இயல்பாக நடப்பது அனைத்தையும், எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு தமிழகத்தை போராட்டக்களமாக மாற்ற வேண்டாம் என்று தமிழிசை கூறுகிறார். 13 பேர் (இது கணக்கில் உள்ளவை மட்டுமே, நேர்மையான விசாரணை நடத்தினால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.... ) சுட்டுக்கொல்லப்பட்டது, இயல்பான ஓன்று என்று சொல்ல முடிகிறது என்றால், இவர்களுடைய எண்ணஓட்டம் எதை காட்டுகிறது...???
நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா...!!!
கடந்த ஒராண்டாகவே, ஒவ்வொரு பிரச்சனை என நம்மை மிகவும் பரபரப்புக்குள்ளாகவே வைத்திருக்கும் மோடி அரசு, தற்போது, கடந்த வாரம் முழுதும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மூலம், நம் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டு, எல்லோரையும் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. சரியாக உறங்க முடியவில்லை. உண்ண முடியவில்லை. மனதிற்கு இதமாக ஒரு பாடல்கூட கேட்க முடியவில்லை. அதற்கான சூழலில் மனம் இயங்கவில்லை. வீட்டில் உள்ளவர்களிடம் சரியாக பேச முடியவில்லை. ஏதோ ஒரு மெசின் போல உடல் இயங்கிக் கொண்டிருக்கிறது... மனம் மட்டும் முழுவதும் தூத்துக்குடி மக்களையே சுற்றி, சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன செய்தி வருமோ என்று தொடர்ந்து, மனம் பதைப்பதைத்துக் கொண்டிருக்கிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரித்து விடுமோ என அச்சம் நிமிசத்துக்கொரு முறை மேலோங்குகிறது. அன்னிய நாடு போல், மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறது ... இந்த தமிழக அரசு. நாம் எல்லாம் இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கும் , அதே சமயம், எதுவும் செய்யவியலா நிலையிலிருக்கும் சாமானிய மக்கள். ஆனால், ஆட்சி , அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, இதனைப் பற்றிய கவலை சிறிது கூட இருப்பதாக தெரியவில்லையே. நமக்கிருக்கும் வேதனையில், நூறில், ஒரு பங்கு இருந்தால் கூட, உடனே இதற்கான தீர்வை செய்திருப்பார்கள் அல்லவா. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்,
இந்த இடைப்பட்ட நாட்களில், மே 24 அன்று, முகநூல் தந்த முத்தான தோழி ஒருவரின்
பிறந்தநாள் வந்தது. மிகவும் பிரியமானவள். அன்பில் சகோதரியாய், பாசத்தில் மகளாய், பரிவில் தோழியாய் பரிமளிப்பவள். அப்படிப்பட்ட ஒரு தோழிக்கு , மகிழ்ந்து, பிறந்தநாள் வாழ்த்து பதிவு கூட போட முடியவில்லை ... என்னால்.!
மனஅழுத்தம் தந்த துயரத்தால், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மனம் இடம்தரவில்லை.!
அலைப்பேசியில், அழைத்து பேசும்போது, இந்த மனஇறுக்க நிலையைப்பற்றி கூறியபோது, " அக்கா, இந்த ஸ்டெர்லைட் போராட்டம், இப்படி போய்கொண்டிருக்கிற நிலையில், நானும் கொண்டாடும் மனநிலையில் இல்லையக்கா..." என்றாள்.
நம்மை இந்தளவிற்கு மனஅழுத்தத்திற்கு ஆளாக்கி விட்டு விட்டு, பாசிச ஆட்சிக்கு கால்பிடிக்கும், இந்த அடிமை ஆட்சியாளர்கள் என்னவென்றால், நட்சத்தி்ர ஒட்டலில் பூப்புனித விழாவில், ஒன்று கூடி மகிழ்ந்து கூத்தடிக்கிறார்கள். எப்படிப்பட்ட மாபாதக கொலைக்காரர்கள் இவர்கள். இவர்களாலா நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில், அருவெறுப்பாக இருக்கிறது.!
மொழி புரியா ஜார்கண்ட் மாநிலத்தில் கூட, மக்கள் ஸ்டெர்லைட்டை தடை செய் என ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இங்கிருக்கும் ஆட்சியாளர்கள், என்னவென்றால், சமூகவிரோதிகள் ஊடுருவியதால், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஒரு பொய்யான, எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாத காரணத்தையும், தற்காத்து கொள்வதற்காக என்ற வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் கூறுகிறார்கள்.!
இதற்கிடையில், பேருந்தில் பயணித்தப்போது, பேருந்திலும் சரி, வெளியே சாலையிலும் சரி, மக்கள் மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரையும் உற்று கவனித்துக் கொண்டிருக்கையில், இவர்களை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பாதிக்கவில்லையா என்ற எண்ணம் மனதை ரணமாக்கிய வேளையில், கண்களில், கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. கலங்கிய கண்களுடன், பக்கத்தில் அமர்ந்திருந்த சகோதரியைப் பார்த்தேன். அவருக்கு ஒன்றும் புரியாமல், என்ன என்று கண்களால் வினவினார். " தமிழ்நாட்டு அரசியல் பற்றிய பார்வை இருக்கிறதா ... " என்று கேட்டேன். உடனே,
" இல்லாமலா ... இங்கு என்ன ஆட்சியா நடக்கிறது, காட்டு தர்பார் கூட இந்தளவுக்கு கொடூரமாக இருக்காதுங்க ... போராட்டம் நடத்துறவுங்கள சுட்டு கொல்றாங்கனா ஹிட்லர் ஆட்சி போல இல்லையா, அவுங்க எதுக்கு போராடுறாங்கனு தெரியாதா, இந்த கவர்மெண்ட்க்கு. இவங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது சிஸ்டர் , நாசமா தான் போயிடுவாங்க... " என பொரிந்து தள்ளிவிட்டார். மக்கள் அமைதியாக இருக்கிறார்கள், எதைச் செய்தாலும், மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்று தப்புகணக்கு போடுகிறது... மத்திய அரசாங்கம். அதற்கு கால் பிடித்துக் கொண்டிருக்கிறது ... மாநில அரசாங்கம்.!
இனி, இவர்கள் அராஜகம் தாங்கமுடியாமல், மக்கள் கிளர்ந்தெழ தான் போகிறார்கள். ஒவ்வொரு போராட்டத்தையும் சமூகவிரோதிகள் ஊடுருவியதாக பழிபோட்டு, போராட்டகாரர்களை ஒடுக்கப் பார்க்கிறது, இந்த கையாளாத அரசு. மெரினா புரட்சியின்போது, சொல்லப்பட்ட அதே காரணம் , இப்போதும் சொல்லப்படுகிறது. அப்போது கேட்கப்பட்ட அதே கேள்வி தான் இப்போதும் பொது மக்களால் கேட்கப் படுகிறது. ஆனால், அரசிடமி்ருந்து தான் இன்று வரை பதிலில்லை. பதில் சொல்லவும் முடியாது. ஏனென்றால், அதில் உண்மை இல்லையென அனைவருக்கும் தெரியும். சமூகவிரோதிகள் ஊடுருவினால், களையெடுப்பது தான், அரசின் கீழ் இயங்கும் காவல்துறையின் கடமையே தவிர, பொதுமக்களை, பள்ளி மாணவியை , போராடும் மக்களை அடித்தும், சுட்டு கொல்லுவதும் அல்லவே.!
இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வு, படுகொலை என்பது தமிழக மக்களின் மீது அதிகார செருக்கில், பாசிச ஆட்சியால், ஏவப்பட்ட மறக்க முடியாத, மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம், கொடுமை. நானும் , தொலைக்காட்சியைப்பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்றால், ஓன்று, உங்களுக்கு தெரியாமல் தலைமைசெயலர் செய்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், ஒரு முதலமைச்சர் கீழ் இயங்கும், ஒரு துறை அவருக்கு தெரியாமலே இயங்குகிறது என்றால், இந்த அளவிற்கு பொறுப்பற்ற ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. தெரிந்திருந்து நடந்திருந்தால், அது மாபெரும்குற்றம்.சொந்தநாட்டு மக்களையே சுட்டு கொள்வது என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. ஆதலால், இதற்கு பொறுப்பேற்று, முதல்வர் ஆட்சியை விட்டு விலக வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை உடனே மூடப்பட வேண்டும். இனியாவது சுற்றுச்சுழல் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையேல், தமிழகமெங்கும் மக்களின் புரட்சி என்ற மாபெரும் எரிமலை வெடிக்கும்போது, அந்த வெப்பத்தின் தாக்கத்தை, எதிர்கொள்ள முடியாமல், நீங்கள் அனைவரும் சுக்குநூறாக சிதறுண்டு போவீர்கள். எச்சரிக்கை.!
#Ban_Sterlite
#Getdown_EPS&OPS
#Ban_Vedanta
#Getdown_Bjp
#பேராபத்தின்_பிடியில்_தமிழகம்