நாம் பாஜகவை பற்றி புதிதாக இன்று எழுதவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து எழுதிக்கொண்டுதானிருக்கிறோம். இந்த அய்ந்தாண்டு காலகட்டத்தில் நம்மை எங்கே நிம்மதியாக வாழவிட்டது இந்த பாசிச பாஜக அரசு. ஒருவித பதட்டத்துடனும், அச்சத்துடனும் தானே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால், இனி வரும் காலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால், நாம் 100 சதவிகித அடிமை வாழ்க்கையை தான் வாழ வேண்டிவரும். மனிதகுலத்திற்கு பேரழிவு ஏற்படக்கூடிய பேராபத்தும் இருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும்.
பாசிச பாஜகவின் அராஜக ஆட்சியைப்பற்றி , சுருக்கமாக சொல்ல நினைத்தாலும், இது கொஞ்சம் நீண்ட பதிவு தான் நண்பர்களே.
2014-க்கு பிறகு நாம் எதையும் மறந்திருக்க முடியாது. இருப்பினும், நினைவுபடுத்துதல் இச்சமயத்தில் முக்கியமானது என்று தோன்றுகிறது.
*ஆட்சிக்கு வந்தவுடனே, சமஸ்கிருத வாரம் என்று அறிவித்தது. அதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியது. அரசு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சம்ஸ்கிருதம் கட்டாய பாடமாக அறிவித்தது. நவோதயப்பள்ளி தமிழகத்தில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் சிலவற்றிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கிடைப்பில் போடப்பட்டுள்ளது.*
* யோகாதினம் என்ற பெயரில், யோகம் என்ற உடற்பயிற்சியை, மதத்துடன் சேர்த்து பள்ளிகளில் புகுத்தி, பிறமதத்தினரின் உணர்வுகளை இழிவுபடுத்தியது.*
* மாட்டிறைச்சி தடை என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதன்மூலம் இஸ்லாம் மக்களையும், தாழ்த்தபடுத்தப்பட்ட மக்களையும் இன்றுவரை துன்புறுத்தி வருகிறது. இதனால் எத்தனை கொலைகளை அரங்கேற்றி இருக்கிறது இந்த பாஜக அரசு. தடை நீக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் கடந்த வாரம் கூட , பசு மாட்டு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மதவெறியர்களால் அசாம் மாநிலத்தில், இஸ்லாம் மதத்தைசேர்ந்த ஒரு முதியவர் தாக்கப்பட்டார் என்ற செய்தி வருகிறது.*
* மத மறுப்பு காதல் திருமணம் செய்துகொள்ளும் இந்து பெண்களை, வீட்டினுள் புகுந்து வெளியே இழுத்துவரப்பட்டு, அப்பெண்ணின் முன்னிலையில், இஸ்லாம் மதத்தை சேர்ந்த அவள் கணவனை தாக்குதலுக்கு உட்படுத்துதலும், இருவரையும் பிரித்து, அச்சுறுத்துதல்.*
* கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்று திடீரென்று, ஒரே இரவில், பணமதிப்பிழப்பை கொண்டுவந்து, மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. தங்களுடைய பணத்தை எடுக்கமுடியாமல் , வீதிகளில் அலைந்த மக்கள், இதனால் உயிரிழந்த மக்கள், என அத்தனை அதிலியன்களையும் செய்து முடித்தது. கடைசியில் கறுப்புப்பணம் மீட்கப்படவுமில்லை. இதனால், பாஜக மிகப்பெரிய ஊழலை செய்து முடித்திருக்கிறது என்ற தகவல் இப்போது வந்துகொண்டிருக்கிறது.*
* அடுத்து, நீட் தேர்வு. இதன் பாதிப்பு சாதாரணமானதல்ல. நம் கல்வியின் உரிமையை பறிக்க, பாஜக தொடுத்த முதல் அம்பு இது தான். நம் கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைத்து , மகள் அனிதாவின் உயிரை பழிவாங்கியது. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில், குலக்கல்வித் திட்டத்தை அமல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தியது பாசிச பாஜக.*
* ஒரே வரி என்ற பெயரில், ஜிஎஸ்டி கொண்டுவந்து சிறு குறு வணிகர்களின் வாழ்க்கையை படு பாதாளத்தில் கொண்டுபோய் விட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கையும் கூட இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.*
* மழை பொய்த்து போனதால், விவசாயம் செய்யமுடியாத விவசாயிகள், கடன் சுமையால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, கடன் தள்ளுபடி கேட்டு போராடியும் அதற்கு செவிமடுக்காத பாஜக அரசில் தான் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போயிருக்கின்றனர்.*
* மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெய்ல் குழாய் பதித்தல், எட்டுவழி சாலை, என எதனை போராட்டங்களை சந்தித்திருக்கிறது தமிழகம்.*
* மீனவர்கள், நெசவாளர்கள், சிறுகுறு வணிகர்கள், விவசாயிகள் என அனைவரின் வாழ்வாதாரத்தையும் இந்த ஐந்து ஆண்டுகளில் தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கிறது பாசிச பாஜக அரசு.*
* சுத்தமான கற்று வேண்டும் என்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று அறவழியில் போராடிய தூத்துக்குடி மக்களில் , 13 பேரை சுட்டு கொன்றிருக்கிறது இந்த பாசிச பாஜக அரசு.*
* பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில், முதலிடத்தை இந்தியா பெற்றிருப்பதும் இதே பாசிச பாஜக ஆட்சியில் தான். குழந்தை ஆசிபா முதல், 275 இளம் பெண்கள் பாதிப்பிற்குள்ளான பொள்ளாச்சி பயங்கரம் வரை இந்த காவிகளின் பங்கு அதி முக்கியமாக இருக்கிறது.*
* படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. 45 ஆண்டுகளுக்கு பின்னோக்கிய நிலையில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டிருக்கிறது. பக்கோடா போட்டு பிழைந்துகொள்ளுங்கள் என்று மோடி சொன்ன அவலங்களும் அரங்கேறின.*
* நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சி. ஜிடிபி 2 சதவிகிதம் சரிவால், 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.*
* விலைவாசி உயர்வு. மக்களின் கழுத்தை நெறிக்குமளவிற்கு விலைவாசி கடும் உயர்வு.*
* இடஒதுக்கீட்டிற்கு இடையூறு செய்யும் பொருட்டு, உயர்ஜாதியினர்க்கு பொருளாதரரீதியாக 10% இடஒதுக்கீடு என்று அமல்படுத்தியது.*
* கார்ப்பரேட் கம்பனிகளை வளர்த்து விட்டு, மக்களின் வயிற்றில் அடித்தல், கார்ப்பரேட் சாமியார்களுக்கு வேண்டிய நிதி, நிலம் என பெருமளவில் ஒதுக்கி அவர்களை வளர்த்துவிடுவது.*
* தன்னாட்சி அமைப்புகளான, சிபிஐ, ஆர்பிஐ, முடக்குவதற்கு முயற்சி செய்தது பாஜக ஆட்சியில் தான்.*
* இவர்களின் ஆட்சியில் நடக்கும் அராஜகங்களை எதிர்த்து கேட்பவர்கள், எழுதுபவர்களை, கொலை செய்வது. (கல்புர்கி, கோவிந்த பன்சாரே, தபோல்கர், கௌரி லிங்கேஷ் ) நம் தமிழகத்தில் , ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் சில உண்மைகளை கண்டறிந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் இரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.*
* உச்சநீதிமன்றநீதிபதிகள், தங்களாவே முன்வந்து, ஊடகங்களுக்கு , மக்களாட்சிக்கு பெரும் ஆபத்து என பேட்டி அளிக்குமளவிற்கு மத்திய அரசின் தலையீடு இருந்தது.*
-----------------------------------------------------------------------------------------------------
இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இந்த பாசிச பாஜக ஆட்சியில் நமக்கு நடந்த அத்தனை கேடுகளையும் சொல்லி மாளாது.
கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விவசாயிகள், என அனைத்து துறைகளிலும் உள்ள மக்கள் ஒரே கருத்தாக , பாசிச பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது கடைசியாக , இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் 150 பேர் , இராணுவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர் என்ற செய்தியும் வந்திருக்கிறது!
ஆதலால் நண்பர்களே, பாசிச பாஜகவிற்கும், அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.
ஐந்தாண்டுகளில் , மற்ற முடியாத தேர்தல் இது. ஜனநாயகம் அழிக்கப்பட்டு, சர்வாதிகாரம் எழக்கூடிய தேர்தல் இந்த 2019 மக்களவைத் தேர்தல் என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள். இப்போதே 70 லிருந்து 80 சதவிகிதம் சர்வாதிகார ஆட்சி தான் நடந்துகொண்டிருக்கிறது.. மறுபடியும் பாஜகவை தேர்ந்தெடுத்தால், மீதமுள்ளவையும் செயல்படுத்தப்பட்டு, முழு சர்வாதிகார ஆட்சியாக உருவெடுக்கும்.
100, 200 ஆண்டுகளுக்கு முன்பு, நம் முன்னோர்கள் அடிமைகளாக வாழ்ந்த வாழ்க்கையை, நம் வருங்கால சந்தியினருக்கு கொடுத்து விடாதீர்கள். நாமே, நம் பேரன், பெயர்த்திகளின் தலையில் மண்ணை அள்ளிகொட்டக்கூடிய படு பாதக செயலை செய்ய வேண்டாம்.
#பாசிச பாஜக கூட்டணியை படு தோல்வியடைய செய்வோம்
#திமுக, காங்கிரஸ் விசிக, கம்யூனிஸ்ட் மார்க்சிய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கொமதேக கூட்டணியை அமோக வெற்றிபெற செய்வோம்.