Saturday, 30 March 2019

தற்போதைய அரசியல் தெளிவை உண்டாக்குவோம்!

" எலெக்சன்  வருதே ...  நீங்க யாருக்கு ஒட்டு போடுவீங்க ..."
" அது வந்து அக்கா ... ஹி ஹி .."
" பரவாயில்ல .. சொல்லவேண்டா, ஆனா மோடிக்கு மட்டும் போட்டுராதீங்க..."
" சே, சே .. நீங்க வேற  அக்கா, நான் எப்பவும் ரெட்டைஇலைக்கு தான் போடுவேன் ..."
 
நான் அதிர்ச்சியாகி,

" ஐயையோ.. மோடியோட தான் ரெட்டை இலை சேர்ந்திருக்கு... அங்கே போட்டாலும், மோடிக்கு தான் ஜெயிப்பார்.."

" அப்படியா அக்கா... எனக்கு தெரியாதே, அதான் எங்க வூட்டுக்கார் கமலுக்கு போடசொன்னுச்சோ..." ( அப்பாவியாக... )

" கமலுக்கு போட்டாலும் , எலெக்சனுக்கு பின்னாடி மோடிக்கு போக வாய்ப்பிருக்கு... எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும்போது ரெட்டைலைக்கு  போட்டீங்க .. சரி,  இப்ப இருக்குற நிலையில நீங்க உதயசூரியனுக்கு போட்டா மட்டும்தான் நாடு உருப்படும். இல்லையான, நாளைக்கு நம்ம பிள்ளைங்க படிக்க முடியாது, பொண்  குழந்தைங்க பாதுகாப்பா இருக்க முடியாது, ஏழைங்க வாழ முடியாது ... நாம போடுற ஓட்டு தான் நாட்டை ஆளுற தலைவரை முடிவு செய்யும்... அதனால நல்லா யோசிச்சு ஒட்டு போடுங்க ..ப்பா..."

" சரி அக்கா, நீங்க சொன்னபிறகு தான்  கொஞ்சம் புரியுது... நமக்கு வேலையே சரியா இருக்கு ..இதையெல்லா யார் நமக்கு சொல்றா... "

" இனிமே, எவ்வளவு தான் வேலையானாலும்,ஓட்டு போடுறப்ப யோசிச்சி போடுங்க ..."

இன்று காலை எங்கள் குடியிருப்பில் வேலை செய்யும் சகோதரி ஒருவருடனான உரையாடல் இது!

அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற செய்தி கூட தெரியாமல் நம் மக்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அனைத்து தன்னதிகார அமைப்புகளையுமே தன்  கட்டுப்பாட்டிற்குள்  வைத்துக்கொண்டு, ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்தும் பாஜக, மீண்டுமொருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால், சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவிடும்!

அமமுக, மக்கள்நீதிமய்யம் உட்பட திமுக கூட்டணிக்கு போடாத ஓட்டுக்கள் அனைத்தும் பாஜகவை ஆதரிக்கும் ஓட்டுகளாகவே மாற வாய்ப்பிருக்கிறது. இருக்கும் இந்த குறுகிய காலகட்டத்தில், மக்களிடம்  இந்த செய்தியை, தற்போதைய அரசியல் நிலவரங்களை கொண்டுபோய் சேர்ப்பதில் நம்முடைய பணி தலையாய இடத்தை பெறுகிறது!







தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மண்டலமா!

 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்புணர்வு சம்பவங்களை அடுத்து, மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொல்லப்பட்ட  கோவை  6 வயது குழந்தை ,  தற்போது சேலத்தில் தனியாக அல்லது நண்பர்களுடன், காதலர்களுடன் செல்லும் பெண்கள் என 90 பேருக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பகுதியாக ஆகிவிட்டது போல தோன்றுகிறது . அம்மண்டலத்தில் காவிகள் வளர்ந்துவிட்ட சூழலில்,  நம் பண்பாடு சீரழிந்துவருகிறது என்பதை தான் இந்த கொடுமையான நிகழ்வுகள் காட்டுகின்றன. ஏற்கனவே, அரியலூரில் நந்தினி என்ற 16 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடுரமான முறையில் கொல்லப்பட்டாள். அதற்கு பின்புலத்திலும், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவன் இருக்கிறான் என்று கூறப்பட்ட நிலையில், அந்த வழக்கு என்னவானது என்றே தெரியவில்லை. தற்போதும், கோவை 6 வயது சிறுமி கொல்லப்பட்ட குற்றத்திலும், இந்து பாரத் சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது, இது குடிபோதை, ஜாதிவெறி, மதவெறி  காமவெறி, பணம் பறித்தல் என்பதையெல்லாம் கடந்து, பெண்களை குறிவைத்து, கலவரங்களை தூண்டக்கூடிய உத்தியா அல்லது தமிழக  பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் ஆணாதிக்க, ஆரிய வழிமுறைகளா என்ற சந்தேகம் வருகிறது.

அது எதுவாக இருந்தாலும்,  குற்றவாளிகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் நேர்மையான, நியாயமான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கடுமையாக  தண்டிக்க வேண்டுமென்றால், நிச்சயம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் தேவை.!


Sunday, 10 March 2019

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா!



144 தடை உத்தரவை மீறி, இந்தி எதிர்ப்புப் பிரசார ஊர்வலம் சென்றதாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, இவர் செய்தது சட்டபடி குற்றம் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது,  நீதிபதியிடம்,

" எங்கள் மொழி காக்கும் உரிமைக்கு அமைதியாக போரிடுவது எமது கடமையாகும். மொழிப்பற்றை மறப்பது நாட்டிற்குத் துரோகம் செய்வதாகும்." 
என்று பதிலளித்தார் #அன்னைமணியம்மையார்.
 
தொடர்ந்து, 

"அதற்காகச்  சட்டத்தை மீறுவது சரியா?"
" சட்டம் நாட்டின் மொழி வளர்ச்சியைக் கூட ஒழிப்பதாயிருக்கிறது."
" உங்கள் மதம் என்ன?"
" எனக்கு எந்த மதமும் கிடையாது."
" உங்கள் ஜாதி? "
" திராவிட ஜாதி "
" தடையுத்தரவை மீறிச் சட்டத்தை மீறியுள்ள தங்களை ஏன் தண்டிக்கக்கூடாது?  சமாதானம் எதாவது சொல்கிறீர்களா? "
" நான் சமாதானம் சொல்வதற்காக இங்கு வரவில்லை. சர்க்கார் சட்டத்தை நிறைவேற்றிற்கும். தாங்கள் என்ன தண்டனை விதித்தாலும் ஏற்கத் சித்தமாயிருக்கிறேன். தராளமாய் செய்யுங்கள்."
" தங்களுக்கு இரண்டு மாத வெறுங்காவல் தண்டனையளிக்கிறேன்."
"மிக்க மகிழ்ச்சி.. வணக்கம்."

அன்னை மணியம்மையாரின் மனதிடத்திற்கான சான்று இந்த உரையாடல்.
#தோழர்ஓவியா அவர்களின், "கருஞ்சட்டைப் பெண்கள் " நூலிலிருந்து.

" பெரியாரின் தொண்டுக்கு முழுக்க, முழுக்க, என்னை ஆளாக்கி, அவர் நலத்தை கண்ணெனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னை பாவித்துக்கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே மனதில் நிறுத்தி அந்தக்  குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சிகொண்டேன்."
பிறிதொரு சமயத்தில், #அன்னைமணியம்மையார் சொன்னவை. 

" பெரியார் வாழட்டும் என்று தன்  துடிக்கும் இளமையைப் பெரியாருக்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை, அன்னை என்று சொல்லாமல், நாம் வேறு என்ன என்று புகழ்வது!"

#புரட்சிக்கவிஞர்பாரதிதாசன் 

இப்படி பெரியருக்காகவும், அவர்தம் கொள்கைக்காகவும் தன வாழ்நாளையே அர்ப்பணித்தவர் #அன்னைமணியம்மையார். அது மட்டுமா, விடுதலையில், பல கட்டுரைகளை எழுதிய கட்டுரையாளராகவும், "கந்தபுரணமும்,ராமாயணமும்" ஒன்றே என்ற நூலை எழுதிய எழுத்தாளராகவும், வடநாட்டில் கொண்டாடப்படும் ராம்லீலாவிற்கு எதிராக ராவணலீலா நடத்திக்காட்டியவராகவும், உலகிலேயே ஒரு நாத்திக அமைப்பிற்கு தலைமை தாங்கிய முதல் பெண்ணாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக #தந்தைபெரியாரை 94 வயதுவரை தாய்போல பாதுகாத்து வாழவைத்தவரும் #அன்னைமணியம்மையார் அவர்கள்.

இன்று #அன்னைமணியம்மையாரின் நூற்றாண்டுவிழா.! (10.3.1920)

இந்நாளில் வாழ்த்துகள் பரிமாறுவதுடன் சேர்த்து, அவர்தம் செய்வதற்கரிய செயல்பாடுகளை நினைவு கூறுவோம்!

வாழ்க பெரியார்! வாழ்க மணியம்மையார்! வளர்க பகுத்தறிவு!

Wednesday, 6 March 2019

அனுபவங்கள் ஒரு பாடம்!!

நம்ம எல்லோருக்குமே, இப்ப நாம வாழுற இந்த வாழ்க்கையை விட, நம்முடைய சிறுவயது பள்ளிப்பருவ வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் தானே. அது அவ்வளவு வசதியா இருந்திருக்காது. நிறைய வசதி குறைவுகள் இருந்தது என்றாலும் , நம் மனது அந்த வாழ்க்கையை தான் தேடுது. 

குழாய் திறந்தா உடனே தண்ணீர் வராது. குடிக்கிறதுக்கும், புழங்கறத்துக்கும் கிணற்றில் இறைக்க வேண்டும். சாப்பிட வீட்டில் எந்த ஸ்னாக்ஸ்சும் இருக்காது. மூன்று வேளை  உணவு மட்டுமே. எப்பயாவது அம்மா வீட்டிலேயே பலகாரம் செய்து கொடுத்தால் மட்டும் தான். அந்தந்த சீசனில் காய்க்கும் பழங்கள் தள்ளுவண்டியில் வீட்டு வாசலேயே கிடைக்கும். நம்ம தெருவிலேயே கண்ணாம்பூச்சி, நொண்டியடித்தல், பாண்டி, ஸ்கிப்பிங், தென்னம்மட்டையை கொண்டு கிரிக்கெட் விளையாடுதல், கல்லாங்கா, இப்படி விளையாண்டிருக்கோம். நண்பர்களோட சண்டை போடுவோம். உன் பேசி கா என்று சொல்லிவிட்டு,  கொஞ்ச நேரத்துலே பழம் விட்டு  பேசிடுவோம். 

வருசத்துக்கு இரண்டு தடவை மட்டுமே புது  டிரஸ் எடுப்பாங்க.. தீபாவளி, பிறந்தநாள் என்று. பள்ளிக்கூடத்துக்கு மதியம் சாப்பாடு மட்டுமே தான் எடுத்துக்கிட்டு போவோம், தண்ணிப்பாட்டில் எல்லாம் கிடையாது. ஸ்கூல் குழாய்ல கைவைச்சு  குடிப்போம். சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம்  நிறைய சிரிப்போம். ரொம்ப கொஞ்சமா அழுதிருப்போம். முக்கியமா எந்த கவலையும் இல்லாம வாழ்ந்திருக்கோம். பொறுப்புகள் கிடையாது. எதிர்பார்ப்புகள் கிடையாது. ரொம்ப சந்தோசமா இருந்த நாட்கள் அவை. அதை இப்ப நினைச்சா கூட மகிழ்ச்சியா இருக்கு. திரும்பவும் வராதா என்ற ஏக்கமும் கூடவே வருது.!

ஏன் இதையெல்லாம் எழுதுறேன்னு தெரியல. எழுதணும்னு தோணுது.எழுதும்போது மகிழ்ச்சியா  இருக்கு. ஆனா பாருங்க நண்பர்களே, நாம இப்ப இப்படி நினைச்சு சந்தோசப்படுற மாதிரி நாம குழந்தைகள் படமாட்டங்க. நினைச்சு சந்தோசப்பட அவங்களுக்கு எதுவுமே இல்லை , ஏன்னு கேட்டீங்கன்னா, அவங்களுக்கு தான் நாம் அந்த அனுபங்களை கொடுக்கலையே. எப்பப்பார்த்தாலும் படி, படி,  பர்ஸ்ட்  ரேங்க் எடு , ஏன் இந்த சப்ஜெக்ட்ல 3 மார்க் குறைஞ்சுது, கான்செண்ட்ரேட் இல்ல அதான், ஒழுங்கா படி என்று ஒரே அட்வைஸ் தான், வெளியே விளையாட முடியாது. யாருமே வெளியே விளையாடுறதல்ல. வீட்டுக்குளே, வீடியோ  கேம்ஸ், மொபைல், டிவி, கம்ப்யூட்டர் னு மெஷின்களோட பழக  பழக்கப்படுத்தியிருக்கோமே!

எங்கம்மாவுக்கு கிடைத்த அனுபவம் எனக்கு கிடைக்கல, எனக்கு கிடைத்த அனுபவம் என் குழந்தைக்கு கிடைக்கல என்றால் இது என்னங்க வாழ்க்கை. அதில் என்ன சிறப்பு இருக்கு? குழந்தைகள் தனிமையிலும், வெறுமையிலும் வளர்ந்தா, நம்முடைய நாளைய சமூகம்   சீரழிந்து போய்விடாதா? அதனால, இனிமேலாவது, விழித்துக்கொள்வோம்.
குழந்தைகளுக்கு, படிப்பைத்தாண்டி, அனுபவ அறிவு, புத்தக வாசிப்பு முதலிவற்றை அறிமுகப்படுத்தி, நல்ல அனுபவங்களை பெறுவதற்கு  வழி வகுத்துக்கொடுப்போம்.!