Friday, 28 September 2018

497 சட்டப்பிரிவு நீக்கம் வரவேற்கப்பட வேண்டிய ஓன்று ... ஏன்?

நேற்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு , மணமான ஆண், மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்தால் குற்றமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற ஒரு தீர்ப்பு , பாலின சமத்துவம் மற்றும் பெண்களை ஒரு காமப்பொருளாக, மனைவி என்பவள் ஆண்களின் உடைமைகளாக  பார்க்கப்படும் 497 சட்டப்பிரிவு நீக்கம்  மிகச்சிறந்த வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு ...  ஏன்???

எல்லாவற்றிலும் பெண்களுக்கு சமத்துவம் கிடைத்துவிட்டதா ... பிறகு எதற்கு இதற்கு மட்டும் சமத்துவம் என்று கேள்வி கேட்பவர்களுக்கு....

எனக்கு 13  வயது இருக்கும் காலக்கட்டத்தில், நாங்கள் வசித்துக்கொண்டிருந்தப் பகுதியில்,  எங்கள் தெருவிற்கு இரண்டு தெரு தள்ளி, ஒரு குடும்பம். அப்போதே படித்த குடும்பம். அப்பா ரயில்வேயில் வேலை செய்கிறார். அம்மா இல்ல நிர்வாகி. மூத்த மகளுக்கு மாநில அரசாங்கத்தில் வேலை. அவரின் இணையர், மத்திய தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்றுகிறார். அடுத்த மகன் எம்.ஏ. படித்தவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். நீண்ட இடைவெளிவிட்டு பிறந்ததால், இளைய  மகன் என்னுடைய  வயது. வெவ்வேறு பள்ளி என்றாலும், ஒரே டியூசனில் படித்துக்கொண்டிருந்ததால், நட்பு ரீதியாக அவரகளின் குடும்பம் பற்றி ஓரளவிற்கு தெரியும். அந்த குடும்பத்தில், அப்போது நடந்த விசயங்களை அம்மா, மற்றும் தெருவில் உள்ள மற்ற  அம்மாக்கள் பேசிக்கொள்வார்கள். அப்போது சிறிய வயது என்பதனால், அவ்வளவாக புரியவில்லை. வளர, வளர புரிந்தது. இரண்டாவது மகன் இருக்கிறாரே, அதாவது, தனியார் கம்பனியில் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் மகன், ஒரு பெண்ணை காதலிக்கிறாராம். அதுவும், அப்பெண், ஒரு ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த  பெண். அப்போதெல்லாம், அவர்களை கேவலமாக பேசுவார்கள். அவர்களின் கலாச்சாரம் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் நம்மவர்களுக்கு இருக்காது. ஆனால், எனக்கு மட்டும் அவர்களை மிகவும் பிடிக்கும். அவர்களுடைய வாழ்வியலை தெரிந்துகொள்வதில் தனி ஆர்வம் உண்டு. அக்குடும்பத்த்து பெண்களின் ஆடை, ஸ்லீவ்லெஸ் கவுன், சிகப்பு உதட்டுச்சாயம், ஹீல்ஸ் வைத்த செருப்பு எல்லாமுமே பிடிக்கும். மிகவும் ரசித்திருக்கிறேன். ஓகே ... நம் பதிவின் நோக்கத்திற்கு வருவோம்.

இந்த செய்தி தெரியவந்ததும், உடனே அவர்களின் மகனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஒத்துக்க மாட்டேன் என்றிருந்த மகனை எப்படியே ஒத்துக்க வைத்து, திருமணமும் நடந்து விட்டது. அந்தக்காவும் அழகாக இருப்பார்கள். ஒரு பரிசோதனைக்கூடத்தில், லேப் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிவதாக கூறினார்கள். ஓராண்டில் ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது. ஆனால், அவரின் கணவர், இன்னமும், அந்த ஆங்கிலோ -இந்தியன் பெண்ணிடம் தொடர்பில் தான் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், இந்த உண்மை அந்த அக்காவிற்கு தெரியவந்து, வீட்டில் மிகப்பெரிய சண்டை. பிறகு தன்னுடைய கைக்குழந்தையுடன், அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். ஒரு ஆறுமாத இடைவெளிக்கு பின், பெரியவர்கள் சமாதானம் செய்து மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.  அதுவும், ஒரு வருடம் என்று தான் நினைக்கிறேன். மீண்டும் அதே பிரச்சனை... இப்போதும் சண்டைபோட்டு சென்று விட்டார். ஆனால், இம்முறை திரும்பி வரவே இல்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அவரை கடைசியாக பார்த்திருக்கிறேன். அதன்பிறகு இன்று வரை அந்த அக்காவை பார்க்கவே  இல்லை. அவர்களின் மகனும், அந்த ஆங்கிலோ -இந்தியன் பெண் வீட்டிற்கே சென்று விட்டார். திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாக கேள்வி. சமீபத்தில், ஆறு மாதத்திற்கு முன்பு, என்னுடன் படித்த அக்குடும்பத்து, இரண்டாவது மகனைப்பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது தெரிய வந்த செய்தி என்னவென்றால், அவனுடைய அண்ணன், மாரடைப்பால் இறந்துவிட்டார். ஆங்கிலோ-இந்தியப்பெண்ணிற்கு பிறந்த மகள் மருத்துவராகி இருக்கிறார். மற்றும் அவனுடைய அண்ணி,  தனியாக வாழ்த்துக்கொண்டிருக்கிறார். பெற்றோர்கள் இறந்து விட்டனர். உடன்பிறந்தவர்களும் கூட இல்லை. திருமணமாகி தனித்தனியே வாழ்கிறார்கள். மகன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டான். திருமணம் கூட ஆகிவிட்டது. 

அந்த அக்காவின் நிலைமையிலிருந்து பாருங்களேன். பெற்றோர் செய்துவைத்த திருமணம். சரியாக அமையவில்லை. 25 வயதில் கணவனைப்பிரிந்தவர்.  கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மகனுக்காக மட்டுமே வாழ்ந்து, மகனும், தன்னைவிட்டு பணி  நிமித்தமாக வெளிநாடு சென்றபிறகு, தற்போது தனியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார். 

இதில், அவருடைய தவறு எதாவது இருக்கிறதா...???
எதற்கு இந்த தண்டனை???
மணவிலக்கு பெற்றுக்கொண்டு, வேறு ஒரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ள அவரின் பெற்றோரும் முயற்சிக்கவில்லை, உடன்பிறந்தவர்களும் உணரவில்லை.!

 இந்த 30 ஆண்டுகளில், அவருக்குப்பிடித்த  ஒரு நல்ல மனிதரையாவது அவர் சந்தித்திருக்க மாட்டாரா???
இவருடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்காதா???
தன்னை உணர்ந்த, தன்னை மதிக்கும் , ஒரு நல்ல நண்பன் வேண்டும் என்ற ஏக்கம் இருந்திருக்காதா... என்ன ??? 
இல்லையென்ற பதில் வந்தால், அது இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் மீதுள்ள அச்சத்தினால் சொல்லும் பொய்யாக தான் இருக்க முடியும்.. அந்த ஏக்கம், எதிர்பார்ப்பு வருவது தானே இயல்பு. 

இந்த அக்காவை போன்று ஆயிரமாயிரம் பெண்கள் நம் சமூகத்தில் இருப்பார்கள். இது தான் நிதர்சனம். இவர்கள் தங்களை, தாங்களே கட்டுப்படுத்திக்கொண்டு வாழ பழக்கப்பட்டிருக்கிறார்கள். நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். இவராவது பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இவரின் கல்வியும், பொருளாதாரமும், தனியாக வாழ துணிச்சலை கொடுத்திருக்கிறது.

 கல்வியறிவு இல்லாத பெண்கள் என்ன செய்வார்கள்?

பிடிக்காத வாழ்வை ஏற்றுக்கொண்டு, தங்களுக்குளேயே, புழுங்கி வாழ்ந்து சாவார்கள். அது முடியவில்லையென்றால், தற்கொலை செய்துகொண்டு சாவார்கள். இது தானே காலகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த அடிமைத்தனத்தை, சுக்குநூறாக உடைத்திருக்கிறது இந்த தீர்ப்பு என்பது தானே மறுக்கமுடியாத உண்மை. 

" கற்பு என்ற ஓன்று இருக்குமானால், அது  இருபாலாருக்கும் வேண்டும். ஆண் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் வாழலாம்,. பெண் மட்டும்  ஒரு கணவருடன் தான் வாழவேண்டும் என்றால், அதில் என்ன நியாயம் இருக்கிறது. அன்பில்லாத, தனக்கு பிடிக்காத  ஒரு வாழ்க்கையை வாழாமல், மணவிலக்குபெற்றுக்கொண்டு, வெளியில் வந்து தனக்கு பிடித்தவருடன் வாழும் துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். " 

என  90 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறாரே .. #தந்தைபெரியார்.
பெரியாரின் கருத்துகள், கொள்கைகள் ஒவ்வொன்றாக வெற்றிபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அது ஒரு default . எது நியாயமோ, எது நேர்மையோ,  எது உண்மையோ அது வென்று தானே வேண்டும்.

இந்த தீர்ப்பு, ஆண்களை தப்பிக்க விடுகிறது. பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பார்வையில் பார்க்கக்  கூடாது. அப்படி பார்த்தோமானால், பெண் விடுதலை என்பது முழுவதும் சாத்தியமாகாது. பெண்கள், கல்வி, பொருளாதாரம், திருமணம்,  ஆகிய உரிமைகளை தாண்டி அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லக்கூடியது. இது அடுத்த படி என்பதை விட, இது தான் பெண்களின் விடுதலைக்கான  நுழைவாயில் என்பது என்னுடைய கருத்து. இது ஒரு தனிமனித சுதந்திரம் என்பது  மட்டுமல்லாமல், பாலியல் சுதந்திரமாக பார்க்கப்பட வேண்டும். இவ்வளவு காலம், திருமணம் என்ற ஒன்று பெண்களை முன்னேறவிடாமல், கட்டிப்போட்டு வைத்திருந்தது.  மேலும், இந்த தீர்ப்பு, சம்பந்தப்பட்டவர்கள் மணவிலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற ஒரு வெளியை ஏற்படுத்திக்  கொடுத்திருக்கிறது. இதனால், குடும்ப கட்டமைப்பு சிதைந்துவிடும் என்று சொல்வது ஒரு வகையில், சரி என்று எடுத்துக்கொண்டாலும், இந்த குடும்ப கட்டமைப்பு தானே இவ்வளவு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அவர்களை முன்னேற விடாமல், அழுத்தி வைத்திருந்தது என்பதையும் பார்க்கக் வேண்டுமல்லவா. அது மட்டுமல்ல ... பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு பதில், பிரிந்துவந்து, பிடித்தவருடன் வாழ்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

கலாச்சாரம் சீரழிந்துவிடும் என்று, கலாச்சாரத்தை, முகமூடியாக அணிந்து கொண்டு வரும் கலாச்சார காவலர்கள், நீங்கள் மதிக்கும், புராண,  இதிகாசங்கள், பெண்களை எந்த அளவிற்கு கீழ்த்தரமாக சித்தரித்திருக்கிறது, சூதாட வைக்கும் ஒரு பொருளாக, உடைமையாக  பார்த்திருக்கிறது , பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என கேவலப்படுத்தியிருக்கிறது என்பதை உணர வேண்டும். 

" கணவன் எப்படிப்பட்டவனாகினும், மனைவி அவனுக்கு பணிவிடை செய்தல் வேண்டும். அப்போது தான் அவள் ஒரு பதிவிரதை."

என்று சொல்லும் மனு(அ)தருமத்தின் பெண்ணடிமைத்தனத்தை, இந்த தீர்ப்பு , அடித்து நொறுக்கி இருக்கிறதல்லவா.!!!

இதையும் மீறி , உங்களின் மனத்தடைக்கு  கலாச்சாரம் தான் காரணம் என்றால், 

கத்துவாவில்,  9 வயது குழந்தையை கோவிலில் கட்டிப்போட்டு, 7 நாட்கள் 5 பேர்கள் தொடந்து பாலியல் வன்புணர்வு செய்து, மிகவும் கொடூரமாக கொன்றார்களே ... இதோ நம் சென்னையில், காது கேளாத, பேசமுடியாத 7 வயது குழந்தையை, 69 வயது வரையுள்ள கிழவன் வரை 6 மாதகாலம்  தொடந்து பாலியல் பலாத்காரம் செய்தனரே , இதையெல்லாம் உங்கள் கலாச்சாரம் அனுமதிக்கிறதா ... அப்படிப்பட்ட கலாச்சாரம் இருந்து தான் என்ன பயன்???

பெண்ணடிமைத்தனத்தை வளர்த்துவிட்டுக்கொண்டிருக்கும், இந்த பாஜக ஆட்சியில், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்ததே வியக்குரியதாக இருக்கிறது. பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்காமல், சமமாக பார்க்கப்படுவதற்கு வழிவகை செய்து, அதற்கு எதிராக இருந்த 497 சட்டப்பிரிவை நீக்கியது என்பது, வரவேற்க வேண்டிய, மிக அருமையான ஒரு தீர்ப்பு.!


Tuesday, 25 September 2018

பெரியார் சிலை உடைப்பிற்கு கடும் கண்டனங்கள்.

வாழ்ந்தது முழுவதுமாக 94 ஆண்டுகள், இறந்தும் 45 ஆண்டுகள்.
ஒரு மனிதர், ஒரு கேடுகட்ட , படு கேவலமான சமூகத்தை இத்தனை ஆண்டுகள் (இன்னமும் இருக்கிறது..) கதிகலங்க வைக்கிறாரென்றால், 

அது தான் நம்முடைய #பெரியார்

இன்றுவரை அவருடைய சிலைகள்  கூட உங்களுக்கு பயத்தை தருகிறது என்றால், அப்படி என்ன செய்துவிட்டார் அந்த மாமனிதர்???

மானுடத்தை நேசித்தார் .. அவ்வளவே.!

சமத்துவமற்ற இந்த(து) சமூகத்தை, ஆண் -பெண் உட்பட அனைவரும்  சமமான மனிதர்களாக ,  மக்களாக மாற்ற முயற்சி செய்தார். அதற்கு இடையூறாக இருந்த எல்லாவற்றையும், மதம், கடவுள், ஜாதி, சாஸ்திரம், புராணம், பெண்ணடிமைத்தனம்  முதலியவற்றை உடைந்தெறிந்தார். மனிதன் மட்டுமே முக்கியம், அவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, சுய மரியாதையோடு வாழ்வதற்கு வழிவகை செய்தார். இது தானே.!

இது ஏன் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது... அச்சத்தை ஏற்படுத்துகிறது???

உங்களின் பிழைப்பு அதை வைத்து தான் இருக்கிறது. உங்களின் அடிவயிற்றில் கைவைத்து விட்டார் என்பதினால் தானே  இந்த கோவமும், எரிச்சலும், வன்முறைகளும்!

ஜனநாயகத்திற்கு எதிராக, சட்டமும், நீதியும், ஆட்சியும், அதிகாரமும், நிர்வாகமும், ஊடகமும் உங்களின் கையில் இருக்கிறதென்று ஆட்டம் போடுகிறீர்கள். ஆனால், இதற்கெல்லாம் தீர்வு வெகு விரைவில் வர தான் போகிறது. உங்களால் மீண்டும் தலைதூக்க முடியாதபடிக்கு இருக்கும் அந்த வீழ்ச்சி. !

நீங்கள் உடைக்கும் ஒவ்வொரு சிலையும், பல சிலைகளாக, அதாவது திராவிடக்கருத்தியல்களாக மக்களை சென்றடைய வேண்டிய காலம் வந்துவிட்டது. பார்ப்பனீயம், தன்னை தானே தற்கொலை செய்துகொள்ளும் முயற்சி தான், தற்போது  நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல்கள் அனைத்தும்.! 

வெகுவிரைவில் பெரியார் கண்ட திராவிடநாடு உருவாக போகிறது.!

( பி.கு.: பெரியார் சிலைகளை உடைக்கும் கருங்காலிகளுக்கு, உடைக்கும் நீங்கள் தான் சிறைப்படுத்தப்படுவீர்கள். உடைக்கச்சொல்லும் அவாள்கள் தப்பித்துக்கொள்வார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.) 



Monday, 17 September 2018

பெரியாரின் பெண்விடுதலை.

பெரியார் தந்தை மட்டுமல்ல ... தாயுமானவருக்கும் கூட ... அதிலும் பெண்களுக்கு அவர் அறிவுறுத்திய, சிந்திக்க வைத்த விதம் இருக்கிறதே ... அதற்கு ஈடு இணையே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் உணர்வாக, உணர்ச்சியாக, வாழ்வாக, கூடவே  பயணிக்கும்  இரத்தமும், சதையுமாக அல்லவா சிந்தித்து, நடைமுறைப்படுத்தி, அதில்  வெற்றியும் கண்டிருக்கிறார். பெண்விடுதலையைப்  பற்றி, இந்த அளவிற்கு வேறு யாருமே பேசியிருக்க முடியாது.  சிந்தித்திருக்கவும்  முடியாது.!

கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், திருமணம், குழந்தை பெறுதல், வளர்த்தல், மணவிலக்கு, மறுமணம், சொத்துரிமை என ஒன்று விடாமல் அவற்றை அலசி, ஆராய்ந்து, அதற்கான தீர்வையும் சொல்லி, அதனை செயல்படுத்தி, இன்றும், நம்மை முன்னேற்றப்பாதையில், கொண்டு செல்கிறார் என்றால், அது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றல்லவா. ஒரு தாய் கூட, தன்  மகளைப்பற்றி இந்தயளவிற்கு சிந்திப்பாரா என்பது வியப்பு தான்.!  

இப்பதிவின் மூலம் நண்பர்களுக்கு நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விசயம் என்னவென்றால், ஆண்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், அதேபோல்,  பெண்கள், தங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும்,
 #பெரியாரின்  " பெண் ஏன் அடிமையானாள் " என்ற புத்தகத்தை வாங்கிக்கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

 அடுத்து வரும் நம் சமுதாயம் பகுத்தறிவு சமுதாயமாக விரைவில் மாறிவிடும். பெண்ணடிமை   ஒழித்த சமூகம், நிச்சயம் ஜாதி ஒழிந்த சமுதாயமாக  விளங்கும் என்பது உறுதி.!

Sunday, 16 September 2018

தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள்.

பெரியார் ஏன் இன்றும் இவ்வளவு கொண்டாடப்படுகிறார்?
பெரியார் ஏன் இன்றும் இவ்வளவு விமர்சிக்கப்படுகிறார்?
பெரியார் ஏன் இன்றும் இவ்வளவு பெரிய ஆசானாக மதிக்கப்படுகிறார்?
பெரியார் ஏன் இன்றும் அவாளுக்கு சிம்மசொப்பனமாக பார்க்கப்படுகிறார்?

பெரியாருடைய தொண்டு, சிந்தனை, கருத்தியல்கள், எல்லாமே மானுடப்பற்றை நோக்கி தான். சமத்துவத்தைப் பற்றி தான். சக மனிதன் மதிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டினால் தான்.!

இங்கிருக்கும் மனித  சமுதாயத்தில், ஒழிக்கப்பட வேண்டிய மூன்று கேடுகள் என்று அவர் சொன்னவை, 

" உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி 
   பணக்காரன்   - ஏழை 
    ஆண் - பெண் சமத்துவமின்மை. "

இதனை உணர்ந்தவர்கள் மதிக்கிறோம், கொண்டாடுகிறோம். போற்றுகிறோம். பின்பற்றுகிறோம். திராவிடச் சித்தாந்தத்தை பரப்புகிறோம்.

ஆனால், இதனை உணராத ஆரியத்திற்கும், ஆரியத்திற்கு துணைபோகும் நம்மில் சிலருக்கும் எதிரியாக தோற்றமளிக்கிறார் பெரியார்.!

ஆரியத்தால், பெரியாரை உணரமுடியாது என்பதைவிட, உணர மறுக்கிறார்கள்... ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள், ஏனென்றால், அவர்களின் மதம் சமத்துவத்திற்கு எதிரானது. ஏற்றத்தாழ்வு கொண்டது. ஆணாதிக்கம் நிறைந்தது . தங்களுக்கு சாதகமாக ஒரு (இந்து) மதத்தை நிறுவிக்கொண்டு,  தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, மற்றவர்களை இழிவுபடுத்தக்கூடியவர்கள். ஆதலால் தான், அவர்களால் பெரியாரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.!

இதோ பெரியாரே சொல்கிறார் ...

" நமக்கு பார்ப்பனீயம் தான் விரோதமேயன்றி, பார்ப்பனர்கள் அல்ல. பார்ப்பனீயத்தை உயர்ஜாதிக்கார்கள் சிலர் கையாண்டாலும், அவர்களும் நமது கொள்கைக்கு விரோதிகள் தான். "

(விடுதலை , 1.8.1947)

மனிதகுல சமத்துவத்திற்காக  தன்னுடைய வாழ்நாள் முழுமையும் உழைத்த மாபெரும் தலைவரை, பெரியாரைப்  போற்றாமல், கொண்டாடாமல்,  வேறு என்ன செய்வோம்.!

இன்று, செப்டம்பர் 17 , தந்தை பெரியாரின் 140வது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.! 

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!






Saturday, 15 September 2018

பேரறிஞர் அண்ணா அவர்கள்.

இன்று , அரசியல் சார்ந்து இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறதென்றால், அதற்கான முக்கிய காரணம் #பேறிஞர்அண்ணா அவர்கள் தான். மாநில உரிமைகள் பறி போய் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பே, மத்தியில், கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கியவர் அறிஞர் அண்ணா அவர்கள்.
#இருமொழிக்கொள்கை அமலுக்கு கொண்டுவந்ததாகட்டும்,  

#சுயமரியாதைதிருமணத்தை சட்டமாக்கியதில் ஆகட்டும்,  

சென்னைமாகாணத்தை, #தமிழ்நாடு என்ற பெயர்மாற்றம் செய்ததாகட்டும்,

தனக்குப்பிறகு #அடுத்த தலைவரை உருவாக்குவதில் ஆகட்டும்   

அண்ணாவிற்கு நிகர் அண்ணா அவர்கள் மட்டுமே. 

பார்ப்பதற்கு மட்டும் அவர் எளிமையானவர் என்பதல்ல... அவருடைய பேச்சும், எழுத்தும் இலக்கியநயத்துடன் கூடிய எளிமையாக இருக்கும் என்பது தான் தனிச்சிறப்பு. அவருடைய சிறுகதைகள்,நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் என அனைத்துமே, எளிமையானவை. 

 இலக்கிய நடையிலும், வசனங்களாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், அதே சமயம் சமூகநோக்கில் சமூகஅக்கறையுடன் கூடியதாகவும், பகுத்தறிவுடன் கூடிய திராவிடக் கருத்தியல்களை வெகுஜன மக்களுக்கிடையே கொண்டு போய் சேர்ப்பதில், இருந்த பொறுப்பு இருக்கிறதே ... அது தான்  மிகச்சிறப்பு.!  

வாசிப்பவர்களின் மனவோட்டத்தை அப்படியே பிடித்து, எங்கும் ஓடிவிடாமல்,  தக்க வைத்து, அவற்றை சிந்திக்க வைக்கக் கூடிய அளவிற்கு சிறப்புவாய்ந்த  ஒன்றாகும். ஆரியமாயை, சிவாஜிகண்ட இந்துராஜ்ஜியம், தஞ்சை வீழ்ச்சி, என்று சொல்லிக்கொண்டே போகலாமே ... தந்தை பெரியாரின் கருத்துகளை அப்படியேஉள்வாங்கி , பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக, செயல்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் அறிஞர் அண்ணா. அவருடைய 110-வது பிறந்தநாளில், அவருடைய கொள்கைகளை, எழுத்துகளை, நினைவில் நிறுத்தி, இனிய வாழ்த்து கூறுவோம்.!

#ANNA110 (Sep.15)

Thursday, 13 September 2018

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என்பது நம் சமூகத்தின் பண்பாட்டுச் சிதைவு .!

தாய்வழி சமூகத்திலிருந்த தாய்த் தெய்வ வழிபாட்டை சிதைத்து, அதிலும் ஆணாதிக்கத்தை திணித்து, நம் பண்பாட்டை திரிக்க,  ஆரியம் முற்பட்டதின் விளைவே ஹிந்து மதம். அதிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆரிய கடவுள்களில் ஓன்று தான் , இந்த பிள்ளையார்.! 

இதன் பின்னால் அரசியல் இருக்கிறது. ஹிந்துத்துவம் இருக்கிறது. பண்பாட்டுச் சிதைவு இருக்கிறது என்பது சாமானிய மக்களுக்கு தெரியவில்லை. ஏன்.. படித்தவர்கள் மத்தியில் கூட இந்த புரிதல் இல்லை. இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள், பெரியாரைப்படித்தவர்கள்,அண்ணலைப்படித்தவர்கள்  மட்டுமே தெளிவடைந்திருக்கிறோம். ஒரு மொழியிலும், அதை பேசும் மக்களின் வாழ்வியலிலும், பண்பாட்டிலும் பக்தி என்ற பெயரில், மற்றுமொரு கலாச்சாரத்தை திணித்து, பிற்காலத்தில் அதுவே அவர்களின் பண்பாடாக மாற்றிக்காட்டப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய அயோக்கியத்தனம் இதன் பின்னால் இருக்கிறது  

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, இந்த பண்டிகை இவ்வளவு பிரபலம் இல்லை. அவரவர்கள் வீட்டில் கும்பிட்டுவிட்டு, மூன்றாம் நாளில், வீட்டின் பின்னால் உள்ள கிணற்றில் போட்டு விடுவார்கள். ஆனால், தற்போது, ஒரு நகர் அல்லது சில தெருக்கள் அடங்கிய ஒரு பகுதி என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே ஒரு பெரிய பிளாஸ்டர் ஆப் பாரிஸ்-ல் செய்த விநாயகர் சிலை வைக்கப்பட்டு, பூஜை செய்யப்படுகிறது. திருவிழா போல் கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது மிகவும் வேதனைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது. மற்ற மதங்களை சிறுமைப்படுத்தி, இந்துத்துவத்தை மையப்படுத்தி, மனிதர்களுள் வேறுபாடுகளை, வெறுப்புணர்ச்சியை வளர்ந்துவிடும் விதமாக பார்ப்பனீயம் இதனை செய்துகொண்டிருக்கிறது. பண்பாட்டு படையெடுப்பு, பண்பாட்டுச் சிதைவு என்பது ஒரு இனத்தின் அழிவிற்கான முதல் படி என்பதை,  இதிலிருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்  என்பது நம் சமூகத்தின் பண்பாட்டுச் சிதைவு.!!!