" இது உடற்பயிற்சி தானே ... இதுல என்னங்க பிரச்சனை இருக்கு? "
" உடற்பயிற்சியாக மட்டும் பார்க்கப்பட்டால் ஓகே , ஆனால் அதை மதத்துடன் சேர்ப்பது சரியில்லையே?
பல மதத்தை சேர்ந்த பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில், எல்லோரும் செய்ய வேண்டும் என்று திணிப்பது தவறு தானே? "
" அதான், ஓம் என்று சொல்ல வேண்டியதில்லை என்று சொல்கிறார்களே..."
" இப்ப இப்படி தான் சொல்வார்கள். வேறு எப்படி சொல்வார்கள்!யோகா கட்டாயம் ஆனபிறகு , ஓம் சொல்லியே ஆக வேண்டும் என்ற விதிமுறைகள் வரும். இது இப்ப, சிலருக்கு தெரியாது ... எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும், ஓம் என்று தான் சொல்ல வேண்டும் என்ற நிலை வரும்போது தான் அது திணிப்பாக தெரிய வரும். மதவெறி என்று புரியும்."
" எனக்கு அப்படி தோணலைங்க ... எல்லாமே சந்தேகமாப் பார்க்க முடியாது ... இல்லையா "
" எல்லாமே சந்தேகமாக தான் பார்க்க வேண்டும். இந்த ஹிந்துத்வ ஆட்சியில், எல்லாமே நமக்கு எதிராக செய்யப்படும் செயல்கள் தான். ஒண்ணுமில்ல, நம் மக்களவையில், வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் போது, அவர்களுக்கு ஏன் அப்படி கோபம் வர வேண்டும். யோசிச்சு பாருங்க... பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், திராவிடம் எல்லாவற்றையும் கூட விட்டுவிடுவோம். இந்திய மொழிகளில் ஒன்று தானே தமிழ். #தமிழ்வாழ்க என்பது கூட அவர்களை பதட்டமடைய வைக்கிறது என்றால் என்ன பொருள்?
அதற்கு ஏன் பாரத் மாதாக்கி ஜே என்று சொல்ல வேண்டும்?
நாம் சமூக தலைவர்களை வாழ்க என்று சொன்னால், அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று எதற்கு சொல்ல வேண்டும்?
அதனால் தான் இவர்களின் அனைத்து செயல்களுக்கு பின்னால் ஹிந்துத்துவம் இருக்கிறது என்பது உறுதி. கை புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லையே..."
" நீங்கள் சொல்வதும் யோசிக்க வேண்டும் போலவே .."
இது, இன்று காலை, உறவினர் ஒருவருடன் நடந்த உரையாடல். கடைசியில், அவர் சற்று தெளிவடைந்த நிலையில், சிரித்த சிரிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.
தற்போதைய நிலையில் உரையாடல்கள் மிகவும் முக்கியம் என்பதை மீண்டும் உணர்ந்தேன். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் நண்பர்களே, கிடைக்கும் தளங்களில் எல்லாம், நாம் ஹிந்துத்துவத்தின் பேராபத்தைப் பற்றி மக்களிடம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.