காந்தி நினைவுதினம், இறந்த தினம் (30.1.1948 ) என்று தான் சொல்வார்கள். ஆனால், எப்படி இறந்தார் என்று சில பேருக்கு சிறு வயதில் தெரியாது. எனக்கும் அப்படி தான். பிறகு சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தார் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பலருக்கு தெரியாது. எனக்கும் அப்படி தான். யாரோ சுட்டுவிட்டார்கள், அரசியல் காரணமாக என்று சொல்லப்பட்டது. நாங்கள் சிறு வயதாக இருந்த போது தீவிரவாதி என்ற சொல் பிரபலம் இல்லை. 80 களுக்கு பிறகு ' தீவிரவாதி ' என்ற சொல், நடிகர் விஜயகாந்த் மூலம் அறியப்பட்டது. 70 களில் பிறந்தவர்கள் தீவிரவாதம் பற்றி அதிகம் அறியாதவர்கள். ஆதலால், காந்தி எப்படி, யாரால், ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்வி மனதில் இருந்தாலும், அதனை பெரிதாக யாரிடம் கேட்க தோன்றவில்லை என்பதுவும் ஒரு காரணம். அப்போதிருந்த அம்மாக் கள் அவ்வளவு படித்திருக்கவில்லை. அப்பாவிடம் கேட்டிருந்தால் ஒருவேளை தெரிந்திக்கலாம். ஏனோ, கேட்கவில்லை. மேலும், பல அப்பாக்களுக்கு உண்மை காரணம் தெரிந்திருக்குமா என்றும் தெரியவில்லை. இது இப்போதும் கூட பொருந்தக்கூடியது தான்.
எனக்கு எப்படி தெரிந்ததென்றால், 10 வகுப்பு படிக்கும்போது, என் அண்ணன் மூலம் தெரிந்துகொண்டேன். அப்போது என்னுடைய அண்ணன், பெரியாரின் பக்கம் சென்றுகொண்டிருந்த சமயம்... அப்புறம் என்ன, அரசியல் வரலாறுகள், உண்மைகள் முழுமையாக தெரிந்துவிடுமல்லவா. காந்தி ஹிந்துத்துவ, பார்ப்பனிய வெறியால் கொல்லப்பட்டிருக்கிறார். சுட்டு கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவன்.
அவனுக்கு எதற்கு அவ்வளவு வன்மம்? காந்தி சுதந்திரத்திற்கு பின்பு, முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்ற உண்மைகள் தெரிய வந்தன.
பெரியாரைப் படிக்க ஆரம்பித்தபிறகு, முழு வரலாறும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளுக்கு இந்த உண்மைகளை. நடந்த வரலாறுகளை நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். மதவெறி எந்தளவிற்கு பேராபத்தானது என்பதை புரிய வைக்க வேண்டும்.
அவர்களால், மகாத்மாவாக ஆக்கப்பட்ட காந்தி, பின்னாளில், அவர்களாலேயே சுட்டு கொல்லப் பட்டிருக்கிறார் என்றால், இந்த சனாதனம் எத்தகைய கொடூரம் நிறைந்தது, தனக்கு சாதகமாக இருக்கவில்லை என்றால், அது காந்தியாக இருந்தாலும் கொன்றுவிடுவோம் என்ற கொள்கை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்று வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டாமா!
காந்தி படுகொலையைப்பற்றி, தந்தை பெரியார் கூறியவை:
" மதத்திற்கும், அரசிற்கும் சம்பந்தம் இருக்க கூடாது என்று சொன்ன 56 ஆம் நாள் பார்ப்பனரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியை மகாத்மா ஆக்கியவர்கள் பார்ப்பனர்கள். அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் அவர்கள். அவர்களே, அவரைச் சுட்டுக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று."
மேலும் ஒரு செய்தி, காந்தியார் மத ஒற்றுமையை வலிறுத்துகிறார், முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார் மற்றும் மதசார்பற்ற குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார், அதோடு மட்டுமல்ல, உண்மையை உணர்ந்து, வருணாசிரமத்திற்கு எதிரான கருத்தை பேச ஆரம்பித்திருக்கிறார் என்றதுமே, இனி பார்ப்பனீயம் காந்தியை விட்டு வைக்காது என்று பெரியார் முன்கூட்டியே எச்சரித்தும் இருக்கிறார்.
இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். இப்போதிருக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக அரசு, காந்தியையும் வணங்குகிறது. அவரைக் கொன்ற கோட்ஸேவிற்கும் சிலை வைத்து தியாகியாக்க முயற்சி செய்கிறது என்ற உண்மையை, இரட்டை வேடத்தை, நம் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துவோம்!