Monday, 31 December 2018

கொண்டாட்டமே வாழ்க்கை!

தற்போதைய நாட்களில், கொண்டாட்டங்கள் என்பது யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கொண்டாட வேண்டும் என்பதே பெரிய விசயமாகி வருகிறது. கொண்டாடுவதற்கு நாள், கிழமை என்று தேவையில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன், ஒவ்வொரு வினாடியும் கூட கொண்டாடலாம். இதற்கு எதற்கு ஒரு வருட காத்திருப்பு? என்பவர்கள் சிலருண்டு.!

கொண்டாட்டம் என்பது குறிப்பிட்ட நாளில் வரும் போது, அது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பரபரப்பான அன்றாடசூழலில், ஒரு மாற்றத்திற்கான ஏக்கம் மனதை ஆக்கிரமிக்கும்போது , திடீரென்று ஒரு சிறப்பான நாள் வருகையில்  மனம் மகிழ்கிறது. அதனால், அவ்வப்போது வரும் சிறப்பான நாட்களை கொண்டாடுவதில் தவறில்லை என்பவர்கள் பலருண்டு.!

இந்த இரு வகையினருமே , அவரவர்கள் இருப்பில், மனதளவில் பக்குமடைந்தவர்கள்  தான்.  கொண்டாட்ட மனநிலை என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரும் ஒன்றாக தான் இருக்கிறது. அறிவிற்கு புறம்பாக, மூடநம்பிக்கைகளை விதைக்காமல் மகிழ்ச்சியை பரிமாறி கொள்வதில் தவறில்லை. அதனால், கடன் வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்று அவசியமில்லை. நம் வசதிக்குட்பட்டு, கொண்டாட்டங்கள் இருக்குமேயானால், அவை நமக்கு நிச்சயம் மகிழ்ச்சியை தான் தரப்போகிறது. வாழ்க்கையே கொண்டாடுவதற்கு தானே!

கொண்டாட்டங்களில்  பலவகைகள்  உண்டு. 

1. தான்  மட்டுமே கொண்டாடி மகிழ்வுடன் இருப்பது. 
2.  தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வைப்பது. 
3. தன் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கொண்டாட்டமாய் இருந்து  மகிழ்வது.
4. தான் சார்ந்திருக்கும் சமூகத்துடன் சேர்ந்து கொண்டாடுவது.
5. ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள்,  இச்சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கிவைக்கப்பட்டவர்கள்      என்பவர்களுடன் சேர்ந்து  கொண்டாடி, மகிழ்ந்து மனநிறைவு  அடைபவர்கள்.

இதில், 5-வதாக குறிப்பிட்டவர்கள் , மிகச்சிறந்த மனநிலையில் இருப்பவர்கள். என்றைக்கும், மனிதத்தை கொண்டாடி  மகிழ்வுடனும், மனநிறைவுடனும் வாழ்ந்து,மற்றவர்களையும் வாழ வைக்கக் கூடியவர்கள்.!


#வாழ்தல்இனிது 
#Welcome2019



Saturday, 29 December 2018

2018 ஆண்டிற்கு விடை கொடுத்து, 2019 -யை வரவேற்போம்.!

இந்த 2018 ஆம் ஆண்டு, என்னை பொறுத்தவரை, வெகு சீக்கிரமே முடிந்துவிட்டது போல தோன்றுகிறது. இப்போது தான் ஆரம்பித்தது போல இருக்கிறது. அதற்குள் அடுத்த ஜனவரி வந்துவிட்டது. வழக்கம் போல், மகிழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும், அழுகைகளும், சோகங்களும், வருத்தங்களும், இழப்புகளும், பிரிவுகளும் கலந்த ஒரு ஆண்டாகவே இருந்திருக்கிறது. 

உடல்நலத்தில், சிறு சிறு சங்கடங்கள் அவ்வப்போது வந்தது. அதனால், வாசிப்பும், எழுதுவதும் குறைந்து விட்டது என்பது தான் மிக வருத்தமான ஓன்று. குடும்பம் என்று பார்க்கும் போது, மாமியாரின் மரணம் ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பு.  நம் தமிழ்ச் சமூகம், நம் அரசியல்,  நம் தமிழ்நாடு என்று நினைக்கையில், கலைஞரின் மரணம் பேரழிப்பு. மிகவும் மனதை பாதித்த ஒரு இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். நம்பவே முடியாத, அதிர்ச்சியைக் கொடுத்த மரணம், திராவிடர் கழக பொருளாளர், அம்மா பிறைநுதல் செல்வி அவர்களின் இழப்பு.!

பிரிவு என சொல்லும்போது , மகனின் மேல்படிப்பு நிமித்தமான வெளிநாடு பயணம் கொஞ்சம் அதிகமாகவே மனதை சிரமப்படுத்தியது. அதிலிருந்து வெளிவருவதற்கு, மிகவும் மெனக்கட வேண்டிதான் இருந்தது. முகநூல் நண்பர்கள் என்பவர்கள் நமக்கு கிடைத்திருக்கும் விலை மதிப்பில்லா  பொக்கிசங்கள் என்று தான் சொல்ல வேண்டும். உடல்நிலை சரியில்லையென்று பதிவு போட்டபோதும் சரி, மகன் கனடா சென்றபோது நான் , அவனுக்கு எழுதிய திறந்த மடலைப் பார்த்து, உடனே என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதலான சொற்கள் மூலம் என்னை மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு உற்சாகப்படுத்தினார்கள். அத்தனை நண்பர்களும் என் அன்பான நன்றி.

இந்த ஆண்டு எழுதியது குறைவு தான். முகநூலுக்கு அவ்வப்போது விடுமுறை விட்டுவிடுவேன். வாசிப்பு நினைத்த அளவு இல்லையென்றாலும், ஓரளவிற்கு முடித்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். 

எழுத்தாளர் ஜெயகாந்தனின், ' ஒரு மனிதன், ஒரு வீடு,ஒரு உலகம்' , அய்யா கி. ரா. வின், ' கோபல்ல கிராமம் ', எழுத்தாளர் மஞ்சை வசந்தனின், ' ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம் ' ,  எழுத்தாளர் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின், ' பண்பாட்டு அசைவுகள் ' ,  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின், ' காதலெனும்  ஏணியிலே '  ,   பேரறிஞர் அண்ணாவின், ' ஆரிய மையை, மற்றும் ' தஞ்சை வீழ்ச்சி ' ,  தற்போது, கனடாவின் ' இயல் விருது ' பெறும் எழுத்தாளர் இமயம் அவர்களின்  ஆணவக்கொலைகளைப்  பற்றிய ' பெத்தவன் '  ஆகிய நூல்களைப்படித்து முடித்த்திருக்கிறேன். இவ்வாண்டு படிக்க வேண்டும் என்று எடுத்துவைத்ததில், இன்னும் ஆறு புத்தகங்கள் மீதி இருக்கின்றன.  இது தவிர குடிஅரசு தொகுதிகள் சிலவற்றையும் முடித்தாகி விட்டது. ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றியும் தனித்தனியே ஒரு பதிவு போடவேண்டும். அவ்வளவு விசயங்கள் ஒவ்வொரு புத்தகத்திலும் தெரிந்துகொள்ள முடிந்தது. 

அதிகம் திரைப்படம் பார்ப்பதில்லை. சில படங்கள் தான். அதில் மனதில் நின்ற படங்கள் இரண்டு தான். இந்த ஆண்டு பார்த்த படங்களில், ' பரியேறும் பெருமாள் ' மனதைப்புரட்டிப்போட்ட திரைப்படம். அதிலிருந்து வெளிவருவதற்கு சில வாரங்கள் ஆகின. என்னால் முடிந்தமட்டும் நிறையபேரிடம் சொல்லி பார்க்கவைத்த ஒரு திரைப்படம். அதனைப் பற்றிய உரையாடல்களும் சிறப்பாகவே மற்றவரிடம் போய் சேர்ந்தது.  ' 96 ' ரசித்து பார்த்தப்படம். பொதுவாகவே, விஜய் சேதுபதி படங்கள் என்றால்  மிகவும் பிடிக்கும். படிக்கும் வயதில், காதல் எல்லாம் ஏற்பட்டதே இல்லை. ஆனால், நமக்கே ஏற்பட்டது போன்ற ஒரு  உணர்வை கொடுத்தது அந்த படம்.  அருமையான படம். 

மொத்தத்தில், இந்த 2018 நன்றாகவே முடிந்திருக்கிறது. வரும் 2019 ஆம் ஆண்டிலாவது இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.  குறைவாக இருந்தாலும், அது பயனுள்ள நல்ல பதிவுகளாக முகநூலில் பதிய வேண்டும். நல்ல  கட்டுரைகள்,  சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான பயிற்சியும், முயற்சியும் எடுக்க வேண்டும்.!

எவ்வளவு தான் பிரச்சனைகள், இடையூறுகள், உடல் உபாதைகள், என்று இருந்தாலும், இவ்வாண்டு சிறப்பாகவே முடிகிறது. 2018 - ற்கு விடைகொடுத்து , வரும் 2019 ஆம் ஆண்டை மகிழ்வுடன் வரவேற்போம்.!

நண்பர்கள் அனைவருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துகள்.!

  





Monday, 24 December 2018

தந்தை பெரியாரின் 45-வது நினைவு நாள்.

உடலால் நம்மைவிட்டு மறைந்திருந்தாலும், கொள்கைகளாய், கருத்தியல்களாய், சித்தாந்தமாய் இன்றும் கூட நம்மை வழி நடத்திக்கொண்டிருப்பவர் #தந்தைபெரியார்.  

இந்தியாவிலேயே, தமிழ்நாடு, கல்வி, உயர் கல்வி,  சமூகநீதி , சமத்துவம், இடஒதுக்கீடு, அரசு பணிகள், பெண் விடுதலை, பெண் கல்வி, என அனைத்திலுமே முதலில் இருப்பதற்கான முழு காரணம், #தந்தைபெரியார் தான். திராவிடர் கழகமும், அதன் தொடர் போராட்டங்களும், அதனால் கிடைத்த பலன்களும், வெற்றிகளும், தான் என்பதை வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். இந்த முன்னிலை தான், இத்தனை மாநிலங்களில், தமிழகம் மட்டுமே பேசும் திராவிடம் தான், பார்ப்பனியத்திற்கு கடும் சவாலாக இருக்கிறது.  பார்ப்பனீயத்தின் கோரமுகத்தை அறிந்தது மட்டுமல்லாமல், அதனை முறியடித்தது, மேலும், அனைத்து மாநிலங்களையும் ஓன்று திரட்டி, அதனை முற்றிலும் விரட்டியடிப்பது   என எல்லாமே சாத்தியப்படுத்தும் வல்லமை திராவிடம் பேசும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உண்டு.  ஆதலால் தான்,  பார்பனீயத்தின் தலைமையிடமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ். யின் சித்தாந்தத்தை பின்பற்றும் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்தது முதல், தமிழகம் குறிவைத்து தாக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், மத்திய பாஜக மோடி அரசின் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இயங்குகிறது என்பது வெட்டவெளிச்சமான உண்மை. அனைத்துமே காவி மயமாக்க சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு, செயல் வடிவம் பெற தொடங்கிவிட்டன. சமூக சீர்திருத்தம் செய்வது என்ற பணியை தாண்டி, நம் உரிமைகளை மீட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது தான்  நிதர்சனமான உண்மை. 

அன்றைக்கு விட, இன்று தான், நம் பெரியார் மிகவும் தேவைப்படுகிறார். எங்கெல்லாம் சமத்துவமின்மை இருக்கிறதோ, எங்கெல்லாம் பகுத்தறிவிற்கு இடமில்லையோ , அங்கெல்லாம் பெரியார் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பார் என்பதில் சிறிதும் அட்டியில்லை.

இன்று டிசம்பர் 24, தந்தை பெரியாரின், 45 - வது நினைவு நாளில், அதிக அளவில் , அனைத்து தளங்களிலும் பெரியாரை கொண்டு போய்  சேர்ப்போம் என உறுதி கொள்வோம்.!



வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

Tuesday, 18 December 2018

இனி, போர்வெல்லுக்கும் வரி கட்டவேண்டி வருமா?

என்னுடைய சிறு வயதில், எங்கள் தெருவில் முக்கால்வாசி வீடுகள் கீற்று மற்றும் ஓட்டு வீடுகள் தான். ஒரு சில வீடுகள் மட்டுமே தான் தளம் போட்ட மாடி வீடுகள். எங்கள் வீடு ஓட்டு வீடு.  எல்லோர் வீட்டிலும் கிணறு இருக்கும். ஆனால் சிலரின் வீட்டு கிணறு மட்டும் தான் குடிப்பதற்கு ஏதுவானதாக  இருக்கும். எங்கள் வீட்டு கிணறும் கொஞ்சம் உப்பு  கரிக்கும். அதனால், அடுத்த தெருவில் உள்ள  ஒரு வீட்டின் கிணற்றில் இருந்து  தான், தினமும்  குடிதண்ணீர் இறைத்து கொண்டு வருவோம். நாங்கள் வளர்ந்து வரும் சமயத்திலேயே, எங்கள் பகுதியில், கார்ப்பரேஷன் பம்ப் போடப்பட்டது. அதற்கு பணம் கட்டி, பைப் லைனை தெருவிற்குள்  இழுத்து, பம்ப் தேவையான பொருட்கள் என அப்பவே (80 களின் கடைசியில்) அதற்கான செலவு 2000 ரூபாய் வரை ஆனது. அவ்வளவு செலவு  செய்தும் தண்ணீர் பகலில் வராது. இரவு நேரத்தில் மட்டுமே வரும். இதற்காக அலாரம் வைத்து, எழுந்திருச்சி , தண்ணீர்  அடித்துவைத்த காலமெல்லாம் உண்டு. 

நாளடைவில், கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. எவ்வளவு உள் உறை இறக்கினாலும், நீர் பற்றாத நிலை ஏற்பட்டது. அனேகமாக, எல்லோர் வீடும் தளம் போட்ட மாடி வீடுகளாகின. எல்லோருக்குமே  இறைப்பது என்பது  கடினமான வேலையாகி போயின. அதனால், கிணறு எல்லாம் போர்வெல் ஆகின. முதலில், 50 அடி  என்பது பிறகு 100 அடிகள் என மாறி, இப்போது 150 அடிகள்  வரை  ஆழமாக துளைத்து போட்டால் மட்டுமே தேவையான நீர் கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும், அது புழங்குவதற்கு மட்டுமே தான். உப்பு கரிப்பதால், குடிக்க முடிவதில்லை. நமக்கு தான் மெட்ரோ வாட்டர் இருக்கிறதே என்பதால் எல்லோருக்கும் பிரச்சனை இல்லை. அந்த நீரை குடிக்க பயன்படுத்தினார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல், அந்த நீரும் சரிவர வருவதில்லை. சில இடங்களில் வருவதே இல்லை. ஆதலால், கேன் வாட்டர் வாங்கும் பழக்கம் ஏற்பட்டது. தண்ணீருக்கான வரியும் கட்டிக்கொண்டு, குடிப்பதற்கு கேன் வாட்டருக்கும் செலவு செய்யும் நிலைமை ஏற்பட்டது. இது சென்னைவாசிகளுக்கு மட்டும் தான் என்றில்லை. ஊர்களிலும் தண்ணீர் வாங்கி தான் குடிக்கிறார்கள். 

இப்ப எதற்கு இந்த பதிவு என்று தானே உங்களுக்கு தோன்றுகிறது. இந்த குடிநீருக்காக நாம் செலவு செய்வது போதாததென்று, மத்தியில் இருக்கும் மோடி அரசாங்கம், நாம் புழங்கும் போர்வெல் (ஆழ்துளைக்கிணறு) நீருக்கும் அடுத்த ஆண்டிலிருந்து வரி போட போகிறதாம். ஏற்கனவே வரி கட்டிக்கொண்டிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வருவதில்லை. இதில், நாம் செலவு செய்து, நம்முடைய இடத்தில் போடப்படும் போர்வெல் க்கு கூட வரி கட்ட வேண்டுமென்றால், இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?

பாசிச பாஜக  ஆட்சியில், இன்னும் என்னென்னவெல்லாம் நாம் சந்திக்க போகிறோமோ!

Friday, 14 December 2018

மைக்ரேன்

“ அப்படியே  கண்ணைப்  பிடுங்கி வெளியில் எறிந்து விடலாமா என்பது போன்ற ஒரு வலி. தலையில் கிரில்லிங் மிசினை வைத்து, குடைந்துக் கொண்டே போவது போன்ற ஒரு குடைச்சல். காதோ... சொல்லவே வேண்டாம், சுத்தியல் வைத்து அடிப்பது போல், அவ்வப்போது ‘ விண்’  ' விண் ' என்ற வலி.  அந்த வலியின் போது தான், தாங்க முடியாமல், கட்டுப்படுத்த முடியாமல்,  கண்ணீர் வழிய ஆரம்பித்து விடும்.  இதெல்லாமே  ஒரு பக்கம் தான். மிகச் சரியாக ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல் வலி இருக்குமே தவிர, மறுபக்கம் கொஞ்சம் கூட வலி இருக்காது. அதனால் தான் அதற்கு #ஒற்றைதலைவலி என்று சரியான பெயர் வைத்திருக்கிறார்கள் போல ... "

வலியை அனுபவித்ததில்லையே தவிர, கேள்விபட்டிருக்கிறேன், வந்தவர்களைப் பார்த்தும் இருக்கிறேன். இருந்தாலும், 
' தலைவலியும், வயித்து வலியும் தனக்கு வந்தால் தெரியும் ' 
என்ற சொல்வடை நமக்கு தெரிந்த ஓன்று தானே.  வந்தபிறகு தான் முழுமையாக தெரிந்தது. சாதாரணமான தலைவலியை விட பல மடங்கு தீவிரமானது. அதனோடு . இதனை ஒப்பிடவே முடியாது. அந்த அளவிற்கு வலி பின்னியெடுத்து விடுகிறது. கடந்த மூன்று மாதங்களாகவே தலைவலி இருந்தது. ஆனால், இது மைக்ரேன் என்று அப்போது தோன்றவில்லை. மகன் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் பயண ஏற்பாடு, மாமியார் உடல்நலமின்மை, அதன்பிறகு அவர்களின் மரணம் என தொடர்ந்து பிசியாக இருந்ததால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தலைவலி தைலம் தேய்த்துக்கொள்ளுதல், சூடா காபி குடித்தல், ராஜா பாடல்கள் கேட்டல், கடைசியாக தூங்கி விழித்தல் என ஒட்டியாகி விட்டாச்சு. ஆனால், மூன்று வாரங்களுக்கு முன்பு, கடுமையான வலி. தூங்ககூட முடியவில்லை. தொடர்ந்து வலியின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போனது. வேறு வழியில்லை. மருத்துவரை அணுகவேண்டியது தான் என்ற கட்டாயம். ஏற்கனவே, இதற்கு ஆங்கில மருத்துவம் முழு பயன் தராது. ஹோமியோபதி மட்டுமே பலன் தரும் என்று கேள்வி பட்டிருந்ததால், உடனே அதற்கான மருத்துவரை தான் பார்த்தோம்.
30 வயது தான் இருக்கும், ஒரு பெண் மருத்துவர். அவ்வளவு அழகாக, தெளிவாக, புரியும்படி  எடுத்து சொன்னார்கள். மருந்துடன், தேவையான தூக்கம், நேரத்திற்கு சாப்பிடுதல், அதிக வருத்தம், கோவம், கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள். மேலும் இந்த PMS பிரீட்டில் இருக்கும் பெண்களுக்கும் தற்போது அதிகமாக வருகிறது என்றும் சொன்னார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு, கை வலி,தலையின் பின்பக்க வலி, தோள்பட்டை வலி வந்ததும், இதற்கான அறிகுறிதானாம். பிறகு, தண்ணீரில்  கலந்து குடிக்கும்  ஒரு திரவமருந்து, சவ்வரிசி போன்ற ஒரு மாத்திரை கொடுத்தார்கள். இதனை வலி இருக்கும் மட்டும் நிறுத்தாமல் இருவேளை சாப்பிடவும் சொன்னார்கள். சாப்பிட ஆரம்பித்ததிலிருந்து, படிப்படியாக வலி குறைந்தது. தொடர்ச்சியாக இருந்த வலி, இடைவெளி விட்டு, வந்தது. வலியின் தீவிரம் கூட குறைய துவங்கியது. அதன்பிறகு, இடைவெளி அதிகமானது. ஒருநாளைக்கு மூன்று முறை, இரு முறை, ஒரு முறை என குறைந்து, பத்து நாட்களில் முழுவதும் குறைந்து விட்டது. திரவ மருந்தை மட்டும் நிறுத்திவிட்டார்கள். அந்த சவ்வரிசி மாத்திரையை மட்டும், மூன்று அல்லது தேவைப்படின், ஆறு  மாதங்கள் வரை  சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.



இந்த பதிவிற்கான நோக்கம் என்னவென்றால், மைக்ரேன் இருப்பவர்கள், ஹோமியோபதி சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள், நிச்சயம் குணமாகிறது என்பதை அனுபவப்பூர்வமாக நான் உணர்ந்ததை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஆவலில் பதிகிறேன்.   

#Maigraine #Homeopathy