இரண்டு நாட்களாக காஸ் ஸ்டவ்யில் இலேசாக எரிவாயு கசிவது போன்ற நாற்றம் வந்துகொண்டிருந்தது. புகார் கொடுத்து, உடனே, சீர் செய்ய வரவழைத்தோம். வந்த நண்பர், எல்லாவற்றையும், பரிசோதித்துவிட்டு,
' டியூப் மாற்றவேண்டும் என்று நினைக்கிறேன். மற்றபடி எல்லாம் சரியாக தான் இருக்கிறது ... இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிவிடுஙகள்' என்றார்.
' சரி ... மாற்றி விடுங்கள் ' என்றேன்.
வேலை நடந்துகொண்டிருக்கும்போதே, பேசலாமென்று ஆரம்பித்தேன்... ( நாம் தான் எல்லோரிடமும் அரசியல் பற்றி பேசுவோமே...)
' எங்கே இருக்கிறீர்கள் ... இந்த ஏரியா தானா.."
' இல்லை மேடம், நான் நார்த் மெட்ராஸ் , புரசைவாக்கம்...'
' ஓ .. அப்படியா, புரசைவாக்கத்துல எங்கே...?'
' புவனேஸ்வரி தியேட்டர் தெரியுமா... அதுக்கு பக்கத்துல பெரம்பூர் பேரக்ஸ் ரோட்ல தான்... மேடம் '
' ம்ம்ம் ... தெரியும், நான் பெரம்பூர் தான், அப்பல்லாம் ஷாப்பிங் என்றாலே புரசைவாக்கம் தானே... '
' நான் நினைச்சேன் மேடம் ... நீங்க நல்லா பேசறத பாக்கும்போதே...'
' ஏன் ... நல்ல பேசுறவங்க எல்லாம் அங்கே தான் இருக்காங்களா..'
' இல்லை மேடம், தப்பா நினைக்காதீங்க... இந்த அடையாறு, மைலாப்பூர், அண்ணாநகர், அசோக் நகர் ஏரியாவுல இருக்குறவங்க எல்லாம் ரொம்ப பேச மாட்டாங்க... கொஞ்சம் தள்ளியே நிப்பாங்க...'
' தப்பா நினைக்க இதுல என்னங்க இருக்கு... நீங்க சொல்றது சரி தான்... இந்த ஏரியாவுல இருக்குறவங்க எல்லாம் அதிகம் படிச்சவுங்க, காசு உள்ளவங்க.. அதான், படிச்ச கர்வம், காசு இருக்கிற பணக்காரத்தன்மை .. அதனால தான் அப்படி இருக்காங்க... இருந்தா, இருந்துட்டு போகட்டும் .. விடுங்க, அவங்க காசு அவங்களுக்கு, ஆனால், அவர்களைவிட , நம்ம ஏரியாவுல இருக்குறவங்க தான் மனிதர்களை படிச்சவுங்க... மனச படிச்சவுங்க...' என்றேன்.
' நீங்க சொல்றதும் சரி தான்... ஆனால், அதையும் தாண்டி, அவர்கள் பார்வை ஜாதி சம்பந்தப்பட்டது மேடம். கிச்சன்ல செய்ய வேண்டாம். ஸ்டவ்யை பால்கனிக்கு எடுத்துக்கிட்டு போயிடுங்க.. என்பதும், நம்மை பார்த்ததும், சாமான்களை தள்ளி வைப்பதும், நீ வேற ஜாதிக்காரன் , நீ இதெல்லாம் தொடக்கூடாது , என்பது போலவே இருக்கும் மேடம்.'
என்னால கொஞ்சநேரத்துக்கு பேச முடியல... என்ன சொல்றதுனும் தெரியல... பிறகு,
' ஜாதி ஒழிஞ்சுடுச்சுனு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டு இருக்காங்க... அது ஒரு பக்கம் வளர்த்துக்கிட்டே இருக்கு... என்ன செய்றது, நாமும் சொல்லிகிட்டே தான் இருக்கோம், என்னைக்கு ஒழியும்னு தான் தெரியல... அப்படிப்பட்டவங்கள அலட்சியப்படுத்திடுங்க, நாம் யாருக்கும் கீழ்வானவங்களும் இல்ல, யாருக்கும் மேலானவங்களும் இல்ல... உங்க குழந்தைங்களுக்கு சொல்லி வளருங்க... அக்கம் பக்கத்துலயும் சொல்லுங்க, வருங்காலத்திலேயாவது மாறுவாங்க என்று நம்புவோம்.'
' ஓகே .. மேடம், நீங்க சொல்றது ரொம்ப சரினு தான்படுது, பாக்கலாம், வேலை முடிஞ்சிடுச்சி , நான் கிளம்புறேன்.'
அவர் சென்றபிறகு இதைப்பத்தி, நிறைய யோசித்தேன். இந்த மக்களுக்கு ஜாதி என்ற உணர்வு எப்படி ரத்தத்துல கலந்து ஓடிக்கிட்டு இருக்கு... சில மாதங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டிற்கு வந்த போது, செவிலியர் சொன்னது நினைவிற்கு வந்தது.
' அக்கா, உங்கள் வீட்டில் தான் கிச்சன் வரை வருகிறேன்., இப்ப தான் ஊரிலிருந்து வந்தபிறகு, உங்கள் எல்லோருடனும் சேர்ந்து டைனிங் டேபிளில் சாப்பிடுகிறேன் ' என்றார்.
' ஏனப்பா... அப்பிடி? ' என்றேன்.
' இல்லைக்கா ... இதுவரை நாலு வீட்டுக்கு ஹோம் டூட்டி போயிருக்கேன். அதுல மூணு வீடு பிராமின் வீடு, ஒருத்தவங்க யாருனு தெரியாது. ஆனா, பிராமின் கிடையாது. எல்லோருமே, கிச்சனுக்கு வரக்கூடாதுனு சொல்வாங்க, தனியா பேஷண்ட் இருக்குற ரூமுக்குள்ளேயே சாப்பிட சொல்வாங்க. போனதிலிருந்து, ஒரே தட்டு தான், ஒரே டம்பளர் தான். மறந்து கூட மாத்தி கொடுக்க மாட்டாங்க... இதுல இரண்டு வீட்டுல, நீ என்ன ஜாதிம்மா ? என்று நேராவே கேட்டாங்க..க்கா .' என்றார்.
இந்த ஜாதி என்ற புற்றுநோய், நம் சமூகத்தில் ஊடுருவி புரையோட வைத்திருக்கிறது. இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்படவில்லையென்றால், உயிரிழப்பு ஏற்ப்படும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம்.
"ஜாதி தான் இந்த சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும் " என்ற அண்ணலின் ஆதங்கமும்,
"மதம், மனிதனை மிருகமாக்கும், ஜாதி மனிதனை சாக்கடையாக்கும் " ஏற்ற தந்தை பெரியாரின் நிதர்சன பார்வையும்,
எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதற்கு, நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.! :-(