இன்று, ஒவ்வொரு வீட்டிலும், ஒன்றுக்கு மேற்பட்ட என்ஜினீயர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமாக முன்னேறி, ஒரு அறிவார்ந்த சமூகமாக நாம் மீண்டும் உருவெடுத்து கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு சிறப்பான ஒரு வளர்ச்சி, முன்னேற்றம்.
கல்லூரி சேர்ந்த புதிதில், மகன் தினமும் நிறைய செய்திகள் சொல்வான். அவனைப்பொறுத்தவரை, கிராமம் பற்றிய தெளிவு அவ்வளவு இருந்ததில்லை. முழுவதுமாக நகரத்தில், இந்த சென்னையில் மட்டுமே வாழ்ந்து, பள்ளிப்படிப்பை முடித்தவன். ஆதலால், அவனைப்பொறுத்தவரை அவர்களின் சிரமமான வாழ்க்கை, அதில் படித்துமுடித்து வந்திருக்கும் நண்பர்களைப் பற்றிய செய்திகள் மிகவும் வியப்புக்குரியவைகளாவே இருந்தன!
முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வந்தவர்கள், ஏழை, எளிய விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர்கள், மீனவசமுகத்திலிருந்து வந்தவர்கள், கூலிவேலை செய்பவர்களின் பிள்ளைகள் என பலதரப்பட்ட பொருளாதார பின்னணியிலிருந்து வந்த மாணவர்களைப் பார்த்து, வியப்புடன் சொல்வான். 'இவர்கள் இவ்வளவு கஷ்டத்திலும் படித்து வந்திருக்கிறார்கள். நம்முடைய அரசியல் கட்டமைப்பும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் இடம் கொடுத்து, படிக்க வைக்கிறது.' என்பான்.
இதைப்பற்றி நிறையவே உரையாடியிருக்கிறோம். தமிழ்வழிக்கல்வி மூலம் படித்துவிட்டு வந்த ஒரு மாணவன், முதல்நாள் வகுப்பிலேயே, ' எனக்கு ஒண்ணுமே புரியலைடா.. எதுக்கு இங்கு படிக்க வந்தோம் என்று தெரியல.. ஊருக்கு திரும்பி போயிடலாம் போல..' என்று பயந்து சொன்னதைக் கேட்டு, ' அப்படியெல்லாம் செய்யதேடா... உனக்கு புரியலைனா என்னை கேளு,,, எனக்கு புரிந்தவரை நான் சொல்லிக்கொடுக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறான். இப்படி பலபேர், சொல்லி, பிறகு தாங்களாகவே மிகவும் முயற்சி செய்து படித்து, இன்று, நல்ல வேலையில், அதிகமான ஊதியத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இங்கும், வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் என தங்கள் திறமைகளைக் காட்டி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்!
இது தான் தமிழ்நாடு... இது தான் சமூகநீதிக்கான மண்.
அண்ணா பல்கலைக்கழகம் என்பது மற்ற பல்கலைக்கழங்கங்கள் போல் பொறியியல் பட்டதாரிகளை மட்டும் உருவாகும் ஒரு கல்வி நிறுவனம் அல்ல..
அது சமூகநீதிக்கான ஒரு குறியீடு!
மாநில உரிமைக்கான ஒரு அங்கீகாரம்!
ஒரு அறிவுசார் சமூகம் உருவாக்குவதற்கான அறிவுப்பெட்டகம்!
இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் , ஆரியம் அதனை தன்னுடைய அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவந்து கபளீகரம் செய்ய துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான சதிவேலைகளை செய்து எப்படியும் நம் பிள்ளைகளின் மருத்துவப்படிப்பை பறித்துக்கொண்டதுபோல் , பொறியியல் படிப்பையும் படிக்கவிடாமல் செய்வதற்கு முயற்சி செய்கிறது. இந்த படுபாதக செயலுக்கு அடிமை அதிமுக அரசும் துணைபோகிறது என்பது வேதனையிலும் வேதனை!
இதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள். இந்த சதிவேலையை தடுத்து நிறுத்தவில்லை என்றால், இதற்கான தண்டனையை அதிமுக அரசு பெற்றே தீரும்!
#DismissSurappa
#SaveAnnaUniversity