Saturday, 10 November 2018

எது இலவசங்கள்.!

இந்தியாவிலேயே, ஒரு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு. மக்களின்  அடிப்படை தேவைகளான, உணவு, உறைவிடம், கல்வி, பாதுகாப்பு, என எல்லாவகையிலும், மற்ற மாநிலங்களை விட , அதிலும் வடமாநிலங்களை விட 50 ஆண்டுகள் முன்னோக்கி இருக்கிறது என்பது தான்  நிதர்சனமான உண்மை. ஆனால், பார்பனீயமும், திராவிட எதிர்ப்பாளர்களும் ஓன்று சேர்ந்து, எதோ திராவிட ஆட்சிகள், மிக முக்கியமாக திமுக, தமிழ்நாட்டை கெடுத்துவிட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்த செய்யப்படும் சூழ்ச்சி தான், பல்வேறு காலகட்டங்களில், பலவாறு திரித்து விடும் நரித்தனத்தை செய்துகொண்டிருக்கின்றனர். அவ்வப்போது எதாவது ஒன்றை கையில் எடுப்பார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தமிழ்நாடு, இப்போது எப்படி இருக்கிறது, இப்போதிருக்கும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எந்தளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதனை பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.  உண்மையை மறைத்து, மக்களின் சிந்தனையை திசைதிருப்பி விட முயற்சி செய்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது மக்களின் முன்னால்  வந்திருப்பவர்கள், முருகதாஸும், திராவிடச் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரான ஜெயமோகனும் ன்பத்தில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நடிகர் விஜய், இவர்களின் கையில் வசமாக சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பது தான் சர்கார் படத்தின் கதை மூலம் நமக்கு தெரிகிறது.!  

எது இலவசங்கள்....

இலவசங்கள் என்பது சமூகநலத்திட்டங்கள், மக்களை வறுமைக்கோட்டிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கு உதவுபவை.  மனிதனின் மிக முக்கிய தேவையான உணவு, குழந்தைகளுக்கு மதிய உணவாகவும், முட்டையுடன் கூடிய சத்துணவாகவும், குடும்பங்களுக்கு ரேஷனில் வழங்கும் அரிசியாகவும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. உறைவிடங்கள் என்று எடுத்துக்கொண்டால், கூரை  வீடுகளுக்கு சிமெண்ட் ஓடு போட்டதிலிருந்து, சமத்துவபுரம் வரை சாதித்து காட்டியது, ஜாதி ஒழிப்பு- இலவச வீடு, உணவு - கல்வி, என ஒரே  கல்லில் இரண்டு மாங்காய் என அடித்தது எல்லாம் திராவிடக்கட்சியான திமுக  தானே.!

மாணவர்களுக்கு இலவச பஸ்  பாஸ்,  10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவி, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறும் கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவச உதவி பணம், இவையெல்லாம் சமூக நலத்திட்டங்கள் தான். ஒரு தனிமனிதன் கல்வி, அதன் மூலம்  கிடைக்கும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என  உயர்வானேயானால், அச்சமூகமே  உயராதா? இது சமூக வளர்ச்சி ஆகாதா???

தமிழ்மண் சமூகநீதி பேசும் மண். வளர்ச்சித்திட்டங்கள் எந்த அளவிற்கு தமிழகத்தை முன்னேற்றியிருக்கிறது என்பதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள்.  25, 30 ஆண்டுகளுக்கு முன்னே நாம் சென்றுக்கொண்டிருக்கிறோம். நம்மைப்பார்த்து தான்  மற்ற மாநிலங்கள் மக்கள் நல செயல் திட்டங்களை தீட்டுகின்றன. நல்ல செயல் திட்டங்கள் எப்படி, திரிக்கப்படுகின்றன என்பதை பாருங்கள்  ... விஜய்க்கு இது தெரியுமோ, தெரியாதோ ... தெரியவில்லை. ஆனால், அரசியலுக்கு வருவதென்றால், இதையெல்லாம் தெரிந்துகொண்டு வர வேண்டும் என்பது மிக முக்கியம். !

" வயிறு நிறைந்தபிறகு, நாம் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் மற்றவர்களுடையது என்ற வசனத்தை வைத்த, அதே  முருகதாஸ், இப்போது, இலவசங்கள் நாட்டை கெடுகின்றன என்ற ஒரு வசனத்தையும் வைக்கிறார். இல்லாதவர்களுக்கு கொடுப்பது என்பது எப்படி இலவசமாகும்?
 சமூகத்தை ஏற்றத்தாழ்வில்லாமல் மாற்றுவது எப்படி கெடுப்பதாகும்?" 

சொல்லப்படும் கருத்தில், உண்மை, நேர்மை இருக்க வேண்டும். தெளிவு இருக்க வேண்டும். இனியாவது கதையை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருங்கள் என விஜய்யை கேட்டுக்கொள்கிறோம்.!

( பி.கு: விஜய், தமிழ்நாட்டிற்கு சிறிதும்  ஒத்துவராத, சித்தாந்தத்தைக் கொண்டிருக்கும்  ஜெமோ க்களின் ,  துணையை நாடாதீர்கள். உங்களை இல்லாமல் செய்து விடுவார்கள்.)

Thursday, 1 November 2018

உரையாடல்.

உரையாடல் என்பது ஒரு மிகச் சிறந்த கலை. எல்லோராலும் அதை சிறப்பாக செய்யமுடிவதில்லை எனபது தான் மிகவும் வருத்தப்படவைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.  ஒருவர் பேசுவதை, பொறுமையாக உள்வாங்கிவிட்டு, பிறகு அதற்கான பதிலை சொல்லவேண்டும். அல்லது அதனைப்பற்றிய, தங்களின் கருத்தை முன்வைக்கலாம். அப்போது தானே, அனைவரின் கருத்தும் பேசப்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கருத்துப்பரிமாற்றம் தானே, உரையாடலில் கலந்திருக்கும் அனைவரையும் சிந்திக்கவைக்கும். 

பொது அறிவு மற்றும் தத்துவங்கள், சித்தாந்தங்கள் என  கருத்து கலவையாக, ஒரு மிகச்சிறந்த கலந்துரையாடலாக, செவிகளுக்கு விருந்தாக அமையும். ஆனால், ஒருசிலர் இந்த அழகான கலந்துரையாடலை, விவாதமேடையாக்கி, அதில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி, அந்த இனிமையான சூழலை  கெடுத்துவிடுகிறார்கள். இதெல்லாம் வீண்விவாதம் என்று நினைக்கும் நிலைக்கு நம்மை தள்ளிவிடுகிறார்கள்.!

Conversation, Discussion வேறு ...  Argumentation வேறு என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்வது சாலச்சிறந்தது.!