்தில், மகிழ்ச்சியை  மட்டுமே தரும் நினைவுகளாக, எங்கள்  அம்மா  எங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.!

தன பிள்ளைகளின் முகத்தை,குரலை வைத்தே, உடம்பு சரியில்லை, மனசு சரியில்லை என்பதை அம்மாவால் மட்டுமே கூற  முடியும். மிகவும் குழம்பி போயிருக்கும் காலங்களில் கூட, " எல்லாம் சரியாயிடும், மனசை போட்டு குழப்பிக்காதே ..எதுவும் நிரந்தரம் இல்ல.. சுசி ... "  என்று பொறுமையும், தாங்கும் திறனையும், சகிப்புத்தன்மையும் எனக்கு கற்றுக்கொடுத்தவர்கள் என் அம்மா தான். அவர்களுடைய இழப்பை கூட, ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தியவர்கள். எல்லோருக்குமே அம்மா  என்பவர் மிக முக்கியமானவராக உணர்வதற்கு, இது தான் காரணமாக இருக்கும் என்று  நினைக்கிறேன்.!

தன்னைப்பற்றி சிறிதும் நினைக்காத அம்மாவைப் பற்றி, அவர்களின் விருப்பத்தைப் பற்றி, அவர்களின் இலக்கைப்பற்றி, அவர்கள்  இருக்கும் போதே , அறிந்து அதனை நிறைவேற்றி வைக்க பிள்ளைகள் தங்களை ஆயுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான சுயத்தை இழக்காதவாறு இருக்க,நாம் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று காலம் கடந்து இப்போது தான் தெரிகிறது... அவர்களின் மனதை புரிந்து செயல்பட்டிருக்க வேண்டும் என்று  தோன்றுகிறது.!  

Saturday, 3 February 2018

மதுரை மீனாட்சியம்மன் தீ விபத்து.

மதுரை மீனாட்சி அம்மன் தீ விபத்து குறித்து, சிலருடைய சில செய்திகள்....

* இந்து அறநிலையத் துறையை நீங்கிவிட வேண்டும்.  - மதுரை ஆதீனம்.

* ஆட்சியில் தவறு நடந்தால் இந்து போன்ற தீ விபத்துகள் நடைபெறும்.    அதற்கான பரிகாரங்களாக, யாகங்கள் செய்ய வேண்டும். - ஸ்ரீனிவாச  சாஸ்திரிகள்.

* ஆட்சிக்கு ஆபத்து வர போகிறது. ஆட்சியாளர்களுக்கும் சில விபத்து    போன்றவை நிகழும். - ஜோதிடரின் கணிப்பு. ( பெயர் 
 தெரியவில்லை...சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேசினார்..)

* இந்து அமைப்பைச்  சேர்ந்த சிலர்,  ' பாரத்  மாதா கி  ஜே ..' என்று கோவிலின் முன்னே கோசமிட்டனர்.

இனி நம்முடைய கேள்விகள் ...

* இப்போது இவ்வளவு பேசும் நீங்கள், தீ விபத்து வருவதற்கு முன்னே ஏன் சொல்லவில்லை..?

* யாகங்கள் செய்வது தான், இதற்கான வழி, பரிகாரம் என்றால், யாருடைய பணத்தில் செய்வீர்கள் ...மக்கள் வரி பணத்திலா, அரசு பணத்திலா  அல்லது நாட்டிற்காக, மக்களிற்காக நீங்கள் இலவசமாக செய்து தருவீர்களா ... ??

* இந்து அறநிலையத் துறையை  நீக்கிவிட்டு, வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ளது போல்,  முழு பணத்தையும் நீங்களே அபேஸ் பண்ணிவிடலாம் என்ற எண்ணமா...???

* தீ விபத்து நடந்த இடத்தில் பாரத மாதாவிற்கு என்ன வேலை ... எதற்கு அந்த கோசம்..????

* கடைசியாக ஒரு கேள்வி ... தீ பற்றியது கோவிலில் ... அதனை தடுக்க உங்கள் கடவுள் வரவில்லையே ... ஏன், குறைந்த பட்சம் வருணபகவானையாவது அனுப்பி அக்கினி பகவானை தணிய  செய்திருக்கலாமே...! 

சிந்தியுங்கள்.... மக்களே.!