Wednesday, 29 June 2022

அக்னிபாத் திட்டம் ஒரு பேராபத்து!

 பல  நேரங்களில், சிலரிடம்  நலம் விசாரித்தலோடு நிறுத்தாமல், அரசியல் பற்றிய  உரையாடலையும்  நிகழ்த்துவதுண்டு. அப்படிப்பட்ட உரையாடல்களில் அதிகம் அப்பாவிடம் தான் நிகழ்ந்திருக்கிறது.   உரையாடல்கள்  மட்டுமல்ல, அரசியலில் அவ்வப்போது தெரியாத விடையங்களையும், சந்தேகங்களையும் கூட நிவர்த்திசெய்வது என்னுடைய அப்பா தான்.  அப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், இன்று அக்னிபாத் பற்றிய பேச்சை ஆரம்பித்தேன். அவர்கள்  ஓய்வுபெற்ற ஒரு ராணுவ அதிகாரி என்பதால் அவர்களின் விளக்கம் சரியானதாக இருக்கும் என்பதில் எனக்கு 100% நம்பிக்கை இருந்தது.

' இது தவறானது என்று புரிகிறது...  ஆனால், இந்த திட்டம் எந்த எந்த வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்?' என்று கேட்டேன். 

அதற்கு அப்பா அளித்த  பதில், ' இது எல்லா வகைகளிலும் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். இதனால் முழுவதும் தீமையே தவிர கொஞ்சம் கூட நன்மை ஏற்படப்போவதில்லை. முதலில்,  நாட்டின் பாதுகாப்பு  மிகப்பெரிய கேள்விக்குறி. இப்பவே சீனா கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்துகொண்டிருக்கிறான். அந்த நாட்டுக்கு ரொம்பவும் வசதியாக போய்விடும். மிக எளிதாக உள்ளே வந்துவிடுவான். எதிர்த்து போராடும் வல்லமை நம் ராணுவ வீரர்களுக்கு இருக்காது. ராணுவம் மிகவும் வலிமையற்றதாக போய்விடும். 6 மாத பயிற்சி என்பது போதவே போதாது. மேலும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் வெளியேற்றப்பட்டுவிடுவோம் என்ற எண்ணம் , நாட்டுப்பற்றை , அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தாது. இந்த உணர்வு நம் நாட்டிற்கு தான் ஆபத்தை தான் உண்டாக்கும். 

அடுத்துப்  பார்த்தால், சமூகம் சீரழிந்துவிடும் ... 4 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவுடன், அவர்கள் எல்லோருக்கும் வேலை கிடைக்காது. கொண்டுவரும் பணமும் 2,3, ஆண்டுகளில் செலவழித்து விடுவார்கள். அதன்பிறகு அவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகிவிடும். நிறைய குற்றங்கள் நடைபெற வாய்ப்பிருக்கிறது. படிக்கும் வயதையும் அவர்கள் தாண்டிவிடுவார்கள். வேலையும் இல்லாதபோது , திரும்பி அனுப்பப்படுபவர்களில் முக்கால்வாசி பேர் குற்றச்செயலில் தான் ஈடுபடுவார்கள். ராணுவவீரர்களுக்கான மரியாதை சிறிதும் இல்லாமல் போய்விடும். இங்கு அவ்வளவு பார்க்கமுடியாது. ஆனால், வட மாநிலங்களில், ஜவான் என்றால் மிகப்பெரிய மரியாதை மக்களிடையே  உண்டு. 
இத்திட்டதை திரும்ப பெறவில்லையென்றால், நாடு மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க போகிறது என்பது உறுதி. ' என்றார்கள்.

ராணுவத்தில் பணிபுரிந்தவராக இந்த இரு விடையங்களை தான் அப்பா சொன்னார்கள். நாம், நம்முடைய பார்வையில் பார்க்கும்போது, இதையெல்லாம் விட பேராபத்தாக இருக்கும் மற்றொரு விடையம் இருக்கிறது. சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவிடும் என்பதோடு மட்டுமல்லாமல், சமூகம் ராணுவமயமாக்கப்படும் பேராபத்து இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவான சமூகம் ராணுவமயமாக்கப்படும் என்பதும், ராணுவம் இந்துராஷ்டிராவுக்கான ராணுவமாக மாற்றப்பட்டுவிடும் என்பது தான் இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்கான கேள்விக்குறி. மதச்சார்பின்மைக்கு எதிராக ஏவப்படும் ஆயுதம். 
இவ்வளவு பெரிய திட்டத்தை கொண்டுவரும் ஒன்றிய பாஜக அரசு, இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்கவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பேசவில்லை என்றால், இங்கு எங்கே ஜனநாயகம் இருக்கிறது?
இவர்களால் , இம்மாதிரி முடிவை உடனே எடுக்க முடிகிறதென்றால், நாளை இந்தியா என்ற பெயரை இந்துராஷ்டிரம் என்றும், நம் அரசியலமைப்புச்சட்டத்தில் இருக்கும் மதச்சார்பின்மை, சமதர்மம் , ஜனநாயக குடியாசு (secular, social, demacratic republic) என்ற  அமைப்பையே கூட மாற்றிவிட முடியும் என்பதில் அய்யமில்லை!

நம்முடைய வருங்கால சந்ததியர்களை நினைத்தால் மிகவும் அச்சமாக இருக்கிறது நண்பர்களே... நாம் வாழ்வது போல், அனைத்திற்கும் போராடியாவது  அவர்களால் வாழ முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது!
இனியும், தாமதிக்காமல், எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களிடையே உள்ள மாற்றுக்கருத்துகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, ஒரே அணியில்  ஒருங்கிணைவது இப்போதைய காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment