Saturday, 25 April 2020

Wednesday, 22 April 2020

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்ரேன் என்ற ஒற்றை தலைவலி மீண்டும் வந்து,இந்த தடவையும்  கொஞ்சம் அதிகமாகவே படுத்தி விட்டது.  அலைபேசி, கம்ப்யூட்டர் பார்த்தால் இன்னும் வலி கூடுகிறது என்பதால், முழுமையான ஒய்வு தேவைப்பட்டது. சமீபமாக,  கேட்கும், பார்க்கும் செய்திகள் வேறு மனதை சிரமத்திற்குள்ளாக தானே ஆக்கிவிடுகிறது. இம்மாதிரி நாட்களில், ராஜாவின் பாடல்கள்  மிகவும் கை கொடுக்கிறது என்பது நூறு விழுக்காடு உண்மை. ராஜாவிற்கு, ஆயிரம் நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது!

இந்த நான்கைந்து நாட்களில், இங்கே எவ்வளவு நடந்து விட்டன. வருத்தம், வேதனை, கோபம், எரிச்சல், அருவெறுப்பு, திகைப்பு,  கூடவே கொஞ்சம் சிரிப்பு என அனைத்து நவரசங்களும் நடந்து முடிந்திருக்கின்றன!

முதலாவதாக, கொரோனா போன்ற  கொள்ளைநோய், மனித உயிர்களை இரக்கமற்று, அள்ளிக்கொண்டு போகும் இவ்வேளையில்,  தன் உயிரை பணயம் வைத்து, நம்மை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு, நாம் மிகவும் நன்றி கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் தன்னுடைய குடும்பத்தைவிட்டு, நமக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டு, வீட்டினுள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பணியாற்றுகிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்கள் கொரோனா பாதிப்பில் இறந்துவிட்டால், அவர்களை அடக்கம் செய்வதற்கு கூட மக்கள் எதிர்த்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது எவ்வளவு கீழ்த்தரமான, மனிதத்தன்மையற்ற செயல். இறந்தவர்களின் உடலிலிருந்து நோய் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற புரிதலை ஏற்படுத்த இந்த அரசு தவறிவிட்டது. அம்மக்கள் அறியாமையில் இருந்தால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தானே அரசின் கடமை. முதல் தவற்றிலிருந்து பாடம் கற்காமல், இரண்டாம் முறையும் தவறியதன் விளைவு , மருத்துவர் சைமன் போன்ற மிகச் சிறந்த மருத்துவர் , இறந்தபிறகும், அவருடைய உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்ய முடியவில்லை என்றால், அதுவும், நம் தமிழ்நாட்டில் என்றால், மிகவும் அவமானமாக இருக்கிறது. நம் தமிழ் மக்களா இப்படி என்று வேதனையும், வருத்தமும், வாட்டியது. அதன் பிறகு, இப்போது அரசு விழித்துக்கொண்டு, இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம்,  ஆறு முதல் ஏழு ஆண்டுகள் சிறை என்றும், இப்படி இறக்கும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிக்கை விட்டிருக்கிறது.

இரண்டாவதாக, இன்று வரை இந்தி தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல், இருமொழிக்கொள்கையை செயல்படுத்தி, தமிழ்நாடு  என்ற  பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, சித்திரம் வரைந்த அந்த கேவலமான மனநிலையை கொண்ட கார்டூனிஸ்ட், அதை பத்திரிகையில் சிறிதும் நன்றியில்லாத தன்மையால், வெளியிட்டிருக்கும் தினத்தந்தி பத்திரிக்கை.  பத்திரிகையின் முகப்பில், தமிழ் வெல்க என்று போட்டுகொண்டால்  மட்டும் போதாது. தமிழுக்கு தொண்டாற்றியவர்களை போற்றவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. இழிவுபடுத்தக்கூடாது என்ற பத்திரிக்கை அறம் சார்ந்து செயல்பட  வேண்டும். நினைத்ததையெல்லாம் போட்டுவிட்டு, பிறகு வருத்தம் தெரிவித்தல் என்பது பெரும் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது!

அடுத்து, இறுதியாக, போன வாரம் வரை, இஸ்லாம் மக்களால் தான் கொரோனா பரவுகிறது என்று பரப்பிக்கொண்டிருத்த சங்கிகள் , ஏன்  திடீரென்று, நம்ம பாய்மார்கள் சிறந்தவர்கள், அவர்களின் உதவிகள் போல் ஆகுமா , என்று போற்றி எழுதுகிறார்களே என்று பார்த்தால், அதனுடைய ரூட் அரபிகளின் கையில் வசமாக மாட்டிக்கொண்டு இருக்கிறது. மோடியே, மதசார்பின்மை பேசும் அளவிற்கு, ( அது போலி மதச்சார்பின்மையாக  இருந்தாலும் கூட )   விசயம் போய்க்கொண்டிருக்கிறது. பாஜக எம்.பி. படு கேவலமாக ட்வீட் போட்டு, தங்களின் கீழ்த்தரமான மனநிலையை உலகிற்கே காட்டியுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். எப்படிப்பட்ட இயக்கம் என்பதை அரபி அரசு குடும்பத்தினர் புட்டு புட்டு வைக்கிறார்கள். அங்கிருக்கும், சங்கிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்றதும், உடனே, அவர்களுக்கே உரிய குணமான  மன்னிப்பை  கடிதம் மூலம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இங்கிருக்கும் சங்கிகள் நம்ம இஸ்லாம் சகோதர்களை போற்றுகிறார்களாம். இந்த, பம்முதல், இந்த கொரோனா நேரத்திலும் கூட, நம்மைமீறி, நமக்கு சிரிப்பை வரவழைத்திருக்கிறது !


கொரோனா , நாள்தோறும், நமக்கு பல அனுபவங்களைக் கொடுத்துகொண்டிருக்கிறது!






Saturday, 11 April 2020