Wednesday, 25 April 2018

விரட்டியடிக்கப்பட்ட வேண்டிய கட்சி பாஜக. துடைத்தெறியப்படவேண்டியது இந்துத்துவம்.!

பதினைந்து நாட்களுக்குள், எததனை பாலியல் வன்புணர்வுகள், வன்கொடுமைகள், இதுவும் ஒரு நாடா என்று அருவெறுக்கும் அளவிற்கு  அல்லவா நடந்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள மதவெறியர்கள், ஊழல்வாதிகள், குழந்தைகள் என்று கூட பார்க்க முடியாத மனிதநேயமற்ற  வக்கிரபுத்தியுள்ள மனிதர்கள், தவறு என்று தெரிந்தும் செய்துவிட்டு, செய்தவர்களையும் சேர்த்து ஆதரிப்பவர்கள்  என எல்லோரும் ஓன்று சேர்ந்திருக்கும் ஒரு  கட்சி தான் பாஜக என்பது  தெளிவாகிறது.  அதன் பின்புலமாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்புகள் தங்களின் பெண்ணடிமை கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் மிகவும் மோசமான ஆணாதிக்கவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டிருக்கிறது.! 



இனியும், இக்கட்சியை விட்டுவைத்தால், பெண்குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் செய்துவிடுவார்கள். விரட்டியடிக்கப்பட்ட வேண்டிய கட்சி பாஜக. துடைத்தெறியப்படவேண்டியது இந்துத்துவம்.!

Saturday, 14 April 2018

அண்ணல் அம்பேத்கர் 127-வது பிறந்தநாள்.

நம் கண்முன்னே வரலாற்றை மாற்றி , திரிபு வேலை செய்வதில் ஆரியம் கை தேர்ந்ததாயிற்றே... அதுவும் அவர்கள் கையில் ஆட்சிப்பொறுப்பை வடநாட்டினர் கொடுத்ததின் பலன், இன்று நாம் அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில், அண்ணலின் படத்தை வைத்துக்கொண்டு போவதும், அன்னாரின் சிலைக்கு காவி நிறம் அடிப்பதும், பெயரில் ராம்ஜி என்று சேர்க்கவும் எத்தனித்துக்  கொண்டிருக்கிறது. இந்துத்துவம் அண்ணலை அணைத்து அழிக்கப்பார்க்கிறது...  இவ்வேளையில், வரலாற்று உண்மைகளை இளைய தலைமுறைகளுக்கு எடுத்துக்கொண்டு போய் சேர்ப்பது நம்முடைய தலையாய கடமை. 

" தன்னை உயர்ந்த ஜாதியாகவும், மற்றொருவனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி."

" கெடுவாய்ப்பாக , நான் தீண்டத்தகாத இந்து மதத்தில் பிறந்துவிட்டேன். அதை தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவெறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக்கொள்ள முடியும். எனவே, நான் உறுதியாக கூறுகிறேன், நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்." 
- அண்ணல் அம்பேத்கர்.
( 13.10. 1935)

என்று முழங்கியவர். சொல்லியவாறே, 10 லட்சம் பேர்களோடு, இந்து மதத்தைவிட்டு, புத்தமதத்தை தழுவியவர்.!

" ஏப்ரல் .14, அண்ணலின் பிறந்தநாள்."  



" இந்த இனிய பிறந்தநாளில் வாழ்த்துகள் கூறுவதோடு, அவருடைய கொள்கைகள், கருத்துகள், செயல்பாடுகள் அனைத்தையும் மக்களிடம்  பரப்புரை செய்வோம்... நண்பர்களே.!"

நீதி வேண்டும் ... ஆசிபாவிற்கு.!

உலக அரங்கில் , மதசார்ப்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு, மதரீதியாக மக்களை பிரித்து, சிறுபான்மையினராக மாற்றி, இந்த மதவெறியர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும், தற்போது மிகவும் கொடூரமுறையில் நடந்துகொண்டிருப்பதை காண சகிக்கவிலையே... ' மதம் மனிதனை மிருகமாக்கும் ' என்பதை எப்படியெல்லாம் மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் ... இந்த மதவெறியர்கள்.!

படிக்கும்போது, இரத்தத்தை உறைய வைத்து, இதயத்துடிப்பை நிறுத்திவிடக்  கூடியதாய் அலலவா  இருக்கிறது, குழந்தை  ஆசிபாவிற்கு நடந்திருக்கும் கொடுமை. என்ன சொல்வதென்றே தெரியவில்லையே... இந்த செய்தியை படித்ததிலிருந்து, பதறிக்கொண்டிருக்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லையே ... பெருகிவரும் கண்ணீரை துடைக்கவும் முடியவில்லையே...  புலம்பி அழுவது தான் விதி என்று விட்டுவிடத்தான் முடியுமா... மதம் பிடித்த மனிதர்களின் மதவெறி, சதியாக திட்டம் திட்டப்பட்டு, தனக்கு என்ன நேர போகிறது என்பதை கூட  அறியா ஒரு குழந்தை , இன்று பலியாகியிருக்கிறது. அதுவும், மிகவும் கொடூரமான முறையில், கடவுள் இருபப்தாக உங்களால் சொல்லப்படும் உங்கள் கோவிலில்,  அனைத்து கொடுமைகளும் நடந்து முடிந்திருக்கிறன.!

இது, மனிதகுலத்திற்கு   வெட்கி, தலைகுனியவைக்கும், மாபெரும் இழுக்காக வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறதே ...  உங்களின் மதவெறிக்கு அந்த குழந்தை என்னடா செய்தது... ???

மனிதத்தை விட மதம் , உங்களுக்கு எதை தந்து விட்டது, எதை சாதிக்க வைத்துவிட்டது.!!!

" அய்யோ... ஆசிபா ... மன்னித்து விடு மகளே ..." என்று மன்னிப்பு கேட்கும் தகுதியை கூட இழந்து நிற்கிறது ... இந்த இந்திய தேசமும், அது கையில் பிடித்திருக்கும் மதமும்.! 

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!

ஏப்ரல் 14 , தமிழ்ப்புத்தாண்டு என்பதற்காக சொல்லப்படும் அருவெறுப்பான கதையை கூட விட்டுவிடுவோம். ஹெவிளம்பி என்ற ஆண்டு முடிவடைந்து, ஸ்ரீ விளம்பி என்ற ஆண்டு பிறக்கிறதாய், சொல்கிறது ... கால நாட்காட்டி. 

ஒருமுறையாவது சிந்திப்போமா , மக்களே, தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படும் 60 பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் இருக்கின்றனவே. அது எப்படி சாத்தியமாகும் என்பதை.!

இதனை ஆய்வு செய்து சொன்னவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் தெரிந்துகொள்வோம்.!

1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் 'மறைமலைஅடிகளார்' தலைமையில் 500 தமிழறிஞர்கள் குழு ஆய்வு செய்து "தை" முதல் நாளே தமிழ் புத்தாண்டு என முடிவு செய்யப்பட்டது.
“தை” முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு.!"

" நித்திரையில் இருக்கும் தமிழா!
   சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு 
   அண்டிப் பிழைக்க வந்த ...
   ஆரியர் கூட்டம் காட்டியதே 
   அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டுகள்!
   தரணி ஆண்ட தமிழருக்குத் 
   தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! "

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். 



Saturday, 7 April 2018

துணை வேந்தர்களுக்கான நியமனத்தில் ஆளுநரின் தலையீடு.

கல்வியாளர்களும், பல்கலைக்கழக உயர்ப்பதவியில் இருப்பவர்களும் ஓன்று சேர்ந்து,  வேற்று மாநில, வலது சிந்தனையுடைய துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் இந்த போக்கிற்கு, எதிர்ப்பு தெரிவித்து, போராடி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால், இப்போதிருக்கும் இந்த மூன்று என்ற எண்ணிக்கை ,  

இசை பல்கலைக்கழகம் . பிரமிளா குருமூர்த்தி, 

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம். தம்ம சூரிய நாராயண சாஸ்திரி, 

அண்ணா பல்கலைக்கழகம். சூரப்பா,

 அதிகமாக உயர்ந்து, நமக்கான கல்வியை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு விடும். மத்திய உயர் கல்வி நிறுவனங்களால் உள்ளது போன்று , ஏவிபிவி அமைப்புகள் உண்டாக்கப்பட்டு, இந்துத்துவம்  பரப்பப்படும். நாளைய நம் தலைமுறையினர், கல்விக்கு போராடக்கூடிய பேராபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.!

ஏப்ரல் 5, 2018 காவேரி மேலாண்மை வாரியத்திற்கான போராட்டம்

' போராட்டம் வெற்றி என்று எப்படி சொல்கிறீர்கள், காவேரி நீர் கிடைத்தா விட்டது ...?  ' 

இந்த கேள்வியை ஒருவர், இருவர் அல்ல... பல நண்பர்கள் கேட்டுவிட்டார்கள். அவர்களைப்  போன்றோர்களுக்கான பதிவு இது ...

கடந்த 5-ஆம் தேதி திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் நடத்திய முழு கடையடைப்பு போராட்டத்திற்கு,  வணிக சங்கங்கள், வழக்கறிஞர்கள், போக்குவரத்து ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிகள், கல்லூரிகள் என ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களே, தங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்பதை கூட, பொருட்படுத்தாமல், இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள், தங்களின் ஆதரவை முழு மனதுடன் அளித்திருக்கிறார்கள் என்றால், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை, முடிவை, விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று தானே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட வெற்றிக்கு வேறன்ன வேண்டும். !

இந்த போராட்டத்திற்குப்பிறகு தானே, கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ், தன்னுடைய அமைப்பைத் திரட்டி, வாரியம் அமைக்கக் கூடாது என்றும், தமிழ்நாடு போர் தொடுக்கிறது(!) என்றும் போராட்டம் நடத்தினார். கர்நாடக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் வாரியம் அமைக்கக்கூடாது என்று வெளிநடப்பு செய்தார்கள். கர்நாடக முதல்வர், மத்திய அரசு, தமிழ்நாட்டின் மிரட்டலுக்கு பணியக்கூடாது என்று அறிக்கை விடுத்தார். கர்நாடகத்திற்கு இந்த அச்சம் வருவதற்கான முழு காரணம் இந்த போராட்டம் தானே. ஆளும் அதிமுகவினர்  உண்ணா(!)விரதம் இருந்தார்களே ... 15 நாட்களுக்கு மேல் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதே, அப்போதெல்லாம் இல்லாத அச்சம் இப்போது மட்டும் வருவதற்கான காரணம் என்ன..!

தமிழ்நாட்டில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக ஒரு மாயையை பாஜக ஏற்படுத்த முயன்ற , சூழ்ச்சி உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறதே...!

இப்போதாவது சிந்தியுங்கள் ... திமுக எதை செய்தாலும் குறைகூறும்  மனப்பான்மையை விட்டு வெளியில் வாருங்கள் ... நண்பர்களே.!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை, அனைத்து மனத்தடைகளையும் நீக்கிவிட்டு , எல்லோரும் ஒன்றாக  இணைந்து குரல் கொடுப்போம்.!

#We_want_CMB

Wednesday, 4 April 2018

காவேரி மேலாண்மை வாரியத்திற்கான தமிழக போராட்டம் .

தமிழகமெங்கும், சாலை, ரயில்மறியல்கள்,
விமானநிலையம் முற்றுகை,
தபால்நிலையம் நிலையம் முற்றுகை,
என்எல்சி முற்றுகை,
சென்னை காமராஜ் சாலையில் மாபெரும் பேரணி,
90% போக்குவரத்து முடக்கம்,
95% கடைகள் அடைப்பு,
அமைச்சர்கள் வீட்டினுலேயே முடக்கம் ....
இதுவல்லவோ போராட்டம் என்று வியக்குமளவிற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள், பங்கு கொண்டிருக்கும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடந்துக்கொண்டிருக்கும் இந்த போராட்டம், தமிழக போராட்ட வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தை பெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.!
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் என்று சொன்னவர்களை
சம்மட்டியால் அடித்து நொறுக்கியிருக்கிறது ... திமுக மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகள்.!👍👍
05/04/2018

Tuesday, 3 April 2018

போராட்டங்கள் மதிக்கப் பட வேண்டும்.

கெயில், மீத்தேன், ஸ்டெர்லைட், நீட், நியூட்ரினோ, கூடங்குளம், மருத்துவ மேல்படிப்பிற்கான இடஒதுக்கீட்டில் குளறுபடி, காவேரி மேலாண்மை வாரியம் என , இவைகளை எதிர்த்து , தொடர்ந்து நம்மை வேறு வகையில் சிந்திக்கவிடாத வண்ணம் போராடும் ஒரு நிலைமையினை ஏற்படுத்தி இருக்கிறது மத்திய பாஜக மோடி அரசாங்கம். தமிழகமெங்கிலும் தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், மத்திய அரசு அலுவலகங்கள் இழுத்து மூடுதல் என பல வழிகளில் நடந்துகொண்டிருக்கின்றன. நம்மை வளர்ச்சி, முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்ல வேண்டிய மாநில அரசு, இருக்க வேண்டியதை தக்க வைத்துக்கொள்வதற்கே போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது. 
மேலும், நமக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசிற்கு, கைகட்டி அடிமை சேவகம் புரிந்துக் கொண்டிருக்கிறது. போராடுபவர்களையும் தடுத்து கைது செய்து, போராட்டத்தின் வீரியத்தை நீர்க்க வைக்கப் பார்க்கிறது. மக்களை எப்பவும் பரபரப்பாக வைத்துக்கொண்டிருந்தால் தான், நம்முடைய செயல்கள் சீராக நடக்கும் என்ற ஹிட்லரின், வார்த்தைக்கு ஒப்ப, ஒரு அராஜக ஆட்சியை, சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும் என்று எதிரியே தீர்மானிக்கிறான் என்பது எந்தளவிற்கு உண்மை என்பதை நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. நமக்காக போராட வேண்டிய மாநில அரசு போராடவுமில்லை, போராடுபவர்களையும் தடுக்கிறது, அறப்போராட்டம், அறிவுப் புரட்சி என்பதற்கான இடங்கள் இங்கு அனுமதிக்கப்படவில்லை என்றால், மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் வேறு வகையில் போராடவேண்டிய நிலையினை அரசே ஏற்படுத்திவிடும் என்றே தெரிகிறது.!