#மறக்கமுடியாதஇரவுஆகஸ்ட் 7
அன்று இரவு தொலைப்பேசியில் பேசியபோது, குரல் உடைகிறது. உடனே மகன்,
" வீடியோ காலில் பேசுகிறேன் தாத்தா ... " என்று சொல்லிவிட்டு , என் அப்பாவிற்கு வீடியோவின் மூலம் அழைக்கிறான்.
அலைப்பேசியில், பார்க்கும்போது முகம் அழுதது போல இருந்தது. கண்கள் அதனை உறுதி செய்தன.
" அழுதீங்களா ... தாத்தா ? "
" ம்ம்ம் ... ஆமா, என்னுடைய 15 வயசிலிருந்தே கலைஞரை ரொம்பபிடிக்கும். அதான் ...."
சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு,
"என்ன செய்றது ..வயசாயிடுச்சி... அடுத்ததலைமுறைக்கு வழிவிட்டுட்டு போயிட்டாரு., நிறையவே செய்ஞ்சிட்டாரு ... அவரை போல இனி யாரும் வரமுடியாது. அவருக்கே,மெரினாவில் இடமில்லை என்பதயெல்லாம் ஏத்துக்கவே முடியாது...."
உடனே என் மகன்,
" தாத்தா, மூணு தலைமுறைகளை அழ வைச்சிட்டாரு கலைஞர். நீங்க அழுதிருக்கீங்க ...அம்மாவும் அழுதுட்டாங்க... நானும் அழுதுட்டேன் ...
சாப்பிடீங்களா தாத்தா ? " என்றான்.
" இல்லை ... இனிமேல் தான் ..."
அப்போது மணி 9.30. எப்பவும் 8 மணிக்கே சாப்பிடக்கூடியவர்கள். அன்று ஒன்பதரை வரை சாப்பிடவும் இல்லை. இந்த துக்கம், சோகம், அழுத்தம், அழுகை எல்லாமே மூன்று தலைமுறைகளை தாக்கியிருக்கிறது.
இதுபோல் அனைவரின் வீட்டிலும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். கலைஞர் என்ற மாபெரும் ஆளுமை மறைந்துவிட்டார் என்று இப்போதும்கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இப்போது மட்டுமல்ல, என்றைக்கும் அவர் நம் எல்லோரின் மனதிலும் நீங்கமற நிறைந்திருப்பார் என்பது தான் உண்மை.!
அரசியல் தளத்தில், சமூகநீதி, சமத்துவம், சமூகநலன், ஆகியவற்றிலும், கலை, இலக்கியம், எழுத்து, பேச்சு என அவருடைய பங்களிப்பு, பணிகள் அளப்பரியது. இதுவரை, நாம் தான் இணையத்தில், திராவிடக்கருத்தியல்களைப்பற்றி, திராவிட இயக்கத்தைப்பற்றி, திமுகவைப்பற்றி , கலைஞரின் சாதனைகளைப்பற்றி என சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், ஒருநாளில் மட்டும், அனைத்து தொலைக்காட்சிகளும் வரிசையாக எல்லாவற்றையும் பதிவு செய்திருகின்றனவே.!
இனி திமுக என்ன செய்தது என்ற கேள்விக்கு இடம் இருக்கிறதா ... என்ன???
இவ்வளவு சிறப்புவாய்ந்த மாமனிதருக்கு மெரினாவில் இடமில்லை என வரிந்துக்கட்டிக்கொண்டு இறங்கிய ஆரியக்கூட்டத்தையும் ஒரு பதம் பார்த்துவிட்டு தான் ஓய்வெடுத்திருக்கிறார் #கலைஞர்
இறந்தபிறகும், இவரின் மீது இவ்வளவு வன்மம் என்றால், பார்ப்பனீயம் எவ்வளவு ஆபத்தானது என்பதை, உணராதவர்கள் உணரவேண்டும். இல்லையேல், நாம் உணர வைக்க வேண்டும். சமூகம் சார்ந்த சீர்திருத்தங்கள் , மாற்றங்கள், களையெடுத்தல் , முன்னேற்றம் முதலியனவற்றை ஆரம்பத்தில், நீதிக்கட்சி , அதன் பிறகு திராவிடர் கழகம் தொடர்ந்து செய்துவருகிறது. ஆனால், அரசியலை பொருத்தவரை, இவைகளை ஆட்சியின் மூலம், சட்டங்கள் இயற்றி, செயல்படுத்த திமுக மட்டுமேயுள்ளது என்பது பார்ப்பனியத்திற்கு நன்கு தெரியும். அதனால் தான் இறப்பிலும் கூட இந்தயளவிற்கு வன்மத்தை காட்டுகிறது.
புரியாதவர்களுக்கு கூட இப்போது புரிந்திருக்க வேண்டும். இடம் தர முடியாது என்ற அறிவிப்பு தலைமை செயலர் பெயரில் அறிவிக்கப்படுகிறது. அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடுபவர் அவரின் கணவர். இதற்கிடையில், ஊடகங்களில், இடம் தரக்கூடாது என்று சொல்பவர் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். இதில் தொடர்புடையவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள்.!
இது ஆரிய-திராவிடப்போரின் உச்சக்கட்டம் என்றே தோன்றுகிறது. இதில் அனைவரும் கைகோர்க்கவில்லையென்றால், தோல்வி நிச்சயம். இனியும் ஒருவரையொருவர் குறைகாணாமல், கருத்துவேறுகளை தள்ளிவைத்துவிட்டு, ஒன்றுபட்டு மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். அதற்காக போராடுவோம். தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவோம். திமுகவிற்கு, தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை நிற்போம். திமுகவும், அனைவரையும் அரவணைத்து, போராட்டகளத்தில் வெற்றிப்பெற்று, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்தி, அவர்கள் வழியை பின்பற்றிய பேரறிஞா அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் சிறப்பானப் பணியை செவ்வனே தொடரட்டும்.
தமிழ்நாட்டை வளமாக்கிட, மேலும் உயர்த்திப்பிடிக்க நாமும் உதவியாக இருப்போம் .!
பெரியார், அண்ணா, கலைஞர் மூவரும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிசங்கள்.!