நாம் எது நடந்துவிடக்கூடாது என்று நினைத்தோமோ, அது நடந்தே விட்டது. 2014-ல் நடந்தது போல,,,, நேற்றைய தேர்தல் முடிவுகள், தொடக்கத்திலேயே நம்மை மிகவும் சோர்வடைய தான் செய்தது. பாஜக வெற்றியை சிறிதும் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், ஒருபுறம் திமுக கூட்டணியின் தொடர் வெற்றி நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. 38 - 1 என்று வந்தபிறகு மனம் குதூகலித்தது. அந்த ஒன்றும் நமக்கு வந்துவிட வேண்டும் என்று மனம் விரும்பியது. இந்தியாவே, பாஜகவை கொண்டாடும்போது தமிழ்நாடு முழுவதும் விரட்டியடித்திருக்கிறது என்ற செய்தி, பெரு மகிழ்ச்சியைத் தந்தது!
அதன் பிறகு, தோழர் திருமா அவர்கள் பின்னடைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து, முன்னிலை, பிறகு பின்னடைவு என்ற செய்தி மனதை பிசைய தான் செய்தது. ஏதோ தில்லுமுல்லு செய்கிறார்கள் போல என்ற கோபம் வந்தது. இரவு 12.45 வரை இழுக்கடித்து, அதற்கு மேல் முடியாது என்ற நிலை வந்தபிறகு தான் வெற்றி அறிவிப்பை வெளியிட்டார்கள். தோழர் திருமா வெற்றி அறிவிப்பைக் கண்டவுடன் தான் படுக்கைக்கு போக வேண்டும் என்று தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தேன். முனைவர் தோழர் திருமாவளவன் அவர்களின் வெற்றி, பேரானந்தம் தந்தது. இழந்த ஒன்றைப் பற்றி(தேனி ) மனம் நினைக்கவில்லை. பரவாயில்லை, போகட்டும், அது நேர்மையான முறையில் பதியப்பட்டதா, எண்ணப்பட்டதா என்று தெளிவில்லை!.
திமுக கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றிபெற்றது சாதாரணமானதல்ல. அவ்வளவு தான் , இனி திமுக மேலே எழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற ஏகடிகம் பேசிய வாய்க்கெல்லாம் பூட்டு போட்டாகிவிட்டது. தமிழ்நாட்டு மக்கள், மதத்தையும், அரசியலையும் ஒன்றாகப் பார்க்க மாட்டார்கள், இது சமூகநீதி மண், பெரியாரின் மண் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள். நாங்கள் கோவிலுக்கு போவோம், சாங்கியம், சடங்குகள் கூட செய்வோம், ஆனால், ஒருபோதும், மதவாதத்திற்கு துணைபோக மாட்டோம் என்பதை பறைசாற்றியுள்ளனர்.
மேலும் இந்த வெற்றிக்கு மிகவும் உழைத்தவர், தளபதி ஸ்டாலின் என்றால் மிகையில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனே தொடர்ந்து , தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் பரப்புரை. சுடும் வெயிலையும் தாண்டி எவ்வளவு பயணங்கள். கிராமசபை கூட்டங்கள் , பொதுக்கூட்டங்கள், நடைபயணம் என கொஞ்சம் கூட சோர்வில்லாமல் மக்களை சந்தித்தார் தளபதி. அதன் பயன் தான் இந்த அமோக வெற்றி என்று சொல்ல வேண்டும்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நம்முடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இனி வரும் காலங்களில், தமிழகம் பல சோதனைகளை, சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடு போர்க்களமாக மாற வேண்டிய சூழல் கூட ஏற்படும். அனைத்தையும் நாம் உறுதியுடன் எதிர்நோக்குவோம். இந்த காவிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும் சமூகநீதிக்காக தங்கள் பங்களிப்பை ஈந்த அனைத்து தலைவர்களின் பேச்சுக்களை, எழுத்துக்களை, கொள்கைகளை நம்மால் முடிந்தளவு அனைத்து தளங்களிலும் கொண்டுபோய் சேர்ப்போம். மக்களை சிந்திக்க வைப்பது ஒன்றே நம்முடைய பணியாக கொண்டு செயல்படுவோம்!
இன்று இந்த தேர்தல் முடிவுகள், இந்தியாவிலேயே, தமிழ்நாடு தனித்துவம் வாய்ந்தது என்பதை காண்பித்திருக்கிறது!
ஆரியத்தின் சூழ்ச்சியை எதிர்க்க திராவிடம் என்ற ஒன்றினால் மட்டுமே முடியும் என்பதை நடத்திக்காட்டுவோம்!