சிறகு மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை. சிறகிற்கு நன்றி.
Saturday, 28 March 2020
Sunday, 22 March 2020
கொரோனா
நாடு முழுவதும் 75 மாவட்டங்கள், தமிழ்நாட்டில், மூன்று மாவட்டங்கள் என சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு மிக முக்கியம் தான், ஏன், தமிழ்நாடு முழுவதற்கும் கூட ஊரடங்கு போடலாம். கரோனா பரவுதலை தடுக்க வேண்டும்.
சீனா உயிரிழப்புகளைப் பார்த்தோம். தற்போது இத்தாலி, ஈரான் உயிரிழப்புகளையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இன்று கூட இத்தாலியில் கரோனாவினால் ஏற்பட்ட மரணங்கள் 786 என செய்தி குறிப்பு சொல்கிறது. அதனைப் பார்க்கும்போது மனதை பிசைகிறது. இந்நிலைக்கு மக்களின் அலட்சியமும், அரசு சொல்வதை கேட்காமல் போனது தான் மிக முக்கிய காரணம் என்று தெரிந்தும் நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளாமல் போனால், நம் நாட்டில் ஏற்படப்போகும் உயிரிழப்புகள் தான் உலகிலேயே முதன்மையானதாக இருக்கும். அந்த அளவிற்கு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். இங்கு மக்கள் தொகையும் அதிகம். சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களும், கட்டமைப்பும், மருந்துகளும் கூட போதாது. ஆதலால், ஊரடங்கு முக்கியம் தான்.
ஆனால், அது எவ்விதத்திலும் மக்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பது அதி முக்கியம். அமைப்பு சாரா தொழிலாளிகளும், அடித்தட்டு மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் , வீடின்றி சாலையில் வசிக்கும் மக்களும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்பது தான் நம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். அடுத்த நிலையில் இருக்கும் மத்திய தர மக்களுக்கு, வரி சலுகை, EMI கடன் தொகை கட்டுவதை சில மாதங்களுக்கு தள்ளி வைத்தல் போன்ற உதவிகளை செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்துவிட்டு, ஊரடங்கு அமல் படுத்தினால், கொரோனவை நிச்சயம் விரட்டிவிடலாம்.
ஆனால், இவற்றையெல்லாம் நம் மாநில, மத்திய அரசுகள் செய்யுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி!
உலக நாடுகள் தங்கள் மக்களின் தேவைகளை அறிந்து சரிவர செய்கின்றன. ஆதலால் தான் தனிமைப்படுத்துதல் என்பது அங்கெல்லாம் பெரியளவில் பாதிப்பாக தெரியவில்லை!
இன்று , கனடாவில் இருக்கும் மகனிடம் பேசும் போது அவன் சொன்னவை,
" இங்கே ஒரு பிரச்சனையும் இல்லைம்மா... நல்லாவே இருக்கோம். இந்த ஒரு வாரம் முழுவதும் காலேஜ் லீவு. அடுத்தவராம் முதல், ஆன்லைன் கிளாஸ் நடக்கும். வேண்டியபொருளை வாங்கி வைத்துவிட்டோம். வெளியே எங்கேயும் போறதில்ல. வீட்டுக்குள்ளேயே இருக்கோம்... இங்கே மக்கள் தான் முக்கியம். அவர்களுக்காக இந்த அரசு எல்லா தேவைகளையும் செய்கிறது. முக்கியமா, இந்த நாடு, இங்கே வந்திருக்கும் மக்களை கூட, தன் சொந்தநாட்டு மக்களாக தான் பார்க்கிறது. போனவாரம் முழுவதும் வேலைக்கு போகல... ஆனால் எனக்கு சம்பளம் கிடைத்துவிடும்மா. என்னைப்பத்தி கவலை படாதீங்க.. நான் இங்கே நல்லா இருக்கேன். நீங்க கவனமா இருங்க..." என்றான்.
" இந்த நிலையில், , நீ வேறு எந்த நாட்டிலிருந்தாலும் எனக்கு கவலையாக தான் இருந்திருக்கும். கனடாவில் இருப்பதால், அந்த கவலை இப்போது எனக்கு இல்லை... எழில் மா "
என்று கூறி போனை வைத்தேன்.
அவன் படிக்கும் கல்லூரியிலேயே, பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படிக்கிறான். வேலைக்கு போகவில்லை என்றாலும்கூட எப்போதுமுள்ள ஊதியம் கிடைத்து விடுகிறது என்பது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. பொருளாதாரம் மிக முக்கியம் என்பதை கனடா நாட்டு அரசாங்கம் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினால் தானே இவ்வளவும் செய்ய முடிகிறது.
இது தானே தற்சமயம் மிக முக்கியம். இம்மாதிரி , தொற்றுநோய் பரவும் வேளையில், மக்களுக்கு தேவையானவற்றை செய்து, மக்களை காப்பாற்றுவது தானே ஒரு நல்ல அரசின் கடமையாக இருக்க முடியும்.
உலகநாடுகள் அளவிற்கு , நம் மத்திய, மாநில அரசுகள் மக்களை, இந்த கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றுமா என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் சுய ஊரடங்கு என ஒருநாள் முழுக்க கடைபிடித்துவிட்டு, மாலையில் கூட்டம் கூட்டமாக கைதட்டி மகிழ்கிறார்கள். இவர்களுக்கு self isolation, social distancing, என்றால் என்ன பொருள் என்று புரியவில்லையா என்பது நமக்கு விளங்கவில்லை!
நமக்கு நாமே தனிமைப்படுத்தி கொள்ளல் ஒன்றே தீர்வு போல!
Subscribe to:
Posts (Atom)