திரையிடப்பட்டு 10 நாட்களுக்குப்பிறகு தான் பார்க்க முடிந்தது. அதற்குள், எத்தனை, எத்தனை முகநூல் பதிவுகள், வாட்ஸ்ஆப் பதிவுகள் என படித்து, ஓரளவிற்கு கதை தெரிந்துவிட்டது. அப்படியிருந்தும், போய் உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே, மனம் கனக்க தொடங்கிவிட்டது. கண்களில் நீர் வழிவதை தடுக்கமுடியவில்லை. படம் முடிந்தும், மனஅழுத்தம் தொடர்கிறது. அந்த பாதிப்பிலிருந்து வெளிவர சில நாட்கள் பிடிக்கும் என நினைக்கிறேன். இதில் யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது . பார்த்த அனைவருக்கும் இதே உணர்வு தான் இருந்திருக்கும்.
அப்படி என்ன தான் சொல்லப்பட்டிருக்கிறது .. அந்த படத்தில்???
நிஜத்தை அப்படியே சொல்லியிருக்கிறார்கள். நடந்த உண்மைகளை, நடந்துகொண்டிருக்கும் உண்மைகளை அப்படியே சற்றும் பிசகாமல், வாழ்ந்துகாட்டிருக்கிறார்கள். அதனால் தான், அதில் சினிமா தனம் கொஞ்சம் கூட இல்லாமல், பார்பபவர்களையும், புளியங்குளம் என்ற ஊருக்கே அழைத்து சென்று, அந்த வாழ்வியலோடு சேர்ந்து நம்மையும் வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் தோழர் மாரி செல்வராஜ் அவர்கள்.
எல்லோருமே எழுதிவிட்டார்கள். நாம் என்ன எழுத போகிறோம் என்று முதலில் தோன்றியது. ஆனால், இப்படம் தொடர்ந்து எழுதப்பட வேண்டும். பேசப்பட வேண்டும். விவாதத்திற்கு உட்பட வேண்டும். அப்போது தான் பரியன்கள் நாடு முழுவதும் அறியப்படுவார்கள். ஜாதிவெறியின் வன்மத்தை, இந்தளவிற்கு எந்த தமிழ் சினிமாவும் இதற்கு முன்னால் சொன்னதில்லை. உங்களுக்கு தெரிந்த, அறிந்த, பழகிய அனைவரிடமும் இப்படத்தைப் பார்க்க சொல்லுங்கள். பார்த்தவர்களை, உரையாடச் சொல்லுங்கள்.
ஒவ்வொரு காட்சியும் நம்மை பல கேள்விக்குள்ளாக்குகிறது. பரியன் ஆங்கிலம் தெரியாமல், கேலிசெய்யப்படும்போது, கிராமங்களில், இன்னமும் சரியான ஆங்கில கல்வி , ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது. இடைநிலை ஜாதியினரின், ஜாதிவெறி கொடுமை, தீண்டாமை எந்தளவிற்கு ஒடுக்கப்படுத்தப்பட்ட , தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்களின் மீது தாக்கி, அவர்களின் வாழ்வை சின்னாபின்னமாக ஆக்குகிறது என்பதை இதைவிட தெளிவாக, நேர்மையாக, பக்குவமாக சொல்லிவிட முடியாது. தோழியின் இல்ல திருமணத்திற்கு செல்லும் பிரியன் மீது தாக்குதல் நடத்தி, அவனுடைய முகத்தில் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு ஜாதிவெறி இருக்கிறது என்பதை பார்க்கும்போது, இப்படிப்பட்ட சமூகத்திலா நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கோவமும், குற்றவுணர்ச்சியும் மேலோங்குகிறது. பரியனின் தந்தையுடைய வேட்டியை உருவி, ரோட்டில் கையை கூப்பி, கதறி அழுதபடி, ஓடவிடும் காட்சி இருக்கிறதே, சகமனிதனை , மனிதனாக மதிக்காத, இந்த ஜாதிய கட்டமைப்பு சமூகத்தின் மீது, உச்சப்பட்ச அருவெறுப்பு வந்ததை மறுப்பதற்கில்லை.
ஜாதிவெறிபிடித்த, அந்த வில்லன் கிழவனை காட்டும்போதெல்லாம், ' ஐயோ.. இப்ப என்ன செய்ய போகிறானோ .. ' என்ற அச்சம் படம் முழுவதும் இருந்துகொண்டே இருந்தது. ஆனந்த்கள் அதிகமாக உருவாக வேண்டும். அப்போது தான் பரியன்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். கல்லூரி முதல்வர், சொல்வது போல், பரியன்கள் மேலே வருவதற்கு, கல்வி மட்டும் தான் அவர்களுக்கான முதல்படி. பெரியார் போராடி வெற்றிபெற்ற இடஒதுக்கீடு இச்சமூகத்தை மேலே ஏறவைக்கும் ஏணியாக இருக்கிறது. அண்ணலும், பெரியாரும் இந்த ஜாதியொழிப்பிற்கு ஓயாமல் உழைத்திருக்கிறார்கள். இருந்தும் இன்னமும், இப்படி தான் இருக்கிறது என்பதை சகித்துக்கொள்ளமுடியவில்லை. படிப்பதற்கு இடஒதுக்கீடு என்ற உரிமை கிடைத்தும், இவர்கள் படித்து மேலே வருவதற்குள், எவ்வளவு அவமானங்களை தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பது மிகவும் கொடுமையான விசயமாக இருக்கிறது.
" இந்த விண்வெளியுகத்திலும், ஒரு தனிமனிதன் தன்னுடைய கடுமையான முயற்சிகளுக்கு பிறகே, தன்னுடைய ஜாதியின் எல்லைகளை மீறி, வாழ முடியும். ஜாதியைப் பற்றி, நுட்பமான, ஆழமானப் பார்வை கிடைக்கும்போது, அதற்கான தீர்வுகளும் நம் கண்ணில் புலப்படும் "
என்று பேராசிரியர் தொ.பரமசிவன் தன்னுடைய பண்பாட்டு அசைவுகள் நூலில் சொல்லியிருப்பார். அது தான் இப்படம் சொல்லும் கருத்தும். நடந்துக்கொண்டிருக்கும், உண்மைகளை நம் கண்முன்னே காட்டியிருக்கிறார். இதற்கான தீர்வு, இந்த ஜாதிய சமூகத்தில் வாழும் மக்களாகிய நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிளைமேக்ஸ் மிகச்சிறப்பு. அது தான் இப்படத்தை, சினிமாதனத்திலிருந்து, அப்பாற்பட்ட இயல்புநிலைக்கு கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. மக்களை சிந்திக்க வைக்கும், இம்மாதிரி படங்கள் அதிகம் வர வேண்டும். இப்படத்தை 10 நாட்களில், இந்த அளவிற்கு வெற்றிபெற்ற வைத்ததில் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் தோழர் ரஞ்சித் அவர்களுக்கும், இயக்குனர் தோழர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கும், படத்தில் நடித்த மொத்த படக்குழுவினருக்கும் எவ்வளவு பாராட்டுகள் சொன்னாலும் தகும்.
மேலும், மேலும், பரியன்கள் அதிகளவில் வருவதற்கு வாழ்த்துகள்.!
#பரியேறும்பெருமாள்