Tuesday, 26 May 2020

பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள், கடந்த இரு நாட்களாக பேசியதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய  முக்கியமான விடையங்கள் சிலவற்றை இங்கு தருகிறேன்  ....

சில தினங்களுக்கு முன், செல்வி மாயாவதி அவர்கள், ' இந்த அளவிற்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து வருவதற்கும், அவர்களின் இந்த ஏழ்மைக்கும் நீண்டகால காங்கிரஸ் ஆட்சியே காரணம், மேலும் பாஜகவும் ஒரு காரணம் ' என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அது, காங்கிரஸ், ஆட்சியோ, பாஜக ஆட்சியோ மட்டுமல்ல, சமாஜ்வாடி ஆண்டது, பகுஜன் சமாஜ் ஆண்டது, இருந்தாலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஏனென்றால், வளர்ச்சி என்பது சமூக மாற்றத்திலிருந்து தான் வர வேண்டும். தென் மாநிலங்கள் வளர்ச்சிக்கு அது தான் பெரிதும் உதவியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், சமூக மாற்றம் தான். அதனை சில சமூக அமைப்புகள், சமூக இயங்கங்கள், கட்சிகள் என அனைத்தும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றன. அவைகள் முதலில் செய்த மிக முக்கிய மூன்று பணிகள், கல்வி, சுகாதாரம், நிலப்பிரபுவத்துவம். அதில் கல்வியை பரவலாக கொண்டு சென்றது. கிராமப்புறங்கள் முதற்கொண்டு எல்லோரும் படிக்கும் அளவிற்கு எளிதாக்கியது, அடுத்து, பொது  சுகாதாரம்  என்ற கட்டமைப்பு . மருத்துவம் என்பது ஏழை, எளிய மக்களுக்கு, குக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தது, மருத்துவம் படித்தவர்கள், மேற்படிப்பிற்கு படிக்க வேண்டும் என்றால்,  கிராமப்புறங்களில் பணிசெய்ய வேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்கியது, கடைசியாக பார்த்தால், நிலப்பிரபுவத்துவம் என்ற ஒரு ஆதிக்க கட்டமைப்பை  அதற்கு தெரியாமலேயே, அடித்து நொறுக்கியது, இவையெல்லாம் ஒரு வளர்ந்த , முன்னேறிய சமத்துவத்தை நோக்கியே கட்டமைக்கப்பட்டது.

இன்றளவில் கூட, உயர்கல்வியில், நம் மாநிலம் தான் முதலில் உள்ளது. 49% என்ற விகிதத்தில் நம் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கிறார்கள். இந்தியஅளவில்,  இதற்கு பக்கத்தில்கூட வர முடியவில்லை. இந்த அளவிற்கு ஒரு வளர்ச்சியை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முன்னேறியதற்கு , இங்கு ஏற்பட்ட சமூக மாற்றமே மிக முக்கிய காரணம். வடமாநிலங்கள் முன்னேறாமைக்கு , இந்த சமூக மாற்றம் அங்கு இல்லாதது தான் காரணமே தவிர, யார் ஆட்சி செய்தாலும் இப்படி தான் இருக்கும். இதனை நன்கு புரிந்துகொண்ட காரணத்தால் தான், நம்முடைய இந்த கட்டமைப்பை உடைக்க முயற்சி செய்கிறார்கள். கல்வி, சுகாதாரம் என அனைத்திலும் ஒன்றிய அரசு தன்னுடைய அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவர முயல்கிறது. 
மேலும், இந்த சமூக மாற்றத்திற்கு காரணமாக இருந்த அமைப்புகள், இயங்கங்கள், கட்சிகள் மீது அவதூறுகள், பொய்யான பிரச்சாரங்கள், ஏன் தனி மனித தாக்குதல்கள்  வரை செல்லக்கூடும். வடமாநிலங்கள், தென் மாநிலங்கள் போல் ஆவது இருக்கட்டும்... நாம் வடமாநிலங்கள் போல் ஆகிவிடக்கூடாது என்றால், நாம் கடந்துவந்த இந்த பாதையை, இந்த வளர்ச்சியை, முன்னேற்றத்தை, வரலாற்று உண்மையை, இப்போது இருக்கும் இளைஞர்களிடம் நாம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

( அய்யா ஜெயரஞ்சன் அவர்கள் கூறும் இந்த சமுகமாற்றத்திற்கு காரணமான இயக்கம் திராவிடர் இயக்கம், தந்தை பெரியார், அதனையொற்றி, திராவிடசித்தாந்தத்தை பின்பற்றி அரசியலுக்கு வந்த திராவிடக்கட்சிகள் , முக்கியமாக திராவிட முன்னேற்ற கழகம்  என்பது நம்மைப்போன்றோர்க்கு தெரியும். ஆனால், இந்த உண்மையை, தமிழக அரசியல் வரலாற்றை இப்போதிருக்கும் தலைமுறையினருக்கு சொல்லிப்புரிய வைக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமையாகும்.)




Monday, 18 May 2020

முள்ளிவாய்க்கால் பெருந்துயரம்.

11 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு மாறுதலும் ஏற்படவில்லை என்பது மிகப்பெரிய வேதனை. காணாமல் போனவர்கள் கிடைக்கவில்லை. இளம் விதவைகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மாணவர்கள்,இளைஞர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். சொந்தநாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை... மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பவைகள் இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு இனப்படுகொலையை, சர்வதேச சமூகமே கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது என்ற உண்மை உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நாள் மே-17 (2009)

"இடம்பெயர் தொழிலாளர்கள் பற்றி கவலைப்படுவோர் நடந்துபோகும் தொழிலாளர்களின் சூட்கேசை தூக்கிக்கொண்டே கூடவே நடக்கலாமே ...."
- நிர்மலா சீத்தாராமன்.
இப்படி சொல்லும்போது, அவருடைய உடல்மொழியையும், ஆணவப்பேச்சையும் பாருங்கள். #அசல்_பார்ப்பனியத்தன்மை!
நடந்துபோகும் அம்மக்களின் , ஒவ்வொரு படங்களையும் பார்க்கும்போது நமக்கு துக்கம் அப்பிக்கொள்கிறது. அழுகை தொண்டையை அடைக்கிறது. சாரைசாரையாக இம்மக்கள் இங்கே வரும்போது எனக்கும் கொஞ்சம் கோபமும், வருத்தமும் இருந்தது உண்மை. எங்கே, இவர்கள் வடஇந்திய கலாசாரத்தை இங்கே வளர்த்துவிடுவார்களோ, மோடியை ஆதரித்து, பாஜகவை வெற்றிபெறச்செய்து விடுவார்களோ என்ற ஒரு அச்சம் இருந்தது.ஆனால், இப்போது குழந்தைகளுடனும், முதியவர்களுடனும், மூட்டை, முடிச்சுடன், உணவின்றி, நீரின்றி பல நூறு மைல்கள் நடக்க தொடங்கியிருக்கிறார்கள் என்பதைப்பார்க்கும்போது, தினம் தினம் சொல்லொண்ணா துயரத்தைத் தருகிறது. வாழ வழியின்றி தானே வேறு இடத்தை தேடி வந்து உழைக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே. அதுவும் , இந்த ஒன்றிய அரசு தூக்கிப்பிடிக்கும் இந்திமொழி பேசும் மக்கள் தானே. அவர்களுக்கு உதவுவதில் , இந்த ஒன்றிய அரசுக்கு எது தடையாக இருக்கிறது?
உங்கள் பாணியில் சொல்வதென்றால், உங்களை தேர்ந்தெடுக்காத மக்கள் இல்லையே... உங்களுக்கு வாக்களித்து, உங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் தானே அவர்கள்... அவர்களுக்கு உதவ வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவே இல்லையா???
உங்களுக்கு பிடித்த மொழியை பேசும் மக்கள் என்றாலும், உங்களை தேர்ந்தெடுத்த மக்கள் என்றாலும், நீங்கள் ஒன்றுசேருங்கள் என்று அழைக்கும் இந்துக்கள் என்றாலும் உங்களுக்கு பெரிதில்லை... ஏனென்றால், அவர்கள் ஒடுக்கப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், ஏழை, எளிய அன்றாடங்காய்ச்சிகள் என்ற ஏளனம் தானே!
எங்களுக்கு அம்பானிகளும், அதானிகளும், பார்ப்பன, பனியாக்களும் போதும். இனி, இது ஏழை மக்கள் வாழ முடியாத நாடு என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்!
பாசிசத்தை எல்லா வழிகளிலும் உள் நுழைகிறீர்கள். இவ்வளவு ஆணவம் கூடாது. இதற்கான விலையை நிச்சயம் கொடுப்பீர்கள்!

Sunday, 10 May 2020

அன்னையர் தின வாழ்த்து செய்தி.



தாய்மை பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதை மறந்து,மறுத்து, தியாகம், அளவற்ற அன்பு என்ற பெயரில், அவளின் முழு வாழ்க்கையாகவே மாற்றிவிட்டது இச்சமூகம்!
தாய்மையைத் தாண்டி எல்லோரையும் போல அவளுக்கும் வேறுபல வேலைகள், இலக்குகள், ஆசைகள், உணர்வுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அதற்கு வழிவிட்டு அவளையும் மற்றவர்கள் போல் சாதிக்க உதவிபுரிந்திருக்கும் மேலைநாட்டினரின் வாழ்க்கை முறை, அதன் வெற்றியை கொண்டாடி மகிழ்கிறது!
ஆனால், நாமோ, அன்னையை கொண்டாகிறோம்,போற்றுகிறோம் என்று இன்னுமும் அந்த தியாகம் என்ற வளையத்திற்குள்ளேயே அடைத்துக் கொண்டிருக்கிறோம்!
இனிவரும் காலத்திலாவது, அம்மாவின்,  அன்பு, சமையல், தியாகம் இவைகளை தாண்டி, அவர்களின் விருப்பம், இலக்கு, எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து, முன்னுரிமை அளித்து கொண்டாடி மகிழ்வோம்!

Friday, 8 May 2020

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறப்பு தேவையா!

ஊரடங்கு முடியும்காலம் வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது, மூடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், ஆன்லைன் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்றும்கூறியுள்ளது. ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை. முழுதுமாக விற்பனையை தடுத்திருக்கலாம். மேலும், இரண்டு நாட்களுக்கு முன் இந்த தீர்ப்பை சொல்லியிருந்தால், கடந்த இருநாட்களில் நடந்த கூத்தை தவிர்த்திருக்கலாம். நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகளில் பின்பற்றப்படாத தனி மனித  இடைவெளியின் விளைவு அடுத்துவரும் 15  நாட்களில் தெரிய வரும். எப்படியோ, இப்போதாவது இந்த தீர்ப்பு வந்ததே என்று ஆறுதல் அடைய வேண்டிய  நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இந்த நிலையிலும், மோடி அரசு, தன்னுடைய திருகுவேலையில் தான் கவனமாக இருக்கிறது, மக்கள் ஒருவேளை சாப்பாடுக்கு கையேந்தினால் என்ன, புலம்பெயர்ந்த மற்ற மாநில தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர் நடந்து  சென்றால் என்ன, ரயிலில் அடிபட்டு இறந்து போனால்  தான் என்ன... எங்களுக்கு தேவை இந்த முழுநாடும் எங்கள் அதிகாரத்திற்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்று, மின்சாரத்திட்டத்திற்கான சட்டத்தை திருத்துதல், காவேரிமேலாண்மை ஆணையத்தை தன்னுடைய அரசின் கீழ்  கொண்டுவருதல்,புதிய கல்விக்கொள்கை செயல்படுத்துதல் என அதன்போக்கில் சென்றுகொண்டிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் உச்சபட்சமாக, கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது  கூறியுள்ளது. இனி, இந்த அரசுகளை நம்பி பலனில்லை. மக்களாகிய நாம் தான் நம்முடைய உயிரை நாமே  காப்பாற்றிக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இந்த நேரத்தில், இங்கே  ஒரு விடையம் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. மகனுடன் பேசும் போதெல்லாம் அரசியலும் பேசுவதுண்டு. சொல்லப்போனால், அரசியலைப்பற்றி தான் அதிகம் பேசுவோம். அங்கு, அந்நாட்டில் (கனடா ) நடப்பவை எல்லாம் சொல்லிக்கொண்டிருப்பான்.  அதில் பல மிகவும் பாராட்டுக்குரியவைகளாக இருக்கின்றன. 

அங்கு படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, இந்த லாக்டௌன் சமயத்தில்,  மாதம் 1250 டாலர் அரசே கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எனக்கு தெரிந்தவரையில், உலகில் வேறு எந்த நாடும் இதுபோல் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். இன்று பேசும்போது மற்றொரு  முக்கியமான செய்தியை சொன்னான். அது, வெளிநாட்டு மாணவர்களுக்கு, சர்வேதேச தொலைபேசி அழைப்புகளை இலவசமாக கொடுக்கிறது என்பது தான். இந்த இக்கட்டான பொது முடக்ககாலத்தில், அவர்கள், தங்களுடைய குடும்பத்தினருடன் அலைபேசியில் பேசுவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்ற சலுகையை அளித்திருக்கிறது. இதில், மிகப்பெரிய  வியப்பு என்னவென்றால், இந்த தொலைத்தொடர்பு தொலைபேசி நிறுவனம் அரசுக்கு சொந்தமானது கிடையாது, தனியார் நடத்தும் நிறுவனமாம். அங்கு அரசு மட்டுமல்ல.. தனியார் நிறுவனங்கள் கூட மக்களுக்காக செயல்படுகின்றன என்பது தான் மிகச்சிறப்பு!

இங்கே, சொந்தமக்களுக்கே கஞ்சி ஊத்த கூட வழியில்லாத நிலையில் அரசுகள் இருக்கின்றன . இந்த ஒப்புமை, மலைக்கும், மடுவிற்குமானது என்பது உண்மை. ஆனால், சில விடையங்களை கேட்டுவிட்டு அப்படியே கடந்து போக முடிவதில்லை.

Saturday, 2 May 2020