உத்தரபிரதேசத்தில், கடந்த மாதம் கும்பமேளா ஆரம்பிக்கும் சமயத்தில், பல துப்புரவுப்பணியாளர்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தது நம்மில் பலருக்கு தெரியும். ஆற்றில் குளிக்கவரும் சாதுக்கள் வரும்போது எதிரில் வரக்கூடாது என்றும் கூட அச்சுறுத்தப்பட்டனர். இதில், உச்சப்பட்சமாக, ஆற்றை ஒட்டிய சாலையில் வைக்கப்பட்டிருந்த, சாதுக்களின் பைகளை நகர்த்திவைத்துவிட்டு, பெருக்கிய, ஒரு துப்புரவுப்பணியாளரை, ' எப்படி எங்கள் பைகளை நீ தொடலாம்?' என்று மோசமாக தாக்கி, கையை உடைத்தார்கள் என்ற செய்தி கூட வந்தது!
இப்போது என்னவென்றால், நாட்டின் பிரதமர், அய்ந்து (சரியாக தெரியவில்லை, இன்னும் கூடுதலாக கூட இருக்கலாம்) துப்புரவுப்பணியாளைர்களை நாற்காலியில் அமரவைத்து, அவர்களின் கால்களை கழுவுகிறார். தான் செய்த பாவங்களை போக்குவதற்காக செய்கிறாரா? அது உண்மையென்றால், தான் , இந்த நாட்டின் மக்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த தீங்குகளை , பாஜக மூலமாக, ஆர்.எஸ்.எஸ் கட்டளைகளை நிறைவேற்றியதற்கு வருந்தி அரசியலை விட்டே விலகியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காததால், இது உண்மையில்லை!
பிறகு, எதற்கு இந்த நாடகம்? வரப்போகும் தேர்தலுக்காக தானே!
மீண்டும் மக்களை ஏமாற்றி, அரியணையில் அமர்ந்து, இன்னும் படுபாதாளத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிக்கும் ஒரு ஏமாற்று நாடகம் என்பது மக்களுக்கு நன்றாகவே விளங்கும். இன்னும் சொல்லப்போனால், வடநாட்டுமக்களுக்கே இப்போது புரிகிறது!
இது எல்லாவற்றையும் விட, ஒரு நாட்டின் பிரதமர் செய்யும் செயலா இது?
உலகளாவிய அளவில், மற்ற நாடுகள் என்ன நினைக்கும் என்ற எண்ணம் கூட இல்லையே. ஒரு மத தலைவர் செய்தால், புண்ணியம் தேடிக்கொள்ள செய்கிறார் என்று விட்டுவிடலாம். ஆனால், ஒரு மதசார்பற்ற நாட்டினுடைய பிரதமர் அல்லவா இப்படி செய்கிறார். பிரதமருடைய வேலை இதுவல்லவே!
துப்புரவுத்தொழிலாளர்களின் மீது அவ்வளவு கரிசனமா... அப்படி இருப்பது உண்மையென்றால், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கட்டும். அவர்களின் குழந்தைகளுக்கு தேவைப்படும் சலுகைகள் வழங்கட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தட்டும்.
முதலில், அவர்களை மனிதர்களாக மதிக்கட்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு, அவர்களின் காலை கழுவினால், அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடுமா?
அதிநவீன ராக்கெட்விடும் நாட்டில் தான், மனித கழிவை மனிதனே அள்ளும் கொடூரமான அவலங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதையே கூட, மோடி எழுதிய ' கர்மயோக்' புத்தகத்தில், மலமள்ளும் தொழிலாளிகள் கடவுளுக்கு சேவை செய்வது போன்ற புண்ணியம் கிடைக்கும் என்று தானே எழுதியிருக்கிறார். இவர்களின் இந்துத்துவச் சித்தாந்தத்தில், வருணாசிரமம் இருக்க வேண்டும், தீண்டாமை இருக்க வேண்டும். அதை வைத்து தங்கள் பிழைப்பு நடத்த வேண்டும். தேவைப்படும் சமயத்தில், இதுமாதிரி சில நாடகங்களை நடத்தி, மக்களை ஏமாற்றி, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இவர்களின் குறிக்கோள்!
தற்போது, கடந்த ஐந்தாண்டுகளில், மோடி அரசால் தாங்கள் பட்ட இன்னல்கள் மூலம் , மக்கள் நன்றாவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், நாமும் அவ்வப்போது, பாஜகவின் கொடூரமுகங்களை நினைவுபடுத்திக்கொண்டும், பாசிச பாஜகவை தோற்கடியுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டும் இருப்பது நம்முடைய கடமை!